Published : 04 Sep 2020 10:14 PM
Last Updated : 04 Sep 2020 10:14 PM

குழந்தைத் திருமணம்; முதலிடத்தில் இந்தியா: தேவை ஒருங்கிணைந்த செயல்பாட்டுத் திட்டம்! 

முனைவர் ப.பாலமுருகன்

உலக நாடுகளில் குழந்தைத் திருமணம்

உலகெங்கிலும் குழந்தைத் திருமணம் என்பது ஒரு சமூகப் பிரச்சினையாக இன்றளவும் இருந்து வருகிறது. இது குழந்தைகளின் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கிறது. ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் உரிமைகள் மீதான உடன்படிக்கையில் (United Nations Convention on the Rights of the Child) கூறப்பட்டுள்ள, வாழ்வதற்கான, வளர்ச்சிக்கான, பாதுகாப்புக்கான மற்றும் பங்கேற்பதற்கான உரிமைகளை முற்றிலுமாகப் பாதிக்கிறது. ஆகவே, இதைக் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையாகக் கருத வேண்டியிருக்கிறது. இருபாலினத்தவரும் - ஆண் மற்றும் பெண் குழந்தைகள், குழந்தைத் திருமணத்தால் பாதிப்படைகின்றனர். உலக அளவில் சராசரியாக, ஒவ்வொரு நிமிடமும் 23 குழந்தைத் திருமணங்கள் (மூன்று வினாடிக்கு ஒரு திருமணம்) நடைபெறுகின்றன.

யுனிசெப் (UNICEF) நிறுவனம், கடந்த மார்ச் 2020-ல் வெளியிட்டுள்ள அறிக்கை

கடந்த 10 ஆண்டுகளில் 2.5 கோடிக் குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன.10 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு குழந்தைகளில் ஒருவருக்கு 18 வயதிற்கு முன் திருமணம் நடைபெற்று வந்தது. தற்போது குறைந்து ஐந்தில் ஒரு குழந்தைக்கு நடைபெறுகிறது. உலக அளவில் 18 வயதுக்குட்பட்ட 21 சதவீதம் பேர் குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். தெற்காசியாவில் கடந்த 10 ஆண்டுகளில் 49 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாகக் குறைந்துள்ளது. தற்போது திருமணமாகி உள்ளவர்களில் 65 கோடி பேர் 18 வயது நிறைவடையும் முன்னர் திருமணம் செய்துள்ளார்கள். ஒவ்வொரு ஆண்டும் 1.2 கோடிக் குழந்தைகள் திருமணத்தால் பாதிக்கப்படுகின்றனர். இதில் ஐந்தில் ஒரு குழந்தைக்கு (23 லட்சம்) 15 வயது நிறைவடையும் முன்னரே திருமணம் நடைபெறுகிறது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால், 2030 ஆம் ஆண்டு இறுதிக்குள் மேலும் 12 கோடிக் குழந்தைகளுக்குத் திருமணம் நடைபெறும் என்று யுனிசெப் தெரிவிக்கின்றது.

ஜூன் 2019 யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கை மூலம், ஆண் குழந்தைகளைப் பொறுத்தவரை, பெண் குழந்தைகளுக்கு ஏற்படுவதில் ஆறில் ஒரு பங்கு மட்டுமே நடைபெறுகிறது. 30 ஆண்களில் ஒருவருக்கு 18 வயதிற்கு முன் திருமணம் நடைபெறுகிறது. உத்தேசமாக 1.15 கோடி ஆண்களுக்கு 18 வயதிற்குள் திருமணம் நடந்துள்ளது என்று தெரியவருகிறது.



