Published : 16 Aug 2020 07:42 AM
Last Updated : 16 Aug 2020 07:42 AM

உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் டிஜிட்டல் காலம்- ராணா அல் கலியுபி பேட்டி

விஜயஸ்ரீ வெங்கட்ராமன்

அமெரிக்காவில் கோரமான செப்டம்பர் 11 தாக்குதல்கள் நடந்திருந்த ஒரு வாரத்தில், எகிப்தைச் சேர்ந்த புதிய மணப் பெண்ணான ராணா அல் கலியுபி, தனது கணிப்பொறி அறிவியல் ஆராய்ச்சிப் படிப்புக்காக இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்குச் சென்றார். இந்த ஆராய்ச்சியை முடித்து எகிப்தில் உள்ள பெரிய பல்கலைக்கழகம் ஒன்றில் பணிக்குச் சேர்வதுதான் அவரது முதல் திட்டமாக இருந்தது. ஆனால், அவரது ஆராய்ச்சிப் படிப்பு செயற்கை உணர்வு அறிவுத்திறன் தொடர்பில், மனித உணர்வைப் படிக்கும் வகையில் கணிப்பொறிகளைத் தயாரிப்பது தொடர்பில் இருந்தது. தனது ஆய்வின் முழுமையான சாத்தியங்களைப் பார்ப்பதற்காக அவர் அமெரிக்காவுக்கு வந்து தொழில்நுட்பம் சார்ந்த தொழில்முனைவோராக மாறினார். இப்போது ‘அஃபக்டிவா’ என்ற நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, நிறுவனர். சுயமாகப் பெண்கள் தங்கள் தொழில் வழிகளைக் கண்டடைவதற்கு உதவும் வகையில் ‘கேர்ள் டீகோடட்’ என்ற நூலையும் எழுதியுள்ளார்.

உங்கள் அம்மாவைப் பற்றிச் சொல்லுங்கள்...

மத்தியக் கிழக்குப் பிராந்தியத்தில் உருவான கணிப்பொறி நிரலாளர்களில் முதல் பெண் நிரலாளர் என் அம்மா. பெரும்பாலான எகிப்தியத் தாய்மார்கள் வீட்டுக்கு வெளியே வேலைக்குச் சென்றிராத காலத்தில், மூன்று பெண் குழந்தைகளையும் வளர்த்ததோடு, குவைத் வங்கியில் முக்கியமான பணியிலும் இருந்தார். பெண்கள் கல்வியைப் பொறுத்தவரை எனது தந்தை முற்போக்கானவர். ஆனால், எல்லா மத்தியக் கிழக்கு நாடுகளைச் சேர்ந்த ஆண்களையும்போலவே, தன்னுடைய மனைவி தாயாகவும் மனைவியாகவும் இருப்பதே முதல் கடமை என்று நினைத்தார்.

உணர்வு சார்ந்த செயற்கை அறிவுத்திறன் ஆராய்ச்சியின் மீது ஈடுபாடு வந்தது எப்படி?

நாம் நேரடியாக ஒரு நபருடன் தொடர்புகொள்ளும்போது, வார்த்தைகள் வழியாக வெறுமனே 10%-தான் பேசுகிறோம். முகபாவம், குரல் தொனி, உடல்மொழி மற்றும் இதர குறிப்புகளின் வாயிலாகவே அதிகமும் பேசுகிறோம். அப்படியான வார்த்தைகளற்ற தொடர்புறுத்தல் நமது கணிப்பொறிகளுக்குத் தெரியாதது. உங்களது டிஜிட்டல் கருவியுடன் நீங்கள் கோபப்பட்டால், அது உங்களது சங்கடத்தைப் புரிந்துகொள்ளும் நிலை எதிர்காலத்தில் வரப்போகிறது என்று கருதுகிறேன். இந்த உள்ளீட்டைப் பயன்படுத்தி, கருவிகளைப் பயன்படுத்துபவர்களுக்குக் கூடுதல் அனுபவத்தைத் தருவதற்கு ஆராய்ந்துவருகிறோம்.

