Published : 11 Aug 2020 06:46 PM
Last Updated : 11 Aug 2020 06:46 PM

பெய்ரூட் வெடிவிபத்தும் அரசுகள் செவிமடுக்க வேண்டிய அறத்தின் குரலும்!

பெய்ரூட்டில் நிகழ்ந்த பயங்கரமான வெடிவிபத்து தொடர்பான செய்தியைக் கேள்விப்பட்டபோதும், பின்னர் அதை யார் செய்திருப்பார்கள் என்று தீவிரமான ஊகங்கள் எழுந்தபோதும், 40 ஆண்டுகளுக்கு முன்னர் மால்கம் கெர்ரின் வீட்டில் நான் கலந்துகொண்ட இரவு விருந்து பற்றிய நினைவுகள் என் மனதில் தோன்றின. அப்போது பெய்ரூட்டின் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்தார் மால்கம்.

விருந்து நடந்துகொண்டிருந்தபோது, கடந்த இரண்டு இரவுகளாக பெய்ரூட்டில் வழக்கத்துக்கு மாறான வகையில் ஆலங்கட்டி மழை பொழிந்ததைப் பற்றி யாரோ ஒருவர் குறிப்பிட்டார். அதைப் பற்றி ஒவ்வொருவரும் தங்கள் விளக்கங்களை முன்வைத்துக் கொண்டிருந்தனர். அப்போது குசும்பான தொனியில் தன் விருந்தினர்களிடம் மால்கம் கேட்டார் - “சிரியாக்காரர்கள்தான் இதைச் செய்தார்கள் என்று நினைக்கிறீர்களா?”

கம்பீரமான தோற்றம் கொண்டவரும், மதிநுட்பம் வாய்ந்த அறிஞருமான மால்கம் அந்தக் கணத்தில் நகைச்சுவை உணர்வுடனும், ஆழமான சிந்தனை வெளிப்பாட்டுடனும் அப்படிக் கேட்டார் (சில மாதங்களுக்குப் பின்னர், அடையாளம் தெரியாத கொலையாளிகளால் அவர் கொல்லப்பட்டார்).

லெபனான்காரர்கள் எந்த ஒரு விஷயத்தையும் சதித் திட்டமாக, குறிப்பாக சிரியா உருவாக்கிய சதித்திட்டமாகக் கருதிக்கொள்வதைத்தான் அவர் அப்படிக் கிண்டல் செய்தார். நாங்களும் அதைக் கேட்டுச் சிரித்தோம்.

குறுங்குழுவாத தன்மையின் விளைவுகள்
லெபனானிய சமூகத்தைப் பற்றியும் சில விஷயங்களை ஆழமாக அவர் பேசினார். லெபனானில் வானிலை உட்பட எந்த ஒரு விஷயமும் அரசியலாகிவிட்டதை அவர் சுட்டிக்காட்டினார். அது இன்றைய அமெரிக்காவுக்கு அப்படியே பொருந்துகிறது. லெபனானிய சமூகத்தின் குறுங்குழுவாத தன்மை காரணமாக, அரசு நிர்வாகத்தின் அனைத்து அதிகாரங்களும், கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மதங்களின் வெவ்வேறு பிரிவுகளுக்கு இடையில் மிகுந்த கவனத்துடன் சமன்செய்யப்பட்டவையாக, அரசமைப்புச் சட்ட ரீதியாகவோ அல்லது மறைமுகமாகவோ பிரிக்கப்பட்டிருக்கும் சூழலில் எல்லா விஷயங்களும் அரசியல் தன்மை கொண்டவையாகவே இருந்தன. பணி நியமனங்கள், முறைகேடு தொடர்பான விசாரணைகள், எதற்கு நிதி அளிக்க வேண்டும் – அளிக்கக் கூடாது எனும் அரசின் முடிவு என எல்லா விஷயங்களுமே ஒரு தரப்புக்குச் சாதகமானவையாகவும் இன்னொரு தரப்புக்குப் பாதகமானவையாகவுமே பார்க்கப்பட்டன.

பெரிய அளவில் பிரிவினைகள் கொண்ட ஒரு சமூகத்தில், (குறிப்பாக உள்நாட்டுப் போருக்கு நடுவே) இதுபோன்ற ஒரு ஏற்பாடு, ஸ்திரத் தன்மையைக் கொண்டுவந்தது. ஆனால், பொறுப்பேற்கும் தன்மையில் தொடந்து பற்றாக்குறை, ஊழல், முறையற்ற அரசு நிர்வாகம், அவநம்பிக்கை ஆகியவற்றை விலையாகக் கொடுக்க வேண்டியிருந்தது. இதன் காரணமாகத்தான், சமீபத்திய வெடிவிபத்து எந்த ஆதாயத்துக்காக, யாரால் நடத்தப்பட்டது எனும் கேள்விதான் லெபனான்காரர்கள் மத்தியில் முதலில் எழுந்தது.

