Last Updated : 22 Sep, 2020 07:58 AM

 

Published : 22 Sep 2020 07:58 AM
Last Updated : 22 Sep 2020 07:58 AM

மரபணு மாற்றப்பட்ட பருத்தி தோல்வியடைந்துவிட்டதா?

இந்தியாவில் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகப் பருத்தி நெய்யப்பட்டுப் பயன்படுத்தப் பட்டுவந்திருக்கிறது. மொஹஞ்சதாரோவின் சிதிலங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் கி.மு. 3000-த்தைச் சேர்ந்த பருத்தித் துணி கிடைத்திருக்கிறது. பாகிஸ்தானின் மெஹ்ர்கர்ஹில் மேற்கொண்ட அகழாய்வுகளால் துணைக் கண்டத்தில் பருத்தியானது கி.மு. 5000-க்கும் முன்பே பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. தொடர்ந்து வந்த சில ஆயிரம் ஆண்டுகளாக இந்திய பருத்தித் துணிகள் உலக வர்த்தகத்தை ஆக்கிரமித்திருந்தன; கிரேக்கம், ரோம், பாரசீகம், எகிப்து, அசிரியா, ஆசியாவின் பிற பகுதிகள் என்று பல இடங்களுக்கு இந்தியப் பருத்தி ஏற்றுமதி செய்யப்பட்டன.

20-ம் நூற்றாண்டு வரை பயிரிட்டவற்றில் பெரும்பான்மையான பருத்தி காஸிப்பியம் ஆர்போரியம் என்ற உள்நாட்டு வகையைச் சேர்ந்ததாகும். 1990-களிலிருந்து ஜி.ஹர்ஸட்டத்தின் கலப்பின வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டு, பரவலாக்கப்பட்டன. இந்தக் கலப்பின வகைகளால் உள்ளூர்ப் புழுபூச்சிகளைச் சமாளிக்க முடியவில்லை; ஆகவே, உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் பெருமளவில் தேவைப்பட்டன. கலப்பின விதைகளை வாங்க வேண்டுமென்ற நெருக்குதல் அதிகரித்ததால் காலப்போக்கில் உள்நாட்டு வகைகள் வழக்கொழிந்துபோயின. ஆனால், சமீப காலமாக அவற்றின் மீது ஆர்வம் அதிகரித்துவருகிறது.

எப்போது தொடங்கியது?

பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்காகச் செயற்கையான பைரித்ராய்டுகளின் (மனிதர்களால் தயாரிக்கப்பட்ட பலவகையான பூச்சிக்கொல்லிகள்) பயன்பாடு அதிகரித்துவந்தது, நீண்ட நாள் சாகுபடி அமெரிக்கப் பருத்தியைப் பயிர்செய்யும் நிலங்களின் பரப்பு அதிகரித்துவந்தது இரண்டாலும் பூச்சிக்கொல்லி எதிர்ப்புத் திறன் கொண்ட பூச்சிகள் அதிகரிக்க ஆரம்பித்தன. எதிர்ப்புத் திறன் கொண்ட இளஞ்சிவப்புக் காய்ப்புழு மற்றும் கடந்த காலத்தில் அதிக பாதிப்பில்லாததாக இருந்த அமெரிக்கக் காய்ப்புழு இரண்டும் அதிக அளவில் பெருக ஆரம்பித்தன; இதனால், பலவகையான பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும் தேவையும் பெருகியது. அதிகரிக்கும் கடன்கள், குறைந்துவரும் விளைச்சல், கூடவே பெருகிவரும் பூச்சிக்கொல்லி எதிர்ப்புத் திறன் போன்றவை விவசாயிகளின் நிலைமையை மிகவும் மோசமாக ஆக்கின. இந்தப் பின்னணியில்தான் மரபணு மாற்றப்பட்ட பருத்தி இந்தியாவில் 2002-ல் அறிமுகப்படுத்தப்பட்டது.

