Published : 08 Sep 2015 11:18 AM
Last Updated : 08 Sep 2015 11:18 AM

உலகத்தரம் வாய்ந்த கல்வி எப்போது?

தங்கர் பச்சானின், ‘சொல்லத் தோணுது 50: பாரதி எங்குமில்லை’ கட்டுரையைப் படித்தபோது பல உண்மைகள் தெளிவாகப் புரிந்தன. ஒரு காலத்தில் உலக நாடுகளில் இருந்தெல்லாம் மாணவர்கள் நம் நாட்டுக்கு வந்து புகழ்மிக்க நாளந்தா பல்கலைக்கழகத்தில் பயின்றனர். உலகுக்கே நாகரிகத்தையும் சிறந்த கல்வியையும் அளித்தது நமது நாடு. ஆனால், இன்று நம் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஒன்றுகூட உலகத்தர வரிசையில் இல்லை. குட்டி நாடுகளான சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் உலகத்தர வரிசையில் இடம்பெற்றுள்ளன.

ஏறத்தாழ 700-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் உள்ள நமது நாட்டுக்கு இது ஒரு தலைக்குனிவே. இதற்குக் காரணம், நமது பல்கலைக்கழகங்கள் தரமான ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் தருவதில்லை என்பதே. முனைவர் பட்ட ஆய்வுக் கட்டுரைகள்கூட எவ்விதத் தரமும் இன்றி, ஏற்கெனவே சமர்ப்பித்த சில கட்டுரைகளின் தொகுப்பாக உருவாக்கி, முனைவர் பட்டம் பெற்றுவிடுகின்றனர்.

இவ்வளவு ஏன், புதுவையில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சமர்ப்பித்த ஒரு ஆய்வுக்கட்டுரை, காப்பியடித்து எழுதப்பட்டது என்று சர்வதேச ஆராய்ச்சி இதழ் தெரிவித்துள்ளது. அது மட்டுமின்றி, அவருக்குக் கண்டனம் தெரிவித்து, அவரது அந்தக் கட்டுரையையும் சர்வதேச ஆராய்ச்சி இதழிலிருந்து நீக்கியுள்ளது.

இது நமது நாட்டின் கல்வித் துறைக்கு ஏற்பட்ட ஒரு தலைக்குனிவாகும். நமது குடியரசுத் தலைவர்கூட, பல்கலைக்கழகங்கள் தங்களது தரத்தை உயர்த்தவும், பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிடவும் வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். முறையான தகுதி இல்லாதவர்கள்கூட, அரசியல் காரணங்களால் துணை வேந்தராக நியமிக்கப்பட்டுவிடுகிறார்கள். இந்நிலை மாறி, தகுதியுள்ள சிறந்த கல்வியாளர்களைத் துணை வேந்தர்களாக நியமனம் செய்யும்போதுதான் நமது பல்கலைக்கழகங்கள் உலகத் தரம் வாய்ந்தவைகளாக அமையும்.

- அ.சிவராமன்,மேட்டூர் அணை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x