Published : 16 Jul 2020 07:06 AM
Last Updated : 16 Jul 2020 07:06 AM

சித்ரவதைக்கு எதிராக அவசரச் சட்டம் தேவை- கனிமொழி பேட்டி

சாத்தான்குளம் காவல் கொலைகளை விசாரிக்க வேண்டும் என்று தேசிய விவாதமாகத் தொடர்வதில் தீவிர முனைப்புக் காட்டிவருகிறார் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி. தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு அவர் எழுதிய கடிதத்தின் விளைவாக இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு மாவட்ட நிர்வாகத்தை அது கேட்டுக்கொண்டது. தொடர்ந்து, சித்ரவதைகள் தடுப்புச் சட்டத்தை அவசரச் சட்டமாக நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய உள் துறை அமைச்சருக்கு கனிமொழி எழுதிய கடிதம் தேசிய அளவில் பேசுபொருளாகியிருக்கிறது. இது தொடர்பில் அவரிடம் பேசியதிலிருந்து...

ஏறக்குறைய 23 ஆண்டுகளுக்கு முன்பு சித்ரவதைகளுக்கு எதிரான ஐநாவின் உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திட்டது. 2010-ல் மக்களவையில் மட்டுமே அதற்கான சட்ட முன்வரைவு ஏற்றுக்கொள்ளப்பட்டது. உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி சட்ட முன்வரைவை சட்ட ஆணையம் சமர்ப்பித்த நிலையிலும் ஏன் அந்தச் சட்டம் இயற்றப்படுவதில் இவ்வளவு கால தாமதம் நிலவுகிறது?

சித்ரவதை, உயிர் வாழ்வதற்கான அடிப்படை மனித உரிமைகளையே கேள்விக்குள்ளாக்குகிறது, அந்த உரிமையை மறுதலிக்கிறது. விசாரணையின் பெயரால் ஒருவரைத் துன்புறுத்தி, அடித்து, அவரது உயிருக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு அரசாங்கம் நடந்துகொள்வதை உலகின் பல நாடுகள் இன்று ஏற்றுக்கொள்ளவில்லை. சித்ரவதைகளுக்கு எதிரான ஐநா உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திட்டிருக்கிறது. ஆனால், அதையும் தாண்டி தேசிய மனித உரிமைகள் ஆணையம் சொல்லக்கூடிய எதையுமே பல மாநிலங்கள் கடைப்பிடிப்பதில்லை என்கிற நிலைதான் இருக்கிறது. தமிழ்நாட்டில் சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்துக்குப் பிறகு மறுபடியும் இது ஒரு பேசுபொருளாக மாறியிருக்கிறது.

ஆனால், இது உலகின் ஏதோ ஒரு இடத்தில் என்றைக்கோ ஒரு தடவை நடக்கக்கூடிய விஷயம் அல்ல. இது தினந்தோறும் எல்லா இடங்களிலும் நடக்கிறது. அதிலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தவர்களின் மீதும், சிறுபான்மைச் சமூகத்தவர்களின் மீதும் இந்த வன்முறை விசாரணை என்கிற பெயரில் பிரயோகிக்கப்படுகிறது. மலைவாழ் மக்கள், பழங்குடி மக்களின் மீதும் இந்த வன்முறை இன்னும் அதிகமாக இருக்கிறது. 2019-ல் மட்டும் இந்தியாவில் 1,731 பேர் காவல் நிலையங்களில் இறந்திருக்கிறார்கள். தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பில், அதிகளவில் காவல் மரணங்கள் நடக்கக்கூடிய மாநிலங்களின் முன்வரிசையில் தமிழ்நாடும் இருக்கிறது.

