Published : 07 Oct 2020 07:31 AM
Last Updated : 07 Oct 2020 07:31 AM

உடன் அளிக்கப்பட வேண்டும் மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி நிலுவை

சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி மீண்டும் விவாதப் பொருள் ஆகியிருக்கிறது. ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதும், அதன் மூலம் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டும் வகையில், வருவாயில் ஒரு குறிப்பிட்ட குறைந்தபட்சத் தொகையை ஒவ்வொரு மாநிலத்துக்கும் 2022 வரையிலும் தருவதாக 2017-ல் ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு உறுதியளித்தது. ஜிஎஸ்டி வரியானது இந்த உறுதிமொழியிலிருந்தே இறுதி வடிவம் கண்டது. ஆனால், இந்த உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கான ஜிஎஸ்டி நிதியிருப்பு ஒன்றிய அரசிடம் இல்லை என்று கூறி நிதிப் பற்றாக்குறையைச் சரிசெய்துகொள்ள மாநிலங்கள் கடன் வாங்கிக்கொள்ள வேண்டும் என்றும், அத்தகைய கடன்களுக்குத் தான் பொறுப்பேற்பதாகவும் ஒன்றிய அரசு கூறியது. சில மாநிலங்கள் இந்த யோசனையை ஏற்றுக்கொண்டாலும் சில மாநிலங்களை அதை நிராகரித்ததோடு ஒன்றிய அரசே கடன் வாங்கித் தருமாறு வேண்டுகோள் விடுத்தன. ஒன்றிய அரசுக்கும் அதன் ஆலோசனையை எதிர்க்கும் மாநிலங்களுக்கும் இடையே இணக்கம் ஏற்படும் என்று தோன்றவில்லை. இதற்கிடையில், இழப்பீட்டு வரியாக (செஸ்) இதுவரை சேர்ந்துள்ள ரூ.20 ஆயிரம் கோடியும், இத்துடன் ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (ஐஜிஎஸ்டி) தொகை ரூ.24 ஆயிரம் கோடியும் மாநில அரசுகளுக்கு வழங்கும் பணி உடனடியாகத் தொடங்கும் என்று நிதியமைச்சர் அறிவித்திருந்தாலும், அக்.5 அன்று நடந்த ஜிஎஸ்டி ஆணையக் கூட்டத்தில் இழப்பீட்டுத் தொகையை ஈடுகட்டும் வகையிலான கடன் சம்பந்தமான முடிவு எடுக்கப்படாத சூழலில், அக்.12 அன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் இது தொடர்பில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

நம்பிக்கையில் விரிசல்

தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் சமீபத்திய அறிக்கை இந்தப் பிணக்கை மேலும் சிக்கலாக்கியிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில், ஒன்றிய அரசு பல்வேறு வரிகளின் வாயிலாகத் திரட்டிய நிதியில் ஏறக்குறைய ரூ.3 லட்சம் கோடியை வேண்டும் என்றே தவறாக ஒதுக்கீடு செய்துள்ளது என்றும், நிதி வருவாயில் மாநிலங்களுக்கான பங்கைக் குறைப்பதற்காகவே அவ்வாறு செய்யப்பட்டுள்ளது என்றும் பேராசிரியர் கோவிந்த ராவ் விளக்கியுள்ளார். இதன் மூலம் மாநிலங்களிடம் ஒன்றிய அரசு தனது மதிப்பையும் தன் மீதான நன்னம்பிக்கையையும் மேலும் இழந்தது. ஜிஎஸ்டி ஆணையத்தில் மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரசேங்கள் என 31 பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர். 2017-ல் உருவாக்கப்பட்ட இந்தப் புதிய நிதி அமைப்பு, நாட்டின் சரிபாதி வரிவருவாய்க்கான கொள்கைகளை வகுக்கும் பரந்து விரிந்த பொருளாதாரப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. துரதிர்ஷ்டவசமாக, இந்த அமைப்பும் மற்றவற்றைப் போலவே வெகு விரைவில் அரசியல் அதிகார விளையாட்டுக்கான களமாகிவிட்டது. ஜிஎஸ்டி ஆணையத்தில் உள்ள 20 உறுப்பினர்கள் ஒன்றிய அரசின் முன்மொழிவை ஏற்றுக்கொண்டுள்ளனர்; அவர்கள் பாஜக அல்லது அதன் கூட்டணி ஆளும் மாநிலங்களின் பிரதிநிதிகள். ஒன்றிய அரசின் திட்டத்தை எதிர்க்கும் 11 மாநிலங்களும் எதிர்க்கட்சிகளால் ஆளப்படுபவை. 12 வாக்குகள் இருந்தால் ஜிஎஸ்டி ஆணையத்தின் எந்தவொரு முன்மொழிவையும் தடுக்கும் வெட்டு அதிகாரத்தைப் பெற முடியும்.

மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டை வழங்குவது ஒன்றிய அரசின் பொறுப்பு. எனினும், தேவையான கூடுதல் நிதியாதாரங்களை உருவாக்குவது மட்டுமே இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்கான வழியாகத் தோன்றுகிறது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் மட்டுமின்றி நாடு முழுவதற்கும் பொருளாதாரரீதியில் தீர்வுகாணும் வகையில் இந்தப் பிரச்சினைக்கு முடிவு காணப்பட வேண்டும்.

ஏன் எதிர்க்கிறது தமிழகம்?

ஒவ்வொரு மாநிலத்தின் பொருளாதார நிலையும் வெவ்வேறானவை. ஒட்டுமொத்த ஜிஸ்டி வருவாயில் மஹாராஷ்டிரம், குஜராத், தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய நான்கு மாநிலங்களின் பங்கு மட்டும், ஏனைய 27 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் மொத்தமாகப் பெறும் பங்கைவிட அதிகமானது. ஆயினும், பாஜக ஆளும் குஜராத்தும் கர்நாடகமும் ஒன்றிய அரசின் முன்மொழிவை ஆதரிக்கின்றன; மாறாக, மஹாராஷ்டிரமும் தமிழ்நாடும் எதிர்க்கின்றன. பஞ்சாப், இமாச்சல பிரதேசம் இரண்டின் வருவாயிலும் இந்த ஜிஎஸ்டி இழப்பீடானது குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது என்றாலும், பாஜக ஆளும் இமாச்சல பிரதேசம் ஒன்றிய அரசின் முன்மொழிவை ஏற்கிறது; காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் எதிர்க்கிறது. இதேபோல ராஜஸ்தான், ஹரியாணா இரண்டின் நிதிப் பற்றாக்குறையும் ஒரே அளவில் இருந்தாலும், காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் அதைக் குறித்து கவலைகொள்ளும்போது, பாஜக ஆளும் ஹரியாணா மேலும் கடன் வாங்குவதற்குத் தயாராகிறது. முக்கியமான விஷயம், இது அரசியல் விளையாட்டுக் களமாகவும் ஆகியிருக்கிறது.

மாநிலங்களின் நிதிக் கொள்கைகள் சிக்கலான தன்மை கொண்டவை, அவற்றைத் தலைமையிடத்தில் அமர்ந்துள்ள ஒருவரின் உத்தரவுப்படி முடிவெடுக்கக் கூடாது. ஜிஎஸ்டி இழப்பீடு தொடர்பில் நிலவும் குழப்ப நிலையானது, கூட்டுறவுக் கூட்டாட்சி என்ற ஆர்ப்பரிப்பில் உள்ள குறைகளை வெட்டவெளிச்சமாக்குகிறது.

என்ன மாற்று?

பொருளியல் அடிப்படையில் பார்த்தால், மாநிலங்களைவிட ஒன்றிய அரசுதான் ஜிஎஸ்டி இழப்பீட்டில் நிலவும் இடைவெளிகளைச் சரிசெய்ய கூடுதல் நிதியாதாரங்களை உருவாக்க முடியும். கூடுதல் வருவாய் ஈட்டும் வகையில் வரிகளை விதிக்கும் அதிகாரங்களை மாநில அரசுகள் பெற்றிருக்கவில்லை. ஒரு மாநிலத்தின் நிதியானது நிச்சயமாக மாநில அரசின் கைகளில் இல்லை. ஆனால், ஒன்றிய அரசுக்குப் பல்வேறு விதமான மாற்று வருவாய்க்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

ஓர் உதாரணத்துக்காக மட்டுமே எடுத்துக்கொள்வோம். மூலதனச் சந்தையின் பரிவர்த்தனைகளுக்காகக் கூடுதல் வரி விதிப்பதன் மூலமாக வருவாய்க்கான ஒரு வாய்ப்பு இருக்கிறது. ஏப்ரல்-ஜூன் மாதங்களில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கைகளும் முற்றிலுமாக உறைநிலையில் இருந்தபோதும்கூட இந்தியாவின் மூலதனச் சந்தையில் இதற்கு முன் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்குக் கடந்த ஆண்டைவிட 75% அளவுக்குக் கூடுதல் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. மூலதனச் சந்தையானது இந்தக் காலத்தில் 30% அதிகரித்தபோதும் மிகக் குறைவான எண்ணிக்கையினரே லாபம் கண்டுள்ளனர்.

