Published : 09 Aug 2020 08:41 AM
Last Updated : 09 Aug 2020 08:41 AM

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிவிக்கை: உண்மையான பிரச்சினைகள் என்ன?- விளக்குகிறார் நீரியல் நிபுணர் எஸ்.ஜனகராஜன்

பெரும் விவாதத்தை உருவாக்கியிருக்கிறது, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை-2020. இதன் மீது பொதுமக்கள் தங்கள் கருத்துகளை ஆகஸ்ட் 11 வரை தெரிவிக்கலாம் என்று அறிவித்திருக்கிறது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம். சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் இந்த வரைவு அறிவிக்கையைக் கடுமையாக எதிர்த்துவருகிறார்கள். இந்தச் சூழலில், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு என்றால் என்ன, அதன் வரலாறு, முக்கியத்துவம், புதிய வரைவறிக்கை சொல்லும் மாற்றங்கள், அவை ஏன் எதிர்க்கப்பட வேண்டும் என்பதை விரிவாக விளக்குகிறார் நீர்ப் பற்றாக்குறைப் பிரச்சினைகளுக்கும் சுற்றுச்சூழல் சார்ந்த பொறுப்பின்மைக்கும் இருக்கும் தொடர்பைத் தொடர்ந்து பேசிவருபவரான நீரியல் நிபுணர் எஸ்.ஜனகராஜன்.

இந்தியாவில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுக்கான தேவை என்ன?

சுற்றுச்சூழலின் அங்கங்களான காற்று, நீர், கடல், காடு, பல்லுயிர்ச் சூழல், மண்வளம், நிலத்தடி நீர், ஆகாயம், வளிமண்டலம் உள்ளிட்டவற்றை ‘இயற்கை மூலதனம்’ என்பார்கள். இவை அனைத்தும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. இவற்றால்தான் நாம் இந்தப் புவியில் வாழ்கிறோம். வளர்ச்சித் திட்டங்களின் முக்கியக் குறிக்கோளே மக்கள் நலன்தான். எந்த ஒரு தொழில் தொடங்கினாலும் அது சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்காது. எனவேதான், ஒரு தொழிலைத் தொடங்குவதற்கு முன்பாகவே இந்தத் தொழிலின் சுற்றுச்சூழல் தாக்கம் எப்படி இருக்கும் என்று ஒரு மதிப்பீடு செய்யப்படுகிறது. அந்த மதிப்பீட்டின் அடிப்படையில் பாதிப்பானது குறைந்தபட்சமானதாக இருந்தால் தொழிலைத் தொடங்க அனுமதி வழங்கப்படலாம்; அதிகமாக இருந்தால் தொழில் தொடங்க அனுமதி கொடுக்கக் கூடாது. இதுதான் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின் நோக்கம்.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு எப்படி நடைமுறைக்கு வந்தது?

1972-ல் ஐக்கிய நாடுகள் சபை முதன்முறையாக ‘புவி மாநாடு’ நடத்தினார்கள். அந்த மாநாட்டில்தான் சுற்றுச்சூழல் எவ்வளவு முக்கியமானது, சுற்றுச்சூழலை காக்க வேண்டியது நமது முதன்மைக் கடமை என்பன போன்ற தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள். இந்த மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டுத் திரும்பிய அன்றைய பிரதமர் இந்திரா காந்தி 1975-ல் அரசமைப்புச் சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டுவந்தார். அதுதான் ‘சட்டக் கூறு 48ஏ’. இந்த அரசு தன் முழு முயற்சியுடன் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும், மேம்படுத்த வேண்டும், குறிப்பாகக் காட்டு வளங்களையும் காட்டுயிர்களையும் பாதுகாக்க வேண்டும் என்று அரசமைப்பு சட்டத் திருத்தம் சொல்கிறது. இதன் தொடர்ச்சியாகத்தான் 1986-ல் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்படுகிறது. சுற்றுச்சூழல் தொடர்பாக இந்தியாவில் இயற்றப்பட்ட முதல் சட்டம் அதுதான். இந்த சட்டத்தின் மிக முக்கியமான அம்சமே வருமுன் காப்போம் கொள்கையை (Pre-cautionary Principle) பின்பற்றுவதுதான்.1984-ல் 4,500 பேரின் உயிரைக் குடித்த போபால் விஷவாயு விபத்து 1986-ல் சுற்றுச்சூழல் சட்டம் கொண்டுவரப்பட முக்கியக் காரணமாக அமைந்தது. அதன் பிறகு, 1992-ல் புவி மாநாடு ரியோ டி ஜெனரோவில் இரண்டாம் முறையாக நடக்கிறது. அந்த மாநாட்டில் போபால் விஷவாயு உட்பட உலகில் நடைபெற்ற பேரிடர்கள் அனைத்தைப் பற்றியும் விவாதிக்கப்படுகின்றன. அந்த மாநாட்டில்தான் தொழிற்சாலை தொடங்குவதற்கு அனுமதிக்கும் முன் அது சுற்றுச்சூழலில் விளைவிக்கக்கூடிய தாக்கத்தை மதிப்பீடு செய்வதற்கான சட்டங்களை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. அந்த மாநாட்டுக்குப் பிறகுதான் இந்திய அரசு 1986-ல் இயற்றப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையைக் கொண்டுவர முடிவெடுக்கிறார்கள். 1994-ல் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை முதன்முறையாகக் கொண்டுவரப்படுகிறது. அதற்குப் பிறகு 2006-ல் ஒரு முறையும் இப்போது 2020-லும் அறிவிக்கைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

