Published : 03 Jul 2020 08:50 AM
Last Updated : 03 Jul 2020 08:50 AM

பரிதவிப்பில் இருக்கிறார்கள் தனியார் கல்லூரி ஆசிரியர்கள்- கே.எம்.கார்த்திக் பேட்டி

இந்தியா முழுவதுமாகவே தனியார் கல்லூரி ஆசிரியர்களின் அடிப்படை உரிமையைப் பேசக் குறிப்பிடும்படியாக சங்கங்கள் ஏதும் கிடையாது; அப்படிப் பேசுபவர்களுக்கு வேலை இருக்காது என்கிற அச்சுறுத்தல் சூழலே முக்கியமான காரணம். அரிதாக ஒலிக்கும் குரல்களில் ஒருவர் கே.எம்.கார்த்திக். திருச்சி என்.ஐ.டி.யில் பொறியியல் மேற்படிப்பு முடித்தவர். தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்துவந்தவர், ஒருகட்டத்தில் ஆசிரியர் பணியிலிருந்து விலகி ஆசிரியர்களுக்கான உரிமையை மீட்டெடுப்பதை இலக்காகக் கொண்டு அகில இந்திய தனியார் கல்லூரி ஊழியர்கள் சங்கத்தை (AIPCEU) நிறுவினார். கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பல்வேறு சட்டப் போரட்டங்களை நடத்திவருகிறார். கரோனா காலகட்ட நிலை என்ன? பேசினேன்.

கரோனா காலகட்டத்தில் தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் நிலைமை எப்படி இருக்கிறது?

கரோனா காலகட்டம் என்றில்லை, அதற்கு முன்பே இங்கு தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியர்களின் நிலைமை கவலைக்கிடமாகத்தான் இருந்தது. தற்போது அது உச்சத்துக்குச் சென்றுள்ளது. தற்சமயம் கல்லூரி ஆசிரியர்கள் மூன்று விதமான பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர். பணி நீக்கம், ஊதியமின்மை, மாணவர்கள் சேர்க்கை. தனியார் கல்லூரிகளில் 75%-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் சம்பளம் வழங்குவதை நிறுத்திவிட்டன. மீதமுள்ள கல்லூரிகளும் பாதிச் சம்பளத்தைதான் வழங்குகின்றன. பல கல்லூரிகள் செப்டம்பர் வரையில் ஆசிரியர்களைக் கல்லூரிக்கு வர வேண்டாம் என்று கூறிவிட்டது.

இந்த ஊடங்கு நிலையிலும் மாணவர் சேர்க்கைக்கு ஆசிரியர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்களா?

ஆமாம். இன்னும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளிவரவில்லை. ஆனாலும், பள்ளிகளைத் தொடர்புகொண்டு மாணவர்கள் தகவல்களைப் பெற்று, அவர்களது வீடுகளுக்குச் சென்று தங்கள் கல்லூரியில் சேர கேன்வாஸ் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே பொறியியல் கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் ஜூலை வரையில் ஊதியத்தைப் பிடித்து வைத்திருப்பது வழக்கமாக இருக்கிறது. அந்த மூன்று மாதம் மாணவர் சேர்க்கைக்கான காலகட்டம். ஒரு ஆசிரியர் தன் சார்பில் ஐந்து மாணவர்களைச் சேர்க்க வேண்டும். அப்போதுதான் அவருக்கு அந்த மூன்று மாதம் ஊதியம் வழங்கப்படும். இல்லையென்றால் நீங்கள் மாணவர்களைச் சேர்க்காததற்கு நஷ்டஈடாக அந்த மூன்று மாத ஊதியம் பிடித்தம் செய்யப்படும்.

மருத்துவர், வங்கி அதிகாரிபோல் மதிப்புமிக்கதாகக் கல்லூரி பேராசிரியர் பணி பார்க்கப்படுகிறது. ஆனால், நீங்கள் கூறுவது தலைகீழாக இருக்கிறதே?

