Last Updated : 30 Sep, 2015 08:23 AM

 

Published : 30 Sep 2015 08:23 AM
Last Updated : 30 Sep 2015 08:23 AM

சுறா, செல்ஃபி மற்றும் முதுமை!

தனிமையில் தவிக்கும் முதியவர்களுக்கு அரவணைப்புதான் மருந்து

நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ உதவும் மருத்துவக் குறிப்புகளையும் செய்திகளையும் தினந்தோறும் தேடித்தேடிப் படிப்பேன். வழக்கமாக அது உணவு சம்பந்தமாகத்தான் இருக்கும். ‘கேரட், பீட்ருட் சாப்பிடுங்கள், கீரையைக் கைவிடாதீர்கள், பாதாம் பருப்பை மறக்க வேண்டாம், பேரீச்சம் பழம் மலச்சிக்கலைப் போக்கும், சோயா பீன்ஸ் கொழுப்பைச் சேர்க்காது, கொள்ளு நல்லது’ என்று விதவிதமாக இருக்கும். ‘எதையும் மிதமாகச் சாப்பிடுங்கள், காரம் சேர்த்துக்கொள்ள வேண்டாம், உப்பு சிறிது போதும்’ என்றும் சாப்பாடு பற்றிப் போதிப்பார்கள். இவற்றையெல்லாம் படித்துவிட்டு என் சம வயது நண்பர்களிடம் பகிர்ந்துகொள்வேன். அவர்களும் ஆமோதிப்பதுடன் மேலும் சில தகவல்களைப் புதிது போலச் சொல்வார்கள். தகவல்கள்தான் நமக்குத் தீனியாக இருக்கும்.

கவலையின் வகைகள்

எப்போதும் கவலைப்பட புதிது புதிதாக ஏதேனும் தோன்றிக்கொண்டே இருக்கிறது. சுறா மீன்கள் தாக்கி இறந்தவர்களைவிட, செல்ஃபி எடுக்கும்போது மலை உச்சியிலிருந்தும் கட்டிடத்தின் உயரமான இடத்திலிருந்தும் விழுந்து இறந்தவர்கள்தான் கடந்த ஆண்டில் அதிகம் என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இதில் சிரிப்பதற்கு ஏதும் இல்லை என்றாலும், நீச்சல் போன்ற பொழுதுபோக்கின்போது இறப்பதைவிட, என்னைப் பற்றியே கவலைப்பட்டுக்கொண்டேதான் இறப்பேன் என்று தோன்றுகிறது. புதுமையாக எதையாவது செய்து உயிரிழப்பதைவிட, புத்திசாலித்தனமாக இறப்பதே சிறந்தது. அதற்கு ஒரே வழி, ஆயுட்காலம் முழுவதும் வாழ்ந்து இயற்கையாக முடிவை எதிர்கொள்வதுதான். அதற்காக நீண்ட நாள் வாழ்வதா, நினைத்தாலே பயங்கரம்தான்?

இறப்பு பற்றி யாருக்கும் கவலையில்லை. அது எப்படி நேரப்போகிறது என்பதில்தான் கவலையே! புற்றுநோய், நினைவிழத்தல் நோய், மூட்டு வலியால் நகர முடியாமல் கிடப்பது என்பதெல்லாம் வரும் என்று கேள்விப்படும்போது அச்சம் ஏற்படுகிறது. எலும்புகள் வலுவிழந்துவிட்டால் யாரையாவது சார்ந்துதான் நடமாட வேண்டும். என்னைப் பற்றியே எனக்கு மறந்துவிட்டால்? யாராவது சொல்லித்தான் நான் யாரென்றே தெரிந்துகொள்ள வேண்டும். இதுதான் முதியோர்களின் முதுமை பற்றிய அச்சமா? அல்லது இந்த நிலையே இறப்புதானா?

முதுமையைப் பற்றிய எண்ணமே கசப்பாக இருக்கிறது. நம்முடைய சமூகத்தில் இனி முதியோர்கள் அதிகமாக இருக்கப்போகிறார்கள் என்று புள்ளிவிவரங்களாகத்தான் அதைப் பற்றிப் பேசுகிறோம். இதிலிருந்து வரும் கிளைக் கதைதான், அகதிகளை ஏற்பதால் ஐரோப்பாவுக்கு ஏற்படக்கூடிய நன்மை பற்றியது. முதியோர்களை அகதிகள் பார்த்துக்கொள்வார்கள்!

முதியோர்கள் நடத்தப்படும் விதம் குறித்து வருத்தப்படாதவர்களே கிடையாது. ஆனால், தங்களுடைய வீட்டில் உள்ள முதியோர்கள் ஆரோக்கியமாக, எப்போதும் சிரித்துக்கொண்டு, தங்களுக்குள் எத்தனை வருத்தம் இருந்தாலும், வலி இருந்தாலும் அவற்றையெல்லாம் மறைத்துக்கொண்டு வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

80 வயதை எட்டிவிட்டால் முதுமைக்கால நோய்கள் அனைத்தும் வந்துவிடும் என்பதே உண்மை. அப்படி வந்தால் என்ன செய்வது? குறைந்தபட்சக் கவனிப்பிலேயே நல்லபடியாக வாழ்ந்துவிட வேண்டும். வீட்டில் இருப்பவர்களுக்குத் தொல்லையாகவும் எரிச்சலாகவும் இருந்துவிடக் கூடாது என்றே விரும்புகிறோம். பச்சை நிற மூலிகைச் சாறைக் குடித்துவிட்டு வியாதியே இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்துவிடலாம் என்றெல்லாம் மனப்பால் குடித்தாலும், யதார்த்த நிலைமை வேறு விதமாக இருக்கிறது. யாருக்கும் பயன்படாமல், வியாதிவெக்கையோடு பராமரிப்பின்றி, நைந்துபோன சமூக அடுக்குகளாக மூலையில் கிடக்கப்போகிறோம் என்பதை நினைத்தாலே வருத்தம் அதிகரிக்கிறது.