2020 வரைவு அறிவிக்கை முன்வைக்கும் மாற்றங்கள் சட்டங்களுக்கு உட்பட்டவையா?

‘சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை சுற்றுச்சூழல் சட்டத்தைச் சார்ந்துதான் அமைய வேண்டும், அதை மீறி இருக்கக் கூடாது’ என்கிறது சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம். ஆக, அறிவிக்கையானது சட்டத்தில் இல்லாத விஷயத்தைச் சொல்லக் கூடாது. சட்டத்தில் உள்ள எதையும் நீர்த்துப்போகச் செய்யும் வகையில் அறிவிக்கை அமைந்துவிடக் கூடாது. மாறாக, இப்போதைய 2020 வரைவு அறிக்கை தொழில் தொடங்கியதற்குப் பிறகு சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற வழிவகுக்கிறது. கடந்த மே மாதம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு விபத்து நடந்த பாலிமர் தொழிற்சாலை சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் தொடங்கப்பட்டதுதான். தொழில்கள் தொடங்கிய பிறகு சுற்றுச்சூழல் அனுமதிக்கு விண்ணப்பிப்பது அதிகரித்திருக்கிறது. 2020 அறிவிக்கையானது அதைச் சட்டரீதியாக அனுமதிக்கிறது. அபராதம் மட்டும் செலுத்திவிட்டால் போதும்.

1994, 2006 அறிவிக்கைகளின்படி பொதுமக்கள் கருத்துகேட்பானது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக்கு முன்பாக நடத்தப்பட வேண்டும். 2020 அறிவிக்கை மதிப்பீட்டுக்குப் பிறகு கருத்துகேட்பு செய்துகொள்ளலாம் என்கிறது. தவிர, அதற்கான நாட்களை 30-லிருந்து 20-ஆகக் குறைத்திருக்கிறார்கள். இது தவிர வன ஒழுங்காற்றுச் சட்டம், கடலோரப் பாதுகாப்புச் சட்டம், மாசுக் கட்டுப்பாட்டுச் சட்டம் எனச் சுற்றுச்சூழல் தொடர்பான 15-20 சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அதையெல்லாம் இந்த வரைவறிக்கை என்ன செய்யும்? அவற்றுக்கு இது கட்டுப்பட்டதா? இதற்கு அந்தச் சட்டங்களின்படி உருவாக்கப்பட்ட அமைப்புகள் கட்டுபட்டவையா? இதைப் பற்றியெல்லாம் எந்தத் தகவலும் இல்லை. மேலும், இந்தப் புதிய அறிவிக்கை அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. ஒவ்வொரு குடிநபருக்கும் சுற்றுச்சூழலைப் பாதுப்பதற்கான கடமை இருப்பதாக அரசமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது. நாம் அதைக் கேள்வி கேட்க, தகவல் பெற, புகாரளிக்க உரிமை அளிக்கிறது. ஆனால், 2020 அறிவிக்கையின்படி பொதுக் கருத்துகேட்பிலும் அனைவரும் கலந்துகொள்வதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. தகவலைக் கேட்டுப் பெற முடியாது. நீதிமன்றத்துக்கும் செல்ல முடியாது. எந்த ஒரு சுற்றுச்சூழல் பாதிப்பையும் கேள்வி கேட்கும் உரிமையை அரசமைப்புச் சட்டம் குடிமக்களுக்கு வழங்குகிறது. ஆனால், இந்த அறிவிக்கை அதை மறுக்கிறது.

