Published : 21 Sep 2015 09:03 AM
Last Updated : 21 Sep 2015 09:03 AM

ஆண்டுக்கு ஒரு இலக்கு: மேலும் நெருக்கமாவோம்!

வாசகர்கள் விரும்பிக் கேட்ட, ஆவலோடு எதிர்பார்த்த மாற்றங்கள் இன்றிலிருந்து தொடங்குகின்றன நடுப்பக்கங்களில். இதழியலைப் பொறுத்த அளவில் ஆங்கிலப் பத்திரிகைகளே முன்னோடிகள் என்றாலும், தமிழ்ச் சூழலில் நாம் அதற்கான இலக்கணங்களை மாற்றி எழுத விரும்புகிறோம். இந்த இடத்தில் வாசகர்களே நமக்கு முதன்மையான விமர்சகர்களும் வழிகாட்டிகளும். மிகக் குறுகிய காலத்தில் ‘தமிழ்ச் சமூகத்தின் உரையாடல் வெளி’யாக ‘தி இந்து’வின் நடுப்பக்கங்கள் உருவெடுக்க நீங்கள்தானே காரணம்!

பத்திரிகை தொடங்கி, கடந்த இரண்டாண்டுகளில் 10-க்கும் மேற்பட்ட முறை நம்முடைய நடுப்பக்கங்களின் வடிவமைப்பில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. எழுத்துருவின் அளவு பெரிதாக்கப்பட்டது. அநேகமாக நடுப்பக்கங்களில் தினசரித் தொடர்களை அறிமுகப்படுத்தியது நாம்தான். ‘நூல்வெளி’எனும் ஒரு புதிய பக்கம் கொண்டுவரப்பட்டது. கடிதங்கள், மின்னஞ்சல்கள் மட்டும் அல்லாமல் ‘தி இந்து’ இணையதளத்தில் பதியப்படும் விமர்சனங்கள், ‘தி இந்து’ ஃபேஸ்புக் பக்கத்தில் பதியப்படும் பதிவுகள், ‘உங்கள் குரல்’சேவை மூலம் பதிவுசெய்யப்படும் குரல் பதிவுகள் என்று எந்த வடிவத்தில் வாசகர்கள் கருத்து வந்தடைந்தாலும் ‘இப்படிக்கு இவர்கள்’பகுதியில் வெளியிடப்படுகின்றன. எல்லாம் வாசகர்களின் யோசனைகளே!

நம்முடைய நடுப்பக்கங்கள் வெறுமனே அரசியல்வாதிகள், இயக்கவாதிகள், செயல்பாட்டாளர்களுக்கான களமாக மட்டுமே இருக்கக் கூடாது; அனைத்துத் தரப்பினருக்குமானதாக இருக்க வேண்டும். முக்கியமாக, இளைய தலைமுறையினரிடம் வரலாற்றை, பண்பாட்டை, அரசியலைக் கொண்டுசெல்லும் வாகனமாக இருக்க வேண்டும் என்பதில் தொடர்ந்து கவனம் செலுத்தியிருக்கிறோம். பள்ளி - கல்லூரிகளின் பிரார்த்தனைக் கூட்டங்களிலும் விவாத அரங்குகளிலும் ‘தி இந்து’நடுப்பக்கக் கட்டுரைகளை வாசித்து விவாதிப்பது ஒரு புதிய கலாச்சாரமாகவே உருவெடுத்துவருவதை நாங்கள் உணர்கிறோம்; கூடவே, எங்கள் பொறுப்புகளையும் கடமையையும்கூட. இப்போது, இந்தப் பயணத்தில் மேலும் சில இலக்குகளையும், கடப்பாடுகளையும் உருவாக்கிக்கொள்ள விழைகிறோம்.

ஒவ்வொரு நாளும் இந்த உலகம் முழுவதும் நடக்கும் எவ்வளவோ நிகழ்வுகளையும் விஷயங்களையும் பிரச்சினைகளையும் நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது; எனினும், அவற்றில் நம் வாசர்களுக்கு முக்கியமானது என்று கருதப்படும் விஷயங்கள் சார்ந்த கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்தே விவாதத்துக்குத் தருகிறோம். ஒட்டுமொத்த சமூகநலன் சார்ந்த சில விஷயங்களைத் தொடர்ந்து கவனப்படுத்துவதை ஒரு கடமையாகவே கொண்டிருக்கிறோம். எனினும், அதைத் தாண்டியும் வாசகர்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டும் - வலியுறுத்தும் ஒரு கருத்தாக்கத்தைக் கையில் எடுத்துக்கொள்வதை இனி வழக்கமாக்கிக்கொள்ளவிருப்பதை அதிகாரபூர்வமாக இப்போது அறிவிக்கிறோம். வரவிருக்கும் ஆண்டில் நாம் அப்படிக் கூடுதல் கவனம் கொடுக்கப்போகும் கருத்தாக்கம் என்ன? ஜனநாயகத்தை வலுவாக்க இளைய தலைமுறைக்கு அரசியல் விழிப்புணர்வை ஊட்டுதல்!

கடந்த ஒரு வார காலமாகப் பல்வேறு முனைகளிலிருந்தும் வாசகர்கள் அனுப்பிவரும் பிறந்த நாள் வாழ்த்து மடல்களிலிருந்தே இதைத் தேர்ந்தெடுத்தோம். அதற்கு மதிப்பளிக்கும் வகையில், இளைய வாசகர்களை மேலும் சென்றடையும் வகையில், சின்னச் சின்ன கட்டுரைகளை அதிகம் தரத் திட்டமிடுகிறோம்; அவர்களுக்கேற்ற எளிய - சுவாரஸ்யமான நடையில், மேலும் மெருகூட்டப்பட்ட வடிவமைப்பில்! மேலும், இளைய தலைமுறையினருடனான உரையாடலைப் பத்திரிகைக்கு வெளியிலும் அதாவது நேரடியாகப் பள்ளி, கல்லூரிகளில் நடத்தவும் திட்டமிடுகிறோம். வேறு என்னென்ன வழிகளிலெல்லாம் இந்தக் கருத்தாக்கத்தை முன்னெடுக்கலாம்? வழக்கம்போல நீங்களே வழிகாட்டுங்கள். இணைந்திருப்போம் எந்நாளும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x