Published : 10 Sep 2020 08:00 AM
Last Updated : 10 Sep 2020 08:00 AM

பிஹார் மல்யுத்தம்: பிஹார் தேர்தல் களம் எப்படியிருக்கிறது?

பிஹார் மக்களைப் பொறுத்தவரை வரவிருக்கும் தேர்தலானது தங்கள் வாழ்க்கைப் பிரச்சினையைத் தீர்க்க உதவும் புதிய தலைவரையும் புதிய இயக்கத்தையும் கண்டடைவதற்கானதுபோல் தோன்றுகிறது. நிதீஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ.) அரசு மத்திய அரசுடன் பேரம் பேசுவதிலும், பிஹாருக்கு நீண்ட காலமாக மறுக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தையும் முதலீடுகளையும் பெற்றுத்தருவதிலும் தோல்வியடைந்துவிட்டது. பழைய தலைமையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் என்பதையே களநிலவரங்கள் தெரிவிக்கின்றன. பிஹாரின் தேசிய ஜனநாயகக் கூட்டணி இதை அறிந்திருக்கிறது. அதனால்தான் கரோனா பெருந்தொற்று, புலம்பெயர்ந்தோர் பிரச்சினை, வெள்ளம் போன்றவற்றால் ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மையைக் குறைத்துக் காட்டிக்கொண்டிருக்கிறது.

கூட்டணி உரசல்கள்

இந்தப் பிரச்சினைகளை மேலும் மோசமாக்குவது எதுவென்றால், பாஜக கூட்டணி முகாமுக்குள் நிலவும் உரசல்கள்தான். இந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோஜக (லோக் ஜனசக்தி கட்சி), நிதீஷ் குமார் மீதும், கரோனா பெருந்தொற்றுக்குத் ‘தாமதமாகவும் வலுவற்றும் எதிர்வினை’ புரிந்த அவரது அரசு மீதும் தொடர்ச்சியாக விமர்சனக் கணைகளை ஏவிவருகிறார். லோஜக தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் அரசியல் போக்குகளை முன்கூட்டியே கணித்து, அதற்கேற்ப முடிவெடுக்கக் கூடியவர் என்பதால், அவரை ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் ‘வானிலையாளர்’ என்று ஒருமுறை குறிப்பிட்டார். பிஹாரின் முதல்வராக ஏழாவது முறை நிதீஷ் பதவியேற்கும் திட்டத்தில் குறுக்கே கட்டையைப் போடுபவராக ராம் விலாஸ் பாஸ்வான் கருதப்படுகிறார்.

நாடாளுமன்ற உறுப்பினரும் ராம் விலாஸ் பாஸ்வானின் மகனுமான சிராக் பாஸ்வான் ‘பிஹாருக்கே முன்னுரிமை, பிஹாரிக்குத்தான் முன்னுரிமை’ என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்திருக்கிறார். வெகு மக்கள் தொடர்பான பிரச்சினைகளில் பிஹார் அரசு காட்டும் அலட்சியத்துக்கும், நிர்வாகத்தில் அதன் யதேச்சதிகாரப் போக்குக்கும் எதிராக லோஜகவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் விதத்திலான பிரச்சாரமாகும் இது. மிகப் பெரிய அளவிலான நிதியாதாரங்கள், அரசியந்திரம், சாதிக் கணக்கீடுகள் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி மறுபடியும் ஆட்சிக்கு வருவதற்கான பந்தயத்தில் இன்னமும் இருந்தாலும் நிதீஷ் குமாரின் தலைமை கேள்விக்குள்ளாகியிருக்கிறது.

நிதீஷுக்கு மற்ற சவால்களும் இருக்கின்றன. இப்போதும்கூட, ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்குப் பெரிய அளவிலான தொண்டர் பலம் பிஹாரில் இருக்கிறது. ஆளுங்கட்சிக்கு எதிரான உணர்வு, லாலு பிரசாதின் உடல்நிலை மோசமாகிவருவதால் மக்களிடம் ஏற்பட்டிருக்கும் அனுதாப உணர்வு, விரிவான வகையில் மேற்கொள்ளப்படும் கூட்டணி முயற்சிகள் போன்றவை அக்கட்சிக்கு உதவக்கூடும். முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா மறுபடியும் அரசியலுக்குள் நுழைந்திருப்பதும் பிஹாரில் அதிர்வலைகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. ‘பெட்டர் பிஹார்’ (Better Bihar) என்று அவர் முன்னெடுத்திருக்கும் பிரச்சாரமானது, வெகு காலமாக மாநில அரசியலின் விளிம்பிலேயே இருந்த மூத்த அரசியலர்களை ஒன்றுதிரட்டிவருகிறது. அவர் மற்ற கட்சிகளுடன் சேர்ந்து ஒரு முழுமையான பொதுச் செயல்திட்டத்தை வகுப்பதில்தான் இதன் வெற்றி அடங்கியிருக்கிறது. அரசியல் உத்தி வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர், தான் எந்தக் கட்சியை ஆதரிக்கப்போகிறேன் என்பதை இன்னும் முடிவுசெய்யவில்லை என்றிருக்கிறார். இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து சொந்த மாநிலம் திரும்பிய பிஹாரிகளுக்கு உதவுவதில் பப்பு யாதவின் ஜன் அதிகார் கட்சி முன்னணியில் நிற்கிறது. சீமாஞ்சல் பகுதியில் அவரது செல்வாக்கு வலுப்பெற்றுவருகிறது. தேர்தல் நெருங்கும் வேளையில் கட்சித் தாவல்களும் முக்கியத்துவம் பெறும்.

