Published : 24 Aug 2020 08:47 AM
Last Updated : 24 Aug 2020 08:47 AM

குவாட்: இரண்டு கடல்கள் நான்கு நாடுகள்

சுஹாசினி ஹைதர்

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையில் பிலிப்பைன்ஸ் கடலில் முத்தரப்பு ராணுவப் பயிற்சியும், இந்தியப் பெருங்கடலில் இந்திய-அமெரிக்கக் கடற்படைப் பயிற்சியும் மேற்கொள்ளப்பட்டதற்கு சில முக்கியத்துவங்கள் உண்டு. இந்தச் செயல்பாடுகள் இந்த நான்கு நாடுகளின் கப்பற்படைகளுக்கு இடையே கூடிய சீக்கிரம் நான்கு தரப்புப் பயிற்சிகள் மேற்கொள்ளப்படும் என்ற சூசகத்துக்கு மேலும் வலுவூட்டுகின்றன.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் மேற்கொள்ளும் வருடாந்திர மலபார் பயிற்சிகளில் பங்குகொள்ள வேண்டும் என்ற ஆஸ்திரேலியாவின் வேண்டுகோள் நான்கு ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது; இதுகுறித்து என்ன முடிவு எடுக்கப்படும் என்பது குறித்து அனைவரின் பார்வையும் புது டெல்லியின் மீதே உள்ளது. பசிபிக் பிராந்தியம் மீதான சீனாவின் உரிமைகோரலுக்கும், இந்தியப் பெருங்கடலில் அது நிகழ்த்தும் ஊடுருவலுக்கும் எதிரானதாகப் பார்க்கப்படும் கூட்டணி இது. இந்தக் கூட்டணி ராணுவமயமாக்கப்படுவதற்கு சீனா கடும் எதிர்ப்பைத் தெரிவித்துவருவதை வைத்துப் பார்க்கும்போது, முடிவெடுப்பது இந்தியாவுக்கு எளிதாக இருக்கவில்லை. கூட்டணி என்று புரிந்துகொள்ளப்படுவதற்கு வாய்ப்பிருக்கும் எந்த ஒரு செயல்பாட்டிலும் சேர்ந்துகொள்வதில் இந்தியா எச்சரிக்கையாகவே இருக்கிறது. இதைத்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இந்தியா ஒருபோதும் அங்கமாக இருக்காது என்று தெரிவித்தார்.

சீனா எனும் காரணி

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை ஒரு ‘புவியியல்ரீதியிலான கருத்துரு’வாகவே இந்தியா பார்க்கிறது என்றும், ஒரு ‘உத்தியாகவோ, குறிப்பிட்ட சில உறுப்பினர்களின் மன்றமாகவோ’ பார்க்கவில்லை என்றும் 2018-ல் ஷாங்கிரி-லா பேச்சுவார்த்தையின்போது பிரதமர் மோடி கூறினார். நான்கு நாடுகள் தரப்பில் (குவாட்) இந்தியா மட்டும்தான் சீனாவோடு எல்லையைப் பகிர்ந்துகொள்கிறது. ஆகவே, நான்கு நாடுகள் தரப்பு ராணுவமயமாவது இந்தியா அந்த அச்சுறுத்தலை எதிர்கொள்வதில் உதவாது. ராணுவக் கூட்டணியால் பிணைக்கப்பட்டிருக்கும் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைப் போல் இல்லாமல் இந்தியா பிற உத்திரீதியிலான அமைப்புகளில் உறுப்பினராக இருக்கிறது; சீனா, ரஷ்யா, மத்திய ஆசிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு, பிரிக்ஸ், ரிக் போன்றவற்றை எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம். இவையெல்லாம் குவாட் கூட்டணியோடு முரண்படக் கூடியவையாகும்.

அப்போதும்கூட, தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு, ‘நடைமுறைக் கட்டுப்பாட்டு எல்லைக்கோட்’டில் அது நிகழ்த்திய மீறல்கள், உயிர்பறிக்கும் மோதல்கள் போன்றவை இந்தியாவை ஒரு முடிவெடுக்க வைத்துவிடும் என்று பலரும் நம்புகிறார்கள். இதன் மூலம் நான்கு தரப்புப் பாதுகாப்புக் குழு, சுருக்கமாக குவாட், ராணுவக் கூட்டாக ஆவதற்கும் அதனால் பிராந்திய, உலகளாவிய பாதுகாப்புக்கு மிக மோசமான பாதிப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

தற்போது கடினமான, மெதுவான விவாதங்களில் ஈடுபடும் குவாட் சட்டென்று ஒரு தருணத்தில் பிறந்தது என்பது முரணான ஒன்றுதான். 2004 சுனாமியைத் தொடர்ந்த நெருக்கடியின்போது உருவானது அந்தக் குழு. அந்தப் பேரழிவு நடந்து ஒருசில நாட்களுக்குள் இந்தியா தனது உத்வேகமிக்கக் கப்பற்படையைச் செயலில் இறக்கியது. இதன் மூலம் தன்னுடைய சொந்தப் பாதுகாப்பு மட்டுமல்லாமல் இலங்கை, மாலத்தீவுகள், இந்தோனேஷியா போன்ற கடல் தாண்டிய அண்டை நாடுகளுக்கும் தன்னால் உதவ முடியும் என்பதை உலகுக்கு நிரூபித்தது.

