Published : 12 May 2014 08:38 AM
Last Updated : 12 May 2014 08:38 AM

வாக்களிக்காதது நடுநிலைமையா?

மக்களவைப் பொதுத் தேர்தலில் வாக்களிக்காத குடியரசுத் தலைவர்களின் பட்டியலில் பிரணாப் முகர்ஜியும் சேரவிருக்கிறார். இதற்கு அவர் சொல்லியிருக்கும் காரணம்: “குடியரசுத் தலைவர் கள் தங்களுடைய நடுநிலையைக் காப்பதற்காகத் தேர்தலில் வாக்களிப் பதில்லை.”

தெற்கு கொல்கத்தாவில் வாக்காளராகத் தன்னைப் பதிவுசெய்து கொண்டுள்ளார் முகர்ஜி. அவர் வாக்களிப்பதற்காக எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில்தான் “இதற்கு முன்னர் பதவிவகித்த குடியரசுத் தலைவர்களில் பெரும்பாலானவர்களின் அடியொற்றி, நடுநிலையைக் காக்க, வாக்களிப்பதில்லை என்ற முடிவை பிரணாப் முகர்ஜி எடுத்திருக்கிறார்’’ என்று அவருடைய பத்திரிகைச் செயலாளர் தெரிவித்திருக்கிறார்.

காலாவதியான, அர்த்தமற்ற ஒரு மரபுக்கு மீண்டும் உயிர்கொடுத்திருக் கிறார் முகர்ஜி. 1998-ல் கே.ஆர். நாராயணன் குடியரசுத் தலை வராகப் பதவிவகித்தபோது, டெல்லியில் ஒரு வாக்குச்சாவடியில் இதர வாக்காளர்களுடன் அவரும் நின்று வாக்களித்து, ஒரு முன்னு தாரணத்தை ஏற்படுத்தினார். அவருக்குப் பிறகு அப்துல் கலாமும், பிரதிபா பாட்டீலும்கூட வாக்களித்தனர். அவர்களையெல்லாம் நடுநிலை தவறியவர்கள் என்று யாரும் குற்றம்சாட்டவில்லை.

அரசு தெருவுக்குத் தெரு, “வாக்களிப்பது உங்கள் கடமை” என்று நாட்டு மக்களுக்குத் தேர்தல் ஆணையம் மூலம் அறிவுறுத்திக்கொண்டு அதற்காகக் கோடிக் கணக்கான ரூபாய்களைச் செலவிட்டு விளம்பரப் படுத்திக்கொண்டிருக்கும்போது, முன்னுதாரணமாக இருக்க வேண்டிய முதல் குடிமகன் வாக்களிக்காததும் அதற்கு நடுநிலையைக் காரணம் கற்பிப்பதும் எந்த வித நியாயம்? மேலும், நாட்டை இந்தக் கட்சிதான் ஆள வேண்டும் அல்லது இவர்கள் ஆளக் கூடாது என்று வாக்களிப்பது எப்படி நடுநிலை தவறியதாகும்?

அரசியலில் நடுநிலை என்கிற நிலைப்பாடு உண்மையில் சாமர்த்திய மான வியூகம். கட்சிகளும் அரசியல்வாதிகளும் அந்த வியூகத்தைச் சுயலாபத்துக்காகப் பயன்படுத்துகிறார்கள். குடியரசுத் தலைவருக்கு இது பொருந்துமா?

இந்த நேரத்தில் இமாசலப் பிரதேசத்தில் 97 வயது வாக்காளர் நேகியை நினைத்துப்பார்க்க வேண்டும். முதல் பொதுத்தேர்தலில் வாக்களித்த முதல் வாக்காளர் அவர். அந்தத் தேர்தலிலிருந்து தவறாமல் வாக்களிக்கிறேன் என்று பெருமிதத்துடன் அவர் பேட்டி அளித்தார். அந்தப் பெருமிதத்தின் மூலம் அவர் நம் நாட்டுக்குச் சொல்வது, நமது ஜனநாயக நிலைப்பாட்டை உறுதியாக நாம் நிலைநிறுத்தும் செயல்தான் வாக்களிப்பது என்பதே. முகர்ஜியைப் பின்பற்றி நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் இப்படி நடுநிலையைக் காக்கத் தொடங்கினால், இந்தத் தேர்தல்தான் எதற்காக? அரசியல் கட்சிகள் எதற்காக? ஜனநாயகம்தான் எதற்காக?

உண்மையில் குடியரசுத் தலைவர் தன்னுடைய நடுநிலையை நிரூபிக்க வேண்டிய தருணம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. அமையவிருக்கும் மக்களவையில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போவதற்கும் வாய்ப்புகள் உண்டு என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன். அப்படிப்பட்ட சமயத்தில் தொங்கு நாடாளுமன்றம் அமையலாம். குதிரை பேரங்கள் நடக்கலாம். அந்தக் கட்டத்தில்தான், பாரபட்சமில்லாமல் நடந்துகொள்வதன்மூலம் பிரணாப் முகர்ஜி உண்மையில் தனது நடுநிலையை நிரூபிக்க வேண்டிவரும். நமது குடியரசுத் தலைவர் தனது நடுநிலையை நிரூபிக்க வேண்டிய களம் அதுதானே தவிர, வாக்குச்சாவடியல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x