இந்தியாவில் குழந்தைத் திருமணம்

உலக அளவில், எண்ணிக்கையின் அடிப்படையில் 1,55,09,000 குழந்தைத் திருமணங்களுடன் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இதில் 10,21,700 (7 சதவீதம்) திருமணங்கள் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நடைபெறுகிறது. உலகில் நடைபெறும் 3 திருமணங்களில் ஒரு திருமணம் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்தியாவின் பங்களிப்பு 33 சதவீதமாக இருக்கிறது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி (2011), ராஜஸ்தான், பிஹார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், மேற்கு வங்காளம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் குழந்தைத் திருமணங்கள் ஆண் மற்றும் பெண் குழந்தைகள் மத்தியில் அதிகம் உள்ளது.

தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பின்படி (National Family Health Survey -NFHS-3), 2005 - 2006இல் 47.4 சதவீதமாக இருந்த குழந்தைத் திருமணங்கள், 2015 - 2016இல் 26.8 சதவீதமாகக் குறைந்துள்ளது. 2005 – 2006, NFHS-3இன் புள்ளி விவரப்படி, பிஹாரில் 47.8 சதவீதம்; ஜார்க்கண்ட் 44.7 சதவீதம்; ராஜஸ்தானில் 40.4 சதவீதம்; மற்றும் மேற்கு வங்கத்தில் 34 சதவீதம் குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றுள்ளன. 2015-2016, NFHS-4இன் புள்ளி விவரப்படி, மேற்கு வங்கம் (25.6 சதவீதம்), திரிபுரா (21.6 சதவீதம்), பிஹார் (19.7 சதவீதம்) ஜார்க்கண்ட் (17.8 சதவீதம்) மற்றும் அசாம் (16.7 சதவீதம்) போன்ற மாநிலங்களில் குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடைபெற்றுள்ளன.

தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பின்படி (NFHS -4), குழந்தைத் திருமணத்திற்கான முக்கியக் காரணிகளை ஆராய்ந்து பார்த்தால், கல்விக்கும், குழந்தைத் திருமணத்திற்கும் நேரடித் தொடர்பு இருப்பதைப் புள்ளிவிவரம் காட்டுகிறது. 15-19 வயதுக்குட்பட்ட படிக்காத குழந்தைகள் மத்தியில் 30.8 சதவீதம்; ஆரம்பக் கல்வி படித்தவர்கள் மத்தியில் 21.9 சதவீதம்; உயர்நிலை கல்வி படித்தவர்கள் 10.2 சதவீதம்; மேல்நிலைப் பள்ளி முடித்தவர்கள் மத்தியில் 2.4 சதவீதம் குழந்தைத் திருமணங்கள் நடக்கின்றன. இது 20-25 வயதுக்குட்பட்டவர்கள் மத்தியில், படிக்காதவர்கள் 49.3 சதவீதம்; ஆரம்பக் கல்வி படித்தவர்கள் மத்தியில் 45.7 சதவீதம்; உயர்நிலைக் கல்வி படித்தவர்கள் மத்தியில் 28.3 சதவீதம்; மேல்நிலைப் பள்ளி முடித்தவர்கள் மத்தியில் 3.9 சதவீதம் குழந்தைத் திருமணங்கள் நடக்கின்றன.

பெரும்பாலும் ஏழை மற்றும் பொருளாதார ரீதியாகப் பின் தங்கியவர்கள் மத்தியில் குழந்தைத் திருமணம் அதிகமாக உள்ளது. 15 - 19 வயதுக்குட்பட்ட குழந்தைகளில், ஏழைக் குடும்பப் பின்னணியிலுள்ள குழந்தைகளுக்கு 16.6 சதவீதம்; நடுத்தர வர்க்கக் குடும்பங்களிலுள்ள குழந்தைகளுக்கு 12.7 சதவீதம்; பணக்காரக் குடும்பங்களிலுள்ள குழந்தைகளுக்கு 5.4 சதவீதம் குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றுள்ளன. 20-24 வயதுக்குட்பட்ட, 18 வயதுக்கு முன் திருமணமானவர்களில், 41.5 சதவீதம் ஏழைக் குடும்பம்; 28.6 சதவீதம் நடுத்தர வர்க்கம் மற்றும் 13.4 சதவீதம் பணக்காரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.