ஒட்டுமொத்தமாக, 32 இந்தியக் கப்பல்களும் 5,500 துருப்புகளும் இந்தியாவின் சர்வதேச முயற்சிகளில் ஈடுபடுத்தப்பட்டன. மனிதநேய மற்றும் பேரிடர் நிவாரண முயற்சி அடுத்த சில வாரங்கள் ஒருங்கிணைக்கப்பட்டன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் சேர்ந்துகொண்டன. அப்போதைய வெளியுறவுச் செயலரான ஷ்யாம் சரண் மற்ற நாடுகளின் வெளியுறவுச் செயலர்களுடன் அடுத்து என்ன தேவை என்பது தொடர்பில் தினமும் பேசினார். இறுதியாக, ‘குவாட்’ முயற்சி ஐ.நா.விடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், இந்தோ-பசிபிக் பிராந்தியம் என்பது பெரிய கடல்சார் உத்திரீதியிலான குழு என்ற சிந்தனையும், அதற்கான திறன்மிக்கக் கருவியாக குவாடும் அந்த நான்கு நாடுகளின் மனதிலும் விதைக்கப்பட்டன.

இரண்டு கடல்களின் சங்கமம்

2007-ல் வருடாந்திர இந்தியா-அமெரிக்கா ‘மலபார்’ பயிற்சிகள் இந்தியப் பெருங்கடலிலும் பசிபிக் பெருங்கடலிலும் நடைபெற்றன. முதலில் ஒகினவா கரைக்கு அருகில் உள்ள கடலிலும், சில மாதங்கள் கழித்து விசாகப்பட்டினம் கரைக்கு அருகிலும் நடைபெற்றன. இந்தப் பயிற்சிகளில் ஜப்பான், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளும் உள்ளடக்கப்பட்டன. ‘இரண்டு கடல்களின் சங்கமம்’ என்று ஜப்பானிய பிரதமர் அபே குறிப்பிட்ட அந்தப் பயிற்சிகளும் உத்திரீதியிலான ஒருங்கிணைப்பும் பெய்ஜிங்கையும் மாஸ்கோவையும் பதற்றத்துக்குள்ளாக்கின. ‘ஆசிய நேட்டோ’வை உருவாக்குவதற்கான முயற்சி என்று அந்த நாடுகள் இதைக் குறிப்பிட்டன.

அந்தச் சமயத்தில், சீனக் கப்பற்படையில் பெரும் நவீனமயமாக்கல் நடவடிக்கைகள் தொடங்கப்படவில்லை (அதன் முதல் விமானந்தாங்கிக் கப்பலான லயோனிங் 2012-ல்தான் வாங்கப்பட்டது), குவாட் நாடுகளின் முயற்சிதான் இந்த அவசரத்துக்குக் காரணம். அந்த நேரத்தில் குவாட் நாடுகள் மீதான சீனாவின் அரசியல் நடவடிக்கைகளுக்குப் பலன் கிடைத்தது. பலரும் நம்புவதுபோல அல்லாமல், 2008-ல் குவாட் பயிற்சிகளை ரத்துசெய்தது இந்தியா அல்ல; அமெரிக்காதான் வடகொரியா மீதான ஆறு தரப்பு பேச்சுவார்த்தைகளில் சீனாவின் ஆதரவைப் பெறுவதற்காக அப்படிச் செய்தது. இதனால், குவாட் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்புக்கான உத்வேகம் நமத்துப்போனது. கெவின் ரட் தலைமையிலான அப்போதைய ஆஸ்திரேலிய அரசு இந்தப் பயிற்சிகளிலிருந்து விலகிக்கொண்டது. அடுத்த பத்தாண்டுகளுக்கு குவாட் கிடப்பில் போடப்பட்டது.

