Published : 17 Aug 2020 07:57 AM
Last Updated : 17 Aug 2020 07:57 AM

ஓங்கட்டும் ஊடகச் சுதந்திரம்

ஹாங்காங்கின் ஜனநாயக உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல்கொடுத்துவரும் ‘ஆப்பிள் டெய்லி’ நாளிதழின் நிறுவனர் ஜிம்மி லாயும் அவரது சகாக்களும் சீனாவின் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. ‘ஆப்பிள் டெய்லி’ அலுவலகத்தையும் செய்தி அறையையும் நூற்றுக்கணக்கான காவல் துறையினர் சோதனையிட்டதோடு, அதே நாளில் ஜிம்மி லாய், அவருடைய அலுவலக நிர்வாகி, பத்திரிகையாளர்கள், அவரது இரண்டு மகன்கள், ஹாங்காங் விடுதலைச் செயல்பாட்டாளர்கள் எனப் பத்து பேரைக் கைதுசெய்திருக்கிறார்கள். கடந்த ஜூன் மாதத்திலிருந்து சீனாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் தேசியப் பாதுகாப்புச் சட்டம், அந்நியர்களுடன் சேர்ந்து நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்க முயல்பவர்களைப் பத்தாண்டுகள் முதல் ஆயுட்காலம் வரையிலும் சிறையில் அடைக்க வகைசெய்கிறது. ஹாங்காங்கில் தொடர்ந்து எழுப்பப்படும் தன்னாட்சி அதிகாரத்துக்கான குரல்களை அடக்கி ஒடுக்க வேண்டும் என்பதே இந்தச் சட்டத்தின் பிரதான நோக்கம்.

ஜிம்மி லாயும் ஹாங்காங் தன்னாட்சிக்குப் போராடும் விடுதலைச் செயல்பாட்டாளர்களும் அமெரிக்க ஆதரவுடன் கூட்டுச்சதியில் ஈடுபட்டதாகத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கைதானவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டில் ஹாங்காங்கில் நடந்த போராட்டங்களுக்கு ஆதரவளித்ததாக ஏற்கெனவே ஜிம்மி லாய் மீது வழக்குகள் இருக்கின்றன. அதன் தொடர்ச்சிதான் இந்தக் கைது நடவடிக்கையும். தன்னுடைய கைது வருத்தமளிக்கவில்லை என்று கூறியிருக்கும் ஜிம்மி லாய், இனிமேல் போராட்டத்தில் ஈடுபடும் இளைய தலைமுறையினர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். ஹாங்காங்கின் விடுதலை ஒரு நெடிய போராட்டமாகத்தான் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். 23 வயதான இளம் செயல்பாட்டாளரான ஏக்னஸ் சாவ், இதற்கு முந்தைய கைது நடவடிக்கைகளைவிட தற்போது கடுமையாக நடத்தப்பட்டதாகக் கூறியுள்ளார். கைதானவர்களில் ஒருவரான பிரிட்டிஷ் சுயாதீனப் பத்திரிகையாளர் வில்சன் லீ, தன்னுடைய பயண ஆவணங்கள், கணினி, செல்பேசி, கடன் அட்டைகள் என அனைத்தும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கருத்துரிமையை முடக்குவதற்கு சீன அரசு முயன்ற அதே நேரத்தில், பத்திரிகைச் சுதந்திரத்துக்கு ஆதரவாக ஹாங்காங் மக்கள் திரண்டெழுந்து நின்றது பாராட்டுக்குரியது. ஜிம்மி லாய் கைதான அடுத்த நாள் அதிகாலையிலேயே மக்கள் வரிசையில் காத்திருந்து ‘ஆப்பிள் டெய்லி’ நாளேட்டை வாங்கிச் சென்றார்கள். கூடுதல் பிரதிகளை வாங்கி மற்றவர்களுக்கு விநியோகித்தார்கள். ‘ஆப்பிள் டெய்லி’ நாளேட்டை வெளியிடும் ‘நெக்ஸ்ட் டிஜிட்டல்’ நிறுவனத்தின் பங்குகள் கைது நடவடிக்கைக்கு அடுத்த நாள் மூன்று மடங்கும், அதற்கடுத்த நாளில் ஐந்து மடங்கும் மதிப்பு உயர்ந்தன. பிணையில் வெளிவந்து பத்திரிகை அலுவலகத்துக்குத் திரும்பிய ஜிம்மி லாய்க்கு ஒரு கதாநாயகனைப் போல வரவேற்பு அளிக்கப்பட்டது. பத்திரிகையாளர்கள் அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் உண்மையின் பக்கம் நிற்கிறபோது மக்களும் அவர்களுக்கு ஆதரவாக நிற்பார்கள் என்பதற்கு ஜிம்மி லாயின் கைது ஓர் வரலாற்று உதாரணமாகியிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x