வயது அடுத்த முக்கியக் காரணியாக இருக்கிறது. பதினைந்து வயதாக இருப்பவர்கள் மத்தியில் 2.7 சதவீதம்; 16 வயது மத்தியில் 5.6 சதவீதம்; 17 வயதில் 11 சதவீதம்; 18 வயதில் 19.8 சதவீதம்; மற்றும் 19 வயதினர் மத்தியில் 20.5 சதவீதத் திருமணங்கள் நடைபெறுகின்றன. பழங்குடியினர் மத்தியில் 15 சதவீதம் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மத்தியில் 13 சதவீதம் குழந்தைத் திருமணங்கள் நடைபெறுகின்றன. 13 மாநிலங்களில் 80 சதவீதமும்; 20 மாநிலங்களில் 70 சதவீதத் திருமணங்கள் கிராமப்புறங்களில் நடைபெற்றுள்ளன. இது கிராமப்புறங்களில் திருமணங்கள் அதிகம் நடப்பதைக் காட்டுகிறது

காரணங்கள்

குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. பல நூற்றாண்டுகளாகக் குழந்தைத் திருமணம் என்பது பாலினச் சமத்துவமின்மை, பாரம்பரியம் மற்றும் வறுமையில் ஆழமாக வேரூன்றியுள்ளது. இது ஒரு சிக்கலான சமூகப் பிரச்சினை. பொதுவாக பெண் குழந்தைகள் சுமையாக / பாரமாகக் கருதப்படுகிறார்கள்; பாரம்பரியமாக, பெண் குழந்தைகளை விரைவாகத் திருமணம் செய்து கொடுத்து விட வேண்டும் என்ற எண்ணம் பெற்றோர் மத்தியில் உள்ளது; குறைவான வயதில் திருமணம் செய்தால் குறைவான வரதட்சணை கொடுத்தால் போதும் என்ற எண்ணம் பெற்றோர் மத்தியில் நிலவுகிறது. ஆனால், வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும், வரதட்சணை தடுப்புச் சட்டம் 1961-இன் படிக் குற்றம் என்பதை மறந்து விடுகிறார்கள்; பெற்றோர், அவர்கள் நினைக்கும் வரனுக்குத் திருமணம் செய்ய, குழந்தைத் திருமணத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறார்கள்.

பெண் குழந்தைகள் பெற்றோரைச் சார்ந்து இருப்பதால் அவர்களுக்கு வேறு வழியில்லை; பேச்சை மீற மாட்டார்கள்; குழந்தைத் திருமணத்தின் மூலம் பெண் குழந்தைகளுக்கு சமூக, பொருளாதார ரீதியாக மற்றும் பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்ற பெற்றோர் நம்புவது; மேலும், இனக் கவர்ச்சியால் வழி தவறிச் செல்வார்கள் என்ற பய உணர்வு; தாயோ அல்லது தந்தையோ இல்லாத பெண் குழந்தைகளைப் பாரமரிப்பதிலுள்ள சிரமங்கள்; குழந்தைத் திருமணத்தின் பின்விளைவுகளைப் பற்றிய விழிப்புணர்வின்மை; ஜோதிடம், ஜாதகம் போன்றவற்றிலுள்ள நம்பிக்கை; சொந்தம் / சொத்து விட்டுப் போகக் கூடாது என்ற எண்ணம்; கிராமப்புறங்கள் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் இளம் பெண்களுக்கு கல்வி மற்றும் வளர்ச்சிக்கு வாய்ப்புகள் உள்ளூரில் இல்லாதது; அதிகம் படித்தால் அதற்கேற்ற மாப்பிள்ளைத் தேடமுடியாது என்ற எண்ணம்; பெண்களின் சார்புத்தன்மை மற்றும் முடிவெடுத்தலில் பங்கின்மை; உறவினர்கள் / நண்பர்களின் வற்புறுத்தல்கள்; நல்ல வரன் - நல்ல குணமுள்ள / வேலையிலுள்ள மாப்பிள்ளை; குறைந்து வரும் பாலின விகிதம்; சட்டங்கள் போதிய அளவில் அமலாக்கம் செய்யப்படாதது போன்ற பல காரணங்கள் இருக்கின்றன.

