Last Updated : 09 Jul, 2020 07:56 AM

 

Published : 09 Jul 2020 07:56 AM
Last Updated : 09 Jul 2020 07:56 AM

பொதுப் போக்குவரத்து சீராவதுதான் எங்கள் உடனடி எதிர்பார்ப்பு!

தீப்பெட்டி தொடங்கி வாகன உற்பத்தி வரை நம் அன்றாடத்தின் ஒவ்வொரு விஷயத்திலும் வேதிப்பொருட்களின் பயன்பாடு இருக்கிறது. வேதிப்பொருட்களுக்குச் செயற்கையான தட்டுப்பாடு உருவாகியிருக்கிறது என்கின்றனர் வேதிப்பொருள் உற்பத்தியாளர்கள். தமிழ்நாட்டில் லட்சக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் இந்தத் துறை, ஊரடங்கால் எப்படியான சிக்கல்களை எதிர்கொண்டிருக்கிறது? பேசலாம்.

ஏ.பி.செல்வராஜன், தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம்.

இந்தியாவின் ஒட்டுமொத்த பட்டாசு உற்பத்தியில் 90% விருதுநகர் மாவட்டத்தில்தான் நடக்கிறது. இங்கே மட்டும் நேரடியாக 2 லட்சம் பேரும், மறைமுகமாக 3 லட்சம் பேரும் வேலைவாய்ப்பு பெறுகிறார்கள். இந்தியா முழுக்க சரக்குப் போக்குவரத்து, சில்லறை விற்பனையில் ஈடுபடுவோரையும் சேர்த்தால் 30 லட்சம் பேர் வருவார்கள். முதல் 44 நாட்கள் வேலை இல்லாததால், மீண்டும் கம்பெனி திறந்ததும் ஊழியர்கள் ஆர்வமாக வேலைக்கு வந்தார்கள். சமூக இடைவெளியைப் பின்பற்றி 65% உற்பத்தி நடைபெறுகிறது. தீபாவளி தவிர திருமணம், திருவிழாக்களுக்கென பட்டாசு வாங்கும் பழக்கம் வடமாநிலங்களில் அதிகமுண்டு. இந்த ஆண்டு அப்படியான வியாபாரம் அறவே இல்லை. மஹாராஷ்டிரம், கர்நாடகத்தில் நடைபெறுகிற விநாயகர் சதுர்த்தி ஊர்வலமும் இந்த ஆண்டு பெரிதாக இருக்காது. தீபாவளிதான் எங்கள் ஒரே நம்பிக்கை. ஆனால், கரோனாவால் பெருந்திரளான மக்கள் பொருளாதார இழப்பைச் சந்தித்திருப்பதால் இந்த ஆண்டு எப்படி வியாபாரம் இருக்குமோ என்ற பயம் இப்போதே தொடங்கிவிட்டது. மேலும், இப்போது விருதுநகர் மாவட்டத்திலும் தொற்று அதிகரித்திருப்பதால் இங்கே உற்பத்தியை நிறுத்தும்படி நேரும். அப்படி நடந்தால் தொழிலாளிகளின் நிலை பரிதாபமாகிவிடும்.

சண்முகக்கனி, தீப்பெட்டித் தயாரிப்பாளர், கோவில்பட்டி.

தமிழ்நாட்டில் முதன்முதலில் ஊரடங்கைத் தளர்த்தி, உற்பத்தியைத் தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்தது தீப்பெட்டி உற்பத்திக்குத்தான். ஆரம்பத்தில் கேரளத்திலிருந்து தீக்குச்சிக்கான தடிகளைக் கொண்டுவருவதற்கும், மதுரை, பாண்டிச்சேரியிலிருந்து வேதிப்பொருட்கள் வருவதற்கும் சிரமம் இருந்தது. இப்போது பரவாயில்லை. ஆனால், இன்னும் முழு உத்வேகம் வரவில்லை. மேலும், தொழிலாளர்கள் பற்றாக்குறை இருக்கிறது. அஸ்ஸாம் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குப் போய்விட்டார்கள். 50% உற்பத்தி நடக்கிறது. ஸ்டாக் வைக்கத் தேவையில்லாத அளவுக்கு அவை சந்தைக்குப் போய்விடுகின்றன. இப்போது சிவகாசியில் நோய்த்தொற்று அதிகமாகிவிட்டது என்று காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே நிறுவனங்கள் செயல்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். அப்படியானால் லேபிள் அச்சடிப்பது, தீப்பெட்டிக்கான போர்டு தயாரிப்பது எல்லாம் குறையும். அதற்கேற்ப நாங்களும் உற்பத்தியைக் குறைக்க வேண்டியிருக்கும். வேலைக்கு ஆட்கள் வந்துபோக பொதுப் போக்குவரத்து முறையாகச் செயல்படுவது அவசியம். பலருக்கும் அது ஒரு பெரிய நெருக்கடியாகவே இருக்கிறது. நோயைவிடப் பட்டினிக்குத்தான் மக்கள் பயப்படுகிறார்கள் என்பதை அரசு உணர வேண்டும்.

முஹம்மது, தோல் தொழிற்சாலை, திண்டுக்கல்.

