Published : 17 May 2014 08:55 AM
Last Updated : 17 May 2014 08:55 AM

நமோ பேரலை

இந்தியத் தேர்தல் வரலாற்றையே நரேந்திர தாமோதர்தாஸ் மோடி மாற்றியிருக்கிறார். சரியாகச் சொல்லப்போனால், இந்தியத் தேர்தல் வரலாறு இதுவரை இரு பெரும் அலைகளைக் கண்டிருக்கிறது. ஒன்று, இந்திரா காந்தி மரணத்துக்குப் பின் ராஜீவ் காந்திக்கு ஆதரவாக எழுந்த பேரலை; அடுத்து, மன்மோகன் சிங் அரசின் பெரும் ஊழல் ஆட்சிக்குப் பின் மோடிக்கு ஆதரவாக இப்போது திரண்டிருக்கும் பேரலை. முன்னது, இயல்பாக உருவானது. பின்னது, ஒரு தனி மனிதன் முன்னின்று உருவாக்கியது. தேர்தலுக்கு வெகுநாட்களுக்கு முன்னரே இந்தத் தேர்தலின் மையம் தன்னை நோக்கிச் சுழலுமாறு மாற்றிவிட்டார் மோடி. ஒரே நேரத்தில் அவர் இரு யுத்தங்களை நடத்தினார்: ஒன்று, கட்சிக்குள்... இன்னொன்று, கட்சிக்கு வெளியே. “எங்கள் கட்சியில் மோடியையும் சேர்த்து ஏழெட்டு பிரதமர் வேட்பாளர்கள் இருக்கிறார்கள்; அதில் எட்டாவது இடத்தில் மோடி இருப்பார்” என்று பா.ஜ.க. தலைவராக இருந்த நிதின் கட்காரி சொன்னது பல யுகங்களுக்கு முந்தி அல்ல. இரண்டாண்டுகளுக்குள்தான். கொஞ்சம் கொஞ்சமாக எல்லோரையும் பின் தள்ளி முன்னேறிய மோடி, ஒருகட்டத்தில் தன்னுடைய மிகப் பெரிய யுத்தத்தைத் தன் குருநாதரிடம் எதிர்கொண்டார். கட்சி தன்னைத் தேர்ந்தெடுப்பது அதன் முன் இருக்கும் வாய்ப்பு அல்ல; அதுதான் ஒரே வழி என்பதை உணர்த்திய மோடி, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னும், அந்த யுத்தத்தைத் தொடர்ந்தார். காலங்காலமாகக் கட்சிக்குள் கோலோச்சிக்கொண்டிருந்த மூத்த தலைகளுக்கு அவர்களுடைய இடத்தைச் சுட்டிக்காட்டினார். கட்சிக்குத்தான் முதலிடம் - தனிநபருக்கு அல்ல என்று காலங்காலமாகச் சொல்லிக்கொண்டிருந்த கட்சியின் சகல தரப்பினரையும் மோடிதான் கட்சி என்று கிட்டத்தட்ட சொல்ல வைத்தார். இன்னொரு யுத்தம் ஏனைய கட்சிகளுடன் அவர் நடத்தியது. இந்தத் தேர்தலில் மக்கள் முன் ஒரேயொரு கேள்விதான் இருந்தது: மோடி வேண்டுமா வேண்டாமா? அவரை எதிர்த்தவர்கள் ஆயிரம் விமர்சனங்களை வைத்திருந்தார்கள். ஒரே வார்த்தையில் அவர் எல்லாவற்றையும் சல்லடையாக்கினார்: வளர்ச்சி! ஒருகட்டத்தில் அவரைப் பற்றி மட்டுமே எதிரிகள் பேச ஆரம்பித்தார்கள். அவர்களிடத்தில் பேச ஒன்றுமே இல்லாமல் போனது. பா.ஜ.க. பெற்றிருக்கும் மகத்தான வெற்றி உண்மையில் இந்தியாவின் அத்தனைக் கட்சிகளுக்கும் பெரிய நெருக்கடி. இனி, அவர்கள் தங்களைப் புதுப்பித்துக்கொண்டே ஆக வேண்டும். சகல பலவீனங்களுடனும் தங்கள் வாக்கு வங்கியை நம்பி அவர்கள் களம் இறங்க முடியாது. இல்லாவிட்டால், குஜராத்தில் உருவாக்கியதுபோல் எதிர்க்கட்சி ஒன்றையே இல்லாமல் அவர் ஆக்கிவிடக்கூடும்!

