Last Updated : 24 Sep, 2020 07:31 AM

 

Published : 24 Sep 2020 07:31 AM
Last Updated : 24 Sep 2020 07:31 AM

ஆதிதிராவிடராய் ஒன்றிணைவோம்: தமிழ்நாட்டு தலித் அரசியலில் ஒரு திருப்பம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்திய இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாள் இணைய வழிக் கருத்தரங்கில் தொல்.திருமாவளவன் முன்னிலையில், அந்தக் கட்சியின் பொதுச்செயலர் ரவிக்குமார் ஆற்றிய உரை, தமிழ்நாட்டு தலித் அரசியலை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும் ஒரு புதுப் போக்கு உருவாகியிருப்பதைச் சொல்கிறது.

“பட்டியலினத்துக்குள் தேவேந்திர குல வேளாளர் என்ற அடையாளத்தை முன்னிலைப்படுத்தியதால், அரசிலும் எல்லாக் கட்சிகளிலும் அந்த மக்களுக்கு அவர்களுக்கான முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதேபோல, அருந்ததிய மக்களும் அந்த அடையாளத்தை முன்னிறுத்தி அரசியல் செய்வதால், அவர்களுக்கான இடமும் உறுதியாகிறது. ஆனால், தமிழ்நாட்டுப் பட்டியலினச் சமூகங்களிலேயே பாதிக்கும் மேற்பட்ட மக்கள்தொகையைக் கொண்டதும், மிகப் பெரிய சமூகமாக இருந்தாலும் இன்றைக்கு எந்த மதிப்பும் இல்லாமல் புறக்கணிக்கப்படுகிற சமூகமாகப் பறையர் சமூகம் இருக்கிறது. குறைந்தபட்சம் அந்தச் சமூகத் தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாளுக்குக்கூட மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்துவதில்லை. இதற்குக் காரணம், நாம் சாதியை முன்னிறுத்தி அரசியல் செய்வதில்லை. மாறாக, சாதி ஒழிப்பை முன்னிறுத்துகிறோம் என்பதுதான். பட்டியலினத்தில் உள்ள 74 சாதிகளில் 7 சாதிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, அருந்ததியர் என்ற பொதுப் பெயரிலும், 7 சாதிகள் ஒருங்கிணைக்கப்பட்டு தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப்பெயரிலும் இயங்குகிறபோது, மீதமிருக்கும் 60 சாதிகளும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். இதற்கு ‘பறையர்’ எனும் சாதி அடையாளத்தைத் தாண்டி, ‘ஆதிதிராவிடர்’ எனும் பொது அடையாளத்தை ஏற்போம். ஆதிதிராவிடர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்பதற்கான முதல் படியாக இதை முன்னெடுக்கலாம்” என்பதே ரவிக்குமார் பேச்சின் மையம்.

குரல் கொடுப்போரின் வாதம்

சமூக வலைதளங்களிலும் அந்த சமூகத்தைச் சார்ந்தோர் மத்தியில் இது பரவலாக எதிரொலித்தது. தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட வன்னியர் சமூகத்துக்கு இணையான பெரிய சமூகம் - சுமார் ஒரு கோடிப் பேரைக் கொண்ட சமூகமான, பறையர் சமூகத்துக்கு அதன் எண்ணிக்கைக்கு ஏற்பப் பிரதிநிதித்துவம் இல்லை என்று இது சார்ந்து பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள். “2001 மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் உள்ள அதிகாரபூர்வப் புள்ளிவிவரங்களின்படி, தமிழகப் பட்டியலினச் சாதிகளில் ஆதிதிராவிடர் என்ற பெயரில் 54.02 லட்சம் பேர், பறையர் என்ற பெயரில் 18.60 லட்சம் பேர் இருக்கிறார்கள். இந்த இரு பிரிவுகளையும் சேர்த்தாலே, 72.63 லட்சம் வருகிறது. தவிர சாம்பவர், வள்ளுவர், தலித் கிறிஸ்தவர் உள்ளிட்ட பிரிவுகளையும் சேர்த்தால் 2021 நிலவரப்படி, எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டும். ஒட்டுமொத்தப் பட்டியலின மக்களில் இப்பிரிவினர்தான் 65% என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்பதே இதற்காகக் குரல் கொடுப்போரின் நியாயம்.

