Published : 23 Jul 2020 07:47 AM
Last Updated : 23 Jul 2020 07:47 AM

சிங்கப்பூர் தேர்தல் முடிவுகள் உணர்த்தும் செய்தி என்ன?

ஜூலை 10 அன்று சிங்கப்பூரில் நடந்த பொதுத் தேர்தல் முடிவையொட்டி, ‘உழைப்பாளர் கட்சி’யின் தலைவர் ப்ரீதம் சிங் எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரிக்கப்படுவார் என்று பிரதமர் லீ அறிவித்திருப்பது, சிங்கப்பூர் நாடாளுமன்ற வரலாற்றிலேயே முன்னுதாரணமில்லாத நகர்வு. பிரதமர் லீ தன் கட்சிக்குப் பெரும்பான்மை குறைந்திருப்பதன் உண்மையான அர்த்தத்தை ஒப்புக்கொண்டதோடு, நாடாளுமன்றத்தில் பன்மையான குரல்கள் ஒலிக்க வேண்டும் என்பதில் இளைய வாக்காளர்களுக்கு இருக்கும் விருப்பம்தான் அதற்குக் காரணம் என்றும் கூறியிருக்கிறார்.

பிரதமர் லீயின் ‘மக்கள் செயல்பாடு கட்சி’ (பி.ஏ.பி.) அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று வென்றது. எனினும், 61% வாக்குகளையே பெற்று, போட்டியிட்ட 93 தொகுதிகளில் 83 தொகுதிகளில் வெற்றிபெற்றது. 2015-ல் 69.9% வாக்குகள் பெற்றதோடு ஒப்பிட்டால், தற்போது இது சரிவு. 2011-ல் அந்தக் கட்சி வாங்கிய 60% வாக்குகள்தான் இதுவரை அக்கட்சி பெற்ற மிகக் குறைவான வாக்கு வீதம். எதிரே, 2015-ல் 6 தொகுதிகளை வென்ற ‘உழைப்பாளர் கட்சி’ தற்போது 10 தொகுதிகளை வென்றிருக்கிறது. இதுதான் அந்த நாட்டின் வரலாற்றில் எதிர்க்கட்சி ஒன்று வென்ற அதிகபட்சமான தொகுதிகள்.

நடைமுறையில் ஒரு கட்சி ஆட்சி செய்யும் நாடாக இருக்கும் சிங்கப்பூர் தேர்தல் ஜனநாயகம் அடைந்த முன்னேற்றங்கள் இவை. அந்நாட்டில் ‘உழைப்பாளர் கட்சி’ தனது முதல் நாடாளுமன்றத் தொகுதியை 1981-ல், அதாவது மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் பிரிந்த 16-வது ஆண்டில் வென்றது. பிரதமர் லீக்குத் தற்போது மற்றுமொரு பிரச்சினையும் எழுந்துள்ளது. அந்நாட்டின் துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான ஹெங் ஸ்வீ கீட் மிகக் குறைவான வாக்கு எண்ணிக்கையிலேயே வெற்றிபெற்றிருக்கிறார். 2022-ல் அவர் பிரதமராவார் என்று எதிர்பார்க்கப்படும் சூழல் வேறு. கொள்ளைநோய் முடிவுக்கு வரும்வரை பிரதமராக இருப்பேன் என்று லீ ஏற்கெனவே சூசகமாகத் தெரிவித்திருந்தார். அந்த முடிவைத் தற்போதைய தேர்தல் முடிவுகள் மேலும் நீட்டிக்கக் கூடும்.

சிங்கப்பூர் மேலும் மேலும் ஜனநாயகத்தை நோக்கி நகர்ந்துவரும் சூழலில், அந்நாட்டின் தலைமையைத் தேர்ந்தெடுக்கும் செயல்பாடு மட்டும் மூடிய கதவுகளுக்கு உள்ளே நடைபெறுகிறது. அது மக்கள் தளத்துக்கு வர வேண்டும். பொருளாதாரம் சார்ந்த நலன்கள் தாண்டி, அதுதான் வளர்ந்துவரும் சமூகத்தின் முக்கியமான அடையாளம். அப்போதுதான் அரசியல் பங்கேற்பின் முக்கியத்துவத்தை மக்கள் உணர்வார்கள், கருத்து வேறுபாடு என்பதை ஜனநாயகத்தின் முக்கியமான அங்கமாகவும் மக்கள் கருதுவார்கள். சிங்கப்பூரின் அரசியல் தலைமை இந்தத் தேர்தல் முடிவுகளைச் சரியாக இனங்கண்டு நாட்டில் ஜனநாயகத்தை மேம்படுத்துவதற்கான செயல்பாடுகளை முடுக்கிவிட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x