Last Updated : 08 Jul, 2020 08:06 AM

 

Published : 08 Jul 2020 08:06 AM
Last Updated : 08 Jul 2020 08:06 AM

எஸ்.எம்.சந்திரமோகன்: மகத்துவர், மருத்துவர்!

தன்னுடைய பணியை முழுக்கவும் மக்களை மையப்படுத்தி ஆக்கிக்கொள்ளும் எவரும் வரலாற்றில் இடம்பெற்றுவிடுகிறார்கள். மரணங்கள் வெறும் எண்ணிக்கையாகிவிட்ட கரோனா காலத்திலும், மருத்துவரான எஸ்.எம்.சந்திரமோகனின் மறைவு மருத்துவத் துறையைத் தாண்டி பலராலும் பேசப்படவும் தமிழ்நாடு அளவில் ஒரு பெரிய இழப்பாகவும் கருதப்படவும் காரணம் அதுதான்.

தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டையில் பிறந்தவர் சந்திரமோகன். சாதாரண குடும்பம். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் 1979-ல் எம்பிபிஎஸ், பிறகு மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் 1984-ல் எம்.எஸ். படிப்புகளை முடித்தவர் தமிழக அளவில் அந்த ஆண்டின் சிறந்த மாணவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆரம்ப சுகாதார மையத்தில் அமைந்த பணிதான் ‘ஒரு நல்ல மருத்துவர்’ என்கிற வேலைசார் லட்சியத்திலிருந்து ‘ஒரு மக்கள் மருத்துவர்’ எனும் சேவைசார் லட்சியத்துக்கு சந்திரமோகனை உந்தியது. 47 கடலோரக் கிராமங்களுக்கு மருத்துவ சேவை அளித்துவந்த மையம் அது. விளைவாக, அடித்தட்டு மக்களின் வாழ்க்கைப்பாட்டையும் தன்னுடைய வாழ்க்கைக்கான அர்த்தப்பாட்டையும் அவர் கண்டடைந்தார்.

அடித்தட்டு மக்கள் மீதான அக்கறை

பிறகு, ‘மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி’யில் எம்சிஹெச் இரைப்பை குடலியல் அறுவை சிகிச்சை சூப்பர் ஸ்பெஷாலிட்டி திட்டத்தில் சேர்ந்தார். அங்கே, அவருக்குக் காலஞ்சென்ற பேராசிரியர் என்.ரங்கபாஷ்யத்தின் வழிகாட்டுதல் கிடைத்தது மிகப் பெரிய அனுபவமாக இருந்தது. இரைப்பை குடலியல் நிபுணர் ஆனார். இந்திய அளவில் அப்போது அந்தப் பட்டத்தைப் பெற்ற ஏழாவது நபர் சந்திரமோகன். பிற்பாடு அவர்தான் இந்தியாவில் இரைப்பை குடல் அறுவை சிகிச்சை துறையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்பவராகவும், சர்வதேச அளவில் குறிப்பிடத்தக்க மருத்துவர்களில் ஒருவராகவும் அவர் ஆனார்.

எப்போதும் அடித்தட்டு மக்கள் நலனில் அக்கறையோடு செயல்பட்டார் சந்திரமோகன். ராயப்பேட்டை பொது மருத்துவமனையின் தொற்றாநோய்களின் மையத்தில் இரைப்பை குடல் அறுவை சிகிச்சை துறையை அவர் நிறுவினார். 2000-ல் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியின் பேராசிரியராக ஆனார். பிறகு, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் இரைப்பை குடல் அறுவை சிகிச்சை துறையின் தலைவராகப் பதவி உயர்வு பெற்றார். ஓய்வுபெறும் வரையில் அந்தத் துறையிலேயே பணியாற்றினார். அதன் பிறகு, ராமச்சந்திரா மருத்துவமனையின் சர்வதேச மாணவர் திட்டத்தின் இயக்குநராக ஆனார்.

அமிலத்தைக் குடித்துத் தற்கொலைக்கு முயன்ற பலரையும் சந்திரமோகன் காப்பாற்றியிருக்கிறார். இது எளிதான விஷயம் அல்ல. அமிலம் உணவுக் குழாயையும் இரைப்பையையும் அரித்துவிடும். அதன் பிறகு தண்ணீர்கூடக் குடிக்க முடியாது. அவர்களை மீட்டெடுக்க பல்வேறு ஆபத்தான அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டும். இப்படி நூற்றுக்கணக்கானோரை சந்திரமோகன் காப்பாற்றியிருக்கிறார். இவர்களில் பெரும்பாலானோர் ஏழைகள். ‘தனியார் மருத்துவமனைக்குப் போய் பல லட்சங்கள் செலவழித்திருந்தாலும்கூட இப்படி ஒரு சிகிச்சை கிடைக்காது’ என்று சொல்லும் நிலையை அரசு மருத்துவமனையில் தன்னுடைய துறையில் அவர் உருவாக்கினார். அவரால் குணமடைந்தவர்களில் சிலர் பின்னாட்களில் அவரிடம் தன்னார்வலர்களாகப் பணியாற்றியது அவர்களுக்கு அவர் மீது இருந்த பிடிப்பை நமக்கு உணர்த்துகிறது.

