Published : 07 Oct 2020 07:37 AM
Last Updated : 07 Oct 2020 07:37 AM

எலிப்பொறியா சமூக ஊடகம்?

மனிதர்களின் வாழ்க்கையில் பிரம்மாண்டமாக நுழையும் எதுவும் கூடவே சாபத்தைக் கொண்டுவராமல் இருப்பதில்லை - ஒட்டுமொத்த மனித குலத்தின் மேலும் தாக்கம் செலுத்திவரும் இணையம், செல்பேசித் தொழில்நுட்பம், சமூக ஊடகங்களின் அபாயகரமான அம்சங்களைப் பேசும் ‘தி சோஷியல் டைலமா’ ஆவணப் படம் (நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியிருக்கிறது) ஒரு திகில் படத்தின் தொடக்கத்தைச் சுட்டுவதுபோல இந்த வரிகளோடுதான் தொடங்குகிறது. கிரேக்க நாடக ஆசிரியர் சோபாக்ளிசின் கூற்று இது. கூகுள், ஜிமெயில் தொடங்கி ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், யூட்யூப், பின்ட்ரஸ்ட் வரையிலான சேவைகளில் ஒன்றையாவது பயன்படுத்தாத மனிதரை இன்று நாம் ஆதிவாசியாகவே கருத முடியும். இந்தச் சேவைகள் அனைத்தும் பெரும்பாலும் இலவசமாகவே நமக்கு அளிக்கப்படுவதாகவே நாம் நம்புகிறோம்.

தகவல்தொடர்பு, பணப் பரிமாற்றம் தொடங்கி அந்தரங்க உறவுகள் வரை 24 மணிநேரமும் கூடவே இருக்கும் இந்தச் சேவைகள் ஏன் இலவசமாகக் கிடைக்கின்றன என்ற கேள்வியை நம்மில் பெரும்பாலானவர்கள் கேட்டிருக்க மாட்டோம். அதற்கும் தொடக்கத்திலேயே ‘தி சோஷியல் டைலமா’ விடை சொல்கிறது. சிலிக்கன் பள்ளத்தாக்கின் மனசாட்சி என்று சொல்லப்படும் டிரிஸ்டன் ஹாரிஸ் படத்தில் சொல்கிறார், ‘இலவசமாக எதுவொன்றும் உங்களுக்குக் கிடைத்தால், அதில் நீங்கள்தான் விற்பனைப் பொருள்!’

ஆமாம். ஃபேஸ்புக்கில் இருக்கும் நபர், விளம்பரங்களைப் பார்த்துக் கடப்பதன் மூலம் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு லாபத்தைத் தருபவராக மாறுகிறார். இந்த லாபத்தை அதிகரிக்க வேண்டுமானால், ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தும் நபர் அதிக நேரம் அங்கே செலவழிக்க வைக்க வேண்டும். அவரது விருப்பங்கள், கருத்தியல், நம்பிக்கைகள் தொடங்கி பாலுறவுத் தேர்வுகள் வரையிலான மனித அம்சங்களை சமூக ஊடகங்கள் கண்காணிக்கின்றன என்பதை இயக்குநர் ஓர்லோஸ்கி நம்மிடம் ஒரு கதைபோல சொல்கிறார். ஒரு மனிதரின் அம்சங்களைக் கண்காணிப்பது மட்டுமின்றி, அவரை அவர் வைத்திருக்கும் செல்பேசிக் கருவியோடு போதை அடிமைபோல பிணைக்கும், அவரது தேர்வுகளை நிர்ணயிக்கும், அவரது நடத்தைகளை மாற்றும் வகையில் இவை எப்படிச் செயல்படுகின்றன என்பதும் நமது கண்கள் முன்னால் காட்டப்படுகின்றன. சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் 200 கோடி மக்களைப் பயனாளிகளாக்கி, அவர்களது அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்து, கட்டுப்படுத்தி நிர்ணயிக்கும் இந்தச் சமூக ஊடகங்களின் அல்காரிதங்களை இயக்குபவர்கள் வெறும் 100 பேர்தான்.

