Published : 16 Sep 2020 10:25 AM
Last Updated : 16 Sep 2020 10:25 AM

சில தருணங்களும் சில நிகழ்வுகளும் 3: நோயாளி வைத்த வடை வேண்டுகோள்

கல்யாணி நித்யானந்தன்

நடுத்தர வயது, நடுத்தர வருமானம், முந்தைய ஒரு தலைமுறைக்கும், இளைய ஒரு தலைமுறைக்கும் பொறுப்பேற்கும் கடமை, குழந்தைகளின் எதிர்காலக் கல்விக் கனவுகள், நிகழ்கால சின்ன சின்ன ஆசைகள், பெற்றோரின் மருத்துவச் செலவுகள், வீட்டுக் கடன், வாகனக் கடன் தவணைகள் - இவை எல்லாவற்றையும், இதர வீட்டுச் செலவுகளோடு சமாளிக்க உழைப்பவர். யார் இவர்?

அரசாங்க மருத்துவமனையில் மாரடைப்பு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் சராசரி நோயாளி குணமடைந்து வீடு திரும்புகிறார். இவர் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வது பற்றிப் பல பரிந்துரைகள் கூறப்படுகின்றன. எடையைக் குறைப்பது, தினசரி நடைப்பயிற்சி, புகையிலை தவிர்ப்பு, ரத்த அழுத்தத்தையும் சர்க்கரை நோயையும் கட்டுப்பாட்டில் வைப்பது என்று பலப்பல.

ஆனால், அதிர்ச்சியில் ஆழ்ந்து மீள முயலும் குடும்பத்தின் வாழ்க்கை முறையையும் மாற்ற வேண்டியது அவசியம். அவை என்ன, எப்படி என்று பார்ப்போமா?

சராசரி குடும்பத்தில் மனைவி ஓரளவு படித்தவராக இருந்தாலும், அநேகமாகப் பொத்திப் பொத்தி வளர்க்கப்பட்டு, வெளியில் வேலைக்குப் போய் பழக்கமில்லாதவராக இருப்பார். திறமையுள்ள சமையலாளி, அன்பான மனைவி, பாசமான தாய், பணிவு நிறைந்த மருமகள். ஆனால், இந்தச் சூழ்நிலையில் தேவையான மாற்றங்களை, அவை என்னென்ன என்று அறிந்து செய்துகொள்ளும் திறன் உண்டா?

பெரும்பாலான பெண்களுக்குக் குடும்பத்தின் நிதி நிலைமை தெரியாது. எத்தனை கணவர்கள் இதை மனைவியுடன் பகிர்ந்துகொள்கிறார்கள்? ஐந்தில் மூன்று பேருக்கு வங்கியில் மனைவியுடன் ‘ஜாயின்ட்’ கணக்கோ, மனைவியின் பெயரில் தனியாக ஒரு வங்கிக் கணக்கோ இருப்பதில்லை. மாரடைப்பு நோய் மறுவாழ்வு மையத்தில் பலமுறை நான் இதை அறிந்து ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்திருக்கிறேன். கணவரிடமும் மனைவியிடமும் தனித்தனியாக விசாரித்தால்தான் இது தெரியும்.

மனைவியிடம் இதமாகப் பேசி, கணவருடைய பொறுப்புச் சுமையைக் குறைப்பது, அவரது உடல் நலத்துக்கு என்று சொல்லி, அதனால் வங்கிக்குப் போவது, மின்சார பில், வீட்டு வரி கட்டுவது என்று தொடங்கி, மெல்ல மெல்ல நிதி நிலைமை, நிதி நிர்வாகம் என்பவற்றைத் தெரிந்துகொள்ளச் சொல்ல வேண்டும்.

பலர் ஆயுள் காப்பீடு, கல்விக் காப்பீடுகூட எடுத்திருக்க மாட்டார்கள். ஆண்கள் வேலைக்குச் சேர்ந்த உடனே பணியிடத்தில் வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம் இவற்றிற்கு அநேகமாய் அம்மாவையே வாரிசாகப் பதிவுசெய்திருப்பார்கள். திருமணம் ஆனவுடன் அதை மாற்றி மனைவியின் பெயரைப் பதிவு செய்ய வேண்டும் என்பதை நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

மற்றொரு முறை மாரடைப்பு வர வாய்ப்பு உண்டு என்பதை நினைக்கவே மனம் மறுத்துவிடும். எதிர்காலத்தில் மனைவி, தன் காலிலேயே நிற்கும் நிலைமை ஒருக்கால் வரலாம் என்பதை வெளிப்படையாகச் சொல்ல முடியாது. நாசூக்காக, இதமாக, ‘நீங்களும் குடும்ப வருமானத்தில் பங்கு ஏற்றால் கணவரின் கவலையைக் குறைக்க முடியும்’ என்று பரிந்துரைக்க வேண்டும்.

அவர் தகுதிக்கு ஏற்ப வெளி வேலைக்குப் போகவோ, அல்லது வீட்டிலிருந்தே செய்கிற தொழில் திறமையை வளர்த்துக்கொள்ளவோ வேண்டும். எல்லோருக்கும் உள்ளே திறமைகள் உள்ளன. என்னவென்பதைப் பற்றி ஆலோசித்து துணிவுடன் செயலில் இறங்க வேண்டும். கணவரும் நிலைமையைப் புரிந்துகொண்டு இதை ஊக்குவிக்க வேண்டும். டியூஷன் எடுத்தல், பழரசம், ஜாம், சிறு தின்பண்டங்கள் செய்தல், தையல் எனப் பல தொழில்கள் உள்ளன. இவற்றில் ஏதாவது செய்ய முடியும்.

