Last Updated : 12 Jul, 2020 08:25 AM

 

Published : 12 Jul 2020 08:25 AM
Last Updated : 12 Jul 2020 08:25 AM

இருவர் கூட்டணியும் ஒரு இசை சகாப்தமும்

வைரமுத்து திரைப்பயணத்துக்கு மூன்று காலகட்டங்கள் உண்டு. 1) இளையராஜா காலம், 2) இளையராஜாவுக்கும் ரஹ்மானுக்கும் இடையிலான காலம், 3) ரஹ்மான் காலம். முதல் இரண்டு காலகட்டங்களில் பெரிதும் அதற்கு முந்தைய திரைப்படப் பாடல் மரபின் தொடர்ச்சியையே அதிகம் காணப்படுவதால், அதை ஒன்றடக்கிவிடலாம். ஆக, மூன்றாவதை இரண்டாவதாக்கிக்கொள்ளலாம். மேலும், ரஹ்மானுடன் வைரமுத்து பணிபுரிந்த காலமே நெடியது. பொதுவாக, எந்தக் கலைஞருக்கும் நெடிய பயணத்தின் பிற்பகுதியில் வீழ்ச்சி ஏற்படும் என்பதற்கு மாறாக வைரமுத்துவிடம் பெரும் பரிணாம வளர்ச்சியே பிற்பகுதியில் காணப்படுகிறது. ஆக, இரண்டாவது காலகட்டமே நம்முடைய முக்கியமான பேசுபொருளாகிறது.

சந்தம், பாடலின் கதைச் சூழல், சமத்காரம், கவித்துவம் போன்றவற்றின் கலவையாக வைரமுத்துவின் முற்பகுதி பாடல்களை நாம் பார்க்கலாம். ‘நீ மல்லிகைப் பூவைச் சூடிக்கொண்டால் ரோஜாவுக்குக் காய்ச்சல் வரும்’ என்பதில் கவித்துவத்தைவிட, அதற்கு எதிரான அறிவு சமத்காரமே அதிகம். இதுபோன்ற வரிகள் கவர்ச்சியானவை, வெகுமக்களை எளிதில் ஈர்ப்பவை. இதுபோன்ற பாடல்களுக்குத் திரை மரபிலும் கவி மரபிலும் இடம் உண்டு. ஆனால், வைரமுத்துவின் உண்மையான பலம் இதுவல்ல. இதைத் தாண்டியும் தன்னால் செல்ல முடியும் என்று அவர் நிரூபிப்பவைதான் அடுத்துவந்த காலகட்டத்தில் அவர் எழுதிக்கொண்டிருக்கும் பாடல்கள். இதற்கு அர்த்தம் ரஹ்மான் வந்துதான் வைரமுத்துவைக் கண்டுபிடித்தார் என்பதல்ல; புதிய வெடிப்பை நிகழ்த்தக் காத்திருந்த வைரமுத்துவின் கவித்துவம் தனக்கான திறப்பை ரஹ்மானின் இசையில் கண்டுகொண்டது என்பதுதான்.

ரஹ்மானின் ஒலி அதிநவீனமாகப் பார்க்கப்பட்டதுபோல் அதை நிரப்பிய வைரமுத்துவின் வரிகளும் அதிநவீனமாக இருந்தன. இதற்காக வார்த்தைகளின் மேல் சந்தத்தின் சுமையையோ சமத்காரத்தின் சுமையையோ வைரமுத்து ஏற்றவில்லை. ‘நீ அணைக்கின்ற வேளையில் உயிர்ப்பூ திடுக்கென்று மலரும்’ என்ற வரிகளில் ‘திடுக்கென்ற’ எனும் மிகச் சாதாரண வார்த்தைதான் பாடல் வரிக்கு அழகூட்டுகிறது. ‘என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்/ என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார்/ என் வீட்டுத் தென்னங்கீற்றை இப்போதே கேட்டுப்பார்/ என் நெஞ்சைச் சொல்லுமே’ என்ற வரிகள் தற்காலத்து எளிமையான தமிழில் எழுதப்பட்ட சங்கப் பாடலைப் போலவே இருக்கின்றன.

