Last Updated : 26 Jul, 2020 08:35 AM

 

Published : 26 Jul 2020 08:35 AM
Last Updated : 26 Jul 2020 08:35 AM

கர்நாடகத் தமிழர்களின் கறுப்பு ஜூலை

கர்நாடகத் தமிழர்கள், 1956-ல் மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டதிலிருந்து இப்போது வரையிலும் மொழிரீதியான நெருக்கடியை எதிர்கொள்கிறார்கள். இத்தனைக்கும் அவர்கள் தனிநாடு கேட்கவில்லை. குடகு, துளு மக்களைப் போல தனி மாநிலக் கோரிக்கையும் எழுப்பவில்லை. தாய்மொழியான தமிழைக் கற்கும் உரிமையைக் கோரியதாலே சுட்டுக்கொல்லப்பட்டார்கள். தமிழகம் மறந்த மொழிப்போர் தியாகிகளை நினைவுகூர்வோம்.

கர்நாடக வரலாறு

பழைய மைசூர் மாகாணமானது நிலப்பரப்பு அளவிலும், மக்கள்தொகை அடிப்படையிலும் மற்ற மாகாணங்களைவிட மிகவும் சிறியது. இதனால் மெட்ராஸ், பம்பாய், ஹைதாராபாத் மாகாணங்களில் இருந்த எல்லையோரப் பகுதிகளையும், பிரிட்டிஷார் கட்டுப்பாட்டில் இருந்த பெங்களூரு கண்டோன்மென்ட் பகுதியையும் இணைத்து 1956-ல் ‘அகண்ட மைசூர்’ மாநிலம் உருவாக்கப்பட்டது. பிறமொழி பேசுவோர் பெரும்பான்மையாக இருந்த பகுதிகள் இணைக்கப்பட்டதால், 1971 மக்கள்தொகை கணக்கெடுப்பு வரை கர்நாடகத்தில் கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்களின் எண்ணிக்கை 65.94% மட்டுமே இருந்தது. 34.06% மக்கள் உருது, தெலுங்கு, தமிழ், மராத்தி, குடகு, துளு உள்ளிட்டவற்றைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். அதிலும், தலைநகரான பெங்களூருவிலும், தொழில் நகரமான தங்கவயலிலும் தமிழர்களே பெரும்பான்மையாக இருந்தனர். இதனால், பள்ளிகளில் மும்மொழி (சம்ஸ்கிருதம்/தாய்மொழி, ஆங்கிலம், இந்தி/கன்னடம்) கொள்கையை கர்நாடகம் கடைப்பிடித்தது.

இந்நிலையில் கன்னடம், சம்ஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம் அளிப்பது குறித்து ஆராய முதல்வர் குண்டுராவ் 1980 ஜூலை 5 அன்று ஞானபீட விருதுபெற்ற எழுத்தாளரும், முன்னாள் துணைவேந்தருமான வி.கே.கோகாக் தலைமையில் குழு ஒன்றை அமைத்தார். மொழிச் சிறுபான்மையினரிடம் இந்தக் குழு ஆலோசிக்காமல், கன்னட இலக்கியவாதிகளின் கருத்தை மட்டும் பெற்று 1981 ஜனவரி 27 அன்று தன் அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், ‘பள்ளிகளில் முதல் பாடமாக கன்னடம் கட்டாயம் கற்பிக்க வேண்டும். மூன்றாம் மொழியாக இந்தி/சம்ஸ்கிருதம் அல்லது தாய்மொழி கற்பிக்கலாம்’ என வலியுறுத்தியது.

