Published : 09 Oct 2020 07:40 AM
Last Updated : 09 Oct 2020 07:40 AM

எல்லோரும் இணைந்து செல்லும் பயணம் கூட்டாட்சி

சமீபத்தில் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களில், ‘ஜம்மு, காஷ்மீர் ஒன்றிய பிரதேசங்களுக்கு ஐந்து ஆட்சிமொழிகளை நடைமுறைப்படுத்தும் சட்டம்’ நம்முடைய சிறப்புக் கவனம் கோரும் ஒன்றாகிறது. ஒன்றிய அமைச்சகத்தால் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு, நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் மசோதாவாக நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிற இந்தச் சட்டம் மூன்று விதமான விவாதங்களை உருவாக்கியிருக்கிறது.

ஜம்மு - காஷ்மீரில் ஆங்கிலம், உருது ஆகிய இரண்டு மொழிகள் மட்டுமே இதுவரை ஆட்சிமொழிகளாக இருந்துவந்த நிலையில், 53.26% மக்கள் பேசும் காஷ்மீரியும், 20.64% மக்கள் பேசும் டோக்ரியும், கூடவே இந்தியும் ஆட்சிமொழிகளாக இந்தச் சட்டத்தின் வழி அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. 2019-ல் இயற்றப்பட்ட ஜம்மு - காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தின்படி எத்தனை ஆட்சிமொழிகளை ஏற்றுக்கொள்வது என்று முடிவெடுக்கும் அதிகாரம் ஒன்றியப் பிரதேசச் சட்டமன்றத்திடமே உள்ளது. ஆனால், தற்போது அங்கு குடியரசுத் தலைவரின் ஆட்சி நடப்பதால், அந்த முடிவை எடுக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்தின் வசம் உள்ளதாகக் கூறி இந்த முடிவை எடுத்திருக்கிறது இந்திய அரசு. இது சரியா, இது மேலும் ஓர் அதிகாரக் குறுக்கீடு என்பது முதலாவது விவாதம். ஜம்மு - காஷ்மீர் மக்களின் கோரிக்கைகளை ஏற்றுதான் அங்கு ஐந்து மொழிகள் மாநில ஆட்சிமொழிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு கூறுகிறது. ஆனால், பூர்வீக மக்கள் பேசிவரும் கோஜ்ரி, பஹாடி, பஞ்சாபி மொழிகள் சேர்க்கப்படவில்லை; மாறாக, இந்தப் பிராந்தியத்தில் யாராலும் பேசப்படாத இந்தி ஒரு ஆட்சிமொழியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது; இது சரியா என்பது இரண்டாவது விவாதம். நீண்ட காலமாக ஆட்சிமொழியாக இருந்துவந்த உருது மொழிக்கான மதிப்பு படிப்படியாகக் குறைந்துவிடுமோ என்பது மூன்றாவது விவாதம். காரணம், ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கை உருதுவில் மொழிபெயர்த்து அளிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை.

இந்தியாவில் மாநிலங்கள் அல்லது ஒன்றியப் பிரதேசங்கள் என்று குறிப்பிடப்படும் பிராந்தியங்களின் அதிகாரம் மேலோங்க வேண்டும்; உள்ளூர் மக்களின் கைகளில் அதிகாரம் இருப்பதே வலுவான கூட்டாட்சிக்கு வித்திடும் என்ற வகையில் ஒன்றிய அரசின் நடவடிக்கையை இங்கே தலையீடாகக் கருதலாம் என்றாலும், மாநிலங்கள் தம்மளவில் எந்த அளவுக்குக் கூட்டாட்சி உணர்வுடன் நடந்துகொள்கின்றன என்ற கேள்வியையும் இந்த விவகாரம் சுட்டுகிறது. இங்கே கூட்டாட்சியுணர்வு என்று நாம் குறிப்பிடுவது பன்மைத்துவத்துக்கான பிரதிநிதித்துவத்தைத்தான். இன்று சரிபாதிக்கும் மேலானோரால் பேசப்படும் காஷ்மீரி, ஐந்தில் ஒருவரால் பேசப்படும் டோக்ரி மொழிகளே இப்போதுதான் ஆட்சிமொழிகளாக, அதுவும் டெல்லியின் தலையீட்டால் அங்கீகரிக்கப்படுகின்றன என்றால், கடந்துவந்த காலங்களில் அங்கிருந்த மாநில அரசுகள் என்னதான் செய்துகொண்டிருந்தன; புதிய சட்டமானது கோஜ்ரி, பஹாடி, பஞ்சாபி மொழி பேசும் மக்கள் மத்தியில் போராட்டங்களை உருவாக்கியுள்ள சூழலில் இந்தச் சமூகங்களின் அபிலாஷகளை இத்தனை காலமாக அங்கிருந்த மாநில அரசுகள் ஏன் அங்கீகரிக்கத் தவறின போன்ற கேள்விகள் தவிர்க்க முடியாதவை ஆகின்றன. டெல்லி நோக்கி வலுவான கூட்டாட்சிக்குக் குரல் கொடுத்துவந்திருக்கும் காஷ்மீர் அரசியலர்கள் தங்கள் அதிகாரத்துக்கு உட்பட்ட விஷயங்களில் கூட்டாட்சி விழுமியங்களுக்கு என்ன மதிப்பு அளித்துவந்திருக்கிறார்கள் என்பதைக் கேட்டுக்கொள்வதற்கான வாய்ப்பாக இதைக் கருதலாம். கூட்டாட்சி என்பது ஒரு வழிப் பாதை அல்ல; அது கடைசி குடிநபருக்கும் அதிகாரம் சென்றடைவதற்கான கூட்டுப் பயணம் என்பதை எல்லாத் தரப்புகளும் உணர வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x