இதனால், பிற்காலத்தில் தேவையானால் கணவர் விருப்ப ஓய்வு எடுக்கவோ, அல்லது பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் நேர்ந்தாலோ, தைரியமாக முடிவு எடுக்க முடியும்.

உங்கள் குழந்தைகள் 15 - 18 வயதாக இருந்தால் மெல்ல மெல்ல அவர்களையும் வீட்டு நிர்வாகத்தில் ஈடுபடுத்துங்கள். சிறு சிறு வீட்டு வேலைகள், வெளி வேலைகள் என்று பொறுப்பு கொடுங்கள். அதைரியப்படுத்தாமல், ‘அப்பாவுக்கு ஓய்வு தேவை, அதனால், பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்’ எனக் கூறுங்கள்.

உணவு முறையில் அதிக காரம், இனிப்பு, எண்ணெய் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது. எப்போதாவது உண்பதில் தவறு இல்லை. உணவு ருசியாக இருக்கலாம். வெறும் வேகவைத்த, உப்புச் சப்பில்லாத சமையலால் கணவரைக் கடுப்பேற்றாதீர்கள். சற்று மெனக்கெட்டால் நல்ல செய்முறைகளைக் கற்பது சுலபம். பத்தியச் சாப்பாடு கணவர் மனதில், ‘தான் இன்னும் நோயாளிதான்’ என்ற மனச்சோர்வை ஏற்படுத்தலாம். கூடி இருந்து சாப்பிட்டு அந்த நேரத்தை மகிழ்ச்சியும், கலகலப்புமாக கழியுங்கள். உணவின் அளவை, முன்பு உண்ட அளவில் மூன்றில் ஒரு பங்கு குறைப்பது நல்லது. உணவையும், மருந்துகளையும் ஒழுங்காக, நேரப்படி எடுத்துக்கொள்ள வேண்டும். உணவுக்குப் பிறகு 20 நிமிடங்களாவது உட்கார்ந்து ஓய்வு எடுக்க வேண்டும். படுக்க வேண்டாம். சாய்வு நாற்காலியில் ஓய்வெடுக்கலாம்.

சில மனைவிமார்கள் பயந்து பயந்து கணவரைக் கண்ணாடி விக்ரகம் போல் பொத்தி வைத்து அவரது தன்னம்பிக்கையைக் குலைத்து விடுவதைக் கண்டிருக்கிறேன். இருவரையும் ஒன்றாக உட்கார வைத்து, எது செய்யலாம், எதைத் தவிர்க்க வேண்டும் என்று பரிந்துரை செய்வது முக்கியம்.

இதைப்பற்றி ஒரு வேடிக்கையான நிகழ்வு ஒன்றைக் கூறுகிறேன். ஒரு கணவர் என்னிடம் ‘‘டாக்டர், சரஸ்வதி பூஜை வருகிறது. இவள் எண்ணெய்ப் பண்டமே கூடாது என்கிறாள். ஒரு வடையாவது தரும்படி நீங்கள்தான் சொல்ல வேண்டும்’’ என்றார். நான் சிரித்துவிட்டு, ‘‘அம்மா, ஒரு வடையால் ஒன்றும் நேராது. அதைச் சாப்பிடும் மகிழ்ச்சியில் அவர் மேலும் குணமாகலாம்’’ என்று கூறினேன்.

சரஸ்வதி பூஜையன்று காலை ஒரு தொலைபேசி அழைப்பு. அவர்தான் அழாக்குறையாக, ‘‘டாக்டர் இந்தக் கொடுமையைக் கேளுங்கள். இவள் ஒரு ‘நான் ஸ்டிக்’ தவாவில் வடை மாவை ஊற்றி, ஒரு சொட்டு எண்ணெய் விட்டு வறட்டி மாதிரி ஏதோ செய்திருக்கிறாள்’’ என்றாரே பார்க்கலாம்.

நான் சிரிப்பை அடக்கிக்கொண்டு, மனைவியை அழைத்து, ‘‘உடனே நீங்கள் அவருக்கு ஒரு நல்ல வடை தராவிடில், நான் பத்து வடைகளுடன் உங்கள் வீட்டுக்கு வந்துவிடுவேன்’’ என்று பயமுறுத்தினேன். பிறகு விழுந்து விழுந்து சிரித்தேன். ‘அந்த வடையைப் பார்ப்பதற்காகவாவது அவர்கள் வீட்டுக்குச் சென்றிருக்கலாம்’ என்று தோன்றியது. கரிந்த ‘பன்’ போல இருந்திருக்குமோ அந்த வடை?

கட்டுரையாளர்: கல்யாணி நித்யானந்தன்,
இதயநோய் நிபுணர் (பணி நிறைவு),

டாக்டர் கல்யாணி நித்யானந்தன், 1969-ல் தமிழகத்தின் முதல் கரோனரி சிறப்பு சிகிச்சைப் பிரிவு சென்னையில் அமையக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர்.

தொடர்புக்கு:joenitya@yahoo.com
ஓவியம்: வெங்கி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x