பேஸில்லஸ் துரிஞ்சியன்ஸிஸ் என்ற பாக்டீரியாவிலிருந்து பெறப்பட்ட பூச்சிக்கொல்லி மரபணுவைக் கொண்டிருக்கும் மரபணு மாற்றப்பட்ட பருத்தியானது, இந்தியாவில் 20 ஆண்டுகளாகச் சாகுபடி செய்யப்பட்டுவருகிறது. இந்தப் பூச்சிக்கொல்லியானது (பேஸில்லஸ் துரிஞ்சியன்ஸிஸின் மரபணு) தற்போது மரபணு மாற்றப்பட்ட பருத்திச் செடியின் ஒவ்வொரு செல்லிலும் உற்பத்திசெய்யப்படுகிறது; இது பருத்திச் செடியைக் காய்ப்புழுவிலிருந்து பாதுகாக்க வேண்டும்; அதன் மூலம் விளைச்சலை அதிகரித்து, பூச்சிக்கொல்லித் தெளிப்பைக் குறைக்க வேண்டும். வேளாண் துறை அமைச்சகத் தரவின்படி 2005-07 வரை மரபணு மாற்றப்பட்ட பருத்திச் சாகுபடி 81% ஆக உயர்ந்திருக்கிறது; 2011-ல் 93% ஆக உயர்ந்திருக்கிறது. மரபணு மாற்றப்பட்ட பருத்தியை ஆராய்ந்த பல்வேறு குறுகிய கால ஆய்வுகள் குறைவான விளைச்சல், பூச்சிக்கொல்லிகளுக்கான செலவு போன்ற பிரச்சினைகளிலிருந்து விடுபட மரபணு மாற்றப்பட்ட பருத்திதான் தீர்வு என்று கூறின. தற்போது இரண்டு தசாப்தங்கள் ஆகியிருக்கும் வேளையில், இந்தியாவில் பயன்படுத்தப்படும் மரபணு மாற்றப்பட்ட பருத்தியை ஒட்டுமொத்தமாக மறுஆய்வு செய்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கே.ஆர். கிரந்தியும் கிளென் டேவிஸ் ஸ்டோனும் ‘நேச்சர் பிளான்ட்ஸ்’ என்ற அறிவியல் இதழில் ஒரு ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டிருக்கின்றன; அதில் இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட பருத்தியின் பயன்பாட்டைப் பற்றிய ஒட்டுமொத்தச் சித்திரத்தை வழங்கியிருக்கிறார்கள். 2002-2014 ஆகிய ஆண்டுகளுக்கிடையே பருத்தி விளைச்சல் மும்மடங்கு கிடைத்திருப்பதாகவும், அதற்கு மரபணு மாற்றப்பட்ட பருத்தியே காரணம் என்றும் ஆரம்ப கால ஆய்வுகள் கூறின. எனினும், இந்த ஆய்வுகளின் முடிவில் நம்பகத்தன்மை இல்லை.

தற்போதைய நிலைமை

மரபணு மாற்றப்பட்ட பருத்தியின் விளைச்சலுக்கும் பயன்பாட்டுக்கும் இடையே பொருத்தமின்மையே நிலவுகிறது. 2003-ல் ஒட்டுமொத்த பருத்திச் சாகுபடிப் பரப்பில் மரபணு மாற்றப்பட்ட பருத்தி 3.4% மட்டுமே பயிரிடப்பட்டிருந்தது. ஆகவே, 2003-04 காலகட்டத்தில் பருத்தி உற்பத்தியில் ஏற்பட்ட 61% அதிகரிப்புக்கு மரபணு மாற்றப்பட்ட பருத்தியைக் காரணமாகச் சொல்ல முடியாது. மேலும், 2005-ல் மரபணு மாற்றப்பட்ட பருத்தி 15.7% சாகுபடிப் பரப்பில் மட்டுமே பயிரிடப்பட்டிருந்தது; அப்போது 2002-ஐவிட 90% உற்பத்தி அதிகமாக இருந்தது. காய்ப்புழுவுக்கான மருந்துகள் தெளிப்பது குறைந்ததற்கும், மரபணு மாற்றப்பட்ட பருத்தியின் பயன்பாட்டுக்கும் தொடர்பு இருந்தாலும் கிரந்தி, ஸ்டோனின் ஆய்வு முடிவு இப்படிக் கூறுகிறது: ‘நாடு முழுவதும் பருத்தி விவசாயிகள் மரபணு மாற்றப்பட்ட பருத்தியை அதிக அளவில் பயன்படுத்த ஆரம்பித்தாலும் 2007-க்குப் பிறகு, விளைச்சலில் தேக்கம் ஏற்பட்டது. 2018-ன் நிலையோ வேறு. எல்லோரும் மரபணு மாற்றப்பட்ட பருத்தியை அவசர அவசரமாகப் பயன்படுத்திய ஆரம்ப காலத்துடன் ஒப்பிடும்போது 2018-ல் கிடைத்த விளைச்சல் குறைவாக இருந்தது.’

