Last Updated : 02 Oct, 2020 07:34 AM

Published : 02 Oct 2020 07:34 AM
Last Updated : 02 Oct 2020 07:34 AM

எல்லோரும் இணைவதற்கு காந்தியே மையப்புள்ளி- அண்ணாமலை பேட்டி

புதுடெல்லியில் உள்ள தேசிய காந்திய அருங்காட்சியகத்தின் இயக்குநர் என்கிற அடையாளத்தைத் தாண்டிய, சமகாலத்தின் குறிப்பிடத்தக்க காந்தியச் சிந்தனையாளர்களில் ஒருவர் எனும் அடையாளத்தையும் கொண்டவர் அ.அண்ணாமலை. சென்ற ஆண்டு நாடெங்கும் காந்தியின் 150-வது பிறந்த நாள் நிகழ்வுகளையும் கொண்டாட்டங்களையும் நடத்தியதில் முக்கியப் பங்கு வகித்தவரான அண்ணாமலையுடன், சமகாலச் சூழலில் காந்தியையும் அவருடைய வழிமுறைகளையும் எப்படிப் பொருத்திப் பார்ப்பது என்று பேசினேன்…

காந்தியம் உங்களுக்கு எப்படி அறிமுகமானது?

ராணுவத்தில் சேர்ந்து அதிகாரியாகப் பணியாற்ற வேண்டும் என்ற மிகப் பெரிய கனவுடன் கல்லூரிக் காலத்தில் வாழ்ந்தவன் நான். அதில் ஏற்பட்ட சில மாற்றங்கள், அனுபவங்கள் என்னை வேறு வழிக்குத் திருப்பிக் கொண்டுவந்துவிட்டன. எம்எஸ்சி அமைதியாக்கம் படிக்க வேண்டும் என்பதற்காகத்தான் முதுகலைப் பட்டத்தில் சேர்ந்தேன். களப்பணியில் காந்தி தேவைப்படுகிறார் என்பதற்காகப் படிக்க ஆரம்பித்தேன். அதுவே காந்தியப் பணியை நோக்கித் திருப்பியதோடு வாழ்க்கைப் பணியாகவும் அமைந்துவிட்டது தற்செயலான விஷயம்தான்.

தேசிய காந்தி அருங்காட்சியகத்தின் இயக்குநராக உங்களால் மறக்க முடியாத விஷயங்கள் எவையெவை?

தேசிய காந்தி அருங்காட்சியகத்தைக் காந்தியக் கருவூலம் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் பயன்படுத்திய பொருட்கள், அவர் எழுதிய கடிதங்கள் என்று ஏராளமான விஷயங்களை உள்ளடக்கியது. தேசிய காந்தி அருங்காட்சியகத்தில் ஒவ்வொரு நாளும் புதுப் புது விஷயங்களைப் பார்ப்பது போன்ற ஒரு அனுபவம்தான் எனக்கு ஏற்பட்டது. உதாரணத்துக்கு, என்னுடைய நண்பர் ஒருவர் காந்தியுடைய வளர்ப்பு மகளும், அவருடைய ஆசிரமத்தில் சேர்க்கப்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பார் என்று கருதப்பட்டவர்களின் குழந்தையுமான லட்சுமியைப் பற்றிய தகவல் கேட்டிருந்தார். அதற்காக நான் தேடிக்கொண்டிருந்தபோது எங்களுடைய அந்தப் புகைப்படப் பிரிவில் தற்செயலாக ஒரு சின்ன நோட்டீஸ் கிடைத்தது. அதில் காந்தியுடன் அவருடைய வளர்ப்பு மகள் லட்சுமி என்று ஒரு படம் போட்டு இருந்தது. அந்தப் படம் 1935-களில் எடுக்கப்பட்டுள்ளது என்று எனக்குத் தெரிந்தது. அதை எடுத்து வைத்துக்கொண்டேன். இதைத் தொடர்ந்து பழைய புத்தகங்கள் எல்லாம் வைத்திருக்கக்கூடிய அந்த அறையைத் திறந்து பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு கடிதத் தொகுப்பைப் பார்த்தேன். காந்தி கைப்பட எழுதிய அஞ்சல் அட்டை. அந்தக் கடிதத்தில் ‘உங்களுடைய மகன் இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்துதான் திருமணம் செய்துகொள்வேன் என்று கூறுகிறார். அதற்குப் பின்னால் இந்தத் திருமணத்தைப் பற்றிப் பேசுவோம்’ என்று திருமணம் பற்றிய ஒரு பதிவு இருந்தது. அவர் ஆந்திரத்தைச் சேர்ந்த சர்மா என்பவருக்கு எழுதிய கடிதம். சர்மாவின் மகன் மாருளியா. அவரை மாருதி என்றே அழைப்பார்கள்; அவர் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர். அவருக்கும் காந்தியின் ஆசிரமத்தில் இருந்த அவருடைய வளர்ப்பு மகளும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவருமான லட்சுமிக்கும் இடையிலானதுதான் இந்த திருமணப் பேச்சுவார்த்தை. இதுவரை இந்தக் கடிதம் எங்கும் வெளியிடப்படவில்லை.

