Published : 01 Jul 2020 10:41 PM
Last Updated : 01 Jul 2020 10:41 PM

சமூகப் பாதுகாப்பு: பயன்படுத்தப்படாத காப்பீட்டுத் திட்டங்கள்; பரவலாக்க வழிமுறைகள்

ஒரு நாட்டில் வாழும் அனைத்துத் தரப்பு மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் உதவி புரிகின்றன. சமூகப் பாதுகாப்பு என்பதற்கான அர்த்தமும், வரம்பும் நாட்டிற்கு நாடு வேறுபடுகின்றன. சோசலிச நாடுகளைப் பொறுத்தவரை, நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் “தொட்டில் முதல் கல்லறை வரை” முழுமையான பாதுகாப்பு என்று பொருள். மற்ற நாடுகளுக்கு எதிர்பாராத இழப்புகள் அல்லது பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளைக் குறிக்கிறது.

பொதுவாக இந்தச் செயல்பாடுகள், அரசிடம் உள்ள நிதி ஆதாரங்களைப் பொறுத்து, பாதிப்புக்குள்ளாகும் குடிமக்களைப் பாதுகாக்கத் திட்டங்களின் வடிவத்தில் வழங்கப்படுகின்றது. நாட்டின், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் தனது குடிமகனுக்கு முதுமை, இறப்பு, நோய் மற்றும் விபத்து போன்ற பாதிப்புகளின்போது குறைந்தபட்ச நலன்களை உறுதி செய்வது, சம்பந்தப்பட்ட அரசின் பொறுப்பாகும். எனவே சமூகப் பாதுகாப்பு என்பது குடிமக்களுக்கு, சமூக மற்றும் பொருளாதார நீதிக்கான கருவியாகக் கருதப்படுகிறது.

ஒவ்வொரு நபரும் அவரது ஆயுட்காலத்தில் நோய், விபத்து, வேலையின்மை, இயலாமை (disability), மகப்பேறு மற்றும் முதுமை தொடர்புடைய சமூகப் பிரச்சினைகள் மற்றும் ஆபத்துகளை எதிர்கொள்கின்றனர். இதுபோன்ற சூழலில், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், வேலையின்மை, நோய் பாதிப்பு, விபத்து, ஒருவருடைய இறப்பினால் ஏற்படும் ஆதரவு இழப்பு, திருமணம், பிறப்பு மற்றும் எதிர்பாராப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நபர்கள், அந்த அபாயங்களுக்கான செலவுகளை ஈடுகட்டவும், பாதிப்புகளில் இருந்து மீண்டு வரவும், பாதுகாப்பை உறுதி செய்கிறது. இதனடிப்படையில், சமூகப் பாதுகாப்பின் நோக்கம் இதுபோன்ற சூழல்களில், குறைந்தபட்ச வருவாய் அல்லது நிதியை உறுதி செய்வதாகும் என்றும் கூறலாம்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, சமூகப் பாதுகாப்பு என்பது நேரடியாக அடிப்படை உரிமையாக கூறப்படவில்லை. இருந்தாலும், ஷரத்து – 21, உயிருக்கும், தனிப்பட்ட சுதந்திரத்துக்கும் பாதுகாப்பை வழங்குகிறது.

இதன்கீழ், பிழைப்பாதாரங்களும், மனிதன் மாண்புடன் வாழ்வதற்கான தேவைகளும் உள்ளடங்கி இருக்கின்றன. ஆகவே, உச்சநீதிமன்றம் பல இடங்களில் பிழைப்பாதாரங்களை உறுதிசெய்வது, தனி மனித மாண்பைக் காப்பது அரசின் கடமை என்பதை வலியுறுத்தியிருக்கிறது. அதன்படி சமூகப் பாதுகாப்பையும் நாம் அடிப்படை உரிமையாகக் கருதலாம். வழிகாட்டு நெறிமுறைகள் கோட்பாடு (Directive Principles of State Policy) ஷரத்து – 41, அரசின் பொருளாதாரத் திறனுக்கும், வளர்ச்சிக்கும் உட்பட்டு வேலை செய்யும் உரிமையையும், கல்வி பெறும் உரிமையையும் வழங்கவும், வேலையில்லாத நிலையில் முதுமையில் நோயுற்றபோதும், இயலாத சூழ்நிலைகளில் அரசின் உதவியை வழங்கவும் முயல வேண்டும், எனக் கூறுகிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின், ஏழாவது அட்டவணையில் (VII Schedule), மூன்றாவது பட்டியலான (List III), பொதுப்பட்டியலில், வரிசை எண் - 23இல் சமூகப் பாதுகாப்பு குறித்தும் மற்றும் சமூகக் காப்பீடு குறித்தும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மத்திய அரசு மற்றும் மாநில அரசு இரண்டுமே, மக்களுக்கு இத்திட்டங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