சவால்கள்

மோடியை எது ஜெயிக்க வைத்ததோ, அதே முழக்கம்தான் அவர் எதிர் கொள்ளும் பெரிய சவாலும் ‘வளர்ச்சி’. ஊழலுக்கு எதிரான மக்களின் எழுச்சி மோடியிடம் எதிர்பார்ப்பது நேர்மையான நிர்வாகத்தை. கட்சிக்குள் இப்போது இருக்கும் எடியூரப்பா போன்ற ஊழல் கறை படிந்தவர் கள் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தால் சமாளிப்பது இரண்டாவது சவால். கட்சியின் தனிப் பெரும்பான்மை எண்ணிக்கை பிளவுகளுக்கு அஞ்சாத அளவுக்கு அதிகம் இல்லை என்பதால், கட்சிக்குள் உள்ள அணிகள் மூன்றாவது சவால். விலைவாசி உயர்வு என்றுமே சவால்.

பெரிய கேள்வி

பா.ஜ.க. முதல் முறையாகத் தனிப் பெரும்பான்மை பெற்றிருக்கும் நிலையில், கட்சி யின் தனித்துவக் கொள்கை களான பொது சிவில் சட்டம், ராமர் கோயில் போன்ற சங் பரிவாரக் கோரிக்கைகள் முழு வீச்சில் எழும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இந்த சேவகர் அந்த அமைப்பை எப்படிக் கையாளப்போகிறார் என்பதுதான் பெரிய கேள்வி.

இவை நடக்கலாம்

நதிநீர் இணைப்புத் திட்டம், புல்லட் ரயில் திட்டம், வீடுகள்தோறும் மாற்று எரிசக்தி உற்பத்திக்கு வித்திடும் திட்டம், பயங்கரவாதத் தடுப்புக்குத் தீவிர நடவடிக்கைகள்.

இவையும் நடக்கலாம்

பொது சிவில் திட்டம், ராமர் கோயில் திட்டம், அரசியல் சாசனத்தில் காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து நீக்கம், சேது சமுத்திர திட்டத்துக்கு நிரந்தர மூடுவிழா.

இது நடக்குமா?

வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை மீட்டெடுத்தல்.

அலைவீச்சு

அசாம் முதல் ஆந்திரம் வரை மோடி அதிர்வு உணரப்பட்டது. சொந்த மண் குஜராத் ஒட்டுமொத்தமாக 26 இடங்களையும் மண்ணின் மைந்தனுக்கு வாரி வழங்கியது. மோடியின் வியூகப்படி கட்சி குவித்த மொத்த தொகுதிகளில் நான்கில் ஒரு பங்கை-71 தொகுதிகளை உத்தரப் பிரதேசம் தந்தது. டெல்லி, ராஜஸ்தான், மகாராஷ்டிரம், பிஹாரில் கிடைத்த இடங்கள் போட்ட கணக்கைக் காட்டிலும் அதிகம்.

எதிர்ப் புயல்

தமிழகம், கேரளம், மேற்கு வங்கம் இந்த மூன்று மாநிலங்களுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. மூன்றுமே இயல்பில் மதச்சார்பின்மையைத் தூக்கிப் பிடிக்கும் மாநிலங்கள். மூன்றி லுமே ஆளும் ஆட்சியாளர்கள் மீது பெரிய அதிருப்தி இல்லை. இத்தனை பெரிய அலைக்கு மத்தியிலும் தமிழகத்தில் ஜெய லலிதா நல்லாட்சி தருவதாக மக்கள் நம்புகிறார்கள்.

நண்பர்கள்

பா.ஜ.க. தனிப் பெரும் பான்மை பெற்றிருக்கும் சூழலில், வெளியே நிற்கும் கட்சிகளில் காங்கிரஸ், கம்யூ னிஸ்ட் கட்சிகள் தவிர, பலவும் எந்த நேரத்திலும் மோடி பக்கம் சாயலாம். ஒருவேளை பெரும் பான்மை எண்ணிக்கையில் பிளவு ஏற்பட்டால் ஜெயலலிதாவின் 37 இடங்கள் ஆபத்பாந்தவனாக உதவலாம். கட்சியிலும் ஆட்சியிலும் ராஜ்நாத் சிங், அமித் ஷா இரு கரங்களாக நிற்பார்கள். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாக்வத்தின் ஆசீர்வாதம் எப்போதும் உண்டு.