மாறிவரும் அமெரிக்கா
இரண்டு காரணிகளின் அடிப்படையில், லெபனான் மற்றும் பிற மத்தியக் கிழக்கு நாடுகளைப் போல அமெரிக்கா மாறிவருகிறது. முதலாவதாக, அமெரிக்காவின் இரண்டு கட்சிகளும், யாருக்கும் பலன் தராத அதிகாரப் போட்டியில் மோதிக்கொள்ளும் மதக் குழுக்களை நினைவுபடுத்தும் அளவுக்கு இங்கு (அமெரிக்காவில்) அரசியல் வேறுபாடுகள் ஆழமாகியிருக்கின்றன. அங்கு, ஷியாக்கள், சன்னிகள், மரோனைட்டுகள் என்று தங்களை அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள். இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனர்கள் என்று தங்களைச் சொல்லிக்கொள்கிறார்கள். நாம் (அமெரிக்கர்கள்) நம்மை ஜனநாயகக் கட்சியினர் என்றோ, குடியரசுக் கட்சியினர் என்றோ சொல்லிக்கொள்கிறோம். ஆனால், ஆள வேண்டும் அல்லது மடிய வேண்டும் எனும் அளவுக்குப் பகை கொண்ட பழங்குடியினர் போல நம்மவர்களும் நடந்துகொள்கிறார்கள்.

இரண்டாவதாக, மத்தியக் கிழக்கில் நிலவும் சூழலைப் போலவே அமெரிக்காவிலும் சூழல் வேகமாக மாறிவருகிறது. தற்போது ஒவ்வொரு விஷயமும் அரசியல் தன்மை கொண்டதாக இருக்கிறது – பருவநிலை, ஆற்றல், பெருந்தொற்று சமயத்தில் முகக்கவசம் அணிவது என எல்லாமே!

உண்மையில், அமெரிக்கா ஒரு மத்தியக் கிழக்கு நாட்டைப் போலவே மாறிக்கொண்டு வருகிறது. சமீபத்திய சம்பவம் ஒரு விபத்துதான் என்று லெபனான்காரர்களே முடிவுக்கு வந்துவிட்ட சூழலில், அதிபர் ட்ரம்ப் ஒரு பெய்ரூட் போராளிக் குழுத் தலைவரைப் போல பேசிக்கொண்டிருந்தார். அது ஒரு சதித்திட்டம் என்றார். அது ஒரு தாக்குதல் என தனது ராணுவ ஜெனரல்கள் கூறியதாகச் சொன்ன ட்ரம்ப், “அது ஒரு வகையான வெடிகுண்டு” என்று குறிப்பிட்டார்.

அரசியல்மயமாவதன் ஆபத்து
ஆனால், எல்லாமே அரசியலாகிவிட்டால் ஒரு சமூகம் – இன்னும் குறிப்பாகச் சொன்னால் ஒரு ஜனநாயகம் இறுதியில் இறந்துவிடும். அரசு நிர்வாகத்தின் கழுத்து நெறிபடும். பொது நலனின் பாதுகாவலர்களாக இருக்க வேண்டிய லெபனான் நீதிமன்றங்கள் ஊழல் மயமாகிவிட்டன. துறைமுக அதிகாரிகள் பல ஆண்டுகளுக்கு முன்பே கேட்டுக்கொண்ட பின்னரும், வெடிபொருட்களைத் துறைமுகத்திலிருந்து அப்புறப்படுத்த உத்தரவிட நீதிமன்றங்கள் தவறிவிட்டன. அதன் காரணமாக வெடிவிபத்து நிகழ வழிவகுத்துவிட்டன.

“ஆரோக்கியமான அரசியல் செழித்து வளர வேண்டுமென்றால், உண்மை அடிப்படையிலான எடுத்துக்காட்டுகளும், பொது நன்மை குறித்த கருத்தாக்கங்களும் அதற்கு அவசியம்” என்று சொல்லும் ஹீப்ரூ பல்கலைக்கழகத்தின் மத தத்துவவாதி மோஷே ஹால்பெர்டால், “எல்லாமே அரசியலாக மாறிவிட்டால், அது அரசியலின் முடிவாகிவிடும்” என்றும் குறிப்பிடுகிறார்.

வேறுவிதமாகச் சொல்வதானால், எல்லாமே அரசியலாகிவிட்டால், எல்லாமே அதிகாரத்தைப் பற்றியவையாக மாறிவிடும். பின்னர், மையம் என எதுவும் இருக்காது. இரண்டு தரப்புகள் மட்டுமே இருக்கும்; உண்மை என எதுவும் இருக்காது. இரண்டு தரப்பு கருத்துகள் மட்டுமே இருக்கும்.