மலைக் கிராமங்களில் வசிக்கும் குடும்பங்கள்; குறிப்பாக பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர், படிப்பறிவு இல்லாத பெற்றோர்கள், வேலைக்காக இடம் பெயரும் குடும்பங்கள், ஒற்றைப் பெற்றோர் உள்ள குடும்பங்கள், அதிகக் குழந்தைகள் குறிப்பாக பெண் குழந்தைகள் அதிகம் உள்ள குடும்பங்கள், பாதுகாவலரிடம் வளரும் குழந்தைகள், அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் போன்ற குடும்பங்களில் இருக்கும் குழந்தைகளுக்கு குழந்தைத் திருமணம் நடக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

குழந்தைத் திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள்

பெண் குழந்தைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். பெண் குழந்தைகள் மட்டுமன்றி, பிறக்கும் குழந்தைகள் மற்றும் குடும்பங்களும் அதிகம் பாதிக்கப்படுகின்றன. உடல்நலம், ஊட்டச் சத்து, கல்வி, குடும்ப வன்முறை, தவறாக நடத்தப்படுதல் மற்றும் சுரண்டலிலிருந்து பாதுகாக்கப்படுதல் போன்ற குழந்தைகளின் அனைத்து உரிமைகளும், குழந்தைத் திருமணத்தின் மூலம் அப்பட்டமாக மீறப்படுகின்றது; கர்ப்பப்பை முழு வளர்ச்சி அடையாததால் அடிக்கடி கருச்சிதைவு ஏற்படும்; அடிக்கடி கருவுற வாய்ப்பு அதிகம்; இது உடல் நலத்தைப் பாதிக்கும்; உடல் பலவீனமடைவதால் மருத்துவச் செலவு அதிகமாகி வறுமைக்கு வழிவகுக்கும்; ரத்த சோகை மற்றும் ஊட்டச் சத்துக் குறைபாடு ஏற்படும்.

பிரசவத்தின் போது சிக்கலான பிரசவம், குழந்தை இறந்து பிறப்பது, சிசு மரணம் மற்றும் தாய் மரணம் ஏற்பட வாய்ப்பு மிகவும் அதிகம்; எடை குறைவான குழந்தைகள் மற்றும் குறைபாடுள்ள குழந்தைகள் பிறத்தல்; மனவளர்ச்சி மற்றும் பாலியல் முதிர்ச்சி முழுமையடையும் முன் திருமணம் செய்வதால், கணவர் மற்றும் குடும்பத்தாருடன் அனுசரித்துச் செல்வதில் பிரச்சினைகள் அதிகமாகும்; இது குடும்பத்தில் விரிசலை உண்டாக்கி இரண்டாவது திருமணத்திற்கு வழிவகுக்கும். இதனால் அவர்களின் குழந்தைகளும் பாதிக்கப்படுவார்கள்; குடும்பப் பிரச்சினையில் தற்கொலை, கொலை நிகழ்வதால் பெண்கள் இளம் வயதில் விதவையாகவும், கணவனால் கைவிடப்பட்டவர்களாகவும், குழந்தைகள் ஆதரவற்ற அனாதைகளாகவும் ஆகிறார்கள். இது குழந்தைத் தொழிலாளர் முறைக்கு வழிவகிக்கிறது; கல்வி மறுக்கப்படுவதுடன், அவர்களின் தன்னம்பிக்கை குறையும். குழந்தைகளுக்குச் சரியான வழிகாட்டுதல் செய்ய முடியாது போன்ற எண்ணற்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