சில வகையான தொழிற்சாலைகளுக்குச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடே தேவையில்லை என்று 2020 வரைவு அறிவிக்கை கூறுகிறது. இதன் தாக்கங்கள் என்னவாக இருக்கும்?

1994-ல் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கையின்படி அனைத்துத் தொழிற்சாலைகளும் ‘ஏ’, ‘பி’ என இரண்டு வகைகளாக மட்டும் பிரிக்கப்பட்டன. சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் அதிகாரம் இந்திய அரசுக்கு மட்டுமே இருந்தது. 2006 அறிவிக்கையின்படி ‘ஏ’ வகையைச் சேர்ந்த தொழிற்சாலைகளுக்கு மத்திய அரசு சுற்றுச்சூழல் கமிட்டியும், ‘பி’ வகையைச் சேர்ந்த தொழிற்சாலைகளுக்கு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் குழுவும் அனுமதி அளிக்க வழிவகுக்கப்பட்டது. 2020 அறிவிக்கையின்படி இவற்றோடு ‘பி’ வகையை ‘பி1’, ‘பி2’ என இரண்டாகப் பிரிக்கப்படுகிறது; ‘பி2’வுக்குச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடும் பொதுமக்கள் கருத்து கேட்பும் தேவையில்லை. இந்த ‘பி2’ பிரிவுக்குக் கீழ் கிட்டத்தட்ட 50 தொழில்கள் வருகின்றன. இவற்றில் மிக முக்கியமான ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன். எண்ணெய் மற்றும் எரிவாயுச் சோதனை (Exploratory) திட்டங்கள் ‘பி2’ பிரிவில் வருகின்றன. தமிழகத்தில் ஏற்கெனவே ஓ.என்.ஜி.சி., வேதாந்தா நிறுவனங்களுக்கு நிறைய எண்ணெய் ஆய்வுக் கிணறுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எண்ணெய்க் கிணறு என்றால் மீத்தேன், ஷெல் எரிவாயு, இயற்கை எரிவாயு எல்லாவற்றுக்கும் ஹைட்ரோ கார்பன் என்ற பெயரில் ஒரே உரிமம்தான். அதை வைத்து நீங்கள் 3-4 கிமீ ஆழத்துக்கு குழிவெட்டலாம். பக்கவாட்டில் போர் போடலாம். உண்மையிலேயே எண்ணெயோ எரிவாயுவோ எடுத்தால் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு தேவை. இப்படிக் குழி தோண்டுவதே ஏராளமான பாதிப்புகளை ஏற்படுத்தும். காவிரிப் படுகையில் நூறு கிணறுகள் போட்டால் போதும், அங்கே இருக்கும் நீராதாரம் முழுக்க வெளியே வந்துவிடும். தவிர, கடல் தண்ணீர் உள்ளே வரும். உப்பு கலக்கும். தண்ணீரை எடுத்து வெளியே விடும்போது ஏராளமான ரசாயனங்கள் செலுத்தப்பட்டு அவை வெளியே வரும். அதையெல்லாம் எங்கே வைக்கப்போகிறீர்கள்? அப்புறம் உயர்த்தப்பட்ட சாலைகள், மேம்பாலங்கள், தேசிய நெடுஞ்சாலைகள், அதிவேக வழித்தடங்கள் ஆகியவற்றுக்கான திட்டங்களும் ‘பி2’வில் வருகின்றன. சாலை போடுவதை மிகச் சாதாரணமாகப் பார்க்கிறோம். ஆனால், ஒரு 100-150 கிமீ சாலை போடுவதென்றால் அதை நீங்கள் ஐந்து மீட்டராவது உயரப்படுத்த வேண்டிவரும். இதனால், ஆயிரக் கணக்கான நீர்வழித் தடங்கள் பாதிக்கப்படும். தண்ணீரின் போக்கு பாதிக்கப்படும். ஆறுகளுக்குச் செல்ல வேண்டியவை வேறெங்காவது திசைதிருப்பப்படும். இதுபற்றி யாரும் பேசுவதில்லை. நம்மால் ஒரு நீர்வழித்தடத்தை உருவாக்க முடியாது. அவற்றை அழிக்க நமக்கு உரிமையே கிடையாது.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டில் தனியார் ஆலோசகர் நிறுவனங்களின் பங்கு எத்தகையது?

