Last Updated : 29 Sep, 2020 07:27 AM

 

Published : 29 Sep 2020 07:27 AM
Last Updated : 29 Sep 2020 07:27 AM

இதயத்தையும் குறிவைக்கும் கரோனா

சீனாவில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கிய ஆரம்பக் காலத்தில் அது நுரையீரலைத் தாக்கும் புதியதொரு வைரஸ் என்று மட்டுமே அறியப்பட்டது. அதன் பாதிப்புகள் உலக அளவில் தீவிரமானதும், அது ரத்தக்குழாய் வழியாக உடலுக்குள் புகுந்து இதயம், மூளை, சிறுநீரகம் எனப் பலதரப்பட்ட உறுப்புகளையும் தாக்கக்கூடிய வேறுபட்ட வைரஸ் என்பது தெரியவந்தது. முதன்முதலில், இத்தாலியில் கரோனா தொற்றால் இறந்துபோன ஒருவரின் உடலை ஆராய்ந்தபோது அவரது ரத்தக் குழாய்களில் ரத்தக் கட்டிகள் காணப்பட்டதும், இதயத்தில் அழற்சி (Myocarditis) தோன்றியிருந்ததும் அதை உறுதிப்படுத்தியது.

உலகில் ஆண்டுதோறும் இதய நோய்களால் ஒரு கோடியே 70 லட்சம் பேர் இறக்கின்றனர். அத்தோடு கரோனா பாதிப்பும் சேர்ந்துகொண்டால் இந்த எண்ணிக்கை இன்னும் கூடுதலாகிவிடும் என்ற எச்சரிக்கை உணர்வில் கரோனா தொற்றாளர்களுக்கு நுரையீரலுக்கு மட்டுமன்றி இதயத்துக்கும் பாதுகாப்பு கொடுப்பது அவசியம் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. அதைத் தொடர்ந்து, ரத்தம் உறைவதன் வழியாக கரோனா தொற்றாளர்களுக்கு மரணம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு ரத்த உறைவைத் தடுக்கும் மருந்துகள் வழங்கப்படுவது வாடிக்கையானது.

வெளிச்சம் கொடுத்த ஆய்வுகள்

பொதுவாக, ஆக்ஸிஜன் இல்லாமல் இதயம் அவதிப்படும்போது அதன் தசைகள் அழியத் தொடங்கும். அப்போது, ரத்தத்தில் ட்ரோபோனின் (Troponin) எனும் இதய நொதி அதிகரிக்கும். ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்று அறிவிக்கும் முக்கியத் தடயம் இது. கரோனா தொற்றாளர்களில் பலருக்கும் இந்த நொதி அதிகமாகக் காணப்பட்டதாலும் அவர்களில் பெரும்பாலானோர் மாரடைப்பால் மரணம் அடைந்ததாலும் கரோனா வைரஸ் இதயத் தசைகளைப் பாதிப்பது உறுதியானது. ஆனால், அது கரோனாவின் நேரடித் தாக்குதல் இல்லை; கரோனாவுக்கு எதிராகப் புயலெனக் கிளம்பும் தடுப்பாற்றல் புரதங்கள் உண்டாக்கும் அழற்சி நிலை என்றே கருதப்பட்டது. அதனால், கரோனா சிகிச்சையில் அழற்சியைக் கட்டுப்படுத்தும் ஸ்டீராய்டு மருந்துகள் புகுந்தன.

அண்மையில், இந்தப் புரிதலில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. கரோனா வைரஸ் நேரடியாகவும் இதயத்தைத் தாக்கக்கூடும் என்பதே அது. சான்ஃபிரான்சிஸ்கோவில் கிளாட்ஸ்டோன் ஆராய்ச்சி நிறுவனம் (Gladstone Institute) செயற்கையாக வளர்க்கப்பட்ட இதயத் தசைகளுக்குள் கரோனா கிருமிகளைச் செலுத்தியபோது இதய செல்கள் எல்லாமே அணில் கொறித்த பழம்போல் சிறு சிறு துண்டுகளாகப் பிளந்து காணப்பட்டன. இதுவரை எந்த ஒரு வைரஸ் பாதிப்பிலும் காணப்படாத அரிய தோற்றம் இது. இதேபோன்று ஜெர்மனியில் 49 வயது இளைஞருக்கு கரோனா பாதித்தபோது எடுக்கப்பட்ட எம்.ஆர்.ஐ. படத்திலும் இதயத் தசைகள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

உடலியல் செயல்பாட்டின்படி இதய செல்கள் ஒருமுறை இறந்துவிட்டால் அது நிரந்தர இழப்பாகிவிடும். கல்லீரல்போல் மறுவளர்ச்சிக்கு அங்கு வழியில்லை. இந்தக் கொடிய விளைவால் கரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு இதயத் தசைகள் வீங்குவது (Cardiomyopathy), சீரற்ற இதயத் துடிப்பு (Atrial fibrillation) எனத் தொடர் பாதிப்புகள் ஏற்பட்டு நாட்பட்ட நோயாக மாறிவிடுகின்றன. அப்போது இதயம் இயல்பாகச் சுருங்கி விரியும் தன்மையை இழக்கிறது. இதய விசை குறைந்து, உடலுக்குள் அனுப்பப்படும் ரத்த அளவும் குறைந்து போகிறது. இதனால், பயனாளிக்குக் கடுமையாகச் சோர்வு ஏற்படுகிறது; மாடி ஏறினால் மூச்சு வாங்குகிறது; சிறிது வேகமாக நடந்தால்கூட நெஞ்சு வலிக்கிறது; அதிகம் வியர்க்கிறது.