இந்தியாவைப் பொறுத்தவரை, பல்வேறு தரப்பினருக்கும் அவர்களின் நிலைக்கேற்ப திட்டங்களின் மூலம் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் அனைவருக்கும் பொதுவான சில முக்கியமான திட்டங்களும் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உதாரணமாக, பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY), அடல் பென்ஷன் திட்டம் (APS), பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY), பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) மற்றும் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா போன்ற திட்டங்கள் மிகவும் பயனுள்ள சிறப்பான திட்டங்கள்.

பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY), திட்டத்தின் கீழ் பூஜ்ஜிய இருப்பு (Zero Balance) வங்கிக் கணக்குத் தொடங்க முடியும். மேலும் காப்பீடு, பென்சன், ஓவர் டிராப்ட் வசதிகள் மற்றும் கடன் பெறவும் பயன்படும். வங்கிக் கணக்குத் தொடங்கியவர்களுக்கு வைப்புத் தொகைக்கு வட்டி உண்டு. விபத்துக் காப்பீடு 2 லட்சம் உண்டு. மேலும், 30,000 ரூபாய் வரை இறப்புக்கான தொகை வழங்கப்படும். இந்தியா முழுமைக்கும் பணப் பரிமாற்றம் செய்து கொள்ளலாம். அரசுத் திட்டப் பயனாளிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும். இத்திட்டத்தின் மற்றுமொரு சிறப்பு, 10 வயது நிறைவடைந்த அனைவருக்கும் வங்கிக் கணக்குத் தொடங்க இயலும்; வளர் இளம் பருவத்தினருக்கு வங்கிக் கணக்குகளைத் தொடங்க மிகச் சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.

கடந்த, 30.04.2020 வரை இத்திட்டத்தின் கீழ் 38.35 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. பொதுவாக இந்த வங்கிக் கணக்குகளைத் தொடங்குவதில் நிறையச் சிக்கல்கள் உள்ளன. இதில் பூஜ்ஜிய இருப்பு (Zero Balance) என்பதால் வங்கி மேலாளர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. மேலும், விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்குக் காப்பீட்டுத் தொகை கிடைத்துள்ளதா என்ற தகவல்களும் தொகுக்கப்படவில்லை. நிறையப் பேருக்கு இந்தக் கணக்குத் தொடங்கினால் 2 லட்சம் வரை விபத்துக் காப்பீடு உள்ளது என்ற தகவல் தெரியாது.

அடல் பென்சன் யோஜனா (APS) திட்டத்தில், 18 வயது நிரம்பிய மற்றும் 40 வயதிற்குட்பட்டவர்கள் சேரலாம். வருமான வரி கட்டுபவர்கள் உறுப்பினராக முடியாது. 50 சதவீதம் அல்லது ரூபாய் 1000, இதில் எது குறைவோ அது அரசின் பங்களிப்பாக ஐந்து வருடங்களுக்கு வழங்கப்படும். 1000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை பென்சன் தொகை பெற பங்களிப்புச் செய்ய முடியும். வயது கூடக்கூடப் பங்களிப்புத் தொகையும் கூடும். சந்தாதாரரின் இறப்புக்குப் பின், வாழ்க்கைத் துணைக்கும், அவரின் இறப்புக்குப் பின், திரட்டப்பட்ட கார்ப்பஸ் நிதி வாரிசுக்கும் வழங்கப்படும். ஆனால் வெறும் 2.24 கோடி பேர் மட்டுமே 31/05/2020 வரை சேர்ந்துள்ளனர்.

பிரதம மந்திரி சுரக்ஷா யோஜனா (PMSBY) என்பது ஒரு விபத்துக் காப்பீட்டுத் திட்டம். 18 வயது முதல் 70 வயது வரை உள்ள வங்கிக் கணக்கு உள்ள அனைவரும் இணையலாம். மிகச்சிறந்த பயனுள்ள திட்டம் இது. வருடத்திற்கு ரூபாய் 12 செலுத்துவதன் மூலம் ரூபாய் 2 லட்சத்திற்கான விபத்துக் காப்பீடு பெற முடியும். மேலும் விபத்தால் ஏற்படும் முழு உடல் ஊனமும் கருத்தில் கொள்ளப்படும். இத்திட்டத்தில் 18.76 கோடி பேர் கடந்த ஏப்ரல் 2020 வரை சேர்ந்துள்ளனர்.

பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) இறப்புக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ரூபாய் 330 சந்தா தொகையை வருடந்தோறும் செலுத்துவதன் மூலம், ரூபாய் இரண்டு லட்சத்திற்கான காப்பீடு கிடைக்கும். 18 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட நபர்கள் இத்திட்டத்தில் சேரலாம். இத்திட்டத்தில் சேர்ந்த பின் 55 வயது வரை தொடரலாம். இத்திட்டத்தில் 30.04.2020 வரை 7.08 கோடி பேர் சந்தாதாரர்களாக உள்ளனர். PMSBY மற்றும் PMJJBY இரண்டுக் காப்பீட்டுத் திட்டங்களும், குழு காப்பீட்டுத் திட்டங்கள் என்பதால் தனியாக காப்பீட்டுச் சான்று கொடுக்கப்படாது. மேலும் வங்கிக் கணக்கில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் சந்தா தொகை பிடிக்கப்படும். ஆகவே, வங்கியில் போதிய இருப்பை மட்டும் உறுதி செய்து கொண்டால் போதுமானது.

பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PMJAY) மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ரூபாய் ஐந்து லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் ஆயுஷ்மான் பாரத் என்றும் அழைக்கப்படுகிறது. 25.06.2020 வரை, 12,50,21,412 காப்பீட்டு அட்டை (E card) வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள 21229 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 98,27,707 பேர் பயன் அடைந்துள்ளனர்.

மிகச் சிறந்த திட்டங்கள் இருந்தாலும், அவை முழுமையாக மக்களைச் சென்றடையவில்லை. குறிப்பாக விபத்து மற்றும் இறப்புக் காப்பீட்டுத் திட்டங்களில் பெரும்பாலானோர் சேர்க்கப்படவில்லை. பல நேரங்களில், அரசு ஏழை மக்களுக்கு எதுவும் செய்வதில்லை என்று நாம் குறைகூறிக் கொண்டிருந்தாலும், இருக்கக்கூடிய பல நல்ல திட்டங்கள் தகுதி வாய்ந்த நபர்களை / குடும்பங்களைச் சென்றடையாமல் இருப்பதில் நமக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. அத்துடன், திட்டம் குறித்த விழிப்புணர்வு இல்லாதது, விண்ணப்பித்து பெறுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள், வங்கி அலுவலர்களின் அலட்சியப் போக்கு, இதற்கு என்று பணியமர்த்தப்பட்ட முகவர்களின் அர்ப்பணிப்பு உணர்வின்மை போன்ற பல காரணங்கள் இத்திட்டங்கள் மக்களைச் சென்றடையாமல் இருக்க முக்கியக் காரணம்.

கோவிட்-19 ஏற்படுத்திய பாதிப்புகள், சமூகப் பாதுகாப்பு குறித்த நம் கண்ணோட்டத்தை முற்றிலும் மாற்ற பேருதவியாக இருக்கிறது. ஊரடங்கு காலத்தில், தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்லும் வழியில் 400க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் விபத்து மற்றும் மற்ற காரணங்களால் இறந்து போனார்கள். இவர்கள் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டிருந்தால், காப்பீட்டுத் தொகை அந்தக் குடும்பத்திற்கு கிடைத்திருக்கும். அவர்கள் குடும்பம் ஓரளவு பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்திருக்கும். ஆகவே, கோவிட்-19 ஏற்படுத்திய பாதிப்புகள் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் அவசியத்தை நமக்கு உணர்த்தியுள்ளது. விபத்துக் காப்பீடு, மருத்துவக் காப்பீடு மற்றும் இறப்புக் காப்பீடு அனைவருக்கும் உறுதி செய்யப்பட வேண்டும் என்று கருத்தை வலியுறுத்துகிறது. குறிப்பாக சந்தாதாரர்களின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் திட்டம் மூலம் பாதிப்புக்குள்ளாகும் குடும்பங்களின் பொருளாதாரச் சூழலை ஓரளவுக்குப் பாதுகாக்க முடியும்.

இச்சிறந்த திட்டங்களின் பலன்களை நன்குணர்ந்த, மதுரை சமூக அறிவியல் கல்லூரி முன்னாள் பேராசிரியர் S.ரெங்கசாமி, இத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை, கல்லூரியின் முன்னாள் மாணவர்களுக்கு ஏற்படுத்தி, அவற்றை முன்னெடுத்துச் செல்லும் வழிமுறைகளை விவாதித்ததின் மூலம், கிட்டதட்ட ஒரு லட்சம் நலிவடைந்த மக்களை, பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மூலம் இத்திட்டத்தில் கடந்த ஓராண்டில் சேர்த்துள்ளார்கள். இந்த நிகழ்வில் கிடைத்த அனுபவங்களையும், தற்போதுள்ள சூழலில் இத்திட்டங்களை அனைவருக்கும் கொண்டு செல்ல கீழ்க்கண்டப் பரிந்துரைகளை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