அரசு கல்லூரிப் பேராசிரியர்களுக்குத்தான் நீங்கள் சொல்லும் மதிப்பு. தனியார் கல்லூரிப் பேராசிரியர்களின் நிலை மிகப் பரிதாபகரமானது. கட்டிடத் தொழிலாளியின் ஒரு நாள் சம்பளத்தைவிட தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியரின் சம்பளம் குறைவு. தமிழ்நாட்டில் மட்டும் 550-க்கு மேல் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் தரமான முன்னணி 50 கல்லூரிகளைத் தவிர்த்து மீதமுள்ள கல்லூரிகளில் உதவிப் பேராசிரியருக்கான குறைந்த ஊதியம் ரூ.10,000. ஐந்து வருட அனுபவம் உடையவராக இருந்தால் ரூ.25,000. இந்தச் சூழலில் மேற்படிப்பு அதற்கான அர்த்தத்தை இழக்கிறது. தற்போது ஆசிரியரின் திறன் முக்கியமற்றதாக மாறியிருக்கிறது. மாணவர்களைச் சேர்க்கும் திறன் இருந்தால் நீங்களும் கல்லூரி ஆசிரியராகலாம்.

மாணவர் சேர்க்கை இல்லாதபோது எங்களால் எப்படி ஊதியம் வழங்க முடியும் என்று கல்லூரி நிர்வாகங்கள் கூறுகின்றனவே?

கல்வித் துறை, பிற தொழில் துறை போன்றது அல்ல, விற்றால்தான் லாபம் என்று கூறுவதற்கு. ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கையின்போது அந்த ஆண்டுக்கான பணம் வாங்கப்பட்டுவிடுகிறது. இப்படி இரண்டாம், மூன்றாம், நான்காம் வருடம் மாணவர்கள் எனப் பெரும் தொகை வசூலிக்கப்படுகிறது. இந்தத் தொகை மாதாந்திரச் செலவுகளை அடிப்படையாகக் கொண்டது அல்ல. அது நீண்ட கால அடிப்படையில் பயன்படுத்தக்கூடிய தொகை. இதிலும் மாணவர்களிடம் வசூலிக்கும் தொகையில் 10%-க்கும் குறைவாகத்தான் ஊதியத்துக்கு ஒதுக்கப்படுகிறது. எனவே, தொழில் துறைபோல் எங்கள் தொழில் முடங்கிவிட்டது, நாங்கள் எப்படி ஊதியம் வழங்க முடியும் என்று கூற முடியாது.

ஊதியம் தொடர்பாக அரசின் நிலைப்பாடு என்ன?

பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கான ஊதியத்தை முறைப்படுத்த வேண்டும் என்று நீண்ட நாள் கோரிக்கை விடுத்துவருகிறோம். தொழில்நுட்பக் கல்விக்கான அகில இந்தியக் குழுவின் விதிப்படி பொறியியல் கல்லூரி உதவிப்பேராசியருக்கான ஊதியம் ரூ.68,900 அளவில் வழங்கப்பட வேண்டும். ஆனால், இங்கு ரூ.15,000 வழங்கப்படுவதே பெரிய விஷயமாக இருக்கிறது. மெட்ரிகுலேசன் பள்ளிகளில் நான்காயிரம், ஐந்தாயிரம் என்ற அளவில் ஊதியம் வழங்கப்படுகிறது. ஒரு அரசு அமைப்பின் கடமை, விதியை சொல்லிவிட்டு நகர்வதில்லை. அதை முறையாகக் கண்காணிக்க வேண்டும். தவிரவும், ஊதிய விவகாரத்தில் பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் மேற்கொள்ளும் முறைகேடுகள் அரசுக்கும் தெரியும். கண்டும் காணாமல் இருக்கிறது. ஏனென்றால் பல பள்ளி, கல்லூரிகள் அரசியலர்களால்தான் நடத்தப்படுகின்றன. இது தவிரவும் அரசே ஊதிய விவகாரத்தில் சரியாக நடந்துகொள்வதில்லை. தற்போது அரசுக் கல்லூரிகளில் தொகுப்பூதியத்தில் பணிபுரிபவர்களுக்கான் ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. மொத்தமாகவே அரசு பொறியியல் கல்லூரிகளில் 220 தொகுப்பூதிய ஆசிரியர்கள் உள்ளனர். பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,311ஆசிரியர்கள் உள்ளனர். இவர்களுக்கு மாதம் ரூ.15,000 ஊதியம் வழங்கப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களாக அந்த ஊதியமும் நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த நெருக்கடி காலத்தில் அரசே இவ்வாறாக நடந்து கொள்ளும்போது இதைப் பார்த்துத் தனியார் கல்லூரிகள் துணிவுகொள்கின்றனர்.

- முகம்மது ரியாஸ்,

தொடர்புக்கு: riyas.ma@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x