இந்த ஆய்வின் அடுத்த புரிதல் என்னவென்றால், இம்மாதிரியான பாதிப்புகள் ஏற்கெனவே இதய நோய் உள்ள கரோனா தொற்றாளர்களுக்குத்தான் ஏற்படும் என்பதில்லை; இதுவரை இதய நோய் இல்லாதவர்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்ட பிறகு புதிதாக உருவாகக்கூடும் என்பது. 27 வயது நிரம்பிய நைஜீரிய-அமெரிக்கக் கூடைப்பந்து வீரர் மைக்கேல் ஓஜோ கரோனாவிலிருந்து மீண்ட பிறகு மாரடைப்பில் இறந்தது இதை உறுதிப்படுத்தியது.

‘ஸ்டாடின்’ தரும் பாதுகாப்பு

இதய நோய், நீரிழிவு, உடற்பருமன் போன்ற துணை நோய்கள் உள்ளவர்களுக்கு கரோனாவின் பாதிப்பு தீவிரமாக இருக்கும் என்று நம்பப்படும் சூழலில் அமெரிக்காவில் நடைபெற்றுள்ள ஸ்டாடின் குறித்த ஆய்வு ஒன்று முக்கியத்துவம் பெறுகிறது. வழக்கமாக இதயத் தமனி நோய் (CAD) உள்ளவர்களுக்கும், கொலஸ்ட்ரால் கூடுதலாக இருப்பவர்களுக்கும் ஸ்டாடின் வகை மருந்துகளைக் கொடுப்பது உண்டு. இந்த மருந்துகள் ரத்த கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தி, இதயத் தசைகளுக்கு ரத்த ஓட்டம் தடைப்படாமல் பார்த்துக்கொள்வதால் மாரடைப்பு தவிர்க்கப்படுகிறது.

கலிபோர்னியாவில் சான் டய்கோ மருத்துவ மையத்தில் (San Diego Medical Centre) நடைபெற்ற அந்த ஆய்வில் ஸ்டாடின் மருந்துகளுக்கு கரோனா வைரஸை நேரடியாகத் தாக்கி அழிக்கும் திறன் உள்ளது அறியப்பட்டுள்ளது. எப்படியெனில், கரோனா கிருமிகள் மனித செல் உறைகளில் உள்ள ‘ஏஸ்2’ புரத ஏற்பிகளோடு இணைவதை ஸ்டாடின் மருந்து தடுத்துவிடுகிறது; அங்குள்ள கொழுப்பை அகற்றிவிடுகிறது. ஆகவே, கரோனா கிருமிகள் இவர்கள் உடலுக்குள் அவ்வளவு எளிதாக நுழைய முடிவதில்லை. இதன் பலனால், இவர்களுக்கு கரோனாவின் பாதிப்பு பாதி அளவுக்குக் குறைந்துவிடுகிறது. நோய் விரைவில் குணமாகவும் இது வழி அமைக்கிறது. கரோனா தொற்றைக் குணப்படுத்த இன்னும் சரியான மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் ஏற்கெனவே வழக்கத்தில் உள்ள ஸ்டாடின் மருந்து இரட்டைப் பாதுகாப்பு தருகிறது எனும் செய்தி ஆறுதல் அளிக்கிறது.

ஆக, ‘ஃபெவிபிரவீர்’, ‘ரெம்டெசிவீர்’ போன்ற வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை கரோனா தொற்றியதுமே எடுத்துக்கொள்ள வேண்டியதும், கரோனாவில் மீண்டவர்கள் அனைவரும் மருத்துவர் கூறும் கால இடைவெளியில் மறுபரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டியதும் தற்போது கட்டாயமாகியுள்ளது. நம் சுகாதாரத் துறை இதற்கான ஏற்பாடுகளைப் பெருநகரங்களில் செய்துவருகிறது. இவற்றை மாவட்ட அளவிலும் நகராட்சி அளவிலும் நீட்டித்தால் சிறு நகரங்களில், கிராமங்களில் வசிப்பவர்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கும். மக்களும் மறுபரிசோதனைகளை அலட்சியப்படுத்தாமல் அக்கறையுடன் செயல்பட வேண்டும்.

- கு.கணேசன், பொதுநல மருத்துவர்.

தொடர்புக்கு : gganesan95@gmail.com

செப்டம்பர் 29: உலக இதய தினம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x