தொடங்கியது போராட்டம்

தமிழ், மராத்தி, தெலுங்கு, உருது உள்ளிட்ட மொழிச் சிறும்பான்மையினர், கோகாக் குழு அறிக்கைக்கு எதிராகப் போராட்டத்தில் குதித்தனர். மொழிச் சிறுபான்மையினர் குழுவாகத் திரண்டு, அதன் தலைவர் எம்.சி.பெருமாள் தலைமையில் முதல்வர் குண்டுராவிடம் மனு அளித்தனர். அரசமைப்பு வழங்கிய தாய்மொழிக் கல்வி உரிமையை வழங்கக்கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தனர். பெங்களூரு, தங்கவயல் ஆகிய இடங்களில் தமிழர்களும், பெல்காமில் மராத்தியர்களும், பெல்லாரியில் தெலுங்கர்களும், மைசூரு, மங்களூருவில் உருது பேசும் இஸ்லாமியர்களும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். இதற்குப் பொதுத் துறை நிறுவனங்களின் தொழிற்சங்கங்களும் ஆதரவு அளித்தன. இதைக் கண்டித்து கன்னட இலக்கியவாதிகளும் அமைப்பினரும் தார்வாடில் போராட்டத்தில் குதித்தனர். அதற்கு நாடகக் குழுவினர், ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்களும் ஆதரவு தெரிவித்ததால் கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டது.

மொழிச் சிறுபான்மையினரின் போராட்டம் கை ஓங்கியிருந்ததால் கன்னட இலக்கியவாதிகள், நடிகர் ராஜ்குமார் உள்ளிட்ட திரையுலகினரைச் சந்தித்து ஆதரவுதிரட்டினர். இலக்கியவாதிகளின் கையில் சிறு தீப்பந்தமாக இருந்த போராட்டம் ராஜ்குமாரின் கைக்கு மாறியதும் காட்டுத்தீயாகப் பரவியது. ராஜ்குமார் நடத்திய பேரணிகளில் லட்சக்கணக்கானோர் திரண்டனர். பெங்களூருவில் நடந்த கூட்டத்தில், ‘கன்னட மொழியைக் காப்பாற்ற என் உயிரையும் தரத் தயாராக இருக்கிறேன்’ என ராஜ்குமார் மேடையிலே கண்ணீர் விட்டார். அவரது இந்த உணர்ச்சிகரமான பேச்சு கன்னட மக்களை உசுப்பிவிட்டது. ராஜ்குமார் ரசிகர் மன்றத்தினர் மொழிச் சிறுபான்மையினரின் கூட்டங்களில் புகுந்து தாக்கவும் தொடங்கினர்.

இந்நிலையில், முதல்வர் குண்டுராவ் தன் கன்னடப் பற்றைக் காட்ட முடிவெடுத்தார். பெல்காமிலும் பெல்லாரியிலும் தடியடி நடத்திப் போராட்டத்தை ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டுவந்த அவரால், பெங்களூருவிலும் கோலார் தங்கவயலிலும் தமிழர்களின் போராட்டத்தை அடக்க முடியவில்லை. 1982-ல் இரு பக்கமும் போராட்டம் உச்சத்தைத் தொட்ட நிலையில் குண்டுராவ், ‘கோகாக் கமிட்டி அறிக்கையை ஏற்று பள்ளிகளில் கன்னடம் உடனடியாகக் கட்டாயமாக்கப்படுகிறது. நாட்டிலே முதன்முறையாக கர்நாடகம் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது’ என அறிவித்தார்.

காவல் துறையின் தாக்குதல்

1982 ஜூன் 28 அன்று பெங்களூருவில் லட்சக்கணக்கான தமிழர்கள் ஊர்வலமாகச் சென்று, கோகாக் குழு அறிக்கையை அமல்படுத்தக் கூடாது என முதல்வரிடமும் ஆளுநரிடமும் மனு அளித்தனர். தங்கவயலில் 90%-க்கும் அதிகமானோர் தமிழர்களாக இருந்ததால் ஜூன், ஜூலை முழுக்கப் போராட்டம் அனல்பறந்தது. உலகத் தமிழ்க் கழகம், தாய்மொழிப் பாதுகாப்பு பேரவை உள்ளிட்ட அமைப்புகளுடன் பள்ளி, கல்லூரி மாணவர்களும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீஸாரால் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரு கட்டத்தில் பொழுது விடிவதற்கு முன்பாகப் போராட்டக்காரர்களை வீடு புகுந்து தாக்கினர்.