அனுசரணையான அணுகுமுறை

நோயாளிகளை அவர் ஒருபோதும் வெறும் நோயாளிகளாக அணுகியதில்லை. எவ்வளவு வேலை இருந்தபோதும் தனது நோயாளிகள் ஒவ்வொருவரையும் பார்த்து அனுசரணையாக நான்கு வார்த்தைகள் பேசாமல் போக மாட்டார். ‘நம்பிக்கையைவிட ஒரு நோயாளிக்கு மருத்துவர் அளிக்கும் பெரிய சிகிச்சை வேறு எதுவும் இல்லை’ என்பார். குடல் புற்றுநோய் உட்பட குடல் சார்ந்த எந்த நோயும் மனித வாழ்க்கையை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவந்துவிட முடியாது என்கிற சூழலை நவீன மருத்துவத்தில் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. இதற்காகக் கடுமையாக அவர் உழைத்தார். ‘குடல் புற்றுநோய் உதவிக் குழு’ என்று ஓர் அமைப்பையே அவர் நிறுவினார். புற்றுநோய் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களையும் புற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்கான மாரத்தான் ஓட்டங்களையும் அவர் நடத்தினார். புற்றுநோய் கண்டவர்களின் ஆயுளை நீட்டிப்பது குறித்து மிகுந்த அக்கறை செலுத்தினார். இளம் அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவ வல்லுநர்கள் போன்றவர்கள் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கும் சமூகத்தின் மீது அவர்களுக்கு அக்கறை ஏற்படுத்துவதற்கும் உதவும் வகையில் அவர் ‘ஈசோ இண்டியா’ என்ற நிறுவனத்தை நிறுவினார்.

இரைப்பை குடல் அறுவை சிகிச்சையில் டாக்டர் சந்திரமோகன் பின்பற்றிய உத்திகளும் கண்டுபிடிப்புகளும் உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றவை. குறிப்பாக, நோயாளிகள் தாங்களாகவே செய்துகொள்ளக்கூடிய வகையிலான ’செல்ஃப் டிலட்டேஷன்’ முறையும் அவற்றில் ஒன்று. குரல்வளை, உணவுக்குழாய், இரைப்பை ஆகியவற்றின் பாதைகள் குறுகலாவதைத் தடுக்க அவர் முன்வைத்த உத்திகள் இன்று உலக அளவில் பின்பற்றப்படுகின்றன.

சமூக அக்கறை

தனது துறையில் சர்வதேச அளவில் முன்னணி நிபுணர்களில் ஒருவராக இருந்தாலும் சந்திரமோகன் பலரையும்போல, தனது நிபுணத்துவத்தை செல்வம் குவிப்பதற்குப் பயன்படுத்தவில்லை. 1990-களின் இடைப்பகுதியில் மூன்று மாதப் பயிற்சிக்காக நியூசிலாந்து சென்றபோது, அங்கே அவரது திறமையைப் பார்த்து அங்கேயே வேலைக்கு வந்துவிடும்படி கேட்டிருக்கிறார்கள். தான் பெற்ற கல்வியும் பயிற்சியும் தன்னுடைய தமிழ்ச் சமூகத்துக்குப் பயன்பட வேண்டும் என்று கூறியவர், அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார். இத்தனைக்கும் அப்போது இங்கே அரசு மருத்துவராக அவர் வாங்கிய சம்பளம் ரூ.20 ஆயிரம். அதுபோல 15 மடங்கு சம்பளம் தருவதாக அங்கே கூறப்பட்டதைத்தான் அவர் புறந்தள்ளினார்.

அரசு மருத்துவராக 31 ஆண்டு காலம் பணியாற்றிய சந்திரமோகன், ‘ஒரு அரசு மருத்துவராக இருப்பதில் உள்ள பெரிய சுகம் ஏழை மக்களோடு அன்றாடம் புழங்க முடிவதுதான்; உண்மையான சேவைக்கான அர்த்தத்தை அவர்கள்தான் உணர்த்துகிறவர்கள்’ என்று அடிக்கடி சொல்வார். மக்களின் சேவகரைக் காலமும் தமிழ் நிலமும் நினைவில் கொள்ளும்!

- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x