Published : 21 Jul 2020 08:06 AM
Last Updated : 21 Jul 2020 08:06 AM
குற்றவியல் சட்டங்களைச் சீர்திருத்துவதற்கான குழுவைச் சமீபத்தில் உள்துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளது சட்ட வல்லுநர்கள், வழக்கறிஞர் சமூகத்தினர் மத்தியில் விமர்சனத்துக்கு உள்ளாகியிருப்பதற்கான எல்லா நியாயங்களும் இருக்கின்றன. சீர்திருத்தம் மிக அவசியமானது; ஆனால், அதற்கான காலகட்டம் இதுவல்ல.
குற்றம், விசாரணை, நீதிமன்ற விசாரணை போன்றவற்றைக் கையாளும் தற்போதைய சட்டங்களில் சீர்திருத்தம் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. 1860-ம் வருடத்திய இந்திய தண்டனைச் சட்டம், 1973-ல் திருத்தப்பட்ட குற்ற நடவடிக்கைச் சட்டம், 1872-ம் ஆண்டைச் சேர்ந்த இந்திய சாட்சிச் சட்டம் போன்றவற்றைச் சீர்திருத்தம் செய்ய சமீப காலத்தில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. எனினும், ஒட்டுமொத்தமான சட்டச் சீர்திருத்தம் என்பதற்கு ஆழ்ந்த பரிசீலனையும் விவாதங்களும் தேவைப்படுகின்றன. சமீபத்தில் உருவாக்கப்பட்ட இந்தக் குழுவின் மீது உள்ள விமர்சனங்களில் ஒன்று கொள்ளைநோய்க் காலகட்டத்தில் இது செயல்பட ஆரம்பித்தது என்பதுதான். பரந்த அளவிலான கருத்துத் திரட்டலுக்கு இது உகந்த தருணம் இல்லை. பிரதான நகரங்கள் சாராத வழக்கறிஞர்கள், செயல்பாட்டாளர்களின் பங்களிப்புகளுக்கு வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தக் குழுவின் நோக்கம் மிகவும் விரிவானதுபோல் தோன்றுகிறது: “குற்றவியல் சட்டங்களில் ஒழுங்குடனும் திறன்மிக்க விதத்திலும் சீர்திருத்தங்கள் செய்யவும் அதன் மூலம் தனிமனிதர், சமூகம், தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பரிந்துரைத்தல்; அதன் மூலம் நீதி, கண்ணியம், தனிமனிதருக்கான மதிப்பு ஆகியவற்றின் அரசமைப்புச் சட்டரீதியான விழுமியங்களை முதன்மைப்படுத்துதல்.” இது குழப்பமானதாகவும், பல்வேறு விளக்கங்களுக்குச் சாத்தியம் கொண்டிருப்பதாகவும் இருக்கிறது. இந்தப் பணியைச் செய்து முடிக்க ‘சட்டக் குழு’ ஏன் நியமிக்கப்படவில்லை என்பதும் புரியவில்லை.
இந்தக் குழுவில் பன்மைத்தன்மை இல்லாததுடன் அனைவரும் ஆண்களாகவே இருக்கிறார்கள். கூடவே, பெரும்பாலும் டெல்லியைச் சேர்ந்தவர்களே இந்தக் குழுவில் இருக்கிறார்கள். இதெல்லாமும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. குற்றவியல் சட்டங்களெல்லாம் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டுமென்றால் விசாரணைகளை விரைவுபடுத்தல், சாட்சிகளைக் காப்பாற்றுதல், பாதிக்கப்பட்டவர்களின் துயரங்களைக் களைதல், விசாரணை வழிமுறைகளை மேம்படுத்துதல், மிக முக்கியமாகச் சித்ரவதையைத் தவிர்த்தல் போன்றவை குறித்த பரந்த அளவிலான கருத்தொற்றுமை எட்டப்பட வேண்டும். மிகவும் குறுகிய காலத்தில், மக்கள் பங்களிப்பில்லாமல் இந்தச் சீர்திருத்தம் செய்யப்படும் நிலை ஏற்பட அனுமதிக்கப்படலாகாது. சீர்திருத்தம் என்பது மிகவும் கவனமாகவும் பல தரப்புகளையும் பல கூறுகளையும் உள்ளடக்கியதாகவும் இருப்பது அவசியம்.
Sign up to receive our newsletter in your inbox every day!