தவறான கற்பிதங்கள்
பருவநிலை மாற்றம் என்பது முக்கியமான பிரச்சினை என்று நீங்கள் பேசினால், ஆராய்ச்சி மானியமாக உங்களுக்கு யாரோ பணம் கொடுத்திருக்கிறார்கள் என்று கருதப்படும். ஜோ பிடேனுக்குப் பின்னடைவை ஏற்படுத்த உக்ரைன் அதிபர் மூலம் முயன்றதன் காரணமாகப் பதவி நீக்கத் தீர்மானத்துக்குரிய குற்றத்தை அதிபர் ட்ரம்ப் செய்துவிட்டார் என்று நீங்கள் பேசினால், உங்கள் கட்சி ஆட்சிக்கு வருவதற்காகவே அப்படிப் பேசுகிறீர்கள் என்று கருதப்படும்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு, பிரேசிலின் போல்ஸனாரோ, ஹங்கேரியின் விக்டர் ஆர்பன், துருக்கியின் எர்டோகன் போன்ற ஜனநாயகத்தன்மை இல்லாத தலைவர்கள், உண்மை மற்றும் பொதுநலனின் பாதுகாவலர்களைச் சிறுமைப்படுத்த தீவிரமாக முயற்சிக்கிறார்கள். மக்களுக்கு அவர்கள் விடுக்கும் செய்தி இதுதான்: “நீதிமன்றங்களை நம்பாதீர்கள். சுயாதீனமாக இயங்கும் அரசு அதிகாரிகளை நம்பாதீர்கள் – என்னை நம்புங்கள். என் வார்த்தைகளை, என் முடிவுகளை நம்புங்கள். என்னை விமர்சிப்பவர்கள் கொலைகாரர்கள். அவர்களிடமிருந்து நமது சமூகத்தை என்னால் மட்டும்தான் காப்பாற்ற முடியும். நாம் ஆள வேண்டும் அல்லது மடிய வேண்டும்.”

இந்தப் போக்கு நம்மைப் பாதிப்படையச் செய்வது மட்டுமல்ல, உண்மையில் நம்மைக் கொல்கிறது. ‘கோவிட்-19’ பெருந்தொற்றைக் கையாள்வதில் ட்ரம்ப் முழுமையாகத் தோல்வியடைந்ததற்குக் காரணம், அரசியலாக மாற்றி இழிவுபடுத்துவதற்கும் திசைதிருப்புவதற்கும் வாய்ப்பில்லாத ஒரு சக்தியை அவர் எதிர்கொண்டதுதான். அந்த சக்தி – இயற்கை அன்னை. இயற்கை அன்னையை அரசியலுக்குள் திணித்துவிட முடியாது. ஏனெனில், அவள் வேதியியல், உயிரியல், இயற்பியல் ஆகியவற்றின் கலவையாக இருப்பவள். அவை எப்படிப்பட்ட உத்தரவுகளைப் பிறப்பித்தாலும் அவற்றை அவள் நிறைவேற்றுவாள். தற்போது கரோனா வைரஸைப் பரப்புவது என்பதுதான் அவற்றின் உத்தரவு.

நம்பிக்கையூட்டிய தலைவர்கள்
ஜெர்மனி, ஸ்வீடன், தென் கொரியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் இதற்கு நேர்மாறான விஷயத்தை உறுதிப்படுத்தினர். “இல்லை. அரசியலைச் சார்ந்திராத அறிவியல் உண்மைகள் இருக்கின்றன. பொது நன்மை எனும் விஷயமும் இருக்கிறது. நாங்கள் அந்த உண்மைகளுக்குத் தலைவணங்குகிறோம். பொது சுகாதார வியூகத்துடன் கூடிய பொது நன்மையை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை எடுப்போம்” என்பது அவர்களின் நம்பிக்கை.

சமீபத்தில் க்ளீவ்லாண்டில் நடந்த குடியரசுக் கட்சி கூட்டத்தில் பேசிய ட்ரம்ப், “அதிபர் தேர்தலில் ஜோ பிடேன் வென்றுவிட்டால், அவர் பைபிளுக்கு ஊறு விளைவிப்பார். கடவுளுக்கு ஊறு விளைவிப்பார். அவர் கடவுளுக்கு எதிரானவர். துப்பாக்கிகளுக்கு எதிரானவர். ஆற்றலுக்கு எதிரானவர், அதாவது நமது பாணி ஆற்றலுக்கு” என்று குறிப்பிட்டார்.

அது என்ன ‘நமது பாணி ஆற்றல்?’

