Last Updated : 13 Jul, 2020 07:50 AM

 

Published : 13 Jul 2020 07:50 AM
Last Updated : 13 Jul 2020 07:50 AM

நிறுவனங்கள் எழுந்து நிற்கப் புதிய ரத்தம் பாய்ச்ச வேண்டும்!

இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் 100 மோட்டார் வாகனங்களில் 45 வாகனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தியாகுபவை. உதிரிபாகங்களை எடுத்துக்கொண்டாலும் நாட்டின் மொத்த உற்பத்தியில் 35% தமிழ்நாட்டில்தான். பஞ்சர் பார்ப்பது தொடங்கி பாடி கட்டுவது வரையில் பல லட்சம் பேருக்கு வேலை தருகிறது ஆட்டோமொபைல் துறை. இந்த ஊரடங்குக் காலத்தில் அந்தத் தொழிலின் நிலை என்ன? பேசலாம்.

எம்.புகழேந்திரன், லாரி பாடி கட்டும் பட்டறை உரிமையாளர்கள் சங்கத் தலைவர், நாமக்கல்.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 4 ஆயிரம் பாடி கட்டும் நிறுவனங்களில், நாமக்கல்லில் மட்டும் 500 பட்டறைகள் இருக்கின்றன. எலெக்ட்ரிக்கல், பெயின்ட்டிங், கிளாஸ் ஃபிட்டிங் போன்ற சார்புத் தொழில்களையும் சேர்த்து லட்சக்கணக்கானோருக்கு வேலை தருகிற துறை இது. ஊரடங்கால் 2 மாதங்களாக எல்லாப் பட்டறைகளும் மூடிக்கிடந்தன. ஊரடங்குத் தளர்வுக்குப் பிறகு, பட்டறைகளைத் திறந்துவிட்டோம். ஆனால், பாடி கட்டுவதற்கு வாகனங்கள் வரவில்லை. பொதுவாக, எங்களுக்கு வெளிமாவட்டங்களிலிருந்தும், கர்நாடகம், ஆந்திரம், கேரளம், பாண்டிச்சேரி போன்ற வெளிமாநிலங்களிலிருந்தும்தான் வாகனங்கள் வரும். ‘பிஎஸ் 6’ வாகனங்கள் வரப்போகிறது என்று வாகனம் வாங்குவதைத் தள்ளிப்போட்டவர்கள், கரோனாவுக்குப் பிறகு அந்த எண்ணத்தையே கைவிட்டுவிட்டார்கள். சரக்குப் போக்குவரத்துக்கான தேவை அதிகரித்தால்தானே புதிய லாரி வாங்குவார்கள்? பணப்புழக்கம் இருந்தால்தானே பழைய வாகனங்களுக்குப் புதிய பாடி கட்டும் எண்ணம் வரும்? 10% பேருக்குக்கூட வேலையில்லை. ஊரடங்கு முடிந்தவுடன், நிறுத்திவைத்த தவணைகளைக் கேட்டு வருவார்களே என்கிற பயத்தில் இருக்கிறோம்.

ஜி.முரளிபாபு, வாகன உதிரிபாகங்கள் உற்பத்தியாளர், ஓசூர்.

