Published : 31 Jul 2020 08:50 AM
Last Updated : 31 Jul 2020 08:50 AM

360: வாங்க பழகலாம்...  வரவேற்கும் பாஜக!  

குஜராத் அரசை எதிர்த்து தொடர்ந்து போராட்டங்களை நடத்திவந்த விவசாயிகள் சங்கத் தலைவரையே பாஜகவுக்குள் இழுத்துப்போட்டிருக்கிறார் அம்மாநில பாஜகவின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் சி.ஆர்.பாட்டீல். ‘திலாட்’ என்று அழைக்கப்படும் ஜெயேஷ் படேல், குஜராத்தின் விவசாயிகள் சங்கமான ‘கேடுட் சமாஜ் குஜராத்’தின் முக்கியப் பொறுப்பாளர்களில் ஒருவர். இரண்டரை லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட ‘சுமுல்’ பால் கூட்டுறவுச் சங்கத்தின் இயக்குநர்களிலும் ஒருவராக இருக்கிறார்.

அஹமதாபாத் - மும்பை இடையே தொடங்கப்படவிருக்கும் புல்லட் ரயில் திட்டத்துக்காகக் கையகப்படுத்தப்படும் விவசாய நிலங்களுக்கு சந்தை மதிப்பின்படியே இழப்பீடு வழங்க வேண்டும் என்று நடந்த போராட்டங்களில் முன்னின்றவர் இவர். விரைவில் பசையுள்ள பதவிகள் படேலைத் தேடி வரும் என்கிறார்கள். சொல்லவும் வேண்டுமா?

உமரிடம் பேசப்பட்ட காஷ்மீர் பேரம் என்ன?

காஷ்மீர் மீதான நடவடிக்கையோடு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு, எட்டு மாதங்களுக்குப் பின் மார்ச் மாதத்தில் விடுவிக்கப்பட்ட உமர் அப்துல்லா மௌனம் கலைகிறார். சில நாட்களுக்கு முன் நாளிதழ் ஒன்றுக்கு அவர் எழுதிய கட்டுரையும், அளித்துவரும் பேட்டிகளும் என்ன பேரத்தின் அடிப்படையில் அவர் விடுவிக்கப்பட்டிருக்கிறார் எனும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. ஏனென்றால், உமர் கைதுசெய்யப்பட்ட அதே குற்றச்சாட்டுகளின் கீழ் கைதுசெய்யப்பட்ட இன்னொரு முன்னாள் முதல்வரான மெஹ்பூபா முஃப்தி இன்னும் விடுவிக்கப்படவில்லை.

‘காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கொடுக்கப்படாத வரை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டேன்’ என்று தன்னுடைய கட்டுரையில் கூறியிருந்தார் உமர். அப்படியென்றால், ‘ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்தை அளித்துவந்த அரசமைப்புச் சட்டக்கூறு 370 மற்றும் 35 (ஏ) ஆகியவற்றை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்’ என்ற பிரதான கோரிக்கையை உமர் மறந்துவிட்டாரா என்று சொல்லி அவருடைய சொந்தக் கட்சிக்குள்ளேயே புயல் உருவானது. முன்னாள் அமைச்சரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளருமான அகா ரூல்லா மெஹ்தி கட்சியிலிருந்து விலகும் முடிவுக்கே போய்விட்டார். மத்தியக் காஷ்மீரில் செல்வாக்குப் பெற்ற ஷியா பிரிவுத் தலைவர் அவர். ‘சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றுதானே சொன்னேன், மாநில அந்தஸ்து கிடைத்தால் போதும் என்றா சொன்னேன்?’ என்று விளக்கம் அளித்திருக்கிறார் உமர்.

இதற்கிடையில், ராஜஸ்தான் காங்கிரஸ் அரசில் நடந்துவரும் ஆட்சிக் கவிழ்ப்பு நாடகங்களோடு உமரைத் தொடர்புபடுத்திப் பேசினார் சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல். உமர் சகோதரி சாராவைத்தான் சச்சின் பைலட் திருமணம் செய்துகொண்டிருக்கிறார். உமரை விடுவித்ததற்கு விலையாக சச்சினிடம் ஆட்சிக் கவிழ்ப்பை விலையாக பாஜக கேட்டிருக்கிறதா என்று சந்தேகம் எழுப்பினார் பூபேஷ் பாகல். அடுத்தடுத்து ஊகங்கள் வெடிக்க, வீட்டுக் காவலின்போது என்ன நடந்தது என்று வாய் திறந்திருக்கிறார் உமர். வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது, நீதித் துறை நடுவர் ஒருவர் மூலம் பேரம் பேசப்பட்டதாக அவர் சொல்லியிருக்கிறார்.