பிராந்திய அளவிலான போக்குகளைப் புரிந்துகொள்வதற்கு ஒவ்வொரு மாநிலத்தையும் தனித் தனியாக அலசுவது பயனுள்ளதாக இருக்கும். 2000-ஐ அடுத்துவந்த தசாப்தத்தில் மஹாராஷ்டிரத்தில் விளைச்சல் உச்சத்தைத் தொட்டது; மரபணு மாற்றப்பட்ட பிறகு விளைச்சல் அதிகரிக்கும் விகிதத்தில் எந்த மாற்றமுமில்லை. குஜராத், ஆந்திரம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் மரபணு மாற்றப்பட்ட பருத்தியால் விளைச்சல் அதிகரிக்கவில்லை. எடுத்துக்காட்டாக, 2003-ல் குஜராத்தில் 5% சாகுபடிப் பரப்பில் மட்டுமே இவ்வகை பருத்தி பயிரிடப்பட்டது. ஆனால், அந்த ஆண்டு விளைச்சல் 138% அதிகரித்திருந்தது. பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தானிலும் இதே நிலைமைதான்; சாகுபடி அதிகரிப்புக்கும் மரபணு மாற்றப்பட்ட பருத்தியின் பரவலுக்கும் தொடர்பேதும் இல்லை.

பாசனத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்களைப் பருத்தி விளைச்சலில் ஏற்பட்ட உயர்வுக்குக் காரணமாகக் கூறலாம். இதற்கு குஜராத்தை உதாரணமாகச் சொல்லலாம். நாடெங்கும் அதிக அளவில் விளைச்சல் கிடைத்ததற்கு உரங்களைக் காரணமாகச் சொல்லலாம். உரங்களின் பயன்பாடு 2007-2013 காலகட்டத்தில் இரட்டிப்பாகியிருக்கிறது.

ஒரு ஹெக்டேருக்குப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிக்கான செலவு 2006-ல் குறைந்தது, 2011 வரை பூச்சிமருந்து தெளிப்பான்களுக்கான செலவுகள் குறைந்துவந்தன. பேஸில்லஸ் துரிஞ்சியன்ஸிஸுக்கு (பிடி) எதிரான சக்தியை அமெரிக்கக் காய்ப்புழு வளர்த்துக்கொள்ளவில்லை என்றாலும் இளஞ்சிவப்பு காய்ப்புழு 2009 வாக்கில் எதிர்ப்புத் திறனை வளர்த்துக்கொண்டது. ஒருசில ஆண்டுகளில் நிலைமை படுமோசமாக ஆனது. காய்ப்புழுவுக்காகப் பூச்சிமருந்து தெளிப்பது மறுபடியும் அதிகரிக்க ஆரம்பித்தது. கலப்பினப் பருத்தியை நாசம்செய்யும் சாறுண்ணிப் பூச்சிகள் பெருக ஆரம்பித்தன. மரபணு மாற்றப்பட்ட ஹர்ஸட்டம் பருத்தி இந்தப் பூச்சிகளின் எளிய இலக்குகளானது. மரபணு மாற்றப்பட்ட பருத்திச் சாகுபடிப் பரப்பு அதிகரித்ததும் சாறுண்ணும் பூச்சிகளுக்காகத் தெளிக்கும் பூச்சிமருந்துகளுக்கான செலவும் வெகுவாக அதிகரித்தது. 2018-க்குள் ஒரு ஹெக்டேருக்குப் பூச்சிமருந்துக்கு ஆகும் செலவு சுமார் ரூ.1,700 ஆக அதிகரித்தது; இது மரபணு மாற்றப்பட்ட பருத்தி அறிமுகப்படுத்தப்பட்ட காலத்துக்கு முன்பு இருந்ததைவிட 37% அதிகம்.