ஃபேஸ்புக்கில் லைக் பட்டனை அறிமுகப்படுத்திய வடிவமைப்பாளர் தொடங்கி, இன்ஸ்டாகிராம், பின்ட்ரஸ்ட் போன்ற நிறுவனங்களில் துணைத் தலைவர் போன்ற பெரிய பதவிகளிலிருந்து விலகியவர்கள்தான் நம்மிடம் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். தாங்கள் உருவாக்கிய தொழில்நுட்பத்தில் தாங்களே எப்படியாகச் சிக்கினோம் என்று உணர்ந்த தருணங்களையும் பகிர்ந்துகொள்கிறார்கள். ஒரு இரவில் காரில் தனது செல்பேசியை விட்டுவிட்டு வந்து காலை வரை அடைந்த தவிப்பை நினைவுகூர்கிறார் ஒரு வடிவமைப்பாளர். தங்கள் குழந்தைகளுக்கு இவர்கள் வடிவமைத்த சமூக ஊடகங்களைப் பார்க்க அவர்கள் அனுமதிப்பதே இல்லை என்று ஒப்புக்கொள்ளவும் செய்கின்றனர்.

பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை சமூக ஊடகங்கள் தகவல்தொடர்பு சார்ந்து மக்களுக்கு மிக உதவிகரமான அம்சமாகவே இருந்தன என்று தொடக்கத்தில் அதன் நேர்மறை அம்சத்தைப் பகிர்ந்துகொள்கிறார்கள். பயனாளிகள் அதிகரித்த நிலையில், வருவாயைப் பெருக்குவதற்கான அமைப்புகளை உருவாக்கிய நிலையில்தான், கட்டுப்படுத்தவோ திரும்பிச் செல்லவோ முடியாத ஒரு பொறியாகச் சமூக ஊடகங்கள் மாற்றியமைக்கப்பட்டன என்கிறார்கள். தனிநபர்கள் யாரும் சேர்ந்து மனித குலத்தின் மேல் செய்த சதி அல்ல என்று உத்தரவாதம் கூறும் அவர்கள், அதன் வருவாய் மாதிரி இப்படித்தான் செல்லும் என்கின்றனர். ஏனெனில், மக்களின் எல்லாவிதமான அபிலாஷைகள், நம்பிக்கைகள், தேர்வுகளையும் கவனித்துப் பூர்த்திசெய்வது நிரல் செய்யப்பட்ட கருவிகளே தவிர, அவற்றுக்கு நன்மை தீமையைப் பகுத்தறிய முடியாது என்கின்றனர் பொறியாளர்கள்.

பென் என்ற அமெரிக்கப் பள்ளி மாணவனின் வாழ்க்கையில் ஃபேஸ்புக் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது, பென் பயன்படுத்தும் செல்பேசித் திரைக்குப் பின்னால், பென்னை இயக்கும் பிரமாண்டத் தொழில்நுட்பத்தின் கரங்களை அற்புதமாக, எளிமையாகப் புரியும் வண்ணம் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர். மனிதர்களின் உளவியலை வெற்றிகொள்ளும் தொழில்நுட்பத்துக்கும் மனிதர்களுக்கும் உள்ள உறவு எப்படியானது என்பது நம் முன்னர் காட்சிகளாக விரிகிறது. சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்களின் தனிப்பட்ட விவரங்களை விற்பதையெல்லாம் தாண்டி, நமது நேரம்தான் அவர்களுக்கு மிகப் பெரிய வருவாய் மூலம். அங்கே செலவழிக்கும் மனிதர்களின் நடத்தைகளும் அம்சங்களும்தான் அவர்களின் விற்பனைப் பொருள். அந்த அம்சங்களைப் பார்த்துதான் விளம்பரதாரர்கள் அங்கே தங்கள் விளம்பரங்களை விதைக்கின்றனர்.

அதையெல்லாம் தாண்டி மக்களின் கருத்தியல், நம்பிக்கைகள் ஆகியவற்றிலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பதை இந்த ஆவணப் படம் தரவுகளோடு நிரூபிக்கிறது. உலகம் தட்டையானது என்ற நம்பிக்கையை விதைத்து அதை நம்பும் ஆயிரக் கணக்கானோரையும் ஃபேஸ்புக் வழியாக உருவாக்க முடிந்திருக்கிறது. இடதுசாரி, வலதுசாரி, மத நம்பிக்கையாளர், நாத்திகர்கள் என அவரவர் நம்பிக்கைகளையொட்டி தனித் தனிப் பிரபஞ்சங்களை இயக்கும் அல்காரிதங்கள் சமூக ஊடகங்களுக்குப் பின்னால் செயல்படுகின்றன. அந்தந்தத் தனி யதார்த்தம்தான் உண்மையான உலகம் என்ற நம்பிக்கையில் அவரவரும் மகிழ்ச்சியாக இருக்கலாம். இதைத்தான் கண்காணிப்பு முதலீட்டியம் என்கிறது ‘தி சோஷியல் டைலமா’. மியான்மரில் ரோகிங்கியா முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைகளுக்கு ஃபேஸ்புக் நியூஸ்ஃபீட் உதவிகரமாக இருந்ததும் இந்த ஆவணப் படத்தில் விளக்கப்படுகிறது.