குழந்தைத் திருமணத்தைத் தடுக்கத் தற்போதுள்ள சட்டங்கள்

குழந்தைத் திருமணத்தைத் தடுக்க, “குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் 2006-ல் இயற்றப்பட்டது இச்சட்டத்தின்படி. 18 வயதுக்குட்பட்ட பெண் மற்றும் 21 வயதுக்குட்பட்ட ஆண், குழந்தைகளாகக் கருதப்படுவார்கள். இவர்களுக்குத் திருமணம் செய்தால், அது சட்டப்படி குற்றம்; இத்திருமணத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் 2 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்க இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது. இச்சட்டத்தில் பல்வேறு இடைவெளிகள் உள்ளன. இந்தச் சட்டம் மூன்று வகையான திருமணங்களைக் குறிக்கிறது (voidable, void and void ab initio).

இச்சட்டத்தின் பிரிவு 3-ன்படி, இந்த சட்டம் இயற்றப்படும் முன்போ அல்லது பின்போ, 18 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு திருமணம் ஆகியிருந்தால், திருமணத்தின் போது குழந்தையாக இருப்பவர் விருப்பத்தின் பேரில் அவர் சேர்ந்து வாழ விரும்பினால் தவிர்க்க முடியாது (Voidable). இல்லையென்றால் பதினெட்டு வயது நிறைவடைந்து 2 ஆண்டுகளுக்குள் அக்குழந்தை மாவட்ட நீதிமன்றத்தில் மனு செய்து திருமணத்தைச் செல்லாது என்று அறிவிக்கச் செய்யலாம். பிரிவு 12-ன்படி, குழந்தைத் திருமணத்திற்காக சட்டபூர்வமான பாதுகாவலரிடம் இருந்து கவர்ந்து செல்லப்பட்டால் அல்லது வஞ்சகமாக ஏமாற்றி, கட்டாயப்படுத்தித் திருமணம் செய்தால் அல்லது திருமணத்திற்காக விற்கப்பட்டால் அல்லது திருமணம் என்ற பெயரில் கடத்தப்படுதல் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டால் அந்தத் திருமணம் செல்லாது. (Void). பிரிவு 14- ன்படி, குழந்தைத் திருமணத்திற்கு நீதிமன்றத்தில் பிரிவு 13- ன்படி இடைக்கால அல்லது இறுதித் தடை பெறப்பட்டு, அந்தத் தடைக்கு மாறாக குழந்தைத் திருமணம் நடைபெற்றால் அத்திருமணம் செல்லாது. (Void ab initio).

இச்சட்டத்தின் கீழ் 2016 ஆம் ஆண்டு 326 வழக்குகளும் (தமிழ்நாடு - 55 , கர்நாடகா - 51, மேற்கு வங்கம் - 41 , அசாம் - 23, ஆந்திரா மற்றும் தெலங்கானா தலா - 19 உட்பட), 2017 ஆம் ஆண்டு 395 வழக்குகளும் ( கர்நாடகா - 65, அசாம் - 58 தமிழ்நாடு - 55 தெலங்கானா - 25 மேற்கு வங்கம் - 49 உட்பட), 2018 ஆம் ஆண்டு 501 ( அசாம் - 88, கர்நாடகா - 73 மேற்கு வங்கம் - 70 தமிழ்நாடு - 67 பிஹார் - 35 உட்பட) வழக்குகளும் பதிவாகியுள்ளன. (ஆதாரம்: தேசியக் குற்ற ஆவணக் காப்பகம்).

நடைபெறும் குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கையை பதிவான வழக்குகளுடன் ஒப்பிட்டால் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் நன்றாகத் தெரிகிறது. பெரும்பாலான வழக்குகள் பதியப்படாமல் இருக்கின்றன. ஆகவே, இந்தச் சட்டம் முழுமையாக குழந்தைத் திருமணத்தைத் தடை செய்யவில்லை.