பெரும்பாலான வழக்குகளில் குற்றப்பத்திரிகைகளே சமர்ப்பிக்கப்படவில்லை. காவல் மரணங்களுக்காக போலீஸார் தண்டிக்கப்படுவது என்பது அரிதினும் அரிதாகத்தான் நடக்கிறது. எனவேதான், யாரை வேண்டுமென்றாலும் தீவிரவாதி என்றோ திருடன் என்றோ காவல் நிலையத்துக்குக் கொண்டுசென்று, விசாரணை என்ற முறையில் வன்முறைகளைப் பிரயோகித்துக்கொண்டிருக்கிறார்கள். காவல் துறையினருடன் சண்டையிட்டார் என்று சொல்லி, காயல்பட்டினத்தில் இளைஞர் ஒருவரை அடித்து, அவருக்குச் சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருக்கிறது.

இதுபோல ஆயுள் முழுவதும் பாதிப்புகளைச் சுமந்துகொண்டு வாழக்கூடியவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்? இந்த நிலையில், சித்ரவதைத் தடுப்புச் சட்டத்தை இயற்றுவதால், அரசாங்கங்களும் அரசாங்கத்தில் இருக்கக்கூடியவர்களும் தங்கள் கையில் இருக்கக்கூடிய ஒரு ஆயுதத்தை விட்டுக்கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாவார்கள். எனவே, அந்தச் சட்டத்தை இயற்றிவிடக் கூடாது என்று கண்ணுக்குத் தெரியாத சக்திகள் இயங்குகின்றன. பெண்களுக்கு நாடாளுமன்றத்தில் இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்தும் சட்டத்தை எப்படிச் சில சக்திகள் தடுத்துக்கொண்டிருக்கின்றனவோ அதுபோல சித்ரவதைத் தடுப்புச் சட்டத்தையும் சில சக்திகள் தடுத்துக்கொண்டிருக்கின்றன. சித்ரவதைத் தடுப்புச் சட்டம் பலருடைய அதிகாரங்களைக் கேள்வி கேட்கிறது என்பதால், அதை இயற்றுவதற்குத் தடைகள் நிலவுகின்றன.

நாடாளுமன்ற அவைகள் கூட்டப்படவில்லை என்பதாலேயே அவசரச் சட்டம் வேண்டும் என்கிறீர்கள். ஆனால், சட்ட ஆணையத்தின் சட்ட முன்வரைவை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?

அது வலுவான சட்ட முன்வரைவாக இல்லை. குறைந்தபட்ச தண்டனை என்பதைக்கூடத் தெளிவாகச் சொல்லவில்லை. ஆறு மாதங்களுக்குள் புகார் அளிக்கப்பட வேண்டும் என்று அதில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆறு மாதங்களுக்குள் புகார் கொடுக்க முடியாத பல சூழல்கள் இருக்கின்றன. நீதிமன்றத்துக்கு முன்னர் குற்றங்களைச் சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்க வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட விதி. ஆனால், எல்லாக் குற்றச்சாட்டுகளுக்கும் கால வரம்புகளை விதிப்பது சரியாக இருக்க முடியாது. காவல் துறை அதிகாரி மாறுதலாகிச் செல்லும் வரை பாதிக்கப்பட்டவர்கள் காத்திருக்க நேரிடலாம். பாதுகாப்பான ஒரு சூழலுக்காகவோ அல்லது பொருளாதாரரீதியாகவோ, சட்டரீதியாகவோ ஆதரவுகள் கிடைக்கும்வரையிலோகூட பாதிக்கப்பட்டவர்கள் காத்திருக்க வேண்டியிருக்கலாம் அல்லவா? அதற்கான கால அவகாசத்தைப் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுப்பதுதானே முறையானது! தெரிவுக்குழுவில் இதுபோன்ற பல விஷயங்கள் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு, இந்தச் சட்ட முன்வரைவை எவ்வளவு விரைவில் கொண்டுவர முடியுமோ அவ்வளவு விரைவாகக் கொண்டுவந்து சித்ரவதை என்பதை ஒரு குற்றம் என்று உறுதிப்படுத்த வேண்டும்.