எட்டுத்திக்கும் நெருக்கடி

மாநிலத்தில் தொழில் துறை வேலைவாய்ப்புகள் இல்லாதது பிஹாரிலிருந்து பிற மாநிலங்களுக்கு பிஹாரிகள் பெருமளவுக்குப் புலம்பெயரக் காரணமாக இருக்கிறது. பெருந்தொற்று வந்ததும் மத்திய அரசு திடீரென்று பொதுமுடக்கத்தை அறிவித்ததும் ஆயிரக் கணக்கான பிஹாரிகள் வருமானத்துக்கான ஆதாரம் இல்லாமல் பிற மாநிலங்களில் சிக்கிக்கொண்டார்கள். பலரும் பிஹாருக்குத் திரும்ப ஆரம்பித்தார்கள். எனினும், அவர்கள் நலனுக்காகப் போதுமான அளவுக்குப் பொருளாதாரத் தொகுப்பையோ வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான திட்டத்தையோ மாநில அரசால் அறிவிக்க முடியவில்லை.

பிஹாரில் ஏற்பட்ட வெள்ளத்தையும் சாதாரணப் பிரச்சினை என்று ஒதுக்கிவிட முடியாது. மாநில பேரிடர் மேலாண்மைத் துறையின் தரவுப்படி, இந்த ஆண்டு வெள்ளம் அம்மாநிலத்தின் 16 மாவட்டங்களில் 1,232 பஞ்சாயத்துகளில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 70 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், 24 பேர் உயிரிழந்திருக்கின்றனர். பேரிடர்களைத் தவிர்ப்பதற்கும், தராய் பகுதியில் நீர்மின்சக்தி உற்பத்தி போன்ற ஆக்கபூர்வமான நோக்கங்களுக்கு நீராதாரங்களைப் பயன்படுத்துவதற்கும் போதுமான அளவில் ஏதும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. புலம்பெயர் தொழிலாளிகள் திரும்பிவந்தபோதும் வெள்ளங்களின்போதும் அரசு சரியாகச் செயல்படத் தவறியது இந்தத் தேர்தலில் மிக முக்கியமான இரண்டு காரணிகளாக அமையும்.

இந்தியாவின் தற்போதைய பிரச்சினைகளுக்கெல்லாம் நாட்டின் முதல் பிரதமர் நேருதான் காரணம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறிவருவதைப் போல மாநிலத்தில் போதுமான அளவு மருத்துவமனைகள் கட்டப்படாததற்கு லாலு பிரசாத்-ராப்ரி தேவி ஆட்சிக் காலத்தையே பிஹாரின் துணை முதல்வரும் மாநிலத்தில் பாஜகவின் முகமுமான சுஷில் குமார் மோடி குறைகூறிவருகிறார்.

சிதையும் நல்லாட்சிப் பிம்பம்

சர்வதேச அளவில் மதிக்கப்படும் மருத்துவ இதழான ‘தி லேன்சட்’ வெளியிட்ட அறிக்கையொன்றின்படி இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் மாநிலங்களில் ஒன்றாக பிஹார் இருக்கிறது; இதற்குக் காரணம், அம்மாநிலத்தின் பலவீனமான மருத்துவக் கட்டமைப்புதான் என்கிறது அந்த அறிக்கை.

பிஹாரின் பிற வளர்ச்சி சுட்டிகளும் நம்பிக்கையளிக்கும் விதத்தில் இல்லை. ‘இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் மைய’த்தின்படி (சி.எம்.ஐ.ஈ.) 2020 ஜூன் மாதத்தில் பிஹாரின் வேலைவாய்ப்பின்மை விகிதம் ஜூன் 2019-ல் இருந்ததைவிட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம். நிதீஷ் குமார் மீது விழுந்திருக்கும் ‘நல்லாட்சி’ என்ற பிம்பத்தை இந்தப் புள்ளிவிவரங்கள் கேள்வி கேட்கின்றன. மேலும், சட்டம் - ஒழுங்கு மிக மோசமாக இருப்பதால் பிஹாரின் ஒட்டுமொத்த நிலைமையும் மோசமாகக் காட்சியளிக்கிறது.

பல்வேறு நெருக்கடிகளை பிஹார் எதிர்கொண்டுவருவதால், இந்தத் தேர்தலில் சேதாரம் இல்லாமல் அவர் தப்பிக்கிறாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். நிதீஷ் குமாரும் துணை முதல்வர் சுஷில் குமார் மோடியும் தங்கள் நிர்வாகத்தின் பிரச்சினைகளையும் தங்கள் ஆட்சிக் காலத்தில் அவர்கள் தவறவிட்ட வாய்ப்புகளையும் ஒப்புக்கொண்டு அவற்றைச் சரிசெய்வதற்கான ஒரு திட்டத்தைத் தேர்தல் அறிக்கையில் முன்வைப்பார்கள் என்றால், அவர்கள் மீது வரலாறு கருணை காட்டும்.

- அதுல் கே.தாக்கூர், கொள்கை வகுப்பாளர், பத்தியாளர்.

© தி இந்து, தமிழில்: ஆசைஅதுல் கே. தாக்கூர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x