Last Updated : 04 Aug, 2020 06:56 AM

 

Published : 04 Aug 2020 06:56 AM
Last Updated : 04 Aug 2020 06:56 AM

இனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை?

பெங்களூருவில் தங்கிப் பணிபுரியும் சேலத்துப் பெண் அவர். அலுவலகம் மூடப்பட்டதால், வீட்டிலிருந்தே பணிபுரியச் சொல்லிவிட்டார்கள். மாநிலங்களுக்கு இடையில் போக்குவரத்து இல்லாததால், மூன்று மாதங்களாக அவரால் சொந்த ஊர் திரும்ப முடியவில்லை. தனிமையும் பாதுகாப்பின்மையும் மன அழுத்தத்துக்கு ஆளாக்கிவிட்டன. ‘நான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறேன்’ என்ற உண்மையான காரணத்தைச் சொல்லி, ஊருக்குச் செல்வதற்கான இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்தார். இதென்ன வேடிக்கையான காரணம் என்று அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. ஒரு முறையல்ல இரு முறையல்ல... தொடர்ந்து ஐந்து முறை. மன அழுத்தம் இருமடங்காகி, ‘நான் தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன்’ என்று கடிதம் எழுதி அதை இ-பாஸ் இணையத்தில் பதிவேற்றிவிட்டார். அதன் பிறகே நம்முடைய அரசு இயந்திரத்துக்குப் பிரச்சினையின் வீரியம் புரிந்து அனுமதித்தார்கள்.

சதா இணையத்திலேயே புழங்குகிற ஐ.டி. ஊழியருக்கே இந்த நிலை என்றால், செல்போனில் சிவப்பு, பச்சை பொத்தானைத் தவிர வேறு எதையுமே கையாளத் தெரியாத பாமரர்களின் நிலையைக் கேட்கவும் வேண்டுமா? ராஜபாளையம் பக்கமுள்ள கிராமத்திலிருந்து ஏழைப் பெண் ஒருவர், புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சைக்காக மாதம் இருமுறை மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். அரசு மருத்துவமனையில் நோட்டில்தான் எழுதிக் கொடுப்பார்கள். அதைப் பதிவேற்றினால், மருத்துவரிடம் அப்பாயின்மென்ட் பெற்ற கடிதத்தை இணைக்கச் சொல்லி விண்ணப்பத்தை நிராகரித்திருக்கிறது மதுரை மாவட்ட நிர்வாகம். ஒரு முறையல்ல... எட்டு முறை! அதே ராஜபாளையத்தைச் சேர்ந்த ஒரு செல்வந்தர், மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மாதாந்திர உடல் பரிசோதனை செய்துகொள்வதற்கே, மருத்துவரிடம் எழுத்துப்பூர்வமாக அப்பாயின்மென்ட் வாங்கி, இ-பாஸ் பெற்றுவிட்டார். அடுத்த மாதம் பாஸ் கிடைக்காவிட்டால், தனி ஆம்புலன்ஸை வாடகைக்குப் பிடித்து, (இ-பாஸே இல்லாமல்) அவரால் மதுரை போய்த் திரும்ப முடியும். ஆனால், ஏழைகளால்?

தேவைதானா இ-பாஸ்?

ஏற்கெனவே வளாகத் தேர்வில் பெற்ற பணியாணையைக் கொண்டுபோய், வேலையில் சேர்ந்துவிடுவதுதான் ஒரு இளைஞனுக்கு மிக அவசியமான வேலை. ‘ஊரடங்கு ஒரு மாதம்தானே என்று அறையைக் காலிசெய்யாமல் வந்துவிட்டேன். நான்கு மாதங்களாகத் தண்டத்துக்கு வாடகை செலுத்துகிறேன், காலிசெய்ய வேண்டும்’ என்பது இன்னொரு இளைஞனின் அவசரமாக இருக்கலாம். பல சிறுநீரக நோயாளிகளுக்கு டயாலிஸிஸ் முக்கியம். உயிருக்குப் போராடும் தந்தையின் முகத்தை ஒருமுறையேனும் பார்த்துவிடுவதுதான் மகனுக்கு முதல் தேவை. ஒரு வாசகருக்கு எங்கோ மாட்டிக்கொண்ட தனது நூல்கள்தான் மூச்சு. இப்படி ஒவ்வொருவருக்கும் அவசியப் பயணங்கள் வேறுபடலாம். திருமணம், இறப்பு, அவசரச் சிகிச்சை மட்டும்தான் மக்களுக்கு அவசியம் என்று எப்படித் தீர்மானிக்க இயலும்? சரி, அந்த இ-பாஸ் நடைமுறையாவது எளிதாக இருக்கிறதா என்றால், அதுவும் இல்லை.

இ-பாஸ் என்பதே சொந்த கார் வைத்திருப்பவர் களுக்கானதோ என்று எண்ணும் நிலைதான் இருக்கிறது. காரணம், இருசக்கர வாகனத்தில் ஒருவர் மட்டுமே செல்ல அனுமதி. அதுவும் 200 கிமீக்குள் மட்டும்தான். கார் என்றால், கிமீ கட்டுப்பாடு கிடையாது. வாடகை கார் பிடித்தால், சென்னையிலிருந்து உங்களை ஏற்றிக்கொண்டு வந்த டிரைவர், திரும்ப ஊருக்குச் செல்கையில் குறைந்தது 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார். “என் பிழைப்பு போய்விடும்” என்பார். அல்லது, மும்மடங்கு கட்டணம் கேட்பார். காரில் மூன்று பேருக்கு மட்டுமே அனுமதி. 4-வது ஆள் ஏறினால், எஸ்யுவி வகை காரை வாடகைக்குப் பிடிக்க வேண்டும். இதெல்லாம் ஏழைகளுக்குக் கட்டுப்படியாகிற விஷயங்களா?