காவல் குற்றங்கள் தனிப்பட்ட காவலர்களின் குற்றங்களாகத்தான் பார்க்கப்படுகின்றன. அவற்றுக்கு அரசும் பொறுப்பேற்றுக்கொள்வதுதானே முறையானது?

ஒரு குற்றத்தைத் தனியாகப் பார்க்கும்போது அரசாங்கத்தைக் குறை சொல்ல முடியாது. பெரும்பாலும் சில அதிகாரிகள் சேர்ந்து செய்கிற தவறாகத்தான் இருக்கிறது. ஆனால், இந்தக் குற்றங்கள் தொடர்ந்துகொண்டே வருகின்றன, அவற்றுக்குத் தண்டனையும் அளிக்கப்படுவதில்லை என்கிறபோது, அரசு என்கிற அமைப்பும் அதற்குப் பொறுப்பாளி ஆக வேண்டும். சாத்தான்குளம் சம்பவத்தை எடுத்துக்கொண்டால், அதில் இறந்தவர்கள் எந்தவிதக் குற்றப் பின்னணியும் இல்லாதவர்கள். நடுத்தரக் குடும்பப் பின்னணியில் இருந்து வந்த தந்தையும் மகனுமான வியாபாரிகள். அதனால் எல்லோரும் அவர்களுக்கு ஆதரவாக நிற்கிறோம். அவர்களுக்கு இருந்த அதே உரிமைகள் குற்றப் பின்னணியைக் கொண்ட ஒருவருக்கும்கூட உண்டு என்பதையும்கூட நாம் மறுக்க முடியாதல்லவா? சந்தேகத்தின்பேரில் விசாரணை என்ற பெயரிலேயே நாம் பலரைத் தொடர்ந்து இழந்துகொண்டிருக்கிறோம்.

சித்ரவதைத் தடுப்புச் சட்டத்தின் தேவை மட்டுமின்றி, சாட்சியச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டங்களிலும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்ற சட்ட ஆணையத்தின் பரிந்துரைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?

வரதட்சணைக் கொலைகளில் பாதிக்கப்பட்டவர்கள்தான் குற்றத்தை நிரூபிக்க வேண்டும் என்ற நிலை மாறிவிட்டது, ஏழாண்டுகளுக்குள் அத்தகைய குற்றங்கள் நடந்தால் குற்றச்சாட்டுக்கு ஆளான மணமகன் குடும்பத்தாரே தங்களது குற்றமின்மையை நிரூபிக்க வேண்டும் என்று சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதுபோலவே, காவல் நிலைய மரணங்களிலும் காவல் துறையினர்தான் தங்களது குற்றமின்மையை நிரூபிக்க வேண்டும் என்று திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும். குற்றவியல் நடைமுறையை எல்லா சூழல்களிலும் நிர்ப்பந்தப்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஜெயராஜும் பென்னிக்ஸும் கடை திறந்துவைத்திருந்தார்கள் என்று முதல் தகவல் அறிக்கையை தாக்கல்செய்தது மட்டுமில்லாமல், அவர்களை நீதிமன்றக் காவலிலும் வைத்திருக்கிறார்கள். கரோனா காலத்தில் விசாரணைக் காவலில் இருப்பவர்களை வெளியே விடுங்கள் என்று உச்ச நீதிமன்றமே சொல்லியிருக்கும்போது, சாத்தான்குளம் சம்பவத்தில் அவர்களைக் காவலில் விசாரிக்க வேண்டிய அவசியமே எழவில்லை. சட்டம் என்பது வளர்ந்துகொண்டேவரும் ஒரு செயல்முறை. ஒரு சமூகம் வளர வளர அதன் சட்டங்களும் மேம்பட வேண்டும். சட்டத்தின் மனிதாபிமானம் அதிகரிக்க வேண்டும்.

- செல்வ புவியரசன், தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x