Published : 17 Jul 2020 06:36 AM
Last Updated : 17 Jul 2020 06:36 AM

புதிய பாடநூல்களை மாணவர்களுக்கு எப்படி இலகுவானதாக ஆக்குவது?

சுல்தான் இஸ்மாயில் 

ஒரு நாடு அல்லது மாநிலத்தில் பள்ளிக் கல்வியின் தரத்தை உலகத் தரத்தோடு போட்டியிடும் வகையில் பராமரிக்க வேண்டும் என்றால், பள்ளிக் கல்விக்கான பாடங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் புதுப்பிக்கப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும். இதன் பொருள் என்னவென்றால், அதன் கல்வித் திட்டம், பாடத்திட்டம் ஆகியவையும் புதுப்பிக்கப்பட வேண்டும் என்பதே ஆகும். ஆனால், தமிழகத்தில் 2010 வாக்கில் ஒரே சீரான சமச்சீர் கல்விக்கான பாடத்திட்டம் புதுப்பிக்கப்பட்ட பின்னர், நீண்ட இடைவெளிக்குப் பின்னரே தற்போதைய புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டம் சுமையாக இருப்பதாகச் சமீபத்தில் ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியான ஒரு கட்டுரையில் எழுதப்பட்டிருந்தது. பாடத்திட்டம் சுமையா; அல்லது அதை எப்படி எதிர்கொள்வது என்பது சுமையா என்ற கேள்வி எழுகிறது. இதற்கு சமகாலத்தில் உருவாக்கப்படும் ஒரு பாடத்திட்டம், எத்தகைய சவால்களை எதிர்கொள்கிறது என்கிற புரிதல் அவசியம் ஆகிறது.

மூன்று சவால்கள்

தமிழ்நாட்டில் புதிய பாடத்திட்டம் எதிர்கொண்ட முதல் சவால், அதைப் புதுப்பிப்பதில் ஒரு நீண்ட இடைவெளி ஏற்பட்டிருந்ததால், இடைப்பட்ட காலகட்டத்தில் வளர்ந்திருந்த உயர் கல்விக்கான பாடங்களுக்கும் பள்ளிப் பாடத்திட்டத்துக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி ஏற்பட்டுவிட்டது. இதனால், உயர் கல்வியில் சேரும் மாணாக்கர்கள் தடுமாறுவதும் தோல்வியுறுவதும் இடைநிற்பதும் நடந்தது. இரண்டாவது சவால், ‘ஜேஇஇ’, ‘நீட்’ போன்ற நுழைவுத் தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்வதற்கு ஏற்ற வகையில், நம்முடைய பாடத்திட்டத்தை வலுவானதாக்க வேண்டியிருந்தது. மூன்றாவது சவால், உலகப் போக்குக்கும் நாடு தழுவிய அளவிலான போக்குக்கும் தமிழ்நாட்டுப் பாடத்திட்டம் ஈடுகொடுப்பதாக இருக்க வேண்டியிருந்தது. பள்ளிக் கல்வியில் 10-ம் வகுப்பு வரையான உயர்நிலைப் படிப்பானது அடிப்படைக் கல்வி என்றால், 11, 12 வகுப்புகளுக்கான மேல்நிலைப் படிப்பிலேயே துறைசார் கல்வி தொடங்கிவிடுகிறது என்பதுதான் உண்மை. அதாவது, பின்னாளில் கல்லூரியில் தான் படிக்கவிருக்கும் பாடங்களுக்கான தொடக்கத்தையே ஒரு மாணவர் மேல்நிலை வகுப்புகளில் படிக்கிறார். துறைசார் கல்வி என்பது உலகமயமாக்கல் சூழ்நிலையில் உலகளாவிய போட்டியைச் சமாளிக்கும் வகையில் ஈடுகொடுக்கும் தேவையையும் உள்ளடக்கியது. இதற்கான அடித்தளமாக ஒரு மாநிலப் பள்ளிக் கல்வித் திட்டம் இருக்க வேண்டியது அவசியம்.

