Last Updated : 30 Jul, 2020 08:08 AM

 

Published : 30 Jul 2020 08:08 AM
Last Updated : 30 Jul 2020 08:08 AM

பாஜகவால் ஆட்டுவிக்கப்படுகிறார் சச்சின் பைலட்- சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் பேட்டி

2018-ல் நடந்த தேர்தல்களில் மூன்று மாநிலங்களில் ஆட்சியமைத்த காங்கிரஸ், அவற்றில் ஒன்றை இழந்துவிட்டது. இன்னொன்றிலும் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், மூன்றாம் மாநிலமான சத்தீஸ்கரில் காங்கிரஸ் அரசின் நிலை குறித்தும், அந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ள பசுஞ்சாணத்தை அரசே விலைகொடுத்து வாங்கிக்கொள்ளும் ‘கோதன் நியாய் யோஜனா’ திட்டம் குறித்தும் ‘தி இந்து’வுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் பேசுகிறார் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல்.

2018-ல் காங்கிரஸ் ஆட்சி அமைத்த மூன்று மாநிலங்களில் மத்திய பிரதேசத்தின் ஆட்சியை பாஜக கைப்பற்றிவிட்டது. ராஜஸ்தான் அரசுக்கு நெருக்கடி உருவாகியிருக்கிறது. சத்தீஸ்கரிலும் ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் அதிருப்தியானது ஆட்சியை அச்சுறுத்தும் வகையில் விஸ்வரூபம் எடுக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறதே?

மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியா மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்தார். அரசுப் பதவியில் இல்லாமல் இருக்கும் வாழ்க்கைக்கு அவர் பழகியதில்லை. அது அவரைப் பொறுமையிழக்கச் செய்தது. நான் ராஜஸ்தானில் நடக்கும் அரசியல் மாற்றங்களை உற்றுக் கவனிக்கிறேன் என்று சொல்ல முடியாது. ஆனால், சச்சின் பைலட்டைப் பொறுத்தவரை ஒமர் அப்துல்லா விடுவிக்கப்பட்டது தொடர்பிலேயே எனக்கு சில ஐயங்கள் எழுகின்றன. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர்களான ஓமர் அப்துல்லா, மெஹ்பூபா முஃப்தி உள்ளிட்டோர் ஒரே சட்டப் பிரிவுகளின் கீழ் கைதுசெய்யப்பட்டனர். முஃப்தி இன்னும் விடுவிக்கப்படாத நிலையில், அப்துல்லா மட்டும் விடுவிக்கப்பட்டிருப்பது அவர் சச்சின் பைலட்டின் மைத்துனர் என்பதால்தானா என்ற கேள்வி இப்போது எழுகிறது. ஏனென்றால், பாஜகவைப் பொறுத்தவரை அது வாஜ்பாய், அத்வானி காலத்து பாஜகவாக இப்போது இல்லை. எப்படியாவது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது மட்டுமே இன்றைய பாஜகவின் ஒரே இலக்கு. மக்கள் தீர்ப்பு சாதகமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஆட்சி அமைப்பதற்காக பாஜக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லும். பெரும்பான்மை வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்க்க சட்டமன்ற உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்கவும் அது தயங்காது.

நீங்கள் சத்தீஸ்கர் மாநில முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன் அந்தப் பதவிக்கான போட்டியில் உங்களையும் சேர்த்து மூவர் இருந்தனர். இதன் மூலம் நீங்களும் ராஜஸ்தான் முதல்வரின் சூழலில்தான் இருக்கிறீர்கள் இல்லையா?

இல்லை, இங்கு நாங்கள் அனைவருமே ஒற்றுமை மிக்க உறவைப் பேணுகிறோம்.

காங்கிரஸைச் சேர்ந்த 15 சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சருக்கு இணையான அதிகாரங்கள் கொண்ட செயலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் அரசியல் நிகழ்வுகளைக் கண்டுதான் நீங்கள் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கிறீர்கள் என்று கருதலாம் இல்லையா?