அதாவது, குடியரசுக் கட்சி பாணி ஆற்றல் என்றால் அது – எண்ணெய், எரிவாயு, நிலக்கரி ஆகியவற்றைக் குறிப்பதாகக் கொள்ளலாம். ஜனநாயகக் கட்சியின் ஆற்றல் என்றால் அது – காற்று மின்சக்தி, சூரிய மின்சக்தி, நீர் மின்சக்தி ஆகியவற்றைக் குறிப்பதாக எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் எண்ணெய், எரிவாயு, நிலக்கரி ஆகியவற்றை ஆதரிக்கிறீர்கள் என்றால், கருக்கலைப்பை எதிர்த்தாக வேண்டும்; முகக்கவசம் அணிவதை எதிர்த்தாக வேண்டும். ஒருவேளை நீங்கள் சூரிய மின்சக்தி, காற்று மின்சக்தி, நீர் மின்சக்தி ஆகியவற்றை ஆதரிப்பவர் என்றால், கருக்கலைப்பு உரிமைகளுக்கு ஆதரவானவர், முகக்கவசம் அணிவதை ஆதரிப்பவர் என்று கருதப்படுவீர்கள். இந்த மாதிரியான சிந்தனை தீவிரமடைந்து லெபனான், சிரியா, இராக், லிபியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளை அழித்தது. இஸ்ரேலிலும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

புனித சாம்ராஜ்யத்துக்கான காத்திருப்பு
அரசுக்கு எதிராக பெய்ரூட்டில் நடந்த போராட்டங்களின்போது, பொது நன்மையைப் பிரதிபலிக்கும் ஓர் அரசுக்காக எத்தனை லெபனான்காரர்கள் ஏங்குகிறார்கள் என்று தெரிந்துகொள்ள முடிந்தது. அமெரிக்காவிலும் அதே கதைதான். நம்மில் பலர் இன்னமும் மதிக்கக்கூடிய, இன்னும் அவர்களை எண்ணி ஏங்க வைக்கக்கூடிய (சில விஷயங்களில் அவர்களுடன் முரண்பட்டாலும்) தலைவர்கள் யார்?

மோஷே ஹால்பெர்டாலின் பதில் இதுதான்: “அந்தத் தலைவர்கள் பொதுநலனை மையமாகக் கொண்ட புனித சாம்ராஜ்யத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள். அரசியலுக்கு வெளியில் இருக்கும் சாம்ராஜ்யம் அது. இப்படியான தலைவர்கள் - தங்கள் அதிகாரம் சார்ந்த விருப்பங்களை அல்ல, பொதுநலனையே அடிப்படையாகக் கொண்டு தீர்க்கமான பார்வையுடன் முக்கியமான நடவைக்கைகளை எடுப்பார்கள்.”

அந்தத் தலைவர்கள் தங்கள் கட்சிகளுக்காக நிறைய விஷயங்களைச் செய்வார்கள். அவர்கள் அரசியலை வெறுப்பவர்கள் அல்ல. அதில் தீவிரமாகத் தங்களை ஈடுபடுத்திக்கொள்பவர்கள்தான். ஆனால், அது எங்கு முடிவுற வேண்டும்; எங்கு தொடங்க வேண்டும் என்பதை உணர்ந்தவர்கள். அவர்கள் ஒரு போரைத் தொடங்குவதற்காக அரசமைப்புச் சட்டத்துக்குப் பின்னடைவை ஏற்படுத்த மாட்டார்கள். தங்கள் அதிகாரத்தைக் காப்பாற்றிக்கொள்ள பொது சுகாதார ரீதியிலான இடையூறுகளைக் குறைத்து மதிப்பிட மாட்டார்கள்.

நாம் (அமெரிக்கர்கள்) இன்னமும் நமது ராணுவத்தை, நமது பொதுநலனின் பாதுகாவலர்களைப் போற்றுகிறோம். அவர்களை அரசியலுக்குள் ட்ரம்ப் இழுக்கும்போதெல்லாம் நாம் திகைத்து நிற்கிறோம்.

“அரசியலைத் தாண்டிய பொதுநன்மையை அடிப்படையாகக் கொண்ட புனித சாம்ராஜ்யத்தை நாம் இழக்கும்போதுதான், சமூகங்கள் வீழ்ச்சியடைகின்றன” என்கிறார் மோஷே ஹால்பெர்டால். லெபனான், சிரியா, ஏமன், லிபியா மற்றும் இராக்குக்கு நிகழ்ந்தது அதுதான். இஸ்ரேலிலும் அமெரிக்காவிலும் அதுதான் மெல்ல நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

இந்தப் போக்கை மாற்றுவதுதான் நமது தலைமுறையின் மிக முக்கியமான பணி!

- தாமஸ் எல்.ஃப்ரீட்மேன் நன்றி: ‘தி நியூயார்க் டைம்ஸ்’ (அமெரிக்க நாளிதழ்)
தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x