Published : 22 Sep 2020 07:55 AM
Last Updated : 22 Sep 2020 07:55 AM

கின்ஸ்பெர்க்: அமெரிக்காவிலிருந்து ஒரு சேதி

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் பெண் நீதிபதிகளுள் ஒருவரான ரூத் பேடர் கின்ஸ்பெர்க் கடந்த சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்தது இரண்டு விஷயங்களுக்காக உலகளவில் பேசப்படுகிறது. முதலாவது காரணம், அவர் மிகச் சிறந்த சட்டவியலாளர் என்பதோடு பெண்ணுரிமையின் உருவகமாகவும் இருந்தவர். இரண்டாவது காரணம், கின்ஸ்பெர்க் மறைவையொட்டி அவருக்குப் பதிலாக நியமிக்கப்படும் அடுத்த நீதிபதியும் பெண்ணாகத்தான் இருப்பார் என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார்.

1956-ல் 500 மாணவர்கள் படிக்கும் ஹார்வர்டு சட்டப் பள்ளியில் 9 மாணவிகள் அனுமதிக்கப்பட்டார்கள். அந்த ஒன்பது பேரில் கின்ஸ்பெர்க்கும் ஒருவர். அவரது கணவர் மார்டி, நியூயார்க்கில் வரித் துறையில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். அவர் அளித்த ஊக்கமே கின்ஸ்பெர்க் வழக்கறிஞராகக் காரணம்; அவர் எடுத்த முயற்சிகளே அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் காரணம். 56 வருடத் திருமண வாழ்க்கை. பத்தாண்டுகளுக்கு முன்பு கணவர் மார்டி இறந்த அடுத்த நாளே நீதிமன்றப் பணிகளில் பங்கெடுத்துக்கொண்டார். தனது கணவர் விரும்பியது அதைத்தான் என்று பின்பு அதற்கு விளக்கமும் அளித்தார். பெண்களின் சாதனைகளுக்குப் பின்னால் சில சமயங்களில் ஆண்களும் இருக்கிறார்கள் என்பதற்கு மார்டி ஓர் உதாரணம்.

மூன்று காரணங்கள்

கின்ஸ்பெர்க் சட்டம் படித்துப் பட்டம்பெற்றாலும் அவருக்கு நியூயார்க்கில் எந்தச் சட்ட அலுவலகத்திலும் வேலை கிடைக்கவில்லை. அதற்கு கின்ஸ்பெர்க் சொன்ன மூன்று காரணங்கள்: அவர் ஒரு யூதர், பெண், அதற்கும் மேலாக அவர் ஒரு தாய். அறுபதுகளில் ரட்ஜர் சட்டப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். அது பெண்ணுரிமை இயக்கம் தீவிரமடைந்த காலகட்டம் என்பதால் அவரும் அதில் முக்கியப் பங்காற்றினார். 1971-ல் சட்டரீதியான பாலினப் பாகுபாட்டுக்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வாதாடி அதில் வெற்றியும் பெற்றார்.

அதற்கடுத்த ஆண்டிலேயே அமெரிக்க சிவில் உரிமைக் கழகத்தின் கீழ் பெண்களுக்கான உரிமைத் திட்டத்தைத் தொடங்கியதோடு, கொலம்பியா பல்கலைக்கழகத்தின் முதல் பெண் பேராசிரியராகவும் பொறுப்பேற்றுக்கொண்டார். நீதிமன்றங்களில் பெண் உரிமைகளுக்காக அவர் வாதாடியபோது, அந்த மொத்த அரங்கிலும் அவர் ஒருவரே பெண்ணாக இருந்த காலம் அது. ஆண் நீதிபதிகளுக்கு ஒரு நர்சரி பள்ளி ஆசிரியையைப் போல பெண்ணுரிமைகள் குறித்து நான் வகுப்பெடுக்க வேண்டியிருந்தது என்று அவர் அந்நாட்களை நினைவுகூர்ந்திருக்கிறார்.

முற்போக்குத் தீர்ப்புகள்

1980-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டரின் முயற்சிகளால், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் கொலம்பியா மாவட்டத்துக்கான நீதிபதியாக கின்ஸ்பெர்க் நியமிக்கப்பட்டார். 1993-ல் அதிபர் பில் கிளிண்டனால் உச்ச நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பதவியில் இருந்த இரண்டாவது பெண் கின்ஸ்பெர்க். அமெரிக்காவில் உச்ச நீதிமன்ற நீதிபதிக்குப் பதவிக்காலம் வரையறுக்கப்படவில்லை. அவர் காலமாகும் வரை அல்லது விரும்பும் வரை பதவியில் தொடரலாம்.

