Published : 14 Sep 2020 15:29 pm

Updated : 14 Sep 2020 15:29 pm

 

Published : 14 Sep 2020 03:29 PM
Last Updated : 14 Sep 2020 03:29 PM

ஆதிர் ரஞ்சனின் மீள் வரவு: அறுவடை செய்யப்போவது யார்?

adhir-ranjan-chowdhury-s-comeback-who-is-going-to-harvest
ஆதிர் ரஞ்சன்

மேற்கு வங்கத்தில் 2021-ல் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அம்மாநில அரசியலில் ஏற்பட்டிருக்கும் நகர்வுகள் பல்வேறு விவாதங்களை உருவாக்கியிருக்கின்றன. குறிப்பாக, மாநிலக் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மீண்டும் கொண்டு வரப்பட்டிருப்பது யாருக்குப் பலன் தரும் எனும் விவாதம் தொடங்கியிருக்கிறது.

உண்மையில், மக்களவைக் காங்கிரஸ் தலைவராக இருக்கும் ஆதிர் ரஞ்சன், மாநில அரசியல் களத்துக்குத் திரும்புவது, மேற்கு வங்க அரசியல் களத்தில் புதிய சமன்பாடுகளை உருவாக்கும் என்பதில் சந்தேகமே இல்லை!


ஏற்கெனவே பாஜகவினர் தொடர்ந்து கொடுத்துவரும் நெருக்கடிகள் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தியிருக்கின்றன. சமீபகாலமாக, காங்கிரஸுடன் சுமுக உறவைப் பேணிவரும் மம்தா பேனர்ஜி, ஆதிர் ரஞ்சனின் மீள்வரவால் அதிருப்தியடைந்திருப்பது உறுதி. ஏனெனில், அவருக்கும் ஆதிர் ரஞ்சனுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான்!

மம்தாவின் அரசியல் எதிரி

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அட்டூழியங்களால் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்தவர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தொடர்ந்து விமர்சித்து வருபவர் ஆதிர் ரஞ்சன். மாநிலத்தில் தொழில்துறை வளர்ச்சி குறைந்திருப்பது முதல், சாரதா சிட்பண்ட் முறைகேடு வரை பல்வேறு பிரச்சினைகளைக் கிளப்பி மம்தாவுக்குத் தலைவலியை ஏற்படுத்தி வந்தவர். மக்களவையிலேயே திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரை ‘திருடர்கள்’ என்று விமர்சித்து அக்கட்சியினருக்குக் கடுப்பேற்றியவர். காங்கிரஸ்காரரான இவரது இந்த விமர்சனங்களைக் கேட்டு பாஜகவினரே மேஜையைத் தட்டி ஆதரவு தெரிவித்த விநோதக் காட்சிகளும் அரங்கேறியிருக்கின்றன.

ஒருகட்டத்தில் திரிணமூல் காங்கிரஸுடன் காங்கிரஸ் இணக்கமாகச் செல்ல வேண்டும் என்பதற்காகவே மாநிலக் காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து ஆதிர் ரஞ்சனை விடுவித்து, அவரை மக்களவைக் காங்கிரஸ் தலைவராக்கினார் ராகுல் காந்தி. அவருக்குப் பதிலாகப் பொறுப்பேற்ற சோமேந்திரநாத் மித்ரா, இடதுசாரிகளுடன் இணக்கமாகச் செல்வதற்கான முயற்சிகளை எடுத்தார். இத்தனைக்கும் அவர் திரிணமூல் காங்கிரஸுக்குச் சென்றுவிட்டு காங்கிரஸுக்குத் திரும்பியவர். 2020 ஜூலை 30-ல் சோமேந்திரநாத் மித்ரா மரணமடைந்த பின்னர், மாநிலக் கட்சித் தலைமை காலியாகக் கிடந்தது.