மற்ற தொழில் நடவடிக்கைகளைப் போல, இத்தகைய மூலதனச் சந்தை நடவடிக்கைகள் உண்மையான பொருளாதாரத்தில் கூடுதலாக ஒரே ஒரு வேலைவாய்ப்பைக்கூட உருவாக்குவதில்லை. இந்தச் சிக்கலான நேரத்தில், ஒன்றிய அரசு கூடுதல் வருவாய் ஈட்டுவதற்காக இதுபோன்ற ஊக பேர மூலதனச் சந்தை நடவடிக்கைகளுக்குக் கூடுதல் வரி விதிக்கலாம். இதுபோன்ற நடவடிக்கைகள் ஜிஎஸ்டி வரி அல்லது தீர்வை விகிதங்களை உயர்த்துவது போன்று பொருளாதாரத்தை எந்த வகையிலும் பாதிக்கவும் செய்யாது. கடன் பத்திரங்களின் பரிமாற்றங்களுக்கான வரியைத் தற்போதுள்ள மிகவும் குறைவான விகிதமான 0.025%-லிருந்து ஐந்து மடங்கு உயர்த்துவதன் மூலமாக ஒன்றிய அரசால் ரூ.50,000 கோடி கூடுதல் வருவாய் ஈட்ட முடியும். நம்பிக்கைகளுக்கும் பங்குச் சந்தை பங்கேற்பாளர்கள் ஏற்படுத்தும் அச்ச உணர்வுக்கும் மாறாக, கடன் பத்திரங்கள் பரிமாற்றங்களுக்கான வரிகளை உயர்த்துவது பங்குச் சந்தையிலோ அல்லது ஒட்டுமொத்தப் பொருளாதாரத்திலோ பாதிப்புகளை ஏற்படுத்துவதாகக் கடந்த 15 ஆண்டு காலத் தரவுகளில் எந்த ஆதாரமும் இல்லை.

இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விஷயம், இத்தகைய புதிய வருவாய்களை உருவாக்கும் வாய்ப்புகள் மாநில அரசுகளுக்கு இல்லை. கூடுதல் வருவாய் ஆதாரங்களை உருவாக்குவதுடன் ஒன்றிய அரசே கடன்களைப் பெற்று மாநிலங்களுக்கு அளிக்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுப் பிரச்சினையைச் சரிசெய்வதுதான் சரியான தீர்வு.

தயக்கம் வேண்டாம்

ஒன்றிய அரசே நேரடியாகக் கடன்களைப் பெற்றால் சர்வதேச மதிப்பீட்டு நிறுவனங்கள் இந்தியாவைத் தங்களது தரவரிசையில் கீழிறக்கிவிடும் என்றொரு அச்சமும் நிலவுகிறது. ஆனால், மாநிலங்கள் தாங்களாகக் கடன் வாங்குவதன் மூலமாக, அந்த மதிப்பீட்டு நிறுவனங்களை ஏமாற்றிவிடலாம் என்று நம்புவது சிறுபிள்ளைத்தனம் இல்லையா?

ஜிஎஸ்டி இழப்பீடு குறித்த உறுதிமொழியை நிறைவேற்றுவதற்காகக் கூடுதல் வரி வருவாய்களை உருவாக்கவும் கடன்களைப் பெறவும் ஒன்றிய அரசு தன் கைவசமுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்துவதே விவேகமானது. ஜிஎஸ்டி கவுன்சிலின் நம்பகத்தன்மையும் கூட்டுறவுக் கூட்டாட்சி என்ற கருத்துருவும் காப்பாற்றப்பட வேண்டும் எனில், ஒன்றிய அரசு தனது பிடிவாதத்தை விட்டொழித்து பொருளாதார நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், ஜிஎஸ்டி இழப்பீட்டில் ஏற்பட்டிருக்கும் பற்றாக்குறையைச் சரிசெய்யும் வகையிலும் கூடுதல் வருவாய் ஆதாரங்களைத் தாமே உருவாக்க வேண்டும்.

© ‘தி இந்து’, தமிழில்: புவி

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x