ஒவ்வொரு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போதும், பல சமூகங்கள் இணைந்து நாம் பொதுப் பெயரிலேயே பதிவுசெய்துகொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பது தொடர்கிறது. இந்த ஒருங்கிணைப்பால் வன்னியர், கவுண்டர், நாடார் உள்ளிட்ட சமூகங்களுக்குக் கிடைத்திருக்கிற அரசியல் பிரதிநிதித்துவமே மற்ற சமூகத்தினரையும் அந்தப் பாதையில் திருப்புகிறது. உதாரணமாக, கடந்த 30 ஆண்டுகளாகத் தமிழக அமைச்சரவையில் 5 முதல் 10 அமைச்சர்கள் வன்னியர்கள் என்பதும், அதற்கடுத்த நிலையில் முக்குலத்தோர், கவுண்டர் சமூகத்தினருக்குப் பிரதிநிதித்துவம் கிடைப்பதைப் பறையர் சமூகத்தினரும் கவனிக்கிறார்கள். ஆனால், பெரும் எண்ணிக்கையில் தங்களது சமூகத்தின் மக்கள்தொகை இருந்தும், தங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் புறக்கணிக்கப்படுவதையும் அவர்கள் வருத்தத்தோடு பார்க்கிறார்கள். அரசியல் கட்சிகளிலும் இப்படியான சூழல் இருப்பதையும் அவர்கள் சுட்டுகிறார்கள் என்பது இதற்கான உதாரணங்களில் ஒன்றாகச் சொல்லப்படுகிறது. கூட்ட நிறைவில் இதுபற்றி திருமாவளவன் எந்தக் கருத்தும் சொல்லவில்லை என்றாலும், ரவிக்குமாரின் பேச்சுக்குக் கட்சிக்கு உள்ளேயும் வெளியிலும் ஆதரவுக் குரல்கள் எழத் தொடங்கியிருக்கின்றன. இந்தக் கருத்தைப் பாராட்டி வரவேற்கிற தலித் செயல்பாட்டாளர்கள் பலரும், கூடவே “இது பறையர் சமூகத்தில் சிறுசிறு குழுக்கள், சங்கங்கள் சுமார் 10 ஆண்டு காலமாகத் தீவிரமாகப் பேசிப்பேசி ஏற்படுத்திய அழுத்தத்தால் வெளிவந்த கருத்துதான்” என்கிறார்கள்.

விசிக கையில் எடுக்கும் உத்தி

பறையர் சமூகத் தலைவர்கள் பலர் சுய சாதி அடையாளத்தைத் தூக்கிப்பிடித்தவர்கள் அல்லர். தமிழன், திராவிடன், பௌத்தன், இந்து அல்லாதவன் என்கிற பொது அடையாளத்தையே விரும்பினார்கள் என்பதற்கு அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன் தொடங்கி திருமாவளவன் வரையில் நிறைய உதாரணங்களைச் சொல்லலாம். மேலதிகம், சாதி பிரச்சினைக்கு வெளியிலும், ஈழத் தமிழர் விவகாரம், மாநில சுயாட்சி, தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்று பல தளங்களிலும் தொடர் செயல்பாட்டு இயக்கம் நடத்திவந்த கட்சி விசிக. அந்தக் கட்சியின் பெரும் வாக்குவங்கியான பறையர் சமூகத்தைச் சேர்ந்த சிலரே இதை முன்வைத்து விசிகவை விமர்சித்தபோது, அவர்களையெல்லாம் ‘சுய சாதிப் பற்றாளர்கள்’ என்று கடந்துபோன வரலாறும் அதற்கு உண்டு. “திருமாவளவன் தன்னை ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராகக் கருதிக்கொள்ளலாம். ஆனால், ஏனைய ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த எத்தனை பேர் அவரைத் தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்? பறையர் மக்கள் அதிகம் வசிக்காத மாவட்டங்களில் அந்தக் கட்சியின் பலம் என்ன? அப்படியிருக்க பறையர் சமூகத்தின் குரல் நேரடியாக ஒலிக்க வேண்டிய விஷயங்களில்கூட சாதி அடையாளத்தைப் புறந்தள்ளும் விதமாக விசிக நடந்து கொள்கிறது” என்ற பேச்சும் அந்தச் சமூகத்தில் இருந்தது இப்போது சுட்டிக்காட்டப்படுகிறது.

