Published : 29 Jul 2020 07:06 AM
Last Updated : 29 Jul 2020 07:06 AM

சுயசார்பு இந்தியா சாத்தியமா?

ஆனந்த் கிருஷ்ணன்

சீனாவுக்கும் இந்தியாவுக்குமான எல்லைப் பகுதியில் நடைபெறும் மோதல்களும் கரோனாவும் சீனத் தயாரிப்புகளை இந்தியா சார்ந்திருப்பது குறித்த கேள்விகளை மறுபடியும் எழுப்பியுள்ளன. 2019-20-ல் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு 4.92 லட்சம் கோடிக்கு இறக்குமதி நடைபெற்றது. இதே காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து சீனாவுக்கு 1.20 லட்சம் கோடிக்கு மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடந்த மாதம் கூறியதுபோல இந்தக் கொள்ளைநோயானது இந்தியாவிலே உற்பத்தி செய்வதற்கு ஒரு வாய்ப்பைத் தந்திருக்கிறது என்பது உண்மைதானா? சீனாவிலிருந்து வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறி இந்தியாவுக்கு வருமா? விஸ்வஜித் தார், அமிதேந்து பாலித் ஆகியோருடன் நடத்திய விவாதத்திலிருந்து…

‘இந்தியாவிலேயே உற்பத்தி செய்வோம்’ (மேக் இன் இந்தியா) திட்டம் முன்னெடுக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. சீனாவை எந்த அளவுக்கு இந்தியா சார்ந்திருக்கிறது என்பதைப் பார்க்கும்போது, நாம் தற்போது எந்த அளவுக்கு முன்சென்றிருக்கிறோம்?

விஸ்வஜித் தார்: நமது உற்பத்தித் துறை மறுபடியும் சரியான திசையில் செல்வதற்கு ‘இந்தியாவிலேயே உற்பத்தி செய்வோம்’ முன்னெடுப்பு சரியான வாய்ப்பாக இருந்தது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் நாம் சீனாவைச் சார்ந்திருப்பதுதான் அதிகரித்தது. சீனாவுக்குக் கச்சாப் பொருட்களையும், உற்பத்திநிலையின் இடைப்பட்ட பொருட்களையும் இந்தியா அனுப்பிக்கொண்டிருக்கிறது; முழுமை பெற்ற பொருட்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்துகொண்டிருக்கிறது. சீனாவை நாம் அளவுக்கதிகமாகச் சார்ந்திருப்பதால், நம்மால் சொந்தக் காலில் நிற்க முடியும் என்று தோன்றவில்லை.

அமிதேந்து பாலித்: இந்தியா மிகச் சில நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்துகொண்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக, கரோனாவுக்கு எதிரான போராட்டத்தின் முன்களப் பணியாளர்களுக்கான முகக் கவசங்கள், கவச உடைகள் உள்ளிட்டவற்றை இந்தியா பெரும்பாலும் சீனாவிலிருந்துதான் இறக்குமதி செய்கிறது. இந்தச் சார்புநிலையிலிருந்து வெளியேறி, பிற கூட்டாளிகளைத் தேடிக்கொள்ளும் வாய்ப்பு இந்தியாவுக்கு மிகவும் குறைவே.

சீனாவைச் சார்ந்திருக்கும் நிலை எந்தெந்தத் துறைகளிலெல்லாம் அதிகம்?

அமிதேந்து பாலித்: மூலப்பொருட்களைப் பொறுத்தவரை இந்திய உற்பத்தித் துறையானது சீனாவையே சார்ந்திருக்கிறது. மின்பொருட்கள் உட்பட பல வகையான இயந்திரங்கள், அரை மின்கடத்திகளால் இயங்கும் இயந்திரங்கள் என்று பலவற்றையும் இது உள்ளடக்கும். உரங்களையும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்கிறோம். அதேபோல், இன்று சந்தையில் வெள்ளமெனப் பாய்ந்திருக்கும் பொருட்கள் பலவும் சீனப் பொருட்களே.

1990-களில் சீனா செய்ததை நாம் இப்போது பின்பற்ற வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால், தற்போதைய உலகத் தொழிற்சூழல் – குறிப்பாக, மதிப்புக்கூட்டுச் சங்கிலித் தொடர் (value chain) எப்படி இருக்கிறது?

விஸ்வஜித் தார்: உலக அளவில் மதிப்புக்கூட்டுச் சங்கிலித் தொடர்கள் இன்று மிகவும் மாறுபட்டதாக இருக்கின்றன. நாடுகள் சர்வதேசச் சந்தையைச் சார்ந்திருப்பதைவிட உள்ளூர் பொருளாதாரத்தையே சார்ந்திருப்பவையாக மாறியிருக்கின்றன. இது 2008-ல் ஏற்பட்ட மிகப் பெரிய பொருளாதார மந்தநிலையின் விளைவு. ஆக, 1990-களில் சீனா பின்பற்றிய உத்தி தற்போது இந்தியாவுக்குப் பொருந்தாது.