கின்ஸ்பெர்க் மரணமடைந்தபோது அவருக்கு வயது 87. கால் நூற்றாண்டுக்கும் மேலாக அவர் அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பு வகித்திருக்கிறார். ஒரே பாலினத்தவர்கள் தங்களுக்குள் திருமணம் செய்துகொள்வதைச் சட்டபூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல முற்போக்குத் தீர்ப்புகளை வழங்கியவர்களுள் அவரும் ஒருவர். இறுதிக் காலங்களில், உள்ளுக்குள் புற்றுநோயுடன் போராடிக்கொண்டே நீதிமன்ற விசாரணைகள், தீர்ப்புகள் என்று தனது பணியையும் தொய்வில்லாமல் செய்திருக்கிறார்.

அமெரிக்காவில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை அப்போது ஆட்சியில் இருக்கும் அரசியலர்கள் நேரடியாகவே நியமிக்கிறார்கள். இந்தியாவில் அது மூத்த நீதிபதிகளைக் கொண்ட குழுவிடம் இருக்கிறது. ஓய்வுபெறும் வயது நிர்ணயிக்கப்பட்டிருப்பதால் மிகச் சில ஆண்டுகளே நீதிபதியாக பொறுப்பு வகிக்க முடியும். அமெரிக்காவில் நீதிபதிகள் நியமனம் மிகவும் வெளிப்படையாக அப்போதைய அரசியல் கட்சிகளின் பிரதிநிதித்துவத்துக்கேற்ப முடிவாகிறது. நீதிபதியாக நியமிக்கப்படுவர் யார், எந்தப் பின்னணியைச் சேர்ந்தவர், அவரது கருத்தியல் சார்புகள் என்னென்ன என்பதெல்லாம் மிகவும் வெளிப்படையாகவே ஊடகங்களில் விவாதிக்கப்படுகின்றன.

ட்ரம்ப்பின் சாமர்த்தியம்

தற்போது அமெரிக்காவில் மரபுத்துவக் கட்சியினர் பெரும்பான்மையுடன் இருப்பதால் கின்ஸ்பெர்க் இடத்தில் புதிய நீதிபதியை நியமிக்கும் வாய்ப்பு அவர்களிடமே இருக்கிறது. எனினும், நாடாளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மையின் காரணமாக நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் தனக்கு உள்ளது என்று அமெரிக்க அதிபர் அவ்வளவு எளிதாகவும் முடிவெடுத்துவிட முடியாது என்பதுதான் உண்மை நிலை.

அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தொடங்கிவிட்ட நிலையில், நீதிபதி நியமனமும்கூட அதில் ஒரு அங்கமாகியிருக்கிறது. அடுத்து நியமிக்கப்படவிருக்கும் நீதிபதியும் ஒரு பெண்தான் என்று வெகு சாமர்த்தியாக தனது அறிவிப்பைத் தேர்தலுக்கான உத்தியாகவும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் ட்ரம்ப். இன்னும் அவர் யார் என்று முடிவுசெய்யப்படவில்லை; ஆனால், தகுதிவாய்ந்த பெண்கள் பலர் பரிசீலனையில் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார் அவர்.

தேர்தலில் பெண்கள் வாக்குகளைக் குறிவைத்ததுதான் இந்தப் பிரச்சாரம் என்றாலும் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரின் நியமனம் ரகசியம் காக்கப்பட்டு புனிதம் கற்பிக்கப்படாமல் எவ்வளவு வெளிப்படையாகவும் பொதுவிவாதத்துக்கு இடமளிக்கப்பட்டும் நடக்க வாய்ப்பிருக்கிறது என்பதற்கு அமெரிக்கா மற்ற நாடுகளுக்கு ஒரு பாடமாக விளங்குகிறது.

அமெரிக்கா சொல்லும் இரண்டாவது பாடம், உச்ச நீதிமன்றத்தில் பெண்களின் விகிதாச்சாரம் பற்றியது. ஒன்பது நீதிபதிகளில் மூன்று பேர் பெண்கள். ஓய்வுபெற்று உயிருடன் இருக்கும் மூன்று நீதிபதிகளில் பெண் ஒருவரும் உள்ளடக்கம். அமெரிக்காவில் பாலின பேதங்கள் சட்டரீதியாகக் களையப்பட்டது பெண்ணுரிமை இயக்கம் தீவிரமான அறுபதுகளுக்குப் பின்னர்தான். இந்தியாவில் அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட காலத்திலிருந்து பாலினப் பாகுபாடு கூடாது என்று பேசிக்கொண்டிருக்கிறோம்.

- செல்வ புவியரசன்,

தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x