நடைமுறைச் சவால்கள்

தொழில்நுட்பத்தின் ஒரு பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு அதை முறைப்படி மதிப்பீடு செய்வது மிகவும் கடினமாகும். ஆய்வகங்களில் வெற்றிபெறும் தொழில்நுட்பமானது நடைமுறையில் தோல்வியுறலாம்; இதற்கு வேறுபட்ட பல்வேறு பூச்சிகள், உள்ளூர் மண், பாசன நிலைமைகள் போன்றவை காரணமாக இருக்கலாம். மரபணு மாற்றப்பட்ட பருத்தியால் கிடைத்த பயன்கள் மிதமானவை மட்டுமல்ல குறைந்த காலமே நீடித்தவையாகும். கடந்த 13 ஆண்டுகளில் நாடு முழுவதும் விளைச்சல்களில் எந்த முன்னேற்றமும் கிடைக்கவில்லை. உரம், பாசனம், வேதிப்பொருட்கள், மரபணு மாற்றப்பட்ட பருத்தி போன்றவை அதிக அளவில் பயன்படுத்தப்பட்டாலும் உலக அளவில் பருத்தி உற்பத்தியில் இந்தியா 30-வது இடத்தில்தான் இருக்கிறது. மரபணு மாற்றப்பட்ட பருத்தி, கலப்பின வகைகள், இடுபொருள் வசதி என்று ஏதுமில்லாத ஏழ்மையான சில ஆப்பிரிக்க நாடுகளின் தேசிய சராசரியைவிடக் குறைவு.

உள்நாட்டு ரகங்களைப் பல தசாப்தங்களாகப் புறக்கணித்துவந்ததற்கு நாம் கொடுத்திருக்கும் விலை அதிகம். இந்த வகைகள் பல்வேறு பூச்சிகளுக்கு எதிரான தடுப்பு சக்தியைக் கொண்டிருக்கின்றன. தற்போது கலப்பின வகைகளால் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உள்நாட்டு ரகங்களால் ஏற்படுவதில்லை. மரபுப் பருத்தி வகைகள், நெருக்கமான நடவு, குறுகிய காலப் பயிர்கள் போன்றவற்றால் இந்தியாவில் பருத்தி விளைச்சல் மேம்படும் என்று ஆய்வொன்று கூறுகிறது; இதன் மூலம் பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளையும் எதிர்கொள்ள முடியும். ஆனால், உள்நாட்டு ரகங்களை அதிகரிப்பதற்கு ஆதாரங்கள், அடிப்படைக் கட்டமைப்பு, விதைகள் போன்றவற்றுக்கு அரசாங்கத்தின் ஆதரவு மிகவும் முக்கியம். அறிவியல் என்ன சொல்கிறது என்பதைக் கவனித்து, மரபணு மாற்றப்பட்ட பருத்தியானது இந்தியாவில் தோல்வியடைந்துவிட்டது என்று ஒப்புக்கொள்வதற்கான தருணம் இது; கத்திரிக்காய் போன்றவற்றில் மரபணு மாற்றம் செய்வதைத் தவிர்ப்பதற்குமான தருணம் இது.

- சுஜாதா பைரவன், அறிவியலாளர்

© தி இந்து, தமிழில்: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x