ஹூண்டாய், ஃபோர்டு, பிஎம்டபிள்யு, டிவிஎஸ், அசோக் லேலண்ட், யமஹா, மகேந்திரா என்று பல வாகன உற்பத்தி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. சிறிதும் பெரிதுமாக ஏராளமான வாகன உதிரிபாகங்கள் நிறுவனங்களும் செயல்படுகின்றன. தமிழ்நாட்டிலிருந்து உதிரிபாகங்கள் செல்லவில்லை என்றால், உலகில் பாதி கார்களை உற்பத்தியே செய்ய முடியாது என்கிற அளவுக்கு இந்தத் துறையில் நமது பங்களிப்பு இருக்கிறது. நாங்கள் சென்னை ஒரகடத்திலும், ஓசூரிலும் கனரக வாகனங்கள், இலகுரக வாகனங்களுக்கான உதிரிபாகங்களைத் தயாரிக்கிறோம். கொஞ்சம் விமான உதிரிபாகங்களும்கூட உற்பத்திசெய்கிறோம். எங்கள் நிறுவனத்தில் 500 பேர் வேலை பார்க்கிறார்கள். 3 மாதங்களாகத் தொழில் நடக்கவில்லை என்றாலும், தொழிலாளர்களுக்குச் சம்பளம் தர வேண்டும், மின்கட்டணம் செலுத்த வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அத்தனை நிறுவனங்களின் நிலையும் அதுதான். ஒவ்வொரு தொழில் நிறுவனம் நடத்துபவர்களும் நிறைய தடைகளையும் இழப்பையும் தாண்டித்தான் இன்றைய இடத்துக்கு வந்திருப்பார்கள். ஆனால், இது பேரிடர்; வழக்கத்தைவிட 100 மடங்கு பெரிய சவால். புதிய ரத்தம் பாய்ச்சினால்தான் இந்த நிறுவனங்களால் எழுந்து நிற்க முடியும். எனவே, உடனடியாக நிதிஉதவி செய்ய வேண்டும்.

என்.ஜெய்குமார், வாகன உதிரிபாகங்கள் விற்பனையாளர் சங்கம், சேலம்.

வாகன விற்பனையும், உதிரிபாகங்களின் உற்பத்தியும் குறைந்தது எங்கள் தொழிலிலும் எதிரொலிக்கிறது. முன்பெல்லாம் டாடா, மாருதி, மகேந்திரா, அசோக் லேலண்ட் போன்ற நிறுவனங்களின் உதிரிபாகங்களை வாங்குகிறபோது, பணம் தருவதற்கு அவகாசம் தருவார்கள். இப்போது அவர்களே பணமுடையில் இருப்பதால், ‘காசு தந்தால்தான் சரக்கு’ என்கிறார்கள். பிராண்டட் அல்லாத கம்பெனிகளும்கூட உற்பத்தி முடங்கியதால், ரொம்பவே கிராக்கி பண்ணுகிறார்கள். அதனால், நாங்களும் எங்களுடைய வாடிக்கையாளர்களிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு வாங்குங்கள் என்கிறோம். எங்கள் தொழிலில் இப்படி நடப்பது சாத்தியமில்லாதது. அத்தியாவசியப் பொருட்கள் தடை செய்யாதீர்கள் என்ற நோட்டீஸ் ஒட்டியபடி சரக்கு வாகனங்கள் 24 மணி நேரமும் இயங்குகின்றன. ஆனால், மாலை 4 மணிக்கு ஒரு வாகனம் பழுதானால், கடையடைப்பு காரணமாக உதிரிபாகம் வாங்க முடியாது. ஆம்புலன்ஸே ரிப்பேர் ஆனாலும், உதிரிபாகம் எடுத்துக்கொடுக்க முடியாத நிலை. மற்ற ஊர்களாவது பரவாயில்லை, சென்னையும் மதுரையும் ரொம்ப மோசம். வாகன இயக்கம் அத்தியாவசியம் என்றால், அவற்றுக்கு உதிரிபாகம் விற்பதும் அத்தியாவசியப் பணிதானே?

சந்திரசேகரன், ரப்பர் பார்க் மதுரை தொழில் குழுமத் தலைவர்.

