Published : 04 Jul 2020 12:31 PM
Last Updated : 04 Jul 2020 12:31 PM

காணாமல் போகும் இந்தியப் பெண்கள்

ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகை நிதியம் அண்மையில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் இந்தியாவில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் 4 கோடியே 60 லட்சம் பெண்கள் காணவில்லை என்ற அதிர்ச்சிகரமான தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

2013 முதல் 2017 வரையிலான கணக்கின்படி இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 4,60,000 பெண் குழந்தைகளைக் காணவில்லையாம். இதில் சுமார் 3,00,000 குழந்தைகள் பெண்ணாகப் பிறந்ததற்காகவே காணாமல்போயிருக்கிறார்கள் என்கிறது அறிக்கை.

ஆண் - பெண் விகிதாச்சாரம்

ஆயிரம் பெண் குழந்தைகளில் 13 குழந்தைகளுக்கு மேல் இறந்துபோவதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இந்தப் புள்ளிவிவரத்தின்படி உலக அளவில் பெண் குழந்தைகளின் இறப்பு விகிதம் இந்தியாவில்தான் அதிகம். ஆண் குழந்தைகளுக்கான தேர்வு என்பதே இதற்கும் அடிப்படை. அதாவது, ஐந்து வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளில் இறந்துபோகும் ஒன்பது குழந்தைகளில் ஒரு குழந்தை இறப்பிற்குப் பாலினமே காரணம் எனச் சுட்டிக்காட்டுகிறது அறிக்கை.

2011-ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 1000 ஆண்களுக்கு 943 பெண்கள்தான் உள்ளனர். கடந்த கால புள்ளிவிவரங்களைக் கொண்டு 2020-ல் இந்தியாவில் ஆண் - பெண் எண்ணிக்கையில் சமமின்மை மேலும் அதிகரிக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை முன்பே தெரிவித்திருந்தது. இந்த ஆண்டு இந்தியாவில் 1000 ஆண்களுக்கு 924 பெண்கள்தான் இருப்பார்கள் என்கிறது ஐ.நா.வின் அறிக்கை.

201 நாடுகளின் பட்டியலில் ஆண்-பெண் விகிதாச்சாரத்தில் உள்ள சமமின்மையில் இந்தியா 189-ம் இடத்தில் உள்ளது. ஆசியாவில் உள்ள 51 நாடுகளில் இந்தியா 43-ம் இடத்தில் உள்ளது. பாலினத் தேர்வின் அடிப்படையில் பெண் குழந்தைகள் கொல்லப்படுவதே ஆண் – பெண் விகிதாச்சாரத்தில் ஏற்படும் சமமின்மைக்கான முக்கியக் காரணம். இதுவே பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைகிறது.

பெண்களுக்கு எதிராக 19 விதமான கொடுமைகள்

ஆண்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பெண்களின் எண்ணிக்கை இல்லாதபோது திருமணத்துக்குப் பெண் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். இது குழந்தைத் திருமணத்துக்கு வழிவகுக்கும் என்கிறது ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகை நிதியம். பெண்களுக்கு எதிராக 19 விதமான கொடுமைகள் இந்தியாவில் நிலவுவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. குறிப்பாகப் பெண்ணுறுப்புச் சிதைப்பு, குழந்தைத் திருமணம், பெண் குழந்தைகள் மீதான பாகுபாடு போன்றவை பிரதானமானதாக இருக்கின்றனவாம்.

இவை அக்குழந்தைகளின் மரணத்துக்கும் பல நேரம் காரணமாக அமைந்துவிடுகிறது. அவர்களின் திறமைகளையும் ஆளுமையையும் வெளிக்கொணர்வதிலிருந்து தடுக்கிறது. இது அப்பட்டமான மனித உரிமை மீறலென்றும் அறிக்கை சுட்டுகிறது.

மாற்றம் ஏற்படுத்திய தொட்டில் குழந்தைத் திட்டம்

1994-ல் தமிழக அரசால் இயற்றப்பட்ட சட்டம், ஊடுகதிர் மையங்கள் (ஸ்கேன் சென்டர்) வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைத் தெரிவிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாக்கியது. இது பாலினத் தேர்வின் அடிப்படையில் கருக்கலைப்பு செய்வதைச் சிறிது தடுத்தது.

பாலினத் தேர்வின் அடிப்படையில் பெண் சிசுக்கொலை நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் 1992-ல் தமிழகத்தில் ‘தொட்டில் குழந்தைத் திட்டம்’ கொண்டுவரப்பட்டது. சேலம் மாவட்டத்தில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம் பின்னர் மதுரை, தேனி, திண்டுக்கல், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. பெண் குழந்தைகளைக் கொல்வது, பொது இடத்தில் குழந்தையை வீசிச் செல்வது போன்றவற்றை இத்திட்டம் சற்று குறைத்தது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த மாவட்டங்களில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. ஆனால், கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்திருந்தது. எனவே, தொட்டில் குழந்தைத் திட்டம் இம்மாவட்டங்களுக்கும் அப்போது விரிவுபடுத்தப்பட்டது.

அதிகரிக்கும் கருக்கலைப்பு, பெண் சிசுக் கொலை

இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்றபோதும் சமீபத்திய தகவல்கள் தமிழகத்தின் ஆண்-பெண் விகிதாச்சாரத்தைச் சற்று கூர்ந்து கவனிக்கச் செய்துள்ளது. 2013-14-ல் ஆயிரம் ஆண்களுக்கு 918 பெண்கள் என்கிற நிலையிருந்தது. 2018-19-ல் அது 931ஆக உயர்ந்துள்ளது. ஆனால், சில மாவட்டங்களில் இது கணிசமான சரிவைச் சந்தித்துள்ளது. குறிப்பாகத் தஞ்சை மாவட்டத்தில் 2014 –ம் ஆண்டு குழந்தைகள் பிறப்பு விகிதத்தின்படி ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 914 என்கிற நிலை மாறி 2017-ல் 950-ஆக இருந்தது. 2018–ம் ஆண்டோ அது 908 என்கிற நிலைக்குச் சரிந்துவிட்டது. கடலூர் மாவட்டத்தில் 2013-14 ல் 848 என்று இருந்த எண்ணிக்கை 2017-18-ல் 926 ஆக உயர்ந்து, பிறகு 2019–20-ல் அது 917-ஆகக் குறைந்துள்ளது.

குழந்தைகள் பிறப்பு விகிதத்திலேயே பெண் குழந்தைகள் பிறப்பது குறைகிறதெனில் நிச்சயம் பாலினத் தேர்வின் அடிப்படையில் கருக்கலைப்பு செய்யப்படுவதுதான் அதற்கான முக்கியக் காரணமாக இருக்க முடியும். ஸ்கேன் சென்டர்களில் இவை அறியப்படாமல் வேறு எங்கும் இதற்கான வாய்ப்பில்லை. கடந்த ஆண்டு கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சில ஸ்கேன் மையங்களில் இது குறித்து விசாரணையும் சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கூறும் மையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது, ஸ்கேன் மையங்கள் மீது கண்காணிப்பைக் கூடுதலாக்குவது,

மக்களிடம் விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்வது, கல்வியறிவை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளைக் கொண்டுதான் பாலினத் தேர்வின் அடிப்படையில் கருக்கலைப்பு செய்வதையும் பெண் சிசுக்கொலையையும் கட்டுப்படுத்த முடியும். ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களையும் தமிழக நிலவரத்தையும் ஒப்பாய்வு செய்து சமூகப் பார்வையோடு அதற்கான தீர்வை நோக்கி நாம் முன்னேற வேண்டியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x