‘காஷ்மீர் தொடர்பில் எந்தக் கருத்தும் கூறாமல் அமைதி காப்பேன்’ என்ற வாசகங்கள் அடங்கிய பத்திரத்தோடு அவர் அணுகியதாகவும், அதில் கையெழுத்துப் போட்டால் உடனடியாக விடுதலை என்றும் உமரிடம் பேசப்பட்டதாம். அரசியலிலிருந்தே ஒதுங்கிக்கொள்ளச் செய்யும் அத்திட்டத்துக்கு உடன்படவில்லை என்று சொல்லியிருக்கும் உமர், ‘காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து, கூறுகள் 370 மற்றும் 35(ஏ) ஆகியவற்றை மீண்டும் நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றில் எந்தச் சமரசமும் இல்லை’ என்றும் கூறியிருக்கிறார். உமர் போன்றவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இன்றைய இக்கட்டான சூழல் காஷ்மீரில் இந்திய மைய நீரோட்டத்தோடு இணைந்து செயல்படும் தலைவர்களுக்குப் பெரும் சங்கடமாக மாறியிருப்பதாகச் சொல்கிறார்கள் காஷ்மீர் அரசியல் விமர்சகர்கள்.

சமையலர்களாகும் ஆசிரியர்கள்… திரிபுரா கூத்து!

திரிபுரா மாநில அரசு, பணிநியமன விதிமுறைகளைத் திருத்தி நேர்முகத் தேர்வை மட்டும் அடிப்படையாகக் கொண்டு 2010 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி ஆசிரியர்களை நியமித்தது. இந்த நியமனங்கள் செல்லாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றமும் இதை உறுதிப்படுத்தி புதிய பணிநியமன விதிமுறைகளை வகுக்குமாறு உத்தரவிட்டது. விதிமுறைகள் வகுக்கப்பட்டாலும் ஏற்கெனவே பணியில் அமர்த்தப்பட்ட ஆசிரியர்கள் தற்காலிகமாக அந்தப் பணியில் தொடர்ந்தார்கள். தற்காலிகப் பணிக்கு அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றம் 2020 மார்ச் மாதத்துடன் அவர்கள் பணியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று காலக்கெடுவையும் விதித்தது.

ஆனால், ஆசிரியர்கள் இழந்த வேலைவாய்ப்பை ஈடுகட்டும் விதமாக மாணவர் ஆலோசகர்கள், பள்ளி நூலக உதவியாளர்கள், விடுதி காப்பாளர் என்று 12,000 புதிய பணியிடங்களை உருவாக்கி, அவர்களைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் இறங்கியது திரிபுரா அரசு. நீதிமன்ற அவமதிப்பு அறிவிக்கையால் அந்த முயற்சிகள் கைவிடப்பட்டன. அதற்குப் பதிலாக வேலையிழந்த ஆசிரியர்களை இப்போது அலுவலக உதவியாளர், இரவுக் காவலர், சமையலர், தோட்டக்காரர் பணிகளில் நியமித்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதித்திருக்கிறது. ஆசிரியர்கள் நியமனத்திலும், குறிப்பிட்ட ஆண்டுகள் இடைவெளியில் அவர்கள் பணித்திறனை ஆய்வுக்குள்ளாக்குவதிலும் ஒரு தர நிர்ணயத்தை எப்போது நாம் அடையப்போகிறோம்?

தோல்வியில் முடிந்த ராவின் அயோத்தி முயற்சி

அயோத்தியில் அமையவிருக்கும் ராமர் கோயிலின் தலைமைச் சிற்பியான சந்திரகாந்த்பாய் சோம்பூரா குஜராத்தைச் சேர்ந்தவர். முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவின் நூற்றாண்டு விழா நடந்துவரும் வேளையில், பாபர் மசூதி இடிப்புக்கு முன்னால் ராவ் தன்னிடம் கூறிய ஒரு சமரச யோசனையை இப்போது அவர் பொதுவில் பகிர்ந்துகொண்டிருக்கிறார். சோம்பூராவை அழைத்துப் பேசிய ராவ், அயோத்தியில் ராமர் கோயிலும் பாபர் மசூதியும் அடுத்தடுத்து ஒரே வளாகத்தில் அமையலாமே என்ற யோசனையை அளித்திருக்கிறார். ஆனால், நரசிம்ம ராவின் யோசனையை விசுவ ஹிந்து பரிஷத் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது என்று கூறியிருக்கிறார் சோம்பூரா. இந்து – முஸ்லிம் இரு தரப்புகளையும் ஒன்றிணைக்கும் ஒரு தீர்வை ராவ் யோசித்தார் என்பதற்கு வலுசேர்ப்பதாக அமைந்திருக்கிறது சோம்பூரா சொல்லும் தகவல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x