இந்நிலையில், ஆதிர் ரஞ்சனை மீண்டும் மாநிலக் காங்கிரஸ் தலைவராக்க வேண்டும் என்று மேற்கு வங்க சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவரான அப்துல் மன்னான், சமீபத்தில் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதியிருந்தார். மக்களவைக் காங்கிரஸ் தலைவர் பொறுப்புடன் சேர்த்து இந்தப் பொறுப்பையும் அவர் கவனித்துக்கொள்ளட்டும் என்று அக்கடிதத்தில் அப்துல் மன்னான் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, மாநிலத் தலைவர் பொறுப்பு ஆதிர் ரஞ்சனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

கைநழுவும் உறவு

சமீப காலமாக, காங்கிரஸ் தலைமையுடன் ரொம்பவும் இணக்கமாக நடந்துகொள்கிறார் மம்தா. இதனால், 2021 மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் - திரிணமூல் காங்கிரஸ் கூட்டணி ஏற்படலாம் எனும் எதிர்பார்ப்புகூட எழுந்தது. ஆனால், ஆதிர் ரஞ்சன் மீண்டும் மாநில அரசுக்குத் திருப்பி அனுப்பப்பட்டிருப்பது அதற்கான வாய்ப்புகளைக் குறைத்திருக்கிறது என்றே தெரிகிறது.

சோமேந்திரநாத் மித்ராவைப் போலவே இடதுசாரிகளுடன் கைகோப்பதையே விரும்புபவர் ஆதிர் ரஞ்சன். மக்களவைத் தேர்தலில், 18 இடங்களை பாஜக வென்ற பின்னர் சுதாரித்துக்கொண்ட மம்தா, மீண்டும் காங்கிரஸுடன் நெருக்கம் காட்டினார். இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துச் செயல்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைமை விரும்பினாலும், ஆதிர் ரஞ்சன் அப்போதே அதைக் கடுமையாக எதிர்த்தார்.

தற்போது மாநிலப் பொறுப்பை ஏற்ற பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஆதிர் ரஞ்சன், மதச்சார்பற்ற அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தினார். எனினும், திரிணமூல் காங்கிரஸை அந்தப் பட்டியலில் கொண்டுவர அவருக்கு விருப்பம் இல்லை. மாறாக, திரிணமூல் காங்கிரஸுக்கு எதிரான வலுவான அணியை உருவாக்குவதே அவரது எண்ணம் என்கிறார்கள். ஒருவகையில், அதிரடியான மம்தாவையும், அதிகாரத்தைக் குவித்துவரும் பாஜகவையும் ஒரே சமயத்தில் சமாளிக்க ஆதிர் ரஞ்சனே ஆபத்பாந்தவனாக இருப்பார் என்று சோனியா கருதுவதாகச் சிலர் சுட்டிக்காட்டுகிறார்கள்.

வாக்குகள் பிரியுமா?

இந்த நகர்வுகளை பாஜக உற்று கவனித்துக்கொண்டிருக்கிறது. காங்கிரஸும் இடதுசாரிகளும் கைகோப்பது அந்த இரு கட்சிகளுக்கும் பின்னடைவைத் தரும் என்பது பாஜகவின் எண்ணம். “கடந்த தேர்தலின்போது அதே காரணத்துக்காகவே இரண்டு கட்சிகளையும் சேர்ந்தவர்கள் விலகி, எங்கள் பக்கம் வந்தனர்” என்று மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறியிருக்கிறார்.

திரிணமூல் காங்கிரஸுடன் சேராமல், காங்கிரஸும் இடதுசாரிகளும் கைகோத்துப் போட்டியிடுவது பாஜகவுக்கான ஆதரவு வாக்குகளைச் சிதறடிக்கும் என்று சிலர் கருதுகிறார்கள். ஆனால், கடந்த சில ஆண்டுகளில் இப்படியான மும்முனைக் களங்களில் பாஜகவுக்கே அதிக வெற்றி கிடைத்திருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.