மேலும், கடந்த 2012 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட, குழந்தைகளைப் பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டத்தில் (Protection of Children from Sexual Offences Act – POCSO Act 2012), 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன், அவர்கள் சம்மதத்துடன் உறவு கொண்டாலும், அது குற்றம் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 2017 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பைக் கொடுத்தது. இத்தீர்ப்பின்படி இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 375- ன்படி, 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன், மனைவியாக இருந்தாலும் பாலுறவு கொள்வது குற்றமென்று கூறியுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 375-ல் கொடுக்கப்பட்ட விதிவிலக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்டங்களுக்கு ஏற்ப குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படவில்லை.

தீர்வுகள்

முதலாவதாக, குழந்தைகளுக்குப் பன்னிரண்டாம் வகுப்பு வரை இலவசக் கட்டாயக் கல்வியைக் கொண்டு வர வேண்டும். பள்ளிகளில், குழந்தைத் திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கிச் சொல்ல வேண்டும். குழந்தைகளுக்கு வளரிளம் பருவத்தில் ஏற்படும் மாற்றம், வாழ்க்கைத் திறன் பயிற்சி கொடுத்து இலக்குகளை நிர்ணயிக்க ஊக்குவிக்க வேண்டும். பெரும்பாலான குழந்தைகளுக்குப் படித்துவிட்டு என்ன செய்வது என்ற புரிதல் இல்லை. இலக்குகளை நோக்கிப் பயணப்படும் குழந்தைகளுக்கு இளநிலை காதல் வருவதைத் தடுக்க முடியும். மேலும், பள்ளிகள் குழந்தை நேயமாக இருக்க வேண்டியது அவசியம். ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு ஆலோசகரை (counsellor) பணி அமர்த்தி, அவர்கள் மூலம் குழந்தைகளுக்குச் சரியான வழிகாட்டுதல் செய்ய வேண்டும்.

இரண்டாவதாக, பெண்களை இரண்டாம் தரக் குடிமக்களாகவும், பாரமாகவும் நினைக்கும் போக்கு இன்றும் தொடர்கிறது. சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் பயிற்சிகள் கொடுத்து உணர் திறனை மேம்படுத்தி, குழந்தைத் திருமணம் இல்லாக் கிராமங்களை உருவாக்க வேண்டும். பஞ்சாயத்து அமைப்புகளும், சமுதாயம் சார்ந்த அமைப்புகளும், கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழு போன்றவற்றை வலுப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திக் கண்காணிக்க வேண்டும். புள்ளி விவரங்கள்படி குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடக்கும் மாநிலங்களில், மாவட்டங்கள் மற்றும் ஒன்றியங்களைக் கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டும்.

மூன்றாவதாக, போக்சோ சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளபடி, குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்தில் உரிய மாற்றங்களைக் கொண்டு வந்து, 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குத் திருமணம் செய்வது பாலியல் பலாத்காரம் என்று கடுமையான தண்டனையும் கொடுக்க வழிவகை செய்ய வேண்டும். சட்ட அமலாக்கத்தை மேம்படுத்த வேண்டும். காவல்துறைக்குக் குழந்தைத் திருமணங்களைத் தடுப்பதில் முக்கியப் பங்கு இருக்கிறது. குழந்தைத் திருமண வழக்குகள் மீது கடுமையான நடவடிக்கைகள் (பாலியல் பலாத்காரம் உள்பட) எடுத்தால் விழிப்புணர்வு அதிகமாகும். குறைந்தபட்சம் வழக்குகளுக்குப் பயந்துகொண்டு திருமணம் செய்வதைத் தவிர்ப்பார்கள்.

நான்காவதாக, 2006 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம், சீமா vs அஸ்வனி குமார் வழக்கில், அனைத்து திருமணங்களையும் கண்டிப்பாகப் பதிய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இதன்படி அனைத்துத் திருமணங்களையும் பதிய வயது சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். அப்பொழுது குழந்தைத் திருமணங்களைக் கண்காணிக்க இயலும். ஆகவே, திருமணப் பதிவைக் கட்டாயமாக்க வேண்டும்.