அமெரிக்கா தொடங்கி இந்தியா வரை, சமூக ஊடகங்கள் வழியாக மக்களை இரண்டு தரப்புகளாகக் கருத்தியல்ரீதியாக, சாதிரீதியாக, மதரீதியாகப் பிளவுபடுத்தும் நிகழ்வுகளைப் பார்த்துவருகிறோம். உண்மைச் செய்திகளைவிட பொய்ச் செய்திகளுக்குத்தான் அதிக வாசிப்பும் கவனமும் இருக்கின்றன என்கிறார்கள் பொறியாளர்கள். தனிநபர்கள், சமூகங்களுக்கிடையில்கூட நம்பிக்கையின்மையும், பேசித் தீர்க்க வேண்டிய விஷயங்களைகூட நேரில் பேசித் தீர்க்காமல் சமூக ஊடகங்கள் வழியாக அவதூறுகளிலும் ஆளுமைக் கொலைகளிலும் ஈடுபடும் போக்குகளும் அதிகரித்துள்ளதை ‘தி சோஷியல் டைலமா’ நினைவூட்டுகிறது. தனது உருவ அமைப்பு, சமூக அந்தஸ்து, இருப்பு எல்லாவற்றையும் மதிப்பிடுவதற்கும் நிர்ணயிப்பதற்கும் சமூக ஊடகத்தையே நாடியிருக்கும் நிலை உருவாகிறது.

‘தி சோஷியல் டைலமா’ ஆவணப் படம் தங்களை ஒட்டுமொத்தமாக வில்லனாகச் சித்தரிக்கிறது என்று மறுப்பு தெரிவித்துள்ள ஃபேஸ்புக் நிறுவனம், சென்ற அமெரிக்கத் தேர்தல்களில் விளம்பரப் பிரச்சாரம் மூலம் ட்ரம்புக்கு உதவியதை ஒப்புக்கொண்டுள்ளது. அத்துடன், விளம்பரங்களை வெளியிடுவதன் மூலம் வரும் வருவாயால்தான் ஃபேஸ்புக்கை இலவசமாகப் பயனாளிகள் பயன்படுத்த முடியும் என்றும் கூறியுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்தில் இன்று பணியாற்றும் அதிகாரிகள், வடிவமைப்பாளர்களிடம் நேர்காணல் செய்திருந்தால், தாங்கள் தற்போது வைத்திருக்கும் பாதுகாப்பு அம்சங்களை வெளிப்படுத்தியிருக்க முடியும் என்றும் அந்த மறுப்பு கூறியுள்ளது.

சமூக ஊடகம் என்ற தொழில்நுட்பம் என்ற அளவில் எந்தச் சிக்கலும் இல்லை என்று கடைசியாகக் கூறும் இயக்குநர், அதன் வருவாய் மாதிரிகள் வழியாக, சமூகத்தின் மோசமான அம்சங்களை வெளிக்கொண்டுவருகிறது என்கிறார். சமூக ஊடகங்களால் குடும்ப உறவுகள் அதிகம் பாதிக்கப்படுவதைக் காட்டும் இயக்குநர், 15 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளிடம்தான் சமூக ஊடக பயன்பாடுகள் அறிமுகமாக வேண்டும் என்கிறார். பெருந்தொற்றுக் காலத்தில் இணையம் வழியாகப் பள்ளிக் கல்வியே, கணினிமயமாக்கப்பட்ட நிலையில் குழந்தைகளைச் சமூக ஊடகங்களிலிருந்தும் இணையத் தொழில்நுட்ப வலையின் போதைத் தன்மையிலிருந்தும் எப்படி மீட்கப்போகிறோம்?

- ஷங்கர்ராமசுப்ரமணியன்,

தொடர்புக்கு: sankararamasubramanian.p@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x