Last Updated : 24 Jul, 2020 07:23 AM

 

Published : 24 Jul 2020 07:23 AM
Last Updated : 24 Jul 2020 07:23 AM

இறுதிவரை வாசித்தார்- ஞானியின் உதவியாளர் ஜோதிமீனா பேட்டி

தமிழ்நாட்டில் கோவை ஞானி அளவுக்குத் தீவிரமாகத் தொடர்ந்து வாசித்துவந்தவர்கள் இருக்க முடியாது. தமிழ் - ஆங்கிலம் இரண்டிலும் தேடித் தேடி நூல்களை வாசித்தவரைப் பார்வையிழப்பும்கூட ஒன்றும் செய்ய முடியவில்லை. உதவியாளர்களை அமர்த்திக்கொண்டு வாசிக்கலானார். ஜோதிமீனா அப்படி 13 ஆண்டு காலம் ஞானிக்கு வாசிப்பாளராக இருந்தார். காலையில் வேலைக்குச் செல்வதுபோல ஞானியின் வீட்டுக்கு வந்துவிடுபவர், மாலை வரை நாளிதழ்கள், புத்தகங்கள் என்று ஞானி சொல்வதையெல்லாம் வாசிப்பார். ஜோதிமீனா வாசிக்கக் கேட்கும் ஞானி, இடையிடையே தன்னுடைய கருத்துகளை விமர்சனங்களாகச் சொல்ல அதை எழுதவும் செய்வார். ஞானியின் வாசிப்பு வேட்கையை நம்மிடம் அவர் பகிர்ந்துகொள்கிறார்.

கோவை ஞானியிடம் நீங்கள் எப்போது உதவியாளராகச் சேர்ந்தீர்கள்?

2007-ல் ஐயாவுக்குப் படிப்பதற்கு உதவியாளராக வந்தேன். என் கணவர்தான் ஐயாவிடம் சென்றால் நிறைய கற்றுக்கொள்ள முடியும்; நீயும் உன் படிப்பைத் தொடரலாம் என்று அனுப்பிவைத்தார். அப்போது எனக்கு இரண்டாவது குழந்தை பிறந்திருந்த சமயம். என்றாலும், கைக்குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு ஐயாவுக்குப் படிக்க வந்தேன். இன்று முனைவர் பட்டம் பெற்று, கடந்த ஆண்டு இறுதியில் பணிக்கும் சென்றுவிட்டேன் என்றால், அதற்கு ஐயாதான் முழுமுதல் காரணம். அவருடன் வாசித்தபோது பல நூறு புத்தகங்களை நானும் வாசிக்கும் வாய்ப்பைப் பெற்றேன். ஐயாவின் வழிகாட்டுதலில் பலரும் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்கள். அதில் கடைசியாகப் பட்டம் பெற்றது நான்தான். கடந்த ஆண்டு இறுதியில் எனக்கு வேலை கிடைத்ததும் இனி வர வேண்டாம் என்றார். அவருக்கு உதவ மேலும் இருவர் இருந்தார்கள் என்றாலும், அடிக்கடி வந்து ஐயாவைப் பார்த்துவிட்டுச் செல்வேன்.

அன்றாடம் எவ்வளவு நேரம் வாசிப்பீர்கள்?

பொதுவாகப் பத்து மணிக்கு வாசிப்பு தொடங்கினால், மாலை ஐந்து மணி வரை நடக்கும். இடையிலேயே எழுதத் தோன்றினால், ஐயா டிக்டேட் செய்வார். அதை எழுதுவேன். இதற்குப் பின் நிறைய நண்பர்கள் அவரைப் பார்க்க வருவார்கள். அவர்களுடன் உரையாடுவார். தொலைபேசி வழி பேசுவார். அவர் எப்போதும் சிந்தித்துக்கொண்டே இருந்தார் என்று சொல்லலாம்.

ஒவ்வொரு நாளும் வாசிப்பு, எழுத்துப் பணி எப்படி இருக்கும்?