ஐந்தாவதாக, 2005 ஆம் ஆண்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தேசிய அளவிலான ஒரு செயல்திட்டத்தைக் குழந்தைகளுக்காக உருவாக்கியது. இந்தத் திட்டத்தின்படி 2010 ஆம் ஆண்டுக்குள் குழந்தைத் திருமணங்களை அறவே ஒழிக்க வேண்டும் என்று உறுதி எடுக்கப்பட்டது. ஆனால், முறையான செயல்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. மீண்டும் 2016 ஆம் ஆண்டு தேசிய அளவிலான ஒரு செயல்திட்டம் குழந்தைத் திருமணங்களை, 2021 ஆம் ஆண்டுக்குள் தடுக்க உறுதி பூண்டுள்ளது. தற்போதுள்ள சூழலில் இது சாத்தியமில்லை என்று அனைவருக்கும் தெரியும். ஆகவே 2025 ஆம் ஆண்டுக்குள் முழுவதுமாக குழந்தைத் திருமணங்களை தடுக்க முன்னெடுப்புகளை உடனடியாகச் செய்ய வேண்டும். இந்த தேசிய அளவிலான திட்டத்தை மறுபரிசீலனை செய்து உடனடியாக நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும்.

இறுதியாக, குழந்தைத் திருமணம் என்பது ஒரு சமூகப் பொருளாதார பிரச்சினை. சட்டத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், அது முழுமையான தீர்வைத் தராது. குடும்பத்தின் பொருளாதார நிலை மேம்பட்டாலே பெரும்பாலான திருமணங்கள் நடப்பது தடுக்கப்படும். ஆகவே. அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து, மாவட்ட அளவிலான ஒரு செயல் திட்டத்தை உருவாக்கி, நலிவடைந்த மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களை இனம் கண்டு, அவர்களுடைய பிழைப்பாதாரங்களை மேம்படுத்தி, அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுடன் இணைத்து பொருளாதார நிலையை மேம்படுத்த வேண்டும்.

ஊரடங்கு தொடங்கிய பின்னர், மூன்று மாதங்களில் சைல்டு லைன் அமைப்பிற்கு, குழந்தைத் திருமணத்தைச் சார்ந்து 5,584 அழைப்புகள் வந்துள்ளன. கர்நாடகா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் இருந்து அதிக அழைப்புகள் வந்துள்ளன; இதில் 97 சதவீத தொலைபேசி அழைப்புகள் பெண் குழந்தைகள் சார்ந்தவை; 9 சதவீதம் ஆண் குழந்தைகள்; பெண் குழந்தைகளில் 30 சதவீதம், 11 வயது முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள்; ஆண் குழந்தைகளில் 19 சதவீதம் 15 வயதுக்குட்பட்டவர்கள்; ஆனால் பல குழந்தைத் திருமணங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன என்பது நிதர்சனமான உண்மை. ஆகவே இதைத் தடுக்க வேண்டியது அவசியம்

கல்வித் துறை, சுகாதாரத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, விவசாயத்துறை, காவல்துறை, சமூகநலத்துறை, மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சைல்டு லைன், குழந்தைகள் நலக் குழுமம், தொண்டு நிறுவனங்கள் போன்ற அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் குழந்தைத் திருமணத்தை முற்றிலும் ஒழிப்பது சாத்தியமே. கோவிட்-19 விடக் கொடியது குழந்தைத் திருமணம் என்பதை உணர்ந்து அரசு செயல்பட வேண்டும்.

கட்டுரையாளர்: முனைவர் ப. பாலமுருகன்,
மனித உரிமைச் செயற்பாட்டாளர்,
தொடர்புக்கு: balaviji2003@gmail.com.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x