இதை நாங்கள் ஒரே நாளில் செய்துவிடவில்லை. இது தொடர்பாகத் தொடர்ச்சியாகப் பல விவாதக் கூட்டங்களை நடத்தினோம். மூத்த அமைச்சர்கள், தலைவர்கள் அனைவரையும் கலந்தாலோசித்தோம். அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டியின் சத்தீஸ்கர் பொறுப்பாளர் பி.சி.புனியாவும் இந்தக் கூட்டங்களில் கலந்துகொண்டார். இந்த முடிவுகள் கட்சி மேலிடத்தின் ஒப்புதலுடன் எடுக்கப்பட்டவை. தவிர, ராஜஸ்தான் அரசை ஆட்டம் காணவைக்க பாஜக இதுபோல் காய்களை நகர்த்தும் என்று நான் முன்கூட்டியே ஊகித்து, அதன்படி செயல்பட முடியுமா என்ன? ராஜஸ்தான் அரசியல் மாற்றங்கள் எதுவும் தொடங்குவதற்குப் பல நாட்கள் முன்பாகவே நாடாளுமன்றச் செயலர்கள் நியமனம் தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டுவிட்டன. இது தேவையில்லாமல் ராஜஸ்தான் அரசியல் நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தப்படுகிறது.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், சச்சின் பைலட்டுக்கும் இடையே காங்கிரஸ் கட்சி சமநிலையைப் பேணியிருந்தால் ராஜஸ்தானில் நடைபெற்றுவரும் அரசியல் நிகழ்வுகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறீர்களா?

சமநிலையின்மை இருக்கவே இல்லையே? நான் சத்தீஸ்கர் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, மாநிலத்தின் பிரதேச காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து தன்னிச்சையாக விலகினேன். சச்சின் பைலட் துணை முதல்வராக்கப்பட்ட பிறகும் பிரதேச காங்கிரஸ் தலைவராக நீடித்தார். ஒரு கட்சிக்குள் ஒரே நபருக்கு எவ்வளவுதான் கொடுக்க முடியும்? பைலட்டின் நடவடிக்கைகள் அவர் பாஜகவால் மிரட்டப்பட்டு அவர்களால் ஆட்டுவிக்கப்படுவதைத் தெளிவாக உணர்த்துகின்றன.

மாநில அரசே மாட்டுச் சாணத்தை விலை கொடுத்து வாங்கிக்கொள்ளும் ‘கோதன் நியாய் யோஜனா’ திட்டத்தை உங்கள் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதைப் பற்றி சற்று விரிவாகக் கூற முடியுமா?

அனைத்து மாநில அரசுகளும் கால்நடைகளுக்கான வெவ்வேறு திட்டங்களைக் கொண்டிருக்கின்றன. ஆனால், அவற்றில் எதுவுமே இதுவரை வென்றதில்லை. மாட்டுச் சாணத்தை ஒரு கிலோவுக்கு ரூ.2 என்ற விலை கொடுத்து வாங்கும் இந்தத் திட்டம், ஒரு புதிய பரிசோதனை முயற்சி. பசு, எருது, கறவை மாடு, கறவை நின்றுவிட்ட மாடு என அனைத்து வகையான மாடுகளும் சாணத்தை வெளியேற்றுகின்றன. அந்தச் சாணத்தை விலை கொடுத்து வாங்குவதால் பல பயன்கள் கிடைக்கும். மாடுகளுக்கு உணவு அளிக்க வேண்டும். எனவே, பயிர்களை எரிப்பதற்குப் பதிலாக பயிர்களின் எச்சங்களை மாடுகளுக்கு உண்ணக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். தற்போது கறவை நின்ற மாடுகள் சாலைகளிலும் வயல்களிலும் திரிய விடப்படுகின்றன. சாணத்தை விற்க முடியும் என்றால், மாடுகளைக் கொட்டகைகளில் பாதுகாக்க வேண்டும். இது அவிழ்த்துவிடப்பட்ட மாடுகளால் பயிர்கள் நாசமாவதையும், அவற்றால் நிகழும் சாலை விபத்துகளையும் தடுக்கும். விலை கொடுத்து வாங்கப்படும் மாட்டுச் சாணம், இயற்கை உரம் தயாரிக்கப் பயன்படும். தோட்டக்கலைத் துறைக்காக மாநில அரசு கோடிக்கணக்கான பணத்தைச் செலவழித்து உரங்களை வாங்குகிறது. அதற்குப் பதிலாகச் சாணத்திலிருந்து பெறப்படும் இயற்கை உரத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்தத் திட்டம் பாஜகவின் பசு அரசியலுக்குப் பதிலடி கொடுப்பதற்காகவா?

பாஜக வாக்குகளைக் கவர்வதற்காகப் பசுவை வைத்து அரசியல் செய்கிறது. எங்களுடைய இந்தத் திட்டம், கிராமப்புறப் பொருளாதாரத்துக்கு வலுவூட்டுவதற்கானது.

© தி இந்து, தமிழில்: ச.கோபாலகிருஷ்ணன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x