இவை அனைத்தையும் கணக்கில் கொண்டுதான் புதிய பாடத்திட்டக் குழு, கல்வித் திட்டத்தையும் பாடத்திட்டத்தையும் உருவாக்கியது. இவற்றை வடிவமைப்பதில் துறைசார் கல்வியாளர்கள், வல்லுநர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரது தொடர் ஆலோசனைகள் கோரப்பட்டாலும், அவை ஒவ்வொரு கட்டத்திலும் இணையத்தில் வெளியிடப்பட்டு ஆசிரியர்கள் மாணாக்கர்கள், குறிப்பாகப் பொதுமக்கள் கருத்துகளையும் சேகரித்து, அவற்றையும் பரிசீலித்தே பாடங்களுக்கு இறுதி வடிவம் அளிக்கப்பட்டது. புதிய பாடங்கள் அனைத்தையும் எழுதியது 100% அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் என்பதுதான் உண்மை. அது மட்டுமல்லாமல், பாடத்திட்டக் குழு நிறைவுகொள்ளும் வகையில், குழுவாகவோ தனியாகவோ மீண்டும் மீண்டும் திருத்தி எழுதி, துல்லியமும் எளிமையும் காக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆசிரியர்கள் செலுத்திய உழைப்பு அளப்பரியது.

பாடநூல் ஏன் பெரிதானது?

அப்படியென்றால் ஏன் ஆசிரியர்கள் புதிய பாடநூல்களைச் சுமையாகக் கருதும் பார்வை உருவானது? பக்கங்கள் அதிகரிக்கப்பட்டது ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. உண்மையில், பக்கங்கள் அதிகரிப்பானது புத்தகத்தை வாசிப்பதை ஒரு இலகுவான அனுபவமாக மாற்றும் முயற்சியின் வெளிப்பாடே. முந்தைய புத்தகங்களைக் காட்டிலும், புதிய புத்தகங்களில் எழுத்துரு பெரிது, படங்களும் விளக்கங்களும் அதிகம். பள்ளியில் வெறும் கருத்தியலாகவே (Theory) படிப்பதால்தான் கல்லூரிக்கோ போட்டித் தேர்வுக்கோ செல்லும்போது, மாணவர்கள் திணறுகிறார்கள் என்பதை உணர்ந்து, செயல்முறைப் பயிற்சிகள் உள்ளடக்கப்பட்டன.

பாடநூல் உருவாக்கப்படும்போது அவை கடைக்கோடி மாணவர் வரை கொண்டுசேர்ப்பது அவசியமாகும். இதுவே சமூகநீதியின் அடிப்படை. இது பாடநூல் உருவாக்கத்தில் கருத்தில் கொள்ளப்பட்டது. இதன் வெளிப்பாடு எதுவரை நீண்டது என்றால், புதிய பாடநூல் ஒவ்வொன்றிலும் வெறுமனே பாடம் மட்டும் கொடுக்கப்படாமல், அந்தப் பாடம் தொடர்பான மேற்படிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு பற்றிய வழிகாட்டுதல் பக்கங்களும் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

எந்தப் பாடநூலையும் முழுக்க முழுக்கப் போட்டித் தேர்வு பயிற்சி நூலாகத் தயாரிக்க முடியாது என்பதைக் கல்வியாளர்கள் அறிவார்கள். தமிழ்நாடு பாடநூல் கழகம் அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கென ஆறு தொகுதி வினா வங்கிகளை ‘பியர்சன்’ நிறுவனத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு, தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. அரசால் நடத்தப்படும் பயிற்சி மையங்களில் அந்த வினா வங்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆக, முழுமையாகவே போட்டித் தேர்வை மையமாகக் கொண்டு, பாடநூல்கள் உருவாக்கப்பட்டன என்றும் சொல்லிவிட முடியாது.

என்ன தீர்வு?

ஆசிரியர்கள் புதிய பாடநூல்களின் முக்கியத்து வத்தையும், அதை எளிமையாக மாணாக்கர்களிடம் கொண்டுசெல்வதையும் தொடர் பயிற்சியாக மேற்கொள்வதுதான் இதற்கான தீர்வு. முன்னதாக, தமிழக அரசே முன்னின்று ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளது. இதுபோல ஒவ்வொரு பாடத்திலும் கற்பித்தல் முழுமையாக வெற்றியடைய ஆண்டு முழுவதும் அல்லது வார நாட்களில் ஆசிரியர்களுக்கு இணைய வழி பயிற்சி அளிப்பதற்கு உரிய திட்டங்களை வகுத்து, தமிழக அரசு செயல்படுத்தலாம். இந்த ஊரடங்குக் காலத்தைப் பயன் மிக்கதாக உருமாற்றிக்கொள்ள ஆசிரியர்களே இதை ஒரு தன்முயற்சியாகவும் முன்னெடுக்கலாம்.

- சுல்தான் இஸ்மாயில், புதிய பாடத்திட்டக் குழு உறுப்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x