ஆனால், இதுபோன்ற நடவடிக்கையில் காந்தி ஈடுபட்டிருந்தார் என்பது தெரியும். ஆகவே, எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. பிறகு, நூலகத்துக்குச் சென்று பழைய செய்தித்தாள்கள் பிரிவில் இருக்கும் கோப்புகளை எல்லாம் பார்க்கலாம் என்று எடுத்தேன். ஒரு கோப்பை நான் திருப்பியவுடன் என் கண்ணில் பட்டது ஒரு பெண்ணின் பேட்டி. தன்னுடைய வாழ்க்கையில் காந்தி எப்படியெல்லாம் மாற்றங்களைக் கொண்டுவந்தார், எப்படித் திருமணம் நடந்தது என்பதைப் பற்றியெல்லாம் விளக்கமாகப் பேசியிருந்தார். அந்தப் பெண் வேறு யாரும் அல்ல; லட்சுமிதான். அடுத்தடுத்து புகைப்படம் கிடைக்கிறது, காந்தி எழுதிய கடிதம் கிடைக்கிறது, லட்சுமியின் பேட்டி கிடைக்கிறது எனும்போது ஆச்சரியமாக இருக்கிறது; அதுவரை ஒரு கதையாகச் சொல்லப்பட்டது அங்கே ஆதாரபூர்வமாக நிறுவப்பட்டது. இப்படியான பல விஷயங்கள் நடந்துகொண்டேயிருக்கும் இடம் அது.

சிறுவர்களிடம் காந்தியை எடுத்துச்செல்வதைப் பணியாகக் கொண்டிருக்கிறீர்கள். சிறுவர்கள் காந்தியை எப்படி எதிர்கொள்கிறார்கள்?

மாணவர்களுக்கு காந்தியை சொல்வது மிக எளிதாகத்தான் இருக்கிறது. பெரியவர்களுக்கு சொல்லும்போதுதான் பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது. ஏனென்றால், மாணவர்கள் காந்தியை காந்தியின் வழியாக அணுகுகிறார்கள்; நல்லதோ கெட்டதோ நேரடியாகத் தங்கள் அனுபவத்தின் வழி காந்தியை மதிப்பிடுகிறார்கள். பெரியவர்களோ பெரும்பாலும் காந்தியை வேறு மனிதர்களின் பார்வைகளின் வழி வந்தடைகிறார்கள். காந்தியை வாசிக்காமலே, அவரைப் பற்றி எதுவும் தெரிந்துகொள்ளாமலேயே அவருக்கான தீர்ப்பை எழுதிவிடுகிறார்கள்.

காந்தியும் அந்நாளைய காந்தியர்களும் அதிகாரத்திடம் உண்மையைப் பேசினார்கள்; இந்நாளைய காந்தியர்கள் மௌனமாக இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?

காந்தியர்கள் எப்போதும் ஒரே மாதிரியாகவே செயலாற்றுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் வேறு பல அமைப்புகளுடனும் ஒப்பிட முடியாத அளவுக்குப் பல்வேறு தளங்களில் தங்கள் காரியங்களை அவர்கள் விரித்துக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில், அன்றைக்கு காந்தியர்களுக்கும் அவர்களுடைய காரியங்களுக்கும் கொடுக்கப்பட்ட நியாயமான கவனம் இன்றைக்கு ஊடகங்களால் கொடுக்கப்படுவதில்லை என்பதே இப்படியான பார்வைக்கான காரணம். இந்தத் தலைமுறை ஊடகங்களை முழுக்கவுமே வியாபார நோக்கங்கள் ஆக்கிரமித்துவிட்டன; விளைவாக, ஆட்சியதிகாரத்துக்கு அப்பாற்பட்டு சந்தை நோக்கத்தின் அடிப்படையில் பரபரப்பையே நாடுகின்றன. சமூகம் இரண்டாகப் பிளந்துகொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் இந்தப் பக்கம் அல்லது அந்தப் பக்கம் என்று முடிவெடுத்துப் பேசுபவர்களின் செயல்பாடுகளே கவனிக்கப்படுகின்றன. காந்தியர்கள் அப்படியான இயல்பைக் கொண்டவர்கள் அல்ல. பிளேக் காலகட்டத்திலும், போயர் போர் காலகட்டத்திலும் பிரிட்டிஷ் அரசுடனும் இணைந்து செயலாற்றியவர் காந்தி. பிரிட்டிஷார் ஆட்சியை வேரறுக்கச் செயல்பட்ட காந்தியின் இந்த அணுகுமுறையை ஒரு காந்தியர் பின்பற்றுவதை இன்றைய ஊடகங்கள் எப்படி அணுகும் என்று நினைக்கிறீர்கள்? ஜனநாயகத்துக்காக, மதச்சார்பின்மைக்காக, சுற்றுச்சூழலுக்காக என்று ஒவ்வொரு தளத்திலும் அதிகாரத்தை நோக்கி உரக்கப் பேசுவதில் மட்டும் அல்ல; சிதைவுகளுக்கு மாற்றாக ஒன்றை உருவாக்கும் பணியிலும் காந்தியர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் உரிய கவனம் இன்று பெறாததால், அவர்கள் செயல்படவே இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.