சீனாவிலிருந்து தொழில் நிறுவனங்கள் வெளியேறி, தெற்காசிய நாடுகளை நோக்கிச் செல்வதைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். நம்மால் முடிந்த அளவு அந்த நிறுவனங்களை ஈர்ப்பதற்கு என்னென்ன உத்திகள் வகுக்க வேண்டும்?

விஸ்வஜித் தார்: சீனாவில் சென்று குவியும் அந்நிய நேரடி முதலீடுகளுக்கும், இந்தியாவுக்கு வரும் அந்நிய நேரடி முதலீடுகளுக்கும் இடையே ஏன் பெரிய இடைவெளி நிலவுகிறது என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். திறந்த சந்தையைக் கொண்டிருந்தாலும் ஏன் மிகக் குறைவான முதலீடுகளையே நாம் ஈர்க்கிறோம் என்றும் கேட்டுக்கொள்ள வேண்டும். ‘இந்தியாவிலேயே உற்பத்தி செய்வோம்’ திட்டமானது உற்பத்தியில் அந்நிய முதலீடுகளை அனுமதிப்பது குறித்துப் பேசியது. ஆனால், தரவுகளைப் பார்த்தால், பெரும்பாலானோர் சேவைத் துறைகளையே தேர்ந்தெடுத்திருப்பது தெரியவரும். குறிப்பாக, தகவல்தொடர்புத் துறை. ஏனைய துறைகளில் காணப்படும் திறனின்மையே அவற்றை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தேர்ந்தெடுக்காததற்குக் காரணம். அடுத்ததாக, அடிப்படைக் கட்டமைப்பு. நம்மிடம் உள்ள பல துறைமுகங்கள் பழையதாகிவிட்டன; இன்னும் பல கோளாறுகள் வேறு. இதுபோன்ற விஷயங்களில் சீனா நம்மைவிட பல படிகள் முன்னே உள்ளது. ஆகவேதான் அந்நிய முதலீட்டாளர்கள் சீனாவையே அதிகம் தேர்ந்தெடுக்கிறார்கள்.

தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அடிக்கடி குரலெழுப்பப்படுகிறது. தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பதும் வேலையை விட்டு நீக்குவதும் சுலபமாக இருக்க வேண்டும் என்றும் புகார்கள் வருகின்றன அல்லவா?

விஸ்வஜித் தார்: தொழிற்சாலைகள் தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பதும் எளிதாகத்தானே இருக்கிறது? கரோனா நாம் அனைவருக்கும் கற்றுக்கொடுத்த பாடம் ஒன்று உண்டெனில், இந்தியாவில் கிட்டத்தட்ட தொழிலாளர் சட்டங்களே இல்லை என்பதுதான். புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பியது இந்தப் பிரச்சினையால்தான். நமது தொழிலாளர் சட்டத்தில் நெகிழ்வுத்தன்மை வேண்டும் என்பது மீண்டும் மீண்டும் முன்வைக்கப்படும் தவறான வாதம். இந்தியாவில் இருப்பதைவிட அதிகமான நெகிழ்வுத்தன்மையை வேறெங்கும் பார்க்கவே முடியாது.

தென்கிழக்கு ஆசியாவின் மற்ற நாடுகளைவிட இந்தியாவிடம் உள்ள சாதகமான அம்சம் என்பது அதன் மிகப் பெரிய சந்தை. அதை நாம் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியுமா?

விஸ்வஜித் தார்: 2008-ல் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலைக்குப் பிறகு, நாடுகள் தங்கள் உள்நாட்டுச் சந்தையை நம்பியிருக்க வேண்டி வந்தது. ஆனால், உள்நாட்டுச் சந்தையைப் போதுமான அளவுக்கு நாம் பயன்படுத்திக்கொள்ளவில்லை. இதனால், வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்ததும், உள்நாட்டுச் சந்தை சுருங்கிப்போனதும்தான் நடந்தது. கரோனா பரவுவதற்கு முன்பே நமது வளர்ச்சி வீழ்ச்சியடைந்துகொண்டிருந்தது. எதுவாக இருந்தாலும், நமது சொந்தச் சந்தையை உருவாக்க வேண்டும் என்றால், போதுமான அளவு கேட்பும் (demand) நுகர்வும் இருக்க வேண்டும். இதற்கு உத்தரவாதப்படுத்தவில்லை என்றால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள், உள்நாட்டு முதலீட்டாளர்கள் இரு தரப்புக்கும் நாம் பிரச்சினை ஏற்படுத்துகிறோம் என்று அர்த்தம்.