முதலில் நாளிதழ்கள் படிப்போம். தமிழில் ஆரம்பத்தில் ‘தினமணி’ படித்துக்கொண்டிருந்தார். ‘இந்து தமிழ்’ வந்த பிறகு அதுவும் சேர்ந்துகொண்டது. இதுபோக நிறைய இதழ்கள், புத்தகங்கள். மேலும், அவர் வாசிக்க வேண்டும், அணிந்துரை எழுத வேண்டும், மதிப்புரை எழுத வேண்டும் என்றெல்லாம் அனுப்பப்படுபவற்றையும் இதில் சேர்த்துக்கொள்ள வேண்டும். புதிய எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில் ஐயாவுக்கு ஆர்வம் அதிகம் என்பதால் பலருக்கும் ஐயா எழுதுவார். அதுபோக, படித்ததையெல்லாம் பற்றி ஐயா தனது கருத்தைத் தொகுத்துத் தருவார். அதை எழுதுவேன். புத்தகங்களை, கட்டுரைகளைப் படித்து முடித்த பிறகு பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு ஐயா ஃபோன் செய்து பேசிவிடுவார். கோவையைச் சுற்றிலும் நடக்கும் இலக்கிய நிகழ்ச்சிகள் பலவற்றுக்கும் அவர் செல்வதுண்டு. உடலுக்கு ரொம்பவும் முடியாமல் போன பிறகுதான் நிகழ்ச்சிகளுக்குப் போவதை நிறுத்திக்கொண்டார்.

அவருடைய வாழ்வின் இறுதிக் கட்டத்தில் அவர் எதைப் பற்றி அதிகம் பேசினார்?

தற்போது கரோனா தொற்று பரவிக்கொண்டிருக்கிறதல்லவா அதைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள ஆர்வம் கொண்டிருந்தார். உலகமே இப்படி ஒரு கொள்ளைநோயால் முடக்கப்பட்டிருக்கிறதே என்று அதிகம் வருந்தினார்.

வாசிப்பைத் தவிர ஞானிக்கு வேறு என்னவெல்லாம் பிடிக்கும்?

வானொலியில் பழைய திரைப்படப் பாடல்களை விரும்பிக் கேட்பார். தலைமாட்டிலேயே வானொலிப் பெட்டி வைத்திருப்பார். ‘எங்கிருந்தாலும் வாழ்க’ பாடல் அவருக்கு ரொம்பவும் பிடிக்கும்.

இணையத்திலும் அவருக்குப் படித்துக் காட்டுவீர்களா?

ஃபேஸ்புக்கில் முக்கியமான உரையாடல் ஏதாவது நிகழ்ந்தால் படித்துக்காட்டுவேன். அவரைப் பற்றி யாராவது எழுதியிருந்தாலும் படித்துக்காட்டுவேன். அவர் தற்காலத்துடனும் தொடர்புடன் இருப்பதில் ரொம்பவும் ஆர்வமாக இருந்தார்.

கடைசியாக உங்களிடம் எதைப் பற்றிப் பேசினார்?

சமீபத்தில் அவரது 85-வது பிறந்த நாளில் ‘இந்து தமிழ்’ ஒரு முழுப் பக்கம் அளவுக்குக் கொண்டாடியிருப்பதை அவருக்குப் படித்துக் காட்டியபோது அவர் ரொம்பவும் சந்தோஷப்பட்டார். என்னை நேரடியாகத் தெரியாதவர்களெல்லாம்கூட என்னைப் பற்றி இவ்வளவு உயர்வாக எழுதியிருக்கிறார்களே என்றார். தன்னுடைய உழைப்பை இந்தச் சமூகம் எங்கோ உள்வாங்கிக்கொண்டிருக்கிறது என்ற மகிழ்ச்சியின் வெளிப்பாடுதான் அது!

- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@hindutamil.co.in

நம்முடைய ‘இந்து தமிழ்’ நாளிதழ் அளித்த ‘தமிழ் திரு’ விருதைப் பெறுகிறார் ஞானி...

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x