எதிரிகள்

பா.ஜ.க-வுக்கு வெளியே உள்ள மோடியின் எதிரி கள் இப்போது பலவீனப்பட்டு விட்டார்கள். உண்மையில் மோடியின் எதிரிகள் கட்சிக்குள் தான் இருக்கிறார்கள். எந்த நேரத்திலும் அத்வானி, ஜோஷி உள்ளிட்ட மூத்த தலைகள் கை கோக்கலாம்.

வட்நகரில் இருந்து டெல்லிக்கு..!

மாநிலம் (அப்போதைய பம்பாய் மாகாணம்) வட் நகரில் தாமோதர்தாஸ் முல்சந்த் மோடி- ஹீராபென் தம்பதியரின் மகனாக 1950 செப்டம்பர் 17-ல் நரேந்திர தாமோதர்தாஸ் மோடி பிறந்தார்.

சிறு வயதில் புத்தர், விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றால் பெரிதும் ஈர்க்கப்பட்ட மோடி வீட்டைவிட்டு வெளியேறி வடஇந்தியாவுக்குச் சென்றார். அங்கு சாதுக்களைச் சந்தித்து அவர்களோடு பல மாதங்கள் தங்கியிருந்தார். 1960-ல் மீண்டும் அவர் வீட்டுக்குத் திரும்பினார்.

வட் நகர் ரயில் நிலையத்தில் மோடியின் தந்தை டீக்கடை நடத்தி வந்தார். அந்தக் கடையில் தந்தைக்கு உதவியாக இருந்த மோடி ரயில் நிலைய பிளாட்பாரங்களில் டீ விற்றார். பின்னர் அகமதாபாத் பஸ் நிலையத்தில் தனது சகோதரர்களின் டீக்கடையிலும் அவர் வேலை செய்தார்.

குஜராத் பாரம்பரிய வழக்கத்தின்படி சிறு வயதிலேயே மோடிக்கும் யசோதா பென்னுக்கும் திருமணம் நடைபெற்றது. ஆனால், கொஞ்ச காலத்திலேயே அவர்கள் பிரிந்துவிட்டனர்.

அமெரிக்காவில் பயின்ற மோடி

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சிறு வயது முதலே அதிக ஈடுபாடு கொண்ட மோடி அந்த இயக்கத்தின் முழு நேர ஊழியர் ஆனார்.

பிற்காலத்தில் அரசியலில் நுழைந்த மோடி படிப்படியாக முன்னேறினார். 1987-ல் அகமதாபாத் நகர பா.ஜ.க. செயலாளராக நியமிக்கப்பட்டார். தன்னுடைய பணிகளால், 1995-ல் கட்சியின் தேசிய செயலரானார்.

இதற்கிடையில் டெல்லி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் குஜராத் பல்கலைக்கழகத்தில் அதே பாடப்பிரிவில் எம்.ஏ. பட்டம் பெற்றார். 1990-ல் அமெரிக்கா சென்ற அவர் அங்கு மக்கள் தொடர்பு, தனிநபர் ஆளுமைத் திறன் குறித்த மூன்று மாத பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயின்றார்.

நான்கு முறை முதல்வர்

குஜராத் பூகம்பத்தின்போது அப்போதைய முதல்வராக இருந்த கேசுபாய் பட்டேல் பதவி விலக நேரிட்டது. அதைத் தொடர்ந்து 2001 அக்டோபர் 7-ம் தேதி முதல்வர் பொறுப்பை மோடி ஏற்றார். அன்று முதல் இன்று வரை தொடர்ந்து நான்காவது முறையாக குஜராத் முதல்வராக அவர் பதவி வகித்து வருகிறார்.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து 2002-ம் ஆண்டில் குஜராத்தில் பெரும் கலவரம் வெடித்தது. இந்தச் சம்பவம் உள்நாடு மற்றும் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதன் பிறகு குஜராத்தில் 2007-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல், 2009-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் பா.ஜ.க. அதிக இடங்களைக் கைப்பற்றி சாதனை படைத்தது.

2013-செப்டம்பரில் கட்சியின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டார். இப்போது வரலாற்று வெற்றியுடன் டெல்லிக்குச் செல்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x