Published : 19 Aug 2020 07:59 AM
Last Updated : 19 Aug 2020 07:59 AM

காங்கிரஸுக்கு ராஜஸ்தான் சொல்லும் பாடம் என்ன?

ராஜஸ்தானில் தன் அரசின் மீதான நம்பிக்கையை நிரூபித்து, ஆட்சியை அசோக் கெலாட் உறுதிப்படுத்திக்கொண்டிருப்பதும், காங்கிரஸ் கட்சிக்குள் நிலவிய குழப்பங்கள் முடிவு நோக்கி நகரத் தொடங்கியிருப்பதும் ஒரே விஷயத்தைத்தான் அக்கட்சிக்குச் சொல்கின்றன; பாஜகவின் வலுவைக் காட்டிலும் சொந்த பலவீனங்களே காங்கிரஸைச் சீரழிக்கின்றன என்பதே அது. முதல்வர் அசோக் கெலாட் மீது அதிருப்தி கொண்டிருந்த சச்சின் பைலட் எப்போது ராகுல் காந்தியைச் சந்தித்தாரோ அப்போதே சூழல்கள் யாவும் மாறலாயின. கேள்வி என்னவென்றால், இப்படி ஒரு சந்திப்புக்கு இவ்வளவு தாமதம் ஏன்? மாநிலத் தலைவர்களுக்கும் அகில இந்தியத் தலைமைக்கும் இடையே ஏன் இவ்வளவு இடைவெளியும், கீழ்-மேல் ஏற்றத்தாழ்வும்?

கிட்டத்தட்ட மத்திய பிரதேசத்தைப் போலவே ராஜஸ்தானிலும் ஆட்சியை பாஜகவிடம் காங்கிரஸ் பறிகொடுப்பதற்கான எல்லா சாத்தியங்களும் வெளிப்பட்டன; ஜோதிராதித்ய சிந்தியாவைப் போல சச்சின் பைலட்டும் பாஜக நோக்கி இழுக்கப்படும் அறிகுறிகள் தென்பட்டன; அப்படியெல்லாம் நடக்காமல் காங்கிரஸுக்குள்ளேயே நிலைமை சுமுகமாக முடிக்கப்பட ராஜஸ்தான் பாஜகவில் சச்சின் பைலட் ஒருமித்த வகையில் ரசிக்கப்படவில்லை என்பதும் ஒரு காரணம் என்பதை இங்கே சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. ராஜஸ்தான் பாஜகவுக்குள்ளான கோஷ்டிப் பூசல் மறைமுகமாக காங்கிரஸ் கோஷ்டிப் பூசலுக்கு உதவியாக அமைந்தது. ஆக, சச்சின் பைலட் கட்சித் தலைமையுடன் பேச வேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கியது. ஒருவேளை சூழல் வேறாக இருந்தால் என்னவாகி இருக்கும்? காங்கிரஸ் ஆளும் ஏனைய மாநிலங்களிலும் இப்படியான மோதல் போக்கு நிலவுகிறது. பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங், முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் பிரதாப் சிங் பாஜ்வா இருவரிடையிலான பரஸ்பரக் குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் தலைமை கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

மணிப்பூரில் காங்கிரஸ் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை காங்கிரஸைச் சேர்ந்த எம்எல்ஏக்களே தோற்கடித்திருக்கிறார்கள். நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத ஆறு காங்கிரஸ் எம்எல்ஏக்கள், அடுத்த சில மணி நேரங்களில் தங்களது பதவியிலிருந்தும் காங்கிரஸிலிருந்தும் விலகியிருக்கிறார்கள். தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையைச் சூழ்ந்திருக்கும் குழப்ப மேகங்கள்தான் கட்சி கீழே இவ்வளவு உதிர்படக் காரணம். இந்தக் குழப்பத்துக்கு காங்கிரஸ் முதலில் முற்றுப்புள்ளி வைத்து, புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அடுத்து, உள்கட்சிக் கட்டமைப்பை மேலும் ஜனநாயகப்படுத்தி, மாநிலத் தலைவர்களின் அதிகாரத்தை மேலும் வலுவாக்க வேண்டும். மாநிலத் தலைவர்களுக்கும் அகில இந்தியத் தலைமைக்கும் இடையிலான இடைவெளி முற்றிலுமாக அடைக்கப்பட வேண்டும்.

நாடு வலுவான எதிர்க்கட்சியை எதிர்பார்க்கிறது. தன் பலவீனங்களைக் களைவதன் வழியாக காங்கிரஸ் அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்ய முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x