இந்தியாவில் ஓடுகிற எந்த வாகனத்தை எங்கே நிறுத்திக் கழற்றினாலும், அதில் மதுரையில் தயாரிக்கப்பட்ட 10 ரப்பர் உதிரிபாகங்கள் இருக்கும். புகழ்பெற்ற ஸ்டம்பர் ரப்பர் பந்தும், மருத்துவ சிரிஞ்சுக்குள் உள்ள ரப்பர் பிஸ்டலும்கூட இங்கேதான் உற்பத்தியாகின்றன. அதேபோல சென்னையைச் சுற்றி அப்போலோ, சியட், மிச்சிலின், எம்ஆர்எஃப் என்று ஏராளமான டயர் கம்பெனிகள். ஓரளவு ஆர்டர்கள் இருந்தாலும்கூட தொழில்செய்ய முடியாத நிலை. குறைந்த பணியாளர்களைக் கொண்டுதான் வேலைகள் நடக்கின்றன. அதில் பலருக்கும் பாஸ் கிடைக்காததால், வேலைக்குப் போக முடியவில்லை. உற்பத்திசெய்த உதிரிபாகங்களை ஏற்றுமதி செய்யவும், உள்ளூர் சந்தையில் விற்கவும் சிரமங்கள் இருக்கின்றன. ஒரு பெல்ட் வாங்க முடியாமல், சிறு-குறு நிறுவனங்கள் பலவும் வேலைசெய்ய முடியாமல் இருக்கின்றன. எனவே, காலையில் வெறுமனே 3 மணி நேரம் மட்டுமாவது இதுபோன்ற பொருட்களை விற்கவும், லாரியில் புக் செய்யவும் அரசு அனுமதிக்க வேண்டும். கூடுதல் அடமானம் கொடுக்காமல் ஏற்கெனவே உள்ள கடனைவிடக் கூடுதலாக 20% கடன் பெற்றுக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால், வங்கிகள் பாதி நிறுவனங்களுக்குக் கடன் தரவில்லை. புதிய முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு உலக மாநாடு நடத்தும் அரசு, உள்ளூர் முதலீட்டாளர்கள் மீது அக்கறைகொள்ள வேண்டிய நேரம் இது.

ஆர்.சுந்தரம், விமான உதிரிபாகங்கள் தயாரிப்பாளர், சேலம்.

விமானம், ஹெலிகாப்டர், ராக்கெட், இந்திய ஏவுகணைகளுக்குத் தேவையான 18 ஆயிரம் பாகங்களைத் தயாரிக்கிறோம். 16 தேசிய விருதுகளைப் பெற்ற 33 ஆண்டு கால நிறுவனம் இது. கரோனாவால் நாங்களும் பாதிக்கப்பட்டோம். இந்த நிலையில், பிரதமர் அறிவுறுத்தலின்பேரில், 30 ஆயிரம் வென்டிலேட்டர்களைப் போர்க்கால அடிப்படையில் தயாரிக்க வேண்டும் என்று டிஆர்டிஓ நிறுவனம் 8 நிறுவனங்களைத் தேர்வுசெய்தது. அதில் எங்களது நிறுவனமும் ஒன்று. ஒரு வென்டிலேட்டரில் உள்ள 320 பாகங்களில் 46 பாகங்களைத் தயாரிக்கும் பொறுப்பு எங்களிடம் வழங்கப்பட்டது. கடந்த சனிக்கிழமையுடன் 30 ஆயிரம் வென்டிலேட்டர்களுக்கான உதிரிபாகங்களை உற்பத்திசெய்துவிட்டோம். டிஆர்டிஓ அலுவலர்களே, ராணுவ வாகனத்தில் வந்து அவற்றைப் பெற்றுச் சென்றார்கள். சாதாரண நாட்களில் 12 மணி நேரம் இயங்குகிற எங்கள் நிறுவனம், ஊரடங்கு காலத்தில் 17 மணி நேரம் இயங்கியது. வேலை பார்த்த அத்தனை பேரும் 25 முதல் 30 வயதுக்குள் உள்ள இளைஞர்கள். இதில் பெரிய லாபம் கிடையாது என்றாலும், நிறைய கற்றுக்கொண்டோம்.

- கே.கே.மகேஷ்,தொடர்புக்கு: magesh.kk@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x