Published : 04 Oct 2020 07:33 AM
Last Updated : 04 Oct 2020 07:33 AM

விசிகவின் ‘ஆதிதிராவிடராய் ஒன்றிணைவோம்’ நகர்வு அம்பேத்கரின் தலித் கருத்தியலை சிதைத்திடக் கூடும்

புனித பாண்டியன்

அறுபத்து நான்கு ஆண்டுகளுக்கு முன் டாக்டர் அம்பேத்கர் அவருடைய கண்களில் வேதனையுடன் கசிந்த நீர் கன்னத்தில் வழிந்தோடிய நிலையில், தழுதழுத்த குரலில் தன் உதவியாளர் நானக் சந்த் ரட்டுவிடம் அழுத்தந்திருத்தமாகச் சொன்னார், “இதைப் போய் மக்களிடம் சொல் நானக் சந்த், என் மக்களுக்காக நான் சாதித்தவை எல்லாம் தனி ஆளாக நின்று கொடுமையான துயரங்களையும் முடிவற்ற சிரமங்களையும் கடந்து - எல்லாப் பக்கங்களிலிருந்தும், குறிப்பாக இந்து ஊடகங்களிலிருந்து வந்த அவதூறுகளுக்கு எதிராகவும் என் எதிரிகளுக்கு எதிராகவும் - என் வாழ்நாள் முழுவதும் போராடிப் பெற்றவையே. என்னோடு சேர்ந்து போராடிய சிலரும் தற்போது சுய நலன்களுக்காக என்னை ஏமாற்றத் துணிந்துவிட்டனர். ஆனால், என் வாழ்நாளின் இறுதிவரை ஒடுக்கப்பட்ட எனது சகோதரர்களுக்காகவும் இந்நாட்டுக்காகவும் எனது பணியைத் தொடர்வேன். என் மக்கள் பயணிக்கும் இந்த ஊர்தியை மிகவும் சிரமப்பட்டே தற்போது இருக்கும் இடத்துக்குக் கொண்டுவந்து நிறுத்தி இருக்கிறேன். வழியில் வரும் இடர்ப்பாடுகளை எல்லாம் பொருட்படுத்தாமல் இந்த ஊர்தி முன்னேறிச் செல்லட்டும். மாண்புடனும் மரியாதையுடனும் என் மக்கள் வாழ நினைத்தால் இத்தருணத்தில் அவர்கள் கிளர்ந்தெழ வேண்டும். என் மக்களும் என் இயக்கத்தினரும் அந்த ஊர்தியை இழுத்துச் செல்ல முடியாமல் போனால், அது தற்போது எங்கே நிற்கிறதோ அங்கேயே விட்டுவிட்டுச் செல்லட்டும். ஆனால், எந்தச் சூழ்நிலையிலும் அந்த ஊர்தியைப் பின்னோக்கித் தள்ளிவிட வேண்டாம். இதுவே என் செய்தி!”

வார்த்தை அல்ல பெயர்

அம்பேத்கரின் ஒப்பற்ற சிந்தனையில் முகிழ்த்த தலித் கருத்தியலானது சாதிகளாகச் சிதைக்கப்பட்டு, அவர் சிரமேற்கொண்டு முன்னகர்த்திய ஊர்தி பின்னோக்கித் தள்ளப்படும் பேராபத்து நிகழும்போதெல்லாம், அம்பேத்கரின் அழுகுரலைக் கேட்க முடிகிறது. இந்தியா முழுவதும் உள்ள தலித் மக்களுக்கு உண்மையான பிரதிநிதித்துவத்தை மறுத்து, சாதி இந்துச் சமூகம் 88 ஆண்டுகளுக்கு முன்னால் செய்த துரோகத்தால் விளைந்த பூனா ஒப்பந்த நாளன்று - செப் 24 - ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியான ‘ஆதி திராவிடராய் ஒன்றிணைவோம்: தமிழ்நாட்டு தலித் அரசியலில் ஒரு திருப்பம்’ கட்டுரையைப் படித்தபோதும் அம்பேத்கரின் அந்தக் குரல் நினைவுக்கு வந்து சென்றது. இக்கட்டுரையின் இறுதி வரிகளில் கே.கே.மகேஷ் பின்வருமாறு கூறுகிறார்: “சமூக நீதியின் பொருட்டு உருவான தலித் சக்திகள் ஒவ்வொன்றும் அருந்ததியர்சார் கட்சி, தேவேந்திர குல வேளாளர்சார் கட்சி, பறையர்சார் கட்சி என்று உள்ளடக்கத்தில் மேலும் மேலும் பிரிபடுவதும் உள் அடையாளங்களுக்குள் இறுகிவருவதும் என்ன விதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும், தலித் அரசியல் இங்கே என்னவாக உருமாறிக்கொண்டிருக்கிறது என்பதையும் புரிந்துகொள்ள முடியவில்லை!”