ரஹ்மான் காலகட்டத்துக்கு வைரமுத்துவுடனான முக்கியமான இணைவாக மட்டும் அல்லாது, தமிழ்த் திரையிசையின் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகவும் வைரமுத்து-ரஹ்மான் கூட்டணியின் மணிரத்னம் படங்களைக் குறிப்பிட வேண்டும். இவர்களுடைய முக்கியமான, அதேசமயம் அதிகம் கவனிக்கப்படாத பாடலாக ‘தீ தீ தித்திக்கும் தீ’ பாடலைச் சொல்வேன். பாரதியின் ‘காக்கை சிறகினிலே நந்தலாலா’ பாடலைப் போன்ற சொல்லின்பத்தைத் தரும் பாடல் இது. அசாத்தியமான திறமை கொண்ட பாடலாசிரியராலும் இசையமைப்பாளராலும் இப்படிப்பட்ட ஒரு சூழலையும் இணைவையும் உருவாக்க முடிந்த இயக்குநராலும் மட்டுமே இப்படிப்பட்ட பாடல் சாத்தியமாகும். இவர்களுடைய மிக முக்கியமான படம் ‘உயிரே’. அந்தப் படத்தின் அதிதுள்ளலான ‘தைய தைய தையா’ பாடலைக்கூட வலி ஏற்படுத்தும் அனுபவமாக ஆக்கியிருப்பார் வைரமுத்து. ‘அவள் கண்களோடு இருநூறாண்டு / மூக்கின் அழகோடு முன்னூறாண்டு / அவள் அழகின் கதகதப்பில் ஆண்டு ஐநூறு / வாழ வேண்டும் தையா தையா’ என்ற வரிகளில் ஏக்கத்தை ஏற்படுத்துகிறார் என்றால், ‘ஒரு மலையில் நான் கண்ட மாணிக்கமா / என் மனதில் உந்தன் ஆதிக்கமா / இது ஒருநாள் இருநாள் நீடிக்குமா/ இல்லை உயிரின் மூலத்தைப் பாதிக்குமா…’ என்ற வரிகளில் வலியை ஏற்படுத்துகிறார். எனினும், காதல் வேதனையைக் கடந்த முப்பதாண்டுகளில் வந்த திரைப்படப் பாடல்களில் மிகத் தீவிரமாகச் சொன்ன பாடல் என்றால் அது, அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘சந்தோஷக் கண்ணீரே’ பாடல்தான். காதல் என்றாலே உழற்சிதான் என்பதைத் தீரத்தீரச் சொல்லும் பாடல்.

சமீப காலத்தில் வைரமுத்துவின் மொழி மேலும் மேலும் நவீனப்பட்டு, அதே நேரத்தில் கவித்துவத்திலும் செழுமைப்பட்டுவருகிறது. ‘ஓ காதல் கண்மணி’யின் ‘தீரா உலா’ பாடல் முழுவதுமே முழுமைபெறாத சொற்றொடர்களைச் சிதறவிட்டு வேடிக்கை பார்த்திருப்பார் வைரமுத்து. இடையில் வரும் பெண்ணின் குரல்தான் ‘... சரிந்துவிடும் அழகென்று தெரியும் கண்ணா/ என் சந்தோசக் கலைகளை நான் நிறுத்தமாட்டேன்’ என்று முழுமையாகப் பேசுகிறது. அது பெண்மையின் கவித்துவம். அந்தக் கவித்துவத்தில் ஆண்கள் ‘கால வெளியிடை… பொற்கணமாய்… அற்புதமாய்’ திளைக்கிறார்கள். ‘காற்று வெளியிடை’ படத்தின் ‘நல்லை அல்லை’ பாடலில் வரும் ‘மகரந்தம் தேடி நுகரும் முன்னே/ வெயில் காட்டில் வீழ்ந்துவிட்டாய்’ என்ற வரிகள் சங்கமும் நவீனமும் முயங்கும் இடம். ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் ‘மழைக்குருவி’ பாடல் ஒரு நவீன ‘கிளாசிக்’. பாரதிதாசனின் ‘அழகின் சிரிப்பு’ போன்ற ஒரு படைப்பைத் திரைப்படப் பாடலில் செய்து பார்த்த முயற்சி. இந்தப் பாடல் உருவாக்கும் நிலப்பரப்பு, மனப்பரப்பு, கவிப்பரப்பு மிகவும் தெறிப்புகளைக் கொண்டவை. ஒரு அழகிய இயற்கைக் காட்சியை நாடகமாக நிகழ்த்திக் காட்டுகிறார் வைரமுத்து. மெட்டுக்கு எழுதினாலும் சரி, எழுதியதற்கு இசையமைத்தாலும் சரி, இது நிச்சயம் ஒரு சாதனைதான். ‘கீச்சு கீச் என்றது / கிட்ட வா என்றது’ போன்ற வரிகளும், ‘காட்டில் அந்நேரம் கதையே வேறு கதை/ கூட்டை மறந்துவிட்டு குருவி கும்மியடித்தது காண்’ போன்ற வரிகளும் திரைப் பாடல் சட்டகத்தை விட்டு வெளியே வந்து எழுதப்பட்டவை. அதனாலேயே நவீனத்துடன் கூடிய செவ்வியல் அழகைத் தமிழுக்குத் தருகின்றன.

ரஹ்மானின் வருகைக்கு முன்பே வைரமுத்துவின் இடம் தமிழ்த் திரை வரலாற்றில் உறுதிப்பட்டுவிட்ட ஒன்று. ஆக, ரஹ்மானின் வருகையின்போது நிகழ்ந்தது வைரமுத்து 2.0. ரஹ்மானுக்கும் முன்பும் சரி, ரஹ்மானுக்குப் பிறகும் சரி ஏனைய பிற இசையமைப்பாளர்களுக்கும் வைரமுத்து குறிப்பிடத்தகுந்த பாடல்கள் பல எழுதியிருக்கிறார் என்றாலும், இந்த இருவர் கூட்டணி ஒரு தனிப் பரிணாமத்தை அடைந்தது; அது நமது அதிர்ஷ்டம்.

- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x