ஜூலை 5, 6, 7 ஆகிய தேதிகளில் சாம்பியன் ரிஃப், உரிகம், மாரிக்குப்பம் ஆகிய இடங்களில் ‘தாய்மொழி தமிழே முதல் மொழி’ என முழக்கம் எழுப்பியவாறு ஆயிரக்கணக்கானோர் ஊர்வலமாகச் சென்றனர். ராபர்ட்சன் பேட்டை காந்தி சிலை எதிரே கோகாக் அறிக்கையைத் தீயிட்டுக் கொளுத்தியபோது போலீஸாருக்கும் தமிழ் அமைப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் என்.டி.பிளாக்கைச் சேர்ந்த பரமேஷ்வரன் சுட்டுக்கொல்லப்பட்டார். சாம்பியன் ரீஃப் பகுதியில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர். அப்போது மோகன் என்ற இளைஞர், மார்பைத் திறந்து காட்டி, சுடு என அஞ்சாமல் எதிர்த்து நின்றார். அவரை போலீஸார் நெஞ்சிலே சுட்டுக்கொன்றனர்.

மொழிப்போர் தியாகிகள்

போராட்டத்தை ஒடுக்க 500-க்கும் மேற்பட்ட தமிழர்களைக் கைதுசெய்து பெங்களூரு, பெல்லாரி, மைசூரு போன்ற தொலைதூரச் சிறைகளில் அடைத்தனர். இதனால், பலர் வீட்டுக்கு வர முடியாமல் தங்கவயல் சயனைடு மலைகளில் வாரக்கணக்கில் பசியோடு பதுங்கிக் கிடந்தனர். படுகாயமடைந்த 300-க்கும் மேற்பட்டோருக்குச் சிகிச்சை அளிக்க முடியாமல் தங்கவயல் மருத்துவமனை திணறியது. பலியானோரின் விவரத்தை கர்நாடக அரசு மறைக்க முயன்ற வேளையில், தங்கவயலில் தமிழ் அமைப்பினர் போராடி பால்ராஜ், பரமேஸ்வரன், மோகன், உதயகுமார் ஆகிய நால்வரின் உடலை மட்டும் பெற்று ‘மொழிப்போர் தியாகிகள் நினைவுச் சின்னம்’ எழுப்பினர். சிறிய அளவிலான அந்த நினைவுத் தூணைச் சிதைக்கவும் முயற்சிகள் நடந்த நிலையில், சில ஆண்டுகளாக அஞ்சலி செலுத்தவும் அனுமதி மறுக்கப்படுகிறது.

கோகாக் வன்முறையில் பல தமிழர்கள் கொல்லப்பட்டதைப் போலவே, தமிழும் கொன்றொழிக்கப்பட்டுவிட்டது. தமிழ் கற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டு, தாய்மொழியே தெரியாத தலைமுறைகள் உருவாகிவிட்டன. இன்றைக்கு 40 வயதுக்குக் குறைவான 90% கர்நாடகத் தமிழர்களுக்குத் தமிழே தெரியாது. கர்நாடகத் தமிழர்களின் நினைவில் நீங்கா வடுவாக நிலைத்திருக்கும், இந்த கறுப்பு ஜூலை துயரச் சம்பவத்தை மறைக்க கர்நாடகத்தில் எல்லா வகையிலும் சதி நடக்கின்றன. இவ்வேளையில், கர்நாடகத் தமிழர்களின் மறக்கப்பட்ட தியாகத்தை நினைவுகூர்வதும், அவர்களின் சந்ததிக்கு மறுக்கப்பட்ட தமிழ் கற்கும் உரிமையைப் பெற்றுத் தருவதுமே நியாயமான அஞ்சலியாக இருக்க முடியும்.

- இரா.வினோத், தொடர்புக்கு: vinoth.r@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x