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஒரு சுதந்திரமான அமைப்பால் செய்யப்பட வேண்டும் என்பது முக்கியமான விஷயம். தொழில் திட்டத்தைத் தொடங்குபவரே சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆலோசக நிறுவனத்தை நியமிக்கும் வழிமுறையை இந்த வரைவு அறிவிக்கை வலுப்படுத்துகிறது. அவர்கள் தொழில் தொடங்க ஆதரவான அறிக்கையை மட்டுமே தருவார்கள். இதுவரை ஒரு ஆலோசகராவது தொழில் தொடங்க வேண்டாம் என்று அறிக்கை வழங்கியிருக்கிறாரா? வேலைவாய்ப்பு கிடைக்கும், ஏற்றுமதி அதிகரிக்கும், அந்நியச் செலாவணி அதிகரிக்கும் என்று தரவுகளை தமது அறிக்கைகளில் கொடுப்பார்களே தவிர மண் வளம் பாதிக்கப்படும், ஆறு பாதிக்கப்படும், காற்று மாசடையும் என்பதையெல்லாம் சொல்ல மாட்டார்கள். ஆலோசக நிறுவனத்தால் எப்படி தங்களை நியமித்த நிறுவனத்துக்கு எதிரான அறிக்கையை அளிக்க முடியும். இன்னொரு விஷயம், இப்படி ஒரு ஆலோசகர் கொடுத்த அறிக்கையில் இருப்பவற்றுக்கு மாறாக ஏதாவது நடந்து பாதிப்புகள் ஏற்பட்டால் அதற்கு அந்த ஆலோசகரின் நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும். அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைப் பற்றியெல்லாம் இந்த வரைவு அறிவிக்கையில் எதுவும் இல்லை. சுற்றுச்சூழல் பிரச்சினைகளை இரண்டாகப் பிரிக்க வேண்டும். ஒன்று, உடனடி பாதிப்பு; போபால் விஷவாயுத் தாக்குதல், பாலிமர் விஷவாயுத் தாக்குதல், நெய்வேலி பாய்லர் வெடிப்பு இதெல்லாம் வளாகத்துக்குள் நடப்பவை. இரண்டாவது, அந்தத் தொழிலால் காற்று எவ்வளவு மாசுபடுகிறது, நிலத்தடிநீர் எப்படி பாதிக்கப்படுகிறது, குடிநீர் எப்படி பாதிக்கப்படுகிறது என வளாகத்துக்கு வெளியே நிகழும் பாதிப்புகள். இது எப்போதும் கணக்கில்கொள்ளப்படுவதே இல்லை.

இந்த வரைவு அறிவிக்கையின் பிரச்சினைகளுக்குத் தீர்வு என்ன?

என்னுடைய பணிவான வேண்டுகோள் இந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு-2020 வரைவு அறிவிக்கையைத் திரும்பப் பெறுங்கள். இது மக்கள் விரோதமானது, சுற்றுச்சூழலுக்கு விரோதமானது. நம் அரசமைப்புச் சட்டம் அரசைச் சுற்றுச்சூழலின் பாதுகாவலர் என்கிறது. 1986 சட்டம் பிறப்பிக்கப்பட்டதிலிருந்து 2020 வரை நம் சுற்றுச்சூழல் மேம்பட்டிருக்கிறதா, சரிந்திருக்கிறதா, சரிந்திருக்கிறதென்றால் அதற்கான காரணம் என்ன என்றெல்லாம் ஆய்வு நடத்துங்கள். அப்படி ஆய்வு நடத்தாமல் இப்படி ஒரு வரைவு அறிக்கையை வெளியிட்டிருக்கவே கூடாது. அந்த ஆய்வின் அடிப்படையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கையாக வரைவு அறிக்கையை வெளியிட வேண்டும். பொதுவாக, சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றிய கணக்கு (Environmental accounting), சூழலியல் மதிப்பீடு (Ecosystem Valuation) ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். அதாவது, அடுத்த பத்தாண்டுகளுக்கு மழை அளவு குறையுமா என்பதையெல்லாம் கணக்கிட வேண்டும். இவை இரண்டையும் ஒவ்வொரு ஆண்டும் செய்ய வேண்டும். இதைச் செய்தால்தான் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு என்பது உண்மையான வலுவுள்ள சட்ட விதிமுறையாக இருக்க முடியும். இதை நாம் வலியுறுத்த வேண்டும்.

- ச.கோபாலகிருஷ்ணன், தொடர்புக்கு: gopalakrishnan.sn@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x