Published : 24 Sep 2020 07:35 AM
Last Updated : 24 Sep 2020 07:35 AM

பெருந்தொற்றுக்கு நடுவே கிரிக்கெட் கொண்டாட்டம்

கிரிக்கெட் உலகின் கோலாகலத் திருவிழாவாகப் பார்க்கப்படும் ‘ஐபிஎல்’ தொடர், தினமும் பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் கோடை முழுவதும் நீளும். 2008-ல் அது தொடங்கியதிலிருந்து கோடைக் காலத்தில் ஐஸ்கிரீமைப் போலவே தவிர்க்க முடியாத அம்சமாகிவிட்டிருந்தது. டெஸ்ட் கிரிக்கெட் மீது மையல் கொண்ட தூய்மைவாதிகள் ‘டி-20’ போட்டிகளை வெறுத்தாலும் எல்லா எதிர்ப்புகளையும் தாண்டி வெற்றிகரமான வடிவமாக அது உருவெடுத்தது. 2009, 2014 ஆகிய ஆண்டுகளில் பொதுத் தேர்தல் வந்ததால் ஐபிஎல் போட்டி சிக்கலை எதிர்கொண்டது. எனினும், 2009-ல் தென்னாப்பிரிக்காவிலும், 2014-ன் ஆரம்பப் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்திலும் நடத்தியதன் மூலம் அந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டது. ஆனால், 2020-ம் ஆண்டானது கரோனா பெருந்தொற்றால் மனித குலத்துக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்திய ஆண்டாக அமைந்துவிட்டிருக்கிறது. மார்ச்சிலிருந்து விளையாட்டு தொடர்பான நடவடிக்கைகள் ஸ்தம்பித்துப்போயிருக்கின்றன. ஒலிம்பிக்ஸ் தள்ளிவைக்கப்பட்டது. விம்பிள்டன் கைவிடப்பட்டது. மார்ச் 29 அன்று தொடங்குவதாக இருந்த ஐபிஎல் ஒத்திவைக்கப்பட்டது; பிறகு, ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தப் போட்டி நடைபெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டது.

நீண்ட காலமாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்ததன் விளைவை வீரர்களிடம் களத்தில் காண முடிந்தது. கூட்டத்தினரின் ஆரவாரப் பேரொலி நேரடி ஒளிபரப்பில் செயற்கையாகச் சேர்க்கப்பட்டதும், காலியான மைதானங்களும் ‘உயிர்க் காப்பு நெறிமுறை’களும் (பயோ-பப்பிள்ஸ்) தற்போதைய காலத்தின் இக்கட்டான சூழ்நிலையை உணர்த்துகின்றன. வைரஸால் ஏற்பட்ட கட்டுப்பாடுகளும் இந்தியாவில் கிரிக்கெட் விளையாடுவதற்குத் தற்போதைக்குத் தடை இருப்பதாலும் அமீரகத்தில் நடைபெறும் இந்த ஐபிஎல் இந்திய வீரர்களுக்கு மட்டுமல்லாமல் வெளிநாட்டு வீரர்களுக்கும் கிரிக்கெட் விளையாடுவதற்கு வாய்ப்பைத் தந்திருக்கிறது. அபு தாபி, துபாய், ஷார்ஜா ஆகிய நகரங்களில் 53 நாட்களில் 60 போட்டிகள் நடைபெறவிருக்கின்றன. இந்தப் போட்டிகளில் 8 அணிகள் கலந்துகொள்கின்றன. இறுதிப்போட்டி நவம்பர் 10 அன்று நடைபெறும்.

இவை எல்லாமே பெரும் சவால்களை முன்வைக்கின்றன. இந்தப் போட்டித் தொடருக்கு முன்னதாகச் சிலருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ள சூழ்நிலையில் போட்டி ஏற்பாட்டாளர்கள் கடுமையான நெறிமுறைகளை ஏற்படுத்தியிருக்கின்றனர். வீரர்கள் கிரிக்கெட்டும் விளையாடியாக வேண்டும்; தங்கள் உடல் நலனையும் பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்விஷயத்தில், மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுடனான தொடர்களை நடத்தியதன் மூலம் இங்கிலாந்துதான் முதல் அடியை எடுத்துவைத்தது. எம்.எஸ்.தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்ஸன், ஏபி டி வில்லியர்ஸ் உள்ளிட்ட நட்சத்திரங்களின் ஆட்டத்தைக் காண ஏங்கிக்கிடந்த ரசிகர்களுக்கு இந்த ஐபிஎல் நல்ல வாய்ப்பைத் தருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை கிரிக்கெட் தொடங்கிவிட்டது; இது ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணத்துக்குத் தயார்செய்துகொள்வதற்கான வாய்ப்பாக கோலிக்கு அமையட்டும். பெருந்தொற்றால் சோம்பிக்கிடக்கும் மனங்களுக்குக் கொண்டாட்டமாகவும் அமையட்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x