Published : 23 Sep 2020 10:55 AM
Last Updated : 23 Sep 2020 10:55 AM

சில தருணங்களும் சில நிகழ்வுகளும் 4: அன்பைப் பரிமாறக் கிடைத்த வாய்ப்பு

கல்யாணி நித்யானந்தன்

இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு முற்றும் குணமடைய தேவையான மூன்று மாத விடுப்பு, அதுவும் ஊதியத்துடன்கூடப் பலருக்குக் கிடைப்பது அரிது. ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு சில ஜாக்கிரதைகளுடன் பணிக்குத் திரும்பலாம். காலை உணவு உண்ட உடனே புறப்பட வேண்டாம். ஓய்வெடுத்துக்கொண்டு பிறகு போகலாம். பேருந்தில் செல்பவராக இருந்தால் நிறுத்தம்வரை நடக்க வேண்டும் அல்லவா? அதனால், அரை மணி நேரத்துக்கு முன்பாகப் புறப்படுங்கள். காலை உணவைப் புசிக்காமல் கையில் எடுத்துப்போய் அலுவலகத்தில் உண்ணலாம். பிறகு சிறிது நேரம் சக பணியாளர்களுடன் அரட்டை அடித்துவிட்டுப் பணி தொடரலாம்.

படிகளில் ஏற வேண்டி வந்தால், 10 படிகள் ஏறி அரை நிமிடம் நிற்க வேண்டும். உடன் வரும் ஊழியர்களின் கேள்வியைத் தவிர்க்க, இப்படி நிற்கும்போது, கைப்பையில் எதையோ தேடுவது போலவோ கோப்பில் எதையோ பார்ப்பது போலவோ, ஏன் காலணி ‘லேஸ்’-ஐ கழற்றுவது, ஜன்னல் வழியாக எதையோ பார்ப்பதுபோல பாவனை செய்யுங்கள்.

உங்கள் உடல்நிலை உங்களது சொந்த விவகாரம். நண்பர்கள், உறவினரிடம் விவரமாக விளக்கத் தேவையில்லை. சிலர் உங்களைப் பரிதாபமாகப் பார்க்கலாம். சிலர் நல்லெண்ணத்தோடு ‘இன்னார், இதற்கு, இந்த மருத்துவர் / மருத்துவமனைக்குச் சென்றதாகக்’ கூறி உங்களைக் குழப்பிவிடலாம். தோஷ பரிகாரங்கள்கூட கூறுவார்கள்.

நாம் வெண்டைக்காய் சாம்பார் எப்படிச் செய்வது என்று நான்கு பேரிடம் கேட்டால், ஐந்துவித செய்முறைகள் கூறப்படும். உங்கள் ருசிக்கேற்பத்தான் நீங்கள் விரும்புவீர்கள். அதுபோலத்தான் இதுவும். எந்த மருத்துவரிடம் உங்களுக்கு நம்பிக்கையும், வசதியும், செளகர்யமும் உள்ளதோ அவரிடமே மறு பரிசோதனைகளும் மருத்துவமும் தொடர்வதுதான் நல்லது.

முக்கியமாக சில விவரங்கள், மார்பு வலி வந்தால் நாவின் அடியில் வைத்துக்கொள்ள வேண்டிய மாத்திரை பற்றி கூறியிருப்பார். அதை எல்லா அறைகளிலும் குளியலறை, கழிப்பறை உட்பட எல்லா இடத்திலும் வைத்திருக்க வேண்டும். வீட்டிலும், பணியிடத்திலும் யாராவது ஒருவருக்கு இந்த மாத்திரைகள் இருக்குமிடம் தெரிந்து இருக்க வேண்டும்.

‘அன்ஜைனா’ எனப்படும் இதய வலி நடு மார்பில் உள்ளிருந்து பிசைவதுபோல் அழுத்தத்துடன் தொடங்கி, தாடை, தோள், மேற் கைகளின் உட்புறம் பரவலாம். மாத்திரையை நாவின் அடியில் வைத்த ஓரிரு நிமிடங்களில் வலி நன்கு மட்டுப்படும் அல்லது மறைந்துவிடும். சில நிமிடங்களுக்குள் மீண்டும் வந்தாலோ, வியர்த்தாலோ, வாந்தி வரும்போல இருந்தாலோ மீண்டும் ஒரு மாத்திரையை நாவின் அடியில் வைத்துவிட்டு, உடனே மருத்துவ உதவியை நாட வேண்டும்.