காந்தியோடு முரண்பாடு கொண்டிருந்த சித்தாந்தங்கள் பலவும் தற்போது காந்தியத்தோடு நெருங்கிவருவதுபோல் தெரிகிறது.
இந்த மாற்றத்தின் காரணம் என்ன?

எதிரி மிகவும் பலசாலியாக இருப்பதால் எதிராளிகள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்பது எல்லோருக்கும் புரிகிறது. அதற்கு ஒரு மையப்புள்ளி தேவை இல்லையா? சமூகத்தின் எல்லாத் தரப்புகளோடும், எதிரில் இருப்பவரையும் ஒரு தரப்பாக அணுகிய காந்தியே அந்த மையப்புள்ளியாக இருக்க முடியும் என்றும் புலப்படத் தொடங்கியிருக்கிறது. அதன் விளைவாகவே காந்தி என்ற மையப் புள்ளியை நோக்கி எல்லோரும் வந்துகொண்டிருக்கிறார்கள்.

தனிப்பட்ட வாழ்க்கையில் பின்பற்ற இயலாத அளவு கடினமானதா காந்தியம்?

சைக்கிள் ஓட்டுவதுபோலத்தான் வாழ்க்கை. சைக்கிள் பழகும்போது நமக்கு எல்லோருக்கும் தெரியும், எவ்வளவு கடினமான ஒரு செயல். எத்தனை முறை தடுக்கித் தடுக்கி விழுந்திருப்போம். எத்தனை முறை அடிபட்டிருப்போம். ஆனால், அந்த சைக்கிள் ஓட்டிப் பழகியவுடன் எவ்வளவு எளிதாக இருக்கிறது. அது, பழக்கத்தில்தான் வருகிறது, உங்களுடைய அர்ப்பணிப்பில்தான் உள்ளது. நீங்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று நினைத்துவிட்டால் காந்தியத்தைவிட எளிமையானது வேறு எதுவுமே கிடையாது. நம்முடைய வாழ்க்கையை நாம் சிக்கலாக்கிக்கொண்டதால் வந்த வினைதானே ஒழிய அவருடைய சிந்தனையைப் பொறுத்த அளவில் எளிமையானதுதான்.

காந்தி தற்காலத்துக்கு எந்த அளவுக்குப் பொருத்தப்பாடு உடையவராக இருக்கிறார் என்று நினைக்கிறீர்கள்?

காந்தி தற்காலத்துக்கு ஏற்புடையவரா என்ற கேள்வியைக் காட்டிலும், நாமும் நம்முடைய வாழ்க்கை முறையும் தற்காலத்துக்கு ஏற்புடையவையா என்று கேள்வியை மாற்றிக்கொண்டால், காந்தி எல்லாக் காலத்துக்கும் எவ்வளவுக்குப் பொருத்தம் உடையவர் என்பது விளங்கிவிடும் என்று நினைக்கிறேன். நம்முடைய வாழ்க்கை முறை, நம்முடைய பொருளாதார அணுகுமுறை, நம்முடைய வளர்ச்சி தொடர்பிலான பார்வை அத்தனையிலும் ஓட்டை விழுந்துகொண்டிருப்பதை எல்லோருமே உணர்ந்திருக்கிறோம்தானே! இதற்கு என்ன மாற்று, யாருடைய வழிமுறை பொருத்தமானதாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? சமூகத்தளத்திலேயே ஒரு முஸ்லிம் அல்லது ஒரு தலித் பக்கத்திலிருந்து இன்றைய காலகட்டத்தைப் பாருங்கள். அவர்களுக்கு இவ்வளவு நெருக்கமான, பக்கபலமான ஒரு தார்மீக உறவுக்குரல் காந்திபோல வேறு எது ஒன்று இருக்கிறது?

காந்தியம் தன்னைத் தானே புதுப்பித்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?

பொதுவாக, நாம் ஏதோ புதுமையானவர்கள்போலவும், காந்தியம் மிகவும் பழமையானவர்போலவும் ஒரு பார்வையை வைத்துக்கொண்டு காந்தியை அணுகுகிறோம். இது தவறு. ‘காந்தியம் தன்னைத் தானே புதுப்பித்துக்கொள்ள வேண்டுமா அல்லது நம்மை நாமே புதுப்பித்துக்கொள்ள வேண்டுமா?’ என்று கேள்வியை மாற்றி யோசிக்குமாறு உங்களை வேண்டுகிறேன்.

– ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@hindutamil.co.in

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x