இந்தியாவுக்கு அதிக அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் முதல் பத்து தொழில்களில் தோல் பதனிடுதலும் ஒன்று. உலக தோல் தேவையில் மாட்டுத்தோல் 20%, ஆட்டுத்தோல் 11% இந்தியாவில்தான் உற்பத்தியாகின்றன. நாட்டில் 44.2 லட்சம் பேருக்கு வேலை தரும் துறை இது. தமிழ்நாட்டில் வேலூர், திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்கள் இந்தத் தொழிலில் முன்னிலையில் இருக்கின்றன. ஏற்கெனவே பொருளாதார மந்தநிலை, பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி என்று நலிந்துகொண்டிருக்கும் தொழில் மீது, இப்போது ஊரடங்குத் தாக்குதலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பொதுப் போக்குவரத்துப் பிரச்சினையால் தோல் பொருட்களை உரிய நேரத்தில் தொழிற்சாலைக்குக் கொண்டுவரத் தாமதமாவதால், கெட்டுப்போய் தரமும் குறைந்துபோகிறது. நாம் அதிகமாக ஏற்றுமதிசெய்வது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்குத்தான். இப்போது சர்வதேசப் போக்குவரத்து முடங்கியிருப்பதன் காரணமாக அறவே ஏற்றுமதி நின்றுவிட்டது. இது மேலும் நீடிக்காமல் தொலைநோக்குப் பார்வையுடன் மத்திய அரசு செயல்பட வேண்டும். அதை மாநில அரசு வலியுறுத்த வேண்டும். தோல் பதனிடும், காலணித் தொழிற்சாலைகளில் தயாரித்து வைக்கப்பட்டுள்ள சரக்குகளையே எடுத்துக்கொள்ளத் தயங்கும்போது புதிய உற்பத்தி எப்படி நடக்கும்?

வி.எஸ்.மணிமாறன், சோப்பு, டிடர்ஜென்ட் உற்பத்தியாளர், மதுரை.

கரோனாவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அடிக்கடி சோப்பால் கைகளைக் கழுவ வேண்டும், சேனிடைசர் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதால், அவற்றின் விற்பனை அதிகரித்திருக்கிறது. ஆனால், உற்பத்திசெய்ய வேண்டுமே? உலகளாவிய பெருநிறுவனங்களின் ஆதிக்கத்திலிருந்து தமிழ்நாட்டைக் கடந்த 10 ஆண்டுகளில்தான் மீட்டெடுத்தோம். அதாவது, தமிழ்நாட்டின் மொத்த சோப்பு, டிடர்ஜென்ட் தேவையில் 60%-ஐ உள்ளூர் தயாரிப்புகள்தான் நிறைவுசெய்கின்றன. கூடவே, கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் அனுப்புகிறோம். பெரிய விளம்பரம் இல்லாமல், உழைப்பாலும் தரத்தாலும் சாத்தியப்படுத்திய சந்தை இது. இந்த ஊரடங்குக் காலத்தில் சோப்பு அத்தியாவசியம் என்று புரியாமல், பல மாவட்டங்களில் அதற்கும் தடைபோட்டுவிட்டார்கள். சென்னையிலும் மதுரையிலும் ஊரடங்குக்குள் ஊரடங்கு போட்டதால் தொழில்செய்ய முடியவில்லை. இதனால், எங்களது உள்ளூர் சந்தையும், பக்கத்து மாநில வியாபாரமும் பறிபோய்க்கொண்டிருக்கிறது.

கே.பி.முருகன், வேதிப்பொருட்கள் தயாரிப்பாளர்.

தமிழ்நாட்டில் பெருமளவு வேதிப்பொருட்கள் உற்பத்தியாவது தூத்துக்குடியிலும் கடலூரிலும்தான். எந்தப் பொருள் உற்பத்தியிலும் சிறிதளவாவது வேதிப்பொருட்கள் தேவைப்படும். தோல் பதனிடத் தேவையான உப்பு, தீப்பெட்டிக்குத் தேவையான குளோரைடு, சேனிடைசர் தயாரிக்கத் தேவையான ஆல்கஹால், டயர் வல்கனைசிங்குக்கான கந்தகம், ப்ளீச்சிங் பவுடர், கார் பேட்டரிகளுக்கான அமிலம், ஜவுளித் துறையில் கலரிங், ப்ளீச்சிங் செய்யத் தேவையான வேதிப்பொருட்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இதுபோன்ற தொழில் நிறுவனங்கள் எல்லாம் ஊரடங்கு காரணமாக மூடப்பட்டுவிட்டதால், வேதிப்பொருட்களுக்குச் செயற்கையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. குஜராத், மஹாராஷ்டிரத்திலிருந்து வேதிப்பொருட்களைக் கொண்டுவருவதில் நிறைய சிரமங்கள் இருக்கின்றன. இதனால், இவற்றை நம்பியிருக்கிற சின்னஞ்சிறு நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அதை நம்பியிருக்கும் தொழிலாளர்கள் எல்லாம் அமைப்புசாரா தொழிலாளர்கள் என்பதால், எந்த நிவாரணமும் இல்லாமல் தவிக்கிறார்கள்.

– கே.கே.மகேஷ், தொடர்புக்கு: magesh.kk@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x