2019-ல், ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக, ஜனநாயக ஜனதா கட்சி (ஜேஜேபி) ஆகிய கட்சிகளுக்கிடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டது. அந்தத் தேர்தலில் பாஜகவுக்கு 40, காங்கிரஸுக்கு 31, ஜேஜேபி-க்கு 10 இடங்கள் கிடைத்தன. பாஜகவைப் பொறுத்தவரை முந்தைய தேர்தலைவிட 7 இடங்கள் குறைவாகவே கிடைத்தன என்றாலும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துவிடாமல் அக்கட்சியால் தடுக்க முடிந்தது. தேர்தலுக்குப் பின்னான இழுபறியில் சரியாகக் காய்நகர்த்தி ஜேஜேபியுடன் சேர்ந்து ஆட்சியைத் தக்கவைத்தும்கொண்டது. முன்னதாக, 2017-ல் நடந்த உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி ஆகிய கட்சிகளுக்கிடையிலான மும்முனைப் போட்டி பாஜகவுக்கே சாதகமாக அமைந்தது.

எனவே, காங்கிரஸும் திரிணமூல் காங்கிரஸும் மோதிக்கொண்டால், இரு கட்சிகளின் வாக்குகளும் சிதறி, பாஜக பக்கம் சென்றுவிடலாம் எனும் கணிப்பைப் புறந்தள்ளிவிட முடியாது. “மேற்கு வங்கத்தில், காங்கிரஸும் திரிணமூல் காங்கிரஸும் முஸ்லிம் வாக்கு வங்கியை முக்கியமானதாகக் கருதுகின்றன. முஸ்லிம் வாக்குகள் பாஜகவுக்குச் செல்ல வாய்ப்பில்லை எனும் நிலையில், காங்கிரஸுக்கும் திரிணமூல் காங்கிரஸுக்கும் இடையிலான போட்டியால் அந்த வாக்குகள் சிதறிவிடும். அதன் பலனை பாஜகவே அறுவடை செய்யும்” என்று சில அரசியல் பார்வையாளர்கள் கணிக்கிறார்கள்.

அடுத்த நகர்வுகள்

மக்களவையில் பாஜக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசும் ஆதிர் ரஞ்சன், மேற்கு வங்கத்தில் அதே வேகத்தை பாஜக பக்கம் காட்டுவாரா என்பது முக்கியமான கேள்வி. மம்தாவுக்கு எதிரான அவரது ஆவேசம், பாஜக எதிர்ப்புணர்வை நீர்த்துப்போகச் செய்யலாம். அதுவும் பாஜகவுக்கே சாதகமாக அமையும்.

2019 மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 18 இடங்களில் வென்ற பாஜக, 41 சதவீத வாக்குகளையும் பெற்று மம்தாவுக்கு அதிர்ச்சியளித்தது. இந்நிலையில், ஆதிர் ரஞ்சனின் வருகையால் அரசியல் சமன்பாடுகள் சிதறுவதை மம்தாவால் பொறுத்துக்கொள்ள முடியாது. இனி அவர் என்ன செய்யப்போகிறார் என்பதில்தான் மேற்கு வங்க அரசியலின் போக்கு தீர்மானிக்கப்படும்!

பின்குறிப்பு: ஆதிர் ரஞ்சன் மாநிலப் பொறுப்புக்கு வந்துவிட்ட நிலையில், மக்களவையில் காங்கிரஸ் தலைவர் பொறுப்பு கைமாற்றப்படுமா எனும் கேள்வியும் எழுந்திருக்கிறது. மணீஷ் திவாரிக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படலாம் என்று பேசப்படுகிறது. ராகுல் காந்தியே அந்தப் பொறுப்பை ஏற்கக்கூடும் என்றும் சிலர் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். ஆக, ஆதிர் ரஞ்சனின் அரசியல் இடமாற்றம் தேசிய அரசியலிலும் திருப்பங்களை உருவாக்கலாம்!


தவறவிடாதீர்!

Adhir Ranjan ChowdhuryAdhir Ranjanஆதிர் ரஞ்சன்மீள் வரவுஅறுவடை செய்யப்போவது யார்மேற்கு வங்கம்சட்டப்பேரவைத் தேர்தல்பாஜககாங்கிரஸ்மம்தா பானர்ஜி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author