மிக முக்கியமான இன்னொரு விஷயம் என்னவென்றால், பாஜக பல மாநிலங்களிலும் கையாண்ட மிக முக்கியமான உத்தி, தொகுதியாகவுள்ள சாதிகளைத் தனித்தனியாக அணுகியதுதான். இன்னும் சொல்லப்போனால், தலித் எனும் அரசியல் தொகுப்புக்குள் உள்ள சாதிகளை மாயாவதி சார்ந்த ஜாதவ் - ஜாதவ் அல்லாதோர் என்று உடைத்துதான் உத்தர பிரதேசத்தில் தன் கைக்குள் அவர்களைக் கொண்டுவந்தது பாஜக. பிற்படுத்தப்பட்ட வாக்கு வங்கியை முலாயம் சார்ந்த யாதவ் - யாதவ் அல்லாதோர் என்று இப்படி உடைத்தது. கடைசியில், மாயாவதி சார்ந்த ஜாதவ், முலாயம் சார்ந்த யாதவ் சமூக வாக்கு வங்கிகளையும்கூட அது உடைத்தது. இங்கும் அது நேருவதற்கு முன்பு குறைந்தபட்சம் தங்களுடைய ஆதரவுத் தளமான பறையர் சமூக வாக்கு வங்கியையேனும் தக்கவைத்துக்கொள்ளும் உத்தியாகவே விசிக இந்த முழக்கத்தைக் கையில் எடுத்திருக்கிறது என்றும் கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் ஏற்கெனவே தேவேந்திர குல வேளாளர், அருந்ததியர் மக்கள் மத்தியில் தன் செல்வாக்கைப் பரப்பிவரும் பாஜக, தற்போது பறையர் சமூகத்தின் ஒரு பிரிவான சாம்பவாரைக் குறிவைத்துக் களம் இறங்கியிருப்பதும், அமித் ஷா வரை சென்று ஒரு குழு ஒட்டுமொத்த பறையர் சமூகத்தையும் ‘சாம்பவர்’ என்று அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்திவிட்டு வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஒருபுறம் சாதிக் கட்சி என்ற விமர்சனத்தைத் தவிர்க்க வேண்டிய நிலையில் இருக்கும் விசிக, மறுபுறம் தன்னுடைய சாதிசார் வாக்குவங்கியையும் இழந்திடாத வகையில் சாதி அடையாளம்சார் பெயரைத் தவிர்க்க வேண்டியிருக்கிறது. அதற்கான உத்தியாகவே ‘பறையராக ஒன்றிணைவோம்’ என்ற முழக்கத்துக்கு மாற்றாக, ‘ஆதிதிராவிடராக ஒன்றிணைவோம்’ என்ற ரவிக்குமாரின் அறைகூவலைப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஆதிதிராவிடர் என்ற சொல்லை விசிக கையில் எடுக்கும்போது, அந்தச் சொல்லின் பின்னுள்ள வரலாறு தமிழ் - சாதியெதிர்ப்பு இந்த இரு அரசியலையும் தக்கவைக்கிறது.

தமிழகத்தில் தலித் அரசியல்

இந்தியாவில் முதன்முதலாக 1881-ல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டபோதுதான், எண்ணிக்கையின் பலத்தை உணர்ந்து இந்து என்கிற புதிய, பொது அடையாளத்தின் கீழ் சமூகங்கள் ஒன்றுதிரட்டப்பட்டன. இதற்கு எதிராக இருந்தார் அயோத்திதாசர். “பறையர்கள் எல்லோரும் தங்களை ஆதித்தமிழர் என்றே பதிவுசெய்துகொள்ள வேண்டும்” என்று அவர் குரல் கொடுத்தார். அடுத்து அயோத்திதாசர், ரெட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா மூவருமே ‘ஆதிதிராவிடர்’ என்ற அடையாளத்தை முன்னிறுத்தினர். விளைவாக, 1922-ல் பறையர் சமூகத்தினர் பலர் தங்களை ஆதிதிராவிடர் என்றே பதிவுசெய்துகொண்டனர். ஆனால், பறையர் என்றும், சாம்பவர் என்றும் பதிவுசெய்துகொள்கிற போக்கும் தொடர்ந்தது. இப்போது மீண்டும் எல்லோரையும் ஆதிதிராவிடர் என்கிற பொது அடையாளத்துக்குள் கொண்டுவருவதை ஓர் உத்தியாக அறிவிக்கிறது விசிக.

தமிழ்நாட்டு தலித் அரசியலில் இது ஒரு புதிய போக்கை உருவாக்கும் என்று சொல்லலாம். தன் முன்னே வரும் ஒரு சவாலை எதிர்கொள்ள கட்சி முன்னெடுக்கும் உத்திக்குப் பெயரைத் தேர்ந்தெடுப்பதிலேயே இவ்வளவு முன்னெச்சரிக்கை உணர்வோடு செயல்படும் விசிகவை ஆக்கபூர்வமாக அணுகலாம். ஆனால், சமூகநீதியின் பொருட்டு உருவான தலித் சக்திகள் ஒவ்வொன்றும் அருந்ததியினர்சார் கட்சி, தேவேந்திர குல வேளாளர்சார் கட்சி, பறையர்சார் கட்சி என்று உள்ளடக்கத்தில் மேலும் மேலும் பிரிந்திருப்பதும், உள் அடையாளங்களுக்குள் இறுகிவருவதும் என்ன விதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைக் கவனிக்க வேண்டும். மேலும், தலித் அரசியல் இங்கே என்னவாக உருமாறிக்கொண்டிருக்கிறது என்றும் புரிந்துகொள்ள முடியவில்லை!

- கே.கே.மகேஷ், தொடர்புக்கு: magesh.kk@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x