2017-ல் குவாட் திரும்பி வந்தது; குவாட் 2.0 என்ற பெயருடன். சீனாவிடமிருந்து வந்த சவாலைப் பற்றிய அமெரிக்காவின் மதிப்பீட்டின் மீது செய்யப்பட்ட மீள்பார்வையும், இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் செய்த மறுமதிப்பீடுகளும் அதே சமயத்தில் தற்செயலாக நிகழ்ந்தன. 2017 நவம்பரில், இந்திய ராணுவத்துக்கும் சீன ராணுவத்துக்கும் இடையிலான மோதலுக்குச் சில மாதங்களுக்குள், நான்கு நாடுகளின் அதிகாரிகளும் ‘இந்தியா-ஆஸ்திரேலியா-ஜப்பான்-அமெரிக்கா’ பேச்சுவார்த்தைக்காக மணிலாவில் கூடின. இந்தப் புதிய குவாடின் பெயர் கடுமை குறைந்ததாக இருந்தது. இது ஒரு குழு திரட்டல் என்ற எண்ணம் யாருக்கும் வரக் கூடாது என்பதற்காக அப்படி. அவர்கள் கூட்டு அறிக்கையைக்கூட வெளியிடவில்லை. உண்மையில், இந்த அணிக்கு உள்ளே கருத்து வேறுபாடுகள் தீவிரமாகின. ‘இந்தோ-பசிபிக்’ பிராந்தியம் என்பதை ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்காவின் மேற்குக் கடற்கரை வரை இந்தியா வரையறுத்தது என்றால் அமெரிக்கா அந்த வரையறையை இந்தியக் கடற்கரை அளவில் குறுக்கியது (2020-ல் இந்திய வரையறையுடன் அமெரிக்கா ஒத்துப்போனது).

சீனாவுக்கு குவாடின் சவால்கள்

தொடர்ந்த சந்திப்புகள் அந்தக் குழுவினரிடையே இருந்த பல்வேறு இடைவெளிகளை மூடியது. அதிலிருந்து குவாட் குழு ஆண்டுக்கு இரண்டு முறை கூடியது. ‘தொடர்புத்தன்மை, வளம்குன்றா வளர்ச்சி, பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள், ஆயுதக் குறைப்பு, கடல் பரப்புப் பாதுகாப்பு, இணையவெளிப் பாதுகாப்பு போன்றவற்றைப் பற்றியும், நாடுகளுக்கிடையே ஒன்றுக்கொன்று தொடர்பு அதிகரித்துவரும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, நிலைத்தன்மை, வளம் ஆகியவற்றை மேம்படுத்தல் ஆகியவற்றைப் பற்றியும்’ விவாதித்தார்கள். தொடர்புத்தன்மை மீதான முக்கியத்துவத்தால் சீனாவுக்கு குவாட் வேறு களத்தில் சவால்விட முடிந்தது: பல நாடுகளுக்கும் கடனுதவியும் அடிப்படைக் கட்டமைப்புகளில் உதவியும் வழங்கிய சீனாவின் பி.ஆர்.ஐ.-க்கு மாற்றாக நிதியுதவி வழங்கும் ஒருங்கிணைந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இறுதியாக, குவாடில் அடுத்த நடவடிக்கையைப் பற்றிய கேள்வி – அதாவது, அடுத்த மலபார் பயிற்சிகளுக்கு ஆஸ்திரேலியாவை இந்தியா அழைக்குமா என்பது – இந்தியா தனது சொந்த ராணுவரீதியான உத்தியை எப்படி வளர்த்தெடுக்கப்போகிறது என்பதைவிடக் குறைந்த முக்கியத்துவம் கொண்டதாகத்தான் இருக்கும். குறிப்பாக, சீனாவுடன் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் மோதலை வைத்துப் பார்க்கும்போது. சீனா விடுக்கும் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் முயற்சியில் அதன் நட்பு நாடான ரஷ்யாவையும் ஈடுபடுத்துவதன் மூலம், தனது பழைய அணிசேராக் கொள்கைக்கு இந்தியா திரும்புமா? அல்லது இடைப்பட்ட சக்திகளான ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் பங்குதாரர்களான பிரேசில், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா போன்றவற்றைத் தனது இந்தோ-பசிபிக் உத்திக்குள் கொண்டுவருவதன் மூலம், ‘பல்வேறு அணிகளில் சேருதல்’ உத்தியை இந்தியா பின்பற்றுமா? அல்லது சீனாவின் எதிரிகளுடன் நெருக்கமான உறவை வளர்த்துக்கொள்வதில் இந்தியாவின் பாதை இருக்குமா, அல்லது அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே உருவாகிவரும் புதிய பனிப்போரில் தனக்கென்று ஒரு மூலையை இந்தியா தேர்ந்தெடுத்துக்கொள்ளுமா? குவாடில் இந்தியாவின் நகர்வுகள் உன்னிப்பாகக் கவனிக்கப்படும். ஏனெனில், தனது உத்திரீதியிலான எதிர்காலத்தை நோக்கிய பாதையில் அந்த நகர்வுகள் மேலும் பொருள் பொதிந்தவையாக இருக்கின்றன.

© தி இந்து, தமிழில்: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x