மாவட்டங்களுக்கு இடையே இ-பாஸ் தேவையில்லை என்று பல மாநிலங்கள் அறிவித்துவிட்டன. மத்திய அரசும்கூட அப்படித்தான் சொல்லியிருக்கிறது. ஆனால், தமிழ்நாடு விடாப்பிடியாக இ-பாஸை நடைமுறைப்படுத்துகிறது. அதைச் சரியாகவும் நடைமுறைப்படுத்த முடியவில்லை. போலி பாஸ்கள், அரசியல், அதிகார துஷ்பிரயோகம், டிராவல் நிறுவனங்களுக்குத் தாராளமாய்த் தரப்படும் அனுமதிகள் எவற்றையும் அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. தனியார் டிராவல்ஸ் நிறுவனங்களுக்கு எளிதாகக் கிடைக்கிறது இ-பாஸ். மதுரையில் மளிகைக்கடையிலேயே இ-பாஸ் விற்றவர்கள் சிக்கியிருக்கிறார்கள்.

எளிமைப்படுத்தினால் என்ன?

தமிழகத்தில் சில மாவட்டங்களில் மட்டும்தான், அனைத்து வேலைவாய்ப்புகளும் மருத்துவமனைகளும் கல்வி நிலையங்களும் குவிந்திருக்கின்றன. பெரம்பலூர்க்காரர்கள் திருச்சிக்கும், தேனிக்காரர்கள் மதுரைக்கும், தென்காசிக்காரர்கள் திருநெல்வேலிக்கும் போகாமல் இருக்கவே முடியாது. இவ்வளவு ஏன் புதுச்சேரிகூட நமக்குப் பக்கத்து மாவட்டம்போலத்தான். ‘இ-பாஸை ஒட்டுமொத்தமாக ரத்து செய்தால் என்ன?’ என்று கேட்டால், அதிகாரிகள் பதறுகிறார்கள். ‘சுயகட்டுப்பாடு நம் மக்களுக்குக் குறைவு. லத்திக்கும் அபராதத்துக்கும்தான் பயப்படுகிறார்கள்’ என்கிறார்கள். “ஆகஸ்ட் 1 வரையில், தமிழ்நாட்டில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 6.60 லட்சம் வாகனங்களைப் பறிமுதல் செய்திருக்கிறோம். 9.25 லட்சம் பேரைக் கைதுசெய்திருக்கிறோம். இ-பாஸை ஒட்டுமொத்தமாக ரத்துசெய்துவிட்டால், கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது கடினம்” என்கிறார்கள்.

சரி, இ-பாஸ் நடைமுறையை எளிமைப்படுத்தினால் என்ன? திருமணம், இறப்பு, அவசரச் சிகிச்சை போன்ற கோரிக்கைகளை மட்டுமே ஏற்கிறது இ-பாஸ் இணையம். (இப்போது புதிதாக அரசு ஒப்பந்தங்களுக்கு டெண்டர் போடுபவர்களையும் சேர்த்திருக்கிறார்கள்.) சொந்த ஊருக்குத் திரும்புதல் என்றொரு வாய்ப்பு இருந்தாலும் அந்தக் காரணத்தைச் சொல்வோருக்கு 99% பாஸ் வழங்கப்படுவதில்லை. இறப்புச் சான்றிதழ் பெற முடியாதவர்கள், இறந்தவரின் புகைப்படத்தையே பதிவேற்றினாலும்கூட பொய்யான காரணம் என்று நிராகரிக்கிறார்கள். அதுவும் விண்ணப்பித்த 10-வது நிமிடத்திலேயே.

இணைய வழி விண்ணப்பம் பாமரர்களுக்குச் சிரமம் தருவதால், பழையபடியே மாவட்ட ஆட்சியர், தாலுக்கா அலுவலகங்களிலும் விண்ணப்பிக்க வழி ஏற்படுத்தலாம். அல்லது இ-சேவை மையங்களையே இ-பாஸ் மையங்களாகப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கலாம். பழையபடி இருவழிப் பாதையிலேயே இ-பாஸை அனுமதிக்க வேண்டும். வாடகை காரில் செல்வது ஒரே குடும்பத்தினர்தான் என்றால், முழு இருக்கையிலும் ஆட்கள் பயணிக்க அனுமதிக்கலாம்.

‘ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு’ சம்பாதிப்பவர்களாலேயே வீட்டுக்குள் முடங்கியிருக்க முடியாதபோது, அன்றாடங்காய்ச்சிகள் எப்படி முடங்கியிருக்க முடியும்? கேரளத் தங்கமங்கை ஸ்வப்னா, சாத்தான்குளம் குற்றவாளிகள், பாலியல் குற்றவாளிகள் எல்லாம் வெவ்வேறு மாவட்டங்களில்தான் பிடிபட்டார்கள். இவர்கள் எல்லாம் இறப்பு, திருமணம் என்று இ-பாஸ் பெற்றுத்தான் போனார்களா? எப்படிப் பார்த்தாலும் பாஸ் நடைமுறையால், பாதிக்கப்படுவது குரலற்றவர்களும் பணமற்றவர்களும்தான்.

- கே.கே.மகேஷ்,

தொடர்புக்கு: magesh.kk@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x