ஹென்றி மார்ஷ், அதுல் கவாண்டே போன்ற சிந்தனையாளர்களான மருத்துவர்கள் முதுமை, இறப்பு ஆகிய இரண்டையும் பற்றிப் பேசுகிறார்கள். முடிவு நெருங்கிவிட்டது என்பது தெளிவாகிவிடும்போது அதை எப்படி வலியில்லாமல், தொல்லையில்லாமல் எதிர்கொள்வது என்று கூறுகிறார்கள். முதுமைக் காலத்தில் தேவைக்கு அதிகமாகச் சிகிச்சை அளித்து நோயாளிக்கு வேதனையை அதிகப்படுத்திவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள். முதியோர்களுக்கு எதை அளிப்பது என்பதில் முன்னுரிமை அவசியம். நோய்க்கான சிகிச்சையா, வலியில்லாத முதுமையா? இதற்கான விடை, நிச்சயமாக ‘மருந்து’ இல்லை.

மருத்துவர் கவாண்டே இறந்த தன்னுடைய தந்தையின் அஸ்தியைக் கங்கையில் கரைத்துவிட காசிக்கு எடுத்துச் சென்றார். ஒரு நல்ல இந்து என்ற வகையில், அஸ்தியை கங்கையில் கரைத்தால்தான் அந்த ஆத்மா கரைசேரும். ஆனால், ஒரு மருத்துவர் என்ற வகையில், அஸ்தியை ஆற்று நீரில் கரைத்தால் அதன் மூலம் கிருமிகள் நீரில் பரவி மற்றவர்களுக்கு நோயை உண்டாக்கும். எனவே, அவர் தனக்கு நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க மருந்தைச் சாப்பிட்டுவிட்டு கங்கையில் கால் வைத்தார். அவருடைய தந்தையின் வேலை, வாழ்க்கை, பாசம் போன்ற நினைவுகளோடு கரையேறினார்.

துணையற்ற ஆன்மாக்கள்

இந்த இடத்தில் கவாண்டேயின் தந்தைக்கும் நமக்கும் (மேற்கத்திய முதியோர்கள்) முக்கியமான வித்தியாசம் இருக்கிறது. நம்மை வாட்டுவது முதுமை, வியாதி மட்டுமல்ல... அவற்றைவிடக் கொடுமையான ‘தனிமை’. கவாண்டேயின் வீட்டில் அவருடைய தந்தை யுடன் வசித்த ஏகப்பட்ட உறவினர்களுடன் நம்முடைய வீடுகளைப் பொருத்திப் பார்ப்பது சரியாக இருக்காது.

முதுமையில் தேவைப்படுவது உறவினர்களுடனான இருப்பு, அன்பு, மகிழ்ச்சி, பேச்சுத்துணை. மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த 10 லட்சம் முதியவர்களில் 75 வயதைத் தாண்டிய பலரிடம் பேட்டி கண்டபோது, தங்களுடைய பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் யார் என்றே தெரியாது என்றனர். ‘கடந்த ஒரு மாதமாக எங்களுடன் ஒருவர் கூடப் பேசவே இல்லை’ என்றும் ஏக்கத்துடன் தெரிவித்துள்ளனர். அவர்களுடைய துணையெல்லாம் வீட்டிலிருந்த தொலைக்காட்சிப் பெட்டிதான்.

முதியவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்களுக்குப் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. வலியில்லாமல் இருக்க முன்னுரிமையா, வியாதியைத் தீர்க்கக் கடும் சிகிச்சையா என்பது அதில் முக்கியமானது. வலியால் வேதனைப்படாமல் இருக்க அவர்கள் தற்கொலை செய்துகொள்ளக்கூட உதவி செய்யலாம் என்று சிலர் பொறுப்பற்றுக் கூறுகிறார்கள்.

இதில் நாம் நேர்மையாகக் கருத்து தெரிவிக்க வேண்டும். முதியோர்களை யாரும் பார்த்துக்கொள்ளத் தேவையில்லை. அவர்கள் என்ன சின்னக் குழந்தைகளா என்று கூறி அவர்களைத் தனிமைப்படுத்திவிடுகின்றனர். அரசும் அவர்களுக்கான சமூகநலத் திட்டங்களில் கூச்சமில்லாமல் கை வைத்துவிடுகிறது. முதியவர்களை வீட்டில் வைத்திருப்பவர்கள் தங்களுடைய தூக்கம், ஓய்வு கெடக் கூடாது; தங்களுடைய சுற்றுலா, பொழுதுபோக்கு, வேலை போன்றவற்றுக்கு முதியவர்கள் இடைஞ்சலாக இருக்கக் கூடாது என்று கருதி, இல்லங்களில் சேர்த்துவிட்டுச் சென்றுவிடுகின்றனர். எனவே, மேற்கத்திய நாடுகளில் முதியவர்கள் சாவைவிடத் தனிமைக்குத்தான் அஞ்சுகின்றனர். அந்தத் தனிமையிலும் நோய் சேர்ந்துவிட்டால் அதுவே தாங்க முடியாததாகிவிடுகிறது. வயது ஏற ஏற முடிவு நெருங்குகிறது; எப்படி முயன்றாலும் முதியவர்களால் ‘வருங்காலத்தை’ சுகமாக எதிர்கொள்வது என்பது இயலாத காரியமாகவே இருக்கிறது!

சுருக்கமாகத் தமிழில்: சாரி, © ‘தி கார்டியன்’

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x