உலக அளவில் பெரிய பொருளாதார சக்தியாக வர வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. அதே நேரத்தில், வர்த்தக ஒப்பந்தங்களின் ஆபத்தையும் இந்தியா உணர்ந்திருக்கிறது. இதில் முரண்பாடு ஏதும் இருக்கிறதா?

அமிதேந்து பாலித்: உலக வர்த்தகத்துக்கும் பிராந்திய வர்த்தகத்துக்கும் ‘உலக வர்த்தக நிறுவனம்’ (டபிள்யு.டி.ஓ.) சிறப்பான விதிமுறைகளைக் கொண்டிருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, இந்த நிறுவனத்தின் இயக்கத்தில் பிரச்சினைகள் இருப்பதுடன் பல்வேறு நாடுகளுக்கு இது உவப்பாகவும் இல்லை. ஆகவே, அவை பிராந்திய ஒப்பந்தங்களையும் இரு தரப்பு ஒப்பந்தங்களையும் செய்துகொள்கின்றன. வர்த்தக ஒப்பந்தங்களுக்கு இந்தியா உடன்பட்டு நடக்கப்போகிறதா இல்லையா என்பது இந்தியா பதிலளிக்க வேண்டிய கேள்வி. இதில் இரண்டு அம்சங்கள் உள்ளன – சீனாவைச் சார்ந்திருக்கும் நிலையைக் குறைத்தல், ஏனைய நாடுகளைச் சார்ந்திருப்பதையும் குறைத்தல். சீனச் சார்பைக் குறைப்பது மட்டும் ஒரு வகையான விளைவுகளைக் கொண்டிருக்கிறது என்றால், ஏனைய உலக நாடுகளைச் சார்ந்திருக்கும் நிலையைக் குறைத்தால், நாம் பொருளாதார தேசியத்தை நோக்கிச் செல்கிறோம் என்று அர்த்தம்.

விஸ்வஜித் தார்: நாம் பொருளாதாரத் தேசியத்தை நோக்கிப் போவதற்கான தெளிவான சமிக்ஞைகள் வெளிப்பட்டுவருகின்றன. இந்தியா ‘உள்நாட்டுத் தொழில்காப்புக் கொள்கை’யை (புரொட்டக்ஷனிஸம்) அதிக அளவில் பின்பற்ற ஆரம்பித்திருக்கிறது. உள்நாட்டுப் பொருட்களையே வாங்க வேண்டும், இறக்குமதி செய்யப்படும் பொருட்களைத் தவிர்க்க வேண்டும் என்று பெரும்பாலான அமைச்சர்கள் கூறுகிறார்கள். அது மிகவும் கவலையளிப்பது. எல்லாவற்றிலும் இந்தியமயமாக்க வேண்டும் என்று பேச ஆரம்பித்தோம் என்றால், இறக்குமதிக்கான மாற்றுப்பாதையில் நாம் போக முயல்கிறோம் என்று அர்த்தம். இந்தக் காலத்தில் அதை நாம் செய்யவே முடியாது. இதில் நிறைய நடைமுறைப் பிரச்சினைகள் உள்ளன. இந்தப் பாதையில் செல்ல வேண்டுமானால், பெரிய அளவிலான வளங்களை நாம் திரட்ட வேண்டும். அவ்வளவு வளங்கள் இந்தியாவிடம் இல்லை. இப்படிப்பட்ட முரணான சமிக்ஞைகள் காரணமாக இந்தியாவில் தொழில்புரிய நினைக்கும் முதலீட்டாளர்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவாது. ஒருபக்கம், அமெரிக்காவுடன் ‘சுதந்திரமான வர்த்தக ஒப்பந்தம்’ (எஃப்.டி.ஏ.) செய்துகொள்ள வேண்டும் என்று கோருபவர்கள் இருக்கிறார்கள். இன்னொரு பக்கம், பொருளாதார தேசியத்துக்காக வலுவாகக் குரல் எழுப்புபவர்கள் இருக்கிறார்கள். கொள்கைகள் கணிக்கப்படக்கூடியவையாகவும் வெளிப்படையாகவும் இருப்பது தற்காலத்தில் எந்த நாட்டுக்கும் முக்கியமானதாகும். நம்மிடம் இரண்டுமே இல்லை. சில வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் நான் பேசிவருகிறேன். இங்கே என்ன நடக்கிறது என்பது குறித்து அவர்களுக்கு உண்மையிலேயே எதுவும் தெரியவில்லை. இப்படிச் சமாளித்துக்கொண்டிருப்பதுதான் இனி புதிய இயல்பாக ஆகவிருக்கிறது.

- விஸ்வஜித் தார், பொருளாதார ஆய்வுகள் மற்றும் திட்டத்துக்கான மையத்தின் பேராசிரியர், ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம்;

அமிதேந்து பாலித், தெற்காசிய ஆய்வுகளுக்கான மையத்தின் பேராசிரியர், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம்.

© ‘தி இந்து’, தமிழில் சுருக்கமாக: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x