எனது ஆராய்ச்சிப் படிப்பின் இலக்காக முகபாவங்களை வாசிப்பதற்குக் கணிப்பொறிகளுக்குப் பயிற்சி அளிப்பது இருந்தது. ஒரு நபரின் மன நிலை, உணர்வு நிலைகளை அனுமானிக்கும் வேலை அது. முகபாவனையை வாசிக்கும் படித்தீர்வை நான் ‘தி மைண்ட் ரீடர்’ என்ற பெயரில் உருவாக்கினேன். இந்தத் தொழில்நுட்பத்தை ‘அஃபக்டிவ் கம்ப்யூட்டிங்’ நூலின் ஆசிரியரான ரோசலிண்ட் பிகார்டுக்கு அறிமுகப்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது. அவர்தான் முதுநிலை ஆராய்ச்சி செய்வதற்கான வாய்ப்பை ‘மசாசூசெட்ஸ்ட் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி’யில் ஏற்படுத்தித் தந்தார். 2009-ல் நானும் ரோசலிண்ட்டும் சேர்ந்து ‘அஃபக்டிவா’ நிறுவனத்தை உருவாக்கினோம். அப்போது நிதி திரட்டுவதற்காக சிலிக்கன் பள்ளத்தாக்குக்குச் சென்றபோது, உணர்வு என்ற வார்த்தையைக் கேட்கும்போதெல்லாம் நிதி முதலீடு தரும் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் சுருங்கிப்போவார்கள். படிப்படியாக எங்களது பார்வையைப் பகிர்ந்துகொண்ட முதலீட்டாளர்களைப் பெற்றோம். தற்போது செயற்கை அறிவுத்திறன் மனநலம் உள்ளிட்ட பல துறைகளில் பயன்படுகிறது. கார்களில்கூட ஓட்டுனர்களுக்குத் தூக்கக் கலக்கமாக இருந்தால் அதைக் கண்டுபிடிக்க உதவுகிறது.

மத்தியக் கிழக்கு நாடுகளில் உள்ள கலாச்சாரம் சார்ந்த உங்களது குறிப்புகளை உங்களது நூலில் பார்க்க முடிகிறது...

உணர்வுகளின் அறிவியல் தொடர்பான எனது கல்வி, கோடை விடுமுறைக்கு கெய்ரோவுக்கு வரும்போதுதான் தொடங்கியதென்று சொல்வேன். எனது பாட்டியின், குடும்ப உறுப்பினர்களின் உரையாடலைக் கவனிப்பேன். கைகளை அசைப்பது, சத்தமாகச் சிரிப்பது, இன்னொருவர் பேச்சில் குறுக்கிடுவது என அந்த உயிர்ப்பான உரையாடலைக் கவனிப்பேன். சிரிப்பு என்பது வாயுடன் முற்றிலும் தொடர்புடையது என்று பொதுவாகக் கருதப்படுகிறது. ஆனால், கண்களைச் சுற்றி சுருக்கங்கள் தோன்றாமல் வெளியிடப்படும் சிரிப்பு சிரிப்பே அல்ல. எனது பெரியம்மா தலையிலிருந்து கால் வரை நிகாப் அணிபவர். கண்களில் மட்டும்தான் ஒரு சிறிய பிளவு தெரியும். ஆனால், எனக்கு அவரது கண்களைப் பார்த்தால் போதும்; அவர் அன்றைக்கு மகிழ்ச்சியாக இருக்கிறாரா இல்லையா என்பது தெரிந்துவிடும். உணர்வுசார் செயற்கை அறிவுத் திறன் மூலமும் அதையே கண்டுபிடிக்க முடியும்.

© தி இந்து, தமிழில்: ஷங்கர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x