Published : 08 Sep 2020 08:39 AM
Last Updated : 08 Sep 2020 08:39 AM

இந்திய சதுரங்கத்தின் தங்கமான பெருமிதம்

உலக சதுரங்கக் களத்தில் இந்தியா அடைந்துவரும் வளர்ச்சிக்கும், இந்தியாவில் இந்த விளையாட்டு அடைந்துவரும் பிரபல்யத்துக்கும் சான்றாகச் சமீபத்திய சதுரங்க ஒலிம்பியாடில் இந்தியா அடைந்த வெற்றி அமைந்திருக்கிறது. போட்டியை வெல்லும் என்று பலரும் எதிர்பார்த்த ரஷ்யாவுடன் சேர்ந்து இந்தியாவும் தங்கப் பதக்கத்தை வென்றிருக்கிறது. இணைய வழியில் நடைபெற்ற இந்தப் போட்டியின்போது ஏற்பட்ட இணையக் கோளாறு காரணமாக, இறுதிப் போட்டியில் இரண்டு ஆட்டங்களின் முடிவு பாதிக்கப்பட்டது. இணையத்தில் கோளாறு ஏற்படவில்லை என்றால், இந்தியாவின் நிஹல் சரின், திவ்யா தேஷ்முக் இருவருக்கும் நேரப் பிரச்சினை இருந்திருக்காது. இது குறித்து இந்திய அணியின் நிர்வாகம் முறையிட்டது. ஆகவே, ரஷ்யாவையும் இந்தியாவையும் கூட்டு வெற்றியாளர்களாக அறிவிக்கும் முடிவை உலக சதுரங்க அமைப்பான ‘எஃப்.ஐ.டி.ஈ.’ எடுத்தது. சதுரங்கத்தைப் பொறுத்தவரை ‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டித் தொடர் மிகவும் பெருமைமிக்கதாகும். அதன் வரலாறு 1924-லிருந்து தொடங்குகிறது. இதற்கு முன்னதாக இந்தியாவின் அதிகபட்ச சாதனை 2014-ல் மூன்றாவது இடத்தைப் பிடித்ததாகும்.

163 நாடுகளுள் இந்தியா 7-வது நிலையில் இருந்தாலும் அதை யாரும் சாதாரணமாக எடுத்துக்கொண்டிருக்க மாட்டார்கள். ஏனெனில் ஆண், பெண், இளையோர் மூன்று பிரிவுகளிலும் இந்தியா வலுவான ஆட்டக்காரர்களைக் கொண்டிருந்தது. விஸ்வநாதன் ஆனந்தும் கோனேரு ஹம்பியும் உலகம் இதுவரை கண்டிருக்கும் ஆட்டக்காரர்களில் சிறந்தவர்களின் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார்கள் என்றால், நிஹலும் ஆர்.பிரக்ஞாநந்தாவும் எதிர்கால நட்சத்திரங்களாகக் கருதத் தக்கவர்கள். இந்திய வெற்றியின் பெருமிதத்தில் நாம் திளைத்திருக்கும்போது, கவலைக்குரிய சில விஷயங்களையும் நாம் கவனிக்காமல் விட்டுவிடக் கூடாது.

சில நாட்களுக்கு முன்பு விளையாட்டு வீரர்களுக்கான அர்ஜுனா விருதை இணையம் வழியாகக் குடியரசுத் தலைவர் வழங்கிக்கொண்டிருந்தபோது, ஒலிம்பியாடின் அரையிறுதியில் போலந்துக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா வெற்றிபெற்றது. சதுரங்க வீரர்கள் பலர் தங்கள் அற்புதமான ஆட்டத் திறனைச் சமீப ஆண்டுகளில் வெளிப்படுத்தியிருந்தாலும், உலக அளவில் சதுரங்கத்தில் இந்தியா 4-வது இடத்தில் இருந்தாலும் கடந்த 7 ஆண்டுகளில் எந்த சதுரங்க வீரருக்கும் அர்ஜுனா விருது வழங்கப்படவில்லை என்பதுதான் இதிலுள்ள முரணான விஷயம். ஒலிம்பியாட் நெருங்கிய நிலையில் ‘அனைத்திந்திய சதுரங்க அமைப்’பின் ஆதரவு இல்லாமல், தாங்கள் கைவிடப்பட்டது பற்றி இந்திய சதுரங்க அணித் தலைவர் விதித் குஜராத்தி கூறியது, இந்திய சதுரங்கத்தின் பலவீனமான பக்கத்தை நமக்கு உணர்த்துகிறது. அந்த அமைப்பின் அதிகாரத் தரப்பினர், அதிகாரப் போட்டியில் ஈடுபட்டிருக்கின்றனர். ஒலிம்பியாடுக்கு இரண்டு தனித் தனி அணிகளை அவர்கள் அறிவித்தனர், தலைமைத் தேர்வாளர் ஆர்.பி.ரமேஷை அமைப்பை விட்டு வெளியேறும்படி செய்தனர். தற்போதைய வெற்றியை அடுத்து, இனியாவது இந்திய சதுரங்கத்தைப் பற்றி ஆழ்ந்த பரிசீலனையில் ஈடுபடுவது அவசியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x