ஒரு மாரடைப்புக்குப் பிறகு இத்தகைய வலி வரக்கூடும். என்ன செய்தால் இப்படி வருகிறது என்று உணர்ந்து அந்தச் செயலைத் தவிர்ப்பது நல்லது. இத்தகைய வலியைத் தவிர்க்க உங்கள் மருத்துவர் தேவையான மாறுதல்களை உங்கள் மருந்துகளில் பரிந்துரைப்பார். பயப்பட வேண்டாம். எல்லா மார்பு வலிகளும் இதய வலியாக இருக்க வேண்டுமென்பதில்லை. மருத்துவர் பரிசோதித்து, தேவையானால் ‘இசிஜி’ எடுத்து முடிவு செய்வார்.

கணவருடன் உலாவச் செல்லுங்கள். அவருக்குத் தேகப் பயிற்சி; உங்கள் இருவருக்கும் இது மனம்விட்டுப் பேசுவதற்கும், பிரச்சினைகளை அலசுவதற்கும் ஒரு வாய்ப்பு. மலரும் நினைவுகளை நினைவுகூர்ந்து மகிழ்ச்சி கொள்ளலாம்.

உங்கள் மனதில் ஒரு சந்தேகம். அதைப் பற்றிக் கேட்க ஒரு தயக்கம். ஆம், அது தாம்பத்ய உறவு பற்றித்தானே? நான் பெண் மருத்துவராக இருப்பதால் மனைவிகளைத் தனியே அழைத்து, தாம்பத்ய உறவு பற்றிய அவர்களது தயக்கத்தைக் கண்ட உடனேயே பேசியிருக்கிறேன். சாதாரண உறவுக்குத் தேவைப்படும் சக்தி, ஒரு மாடி ஏறும்போது செலவிடும் சக்தி அளவுதான். மேலும், அந்த நிகழ்வு மென்மையான, அன்பும், அரவணைப்பும் நிறைந்தது அல்லவா? அந்த மகிழ்வு மன அழுத்தத்தைக் குறைத்து, தன்னம்பிக்கையைக் கூட்டும். மூன்று மாதங்களுக்குப் பிறகு, மனைவியின் ஒத்துழைப்புடன் தாம்பத்யத்தில் ஈடுபடத் தயக்கமே வேண்டாம்.

முக்கியமாக, உங்கள் பயத்தையும் கவலைகளையும் வீட்டில் உள்ள முதியோர்கள் உணர்ந்துவிடாதவாறு கவனத்துடன் நடந்து கொள்ளுங்கள். உங்கள் வாழ்வில் நடந்திருப்பது எதிர்பாராத அதிர்ச்சிதான். அதன் பக்கவிளைவாக, மாற்றத்தினால் நன்மைகளும் விளைந்திருப்பதை எண்ணி ஆறுதல் கொள்ளுங்கள். குடும்ப நபர்களிடம் ஒட்டுதல் அதிகரித்து இருக்கிறது. இறுக்கம் குறைந்து, பிரச்சினைகளைப் பேசிப் புரிந்துகொள்ளும் தளர்வு, பொறுப்பு பகிர்தல் எல்லாமே நல்ல மாற்றங்கள்தான்.

உங்கள் வாழ்க்கையை, புது கோணத்தில் கூர்ந்து கவனிக்க இறைவன் அளித்த பாடமாக, வரமாக இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகான இந்த நாட்களை எண்ணுங்கள். ஆரோக்கியமான மாறுதல்களால் உடலும் மனமும் உரம் பெறும். வாழ்ந்து கோடி நன்மை பெறுவீர்.

- சந்திப்போம்... சிந்திப்போம்..!

கட்டுரையாளர்: கல்யாணி நித்யானந்தன்,
இதயநோய் நிபுணர் (பணி நிறைவு),

டாக்டர் கல்யாணி நித்யானந்தன், 1969-ல் தமிழகத்தின் முதல் கரோனரி சிறப்பு சிகிச்சைப் பிரிவு சென்னையில் அமையக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர்.

தொடர்புக்கு:joenitya@yahoo.com
ஓவியம்: வெங்கி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x