1920-களில் நடைமுறையில் இருந்த ‘அரிஜன்’, ‘தாழ்த்தப்பட்டோர்’ போன்ற பெயர்களுக்கு மாற்றாகத்தான் ‘ஆதி திராவிடர்’ என்ற மரியாதைக்குரிய சொல் கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டு, அனைவரின் ஒப்புதலுடனும் சட்டமன்றத்தில் ஏற்கப்பட்டது. ‘திராவிடர்’ என்பது எப்படி ஒரு சாதியைக் குறிக்காதோ அதேபோலத்தான் ‘ஆதி திராவிடர்’ என்பதும் ஒரு சாதியைக் குறிக்காது. அதன் அடிப்படையில்தான் ‘ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்’ என்ற பெயரில் அனைத்துப் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான துறை இங்கே விளங்குகிறது. திராவிடர்களுக்கும் மூத்தவர்கள் என - அதிகாரபூர்வமாக - முன்னுரிமை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு சொல் இன்று ஒருசிலரால் அரசியல் காரணங்களுக்காக ஒரு சாதியைக் குறிப்பதற்கான சொல்லாகச் சுருக்கப்படுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

இது என்ன அரசியல்?

பன்னெடுங்காலமாகப் பிறப்பின் அடிப்படையில், படிநிலைப்படுத்தப்பட்ட பாகுபாட்டை உருவாக்கும் சாதியச் சமூக அமைப்பின் நோக்கமே - மக்களைச் சாதிகளாகப் பிரித்து ஆள்வதுதான். சாதிகளாகப் பிளவுண்டு அல்லலுறும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் மக்களிடையே ஓர்மையையும் ஒற்றுமையையும் ஏற்படுத்துவதற்கான அரசியல் செயல்பாடுகள் அம்பேத்கரின் அடியொற்றி நடத்தப்பட வேண்டும்.

சமூகத்தில் கற்பிக்கப்பட்ட சமத்துவமின்மையை நேர்செய்வதற்கு அரசியல் பயன்பட வேண்டுமே தவிர, அதை எதிரொலிப்பதற்கு அல்ல. அவ்வாறு எதிரொலிப்பவர்களைத்தான் சாதிக் கட்சிகள் என்று புறந்தள்ளுகிறோம். மத அடிப்படை அரசியலை முன்னிறுத்தி அரசியல் செய்யும் பாஜகவைக் கண்டிக்கும் விசிக இன்று சாதி அடிப்படை அரசியலை முன்னிறுத்த முயல்வது கடைந்தெடுத்த முரண்பாடு அல்லவா? ‘இந்துக்கள் இந்நாட்டின் பெரும்பான்மை மக்களாக இருந்தாலும் அவர்களுக்கு எந்தக் கட்சியும் முக்கியத்துவம் அளிப்பதில்லை; எல்லோரும் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருக்கும் மதச் சிறுபான்மையினருக்கே முக்கியத்துவம் அளிக்கிறார்கள்’ என்கிற பாஜகவின் அடிப்படையற்ற இந்து பெரும்பான்மைவாதத்துக்கும், ‘பறையர் சமூகத்தினருக்கு அவர்கள் எண்ணிக்கைக்கேற்ற பிரதிநிதித்துவம் இல்லை’ என்று விடுதலைச் சிறுத்தைகளின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் முன்வைக்கும் அடிப்படையற்ற பறையர் பெரும்பான்மைவாதத்துக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?

பிறப்பு தீர்மானிக்கலாமா?

அருந்ததியர் சமூகத்துக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட பிரதிநிதித்துவமானது அம்பேத்கர் வலியுறுத்திய சகோதரத்துவத்தின் பாற்பட்டது. அருந்ததியர்களின் அடையாள அரசியலாக அதை அணுகுவது ஆதிக்கத்தின் பாற்பட்டது. பள்ளர் சமூகத்தின் பட்டியலின வெளியேற்றத்தை தலித் ஓர்மைக்கும் ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவிக்கும் செயல் என்று கடுமையாகக் கண்டித்திருக்க வேண்டிய விடுதலைச் சிறுத்தைகளின் மெளனத்துக்கான காரணம் இதுதானோ என்று அச்சப்பட வேண்டியிருக்கிறது.

சாதியை எப்படி பிறப்பு தீர்மானிக்கிறதோ அப்படியே எண்ணிக்கையையும் பிறப்புதான் தீர்மானிக்கிறது. அது நம் கையில் இல்லை; அது ஒரு விபத்து. ஆனால், அதை அடிப்படையாக வைத்து அதிகாரத்தைக் கட்டமைப்பது ஏகாதிபத்தியத்துக்கும் சர்வாதிகாரத்துக்கும்தான் வழிவகுக்கும். அம்பேத்கர் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்து உருவாக்க நினைத்த சமூக ஜனநாயகத்துக்கு வழிவகுக்காது. இந்தியாவில் எந்தக் கட்சியாலும் தங்கள் லச்சினையில் ‘சாதி ஒழிப்பே தேச விடுதலை’ என்று துணிச்சலுடன் முன்னிறுத்த முடியவில்லை. விடுதலைச் சிறுத்தைகள்தான் அதைச் சாத்தியப்படுத்தினார்கள். அதுதான் சாதியற்ற ஒட்டுமொத்த தலித்துகளின் பலம். இந்த விவகாரத்தில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளிப்படுத்திவரும் மௌனம் கால் நூற்றாண்டுக்கும் மேலாக அவர் அடைக்காத்துவந்த தலித் கருத்தியலைச் சிதைப்பதாக இருந்துவிடக் கூடாது!

- புனித பாண்டியன், ஆசிரியர், ‘தலித் முரசு’.

தொடர்புக்கு: dalitmurasu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x