பஞ்சாயத்து அளவில் இத்திட்டத்திற்கு தகுதி வாய்ந்த நபர்களை இனம் கண்டு, அவர்களை இத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். இரண்டு வழிகளில் இதை நாம் செய்ய முடியும். முதலாவதாக அந்தப் பகுதிக்குட்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்களின் பட்டியலை வாங்கி, இத்திட்டத்தில் இணையாதவர்களைக் கண்டறியலாம். இரண்டாவதாக ஊராட்சிக்கு உட்பட்ட வீடுகளில், வங்கிக் கணக்கு புத்தகத்தை வாங்கி, இத்திட்டத்தில் இணையாதவர்களைக் கண்டறிந்து இத்திட்டத்தில் சேர்க்கலாம். தகுதி வாய்ந்த நபர்கள், வங்கிக் கணக்கு இல்லாமல் இருந்தால், அவர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கித் திட்டத்தில் சேர்க்கலாம். அனைத்துத் தகுதிவாய்ந்த தனிநபர்களையும் இத்திட்டத்தில் சேர்க்க உள்ளூரில் உள்ள தொண்டு நிறுவனங்கள், இளைஞர்கள் அமைப்புகள் மற்றும் சுய உதவிக்குழுக்களைப் பயன்படுத்தலாம். ஊராட்சி மன்றத் தலைவர்களை ஆர்வத்துடன் ஈடுபடுத்த, இந்தக் காப்பீட்டுத் திட்டத்திற்கு முகவருக்கு கொடுக்கப்படும் கமிஷன் தொகையை, முழுவதுமாக அல்லது ஒரு பகுதியை நேரடியாக அந்த ஊராட்சிக்கு வழங்கலாம்.

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இந்தக் காப்பீடுகளுக்கான சந்தா தொகை பிடித்தம் செய்யப்படும். இத்திட்டத்தில் சேருபவர்கள் தங்கள் கணக்கில் போதிய இருப்பு வைக்கத் தவறுவதால் புதுப்பிக்க இயலாமல் போகிறது. எனவே மாநில / மாவட்ட நிர்வாகங்கள் இதுகுறித்த விழிப்புணர்வை, பத்திரிகைகள் வாயிலாகவும் மே 1 அன்று நடக்கும் கிராமசபைக் கூட்டங்கள் மூலம் மக்களுக்குத் தெரியப்படுத்தி உரிய நிதி இருப்பை உறுதி செய்ய வேண்டும்.

வங்கிகளில் மேலாளர்கள் மற்றும் இதற்கென நியமிக்கப்பட்ட முகவர்களிடம், இத்திட்டத்தின் நிலை குறித்தும் புதிதாக சேர்க்கப்பட்டவர்கள் விவரத்தையும் மாநில அளவில் தொகுத்து, சிறப்பாகச் செயல்படும் மாவட்டங்கள், அலுவலர்களுக்கு அவர்களை ஊக்குவிக்கும் விதம் பாராட்டும், பரிசுகளும் வழங்கலாம்.
நிறையப் பேருக்கு இத்திட்டத்தில் இருப்பது தெரியவில்லை. ஊராட்சி மன்ற அளவில் ஏதேனும் இறப்பு அல்லது விபத்தால் இழப்பு ஏற்பட்டால், திட்டப் பலன்களை, குடும்பத்தாருக்கு ஊராட்சித் தலைவர்கள் பெற்றுத்தர அரசு உத்தரவிட வேண்டும். இந்தியாவில் தற்போது மனிதனின் சராசரி வாழ்நாள் 69.73 வருடம். ஆனால் இறப்புக் காப்பீடு 55 வயது வரை மட்டுமே வழங்கப்படுகிறது. இதை விபத்துக் காப்பீட்டில் உள்ளதுபோல் 70 வயது வரை நீட்டிக்க வேண்டும்.

மத்திய அரசு இத்திட்டத்தில் சந்தாதாரர்கள் ஆக உள்ளவர்களின் எண்ணிக்கையைத் தொகுத்து இணையதளத்தில் வெளியிடுகிறார்கள். இத்துடன், இத்திட்டங்களின் கீழ் பணம் பெற்று பலனடைந்தவர்கள் விவரங்களையும் தொகுத்து இணையதளத்தில் வெளியிட வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பான்மையானோர் பட்டியல் அரசிடம் இருப்பதால் அவர்களை உடனடியாக இத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.

இந்தியா போன்ற பல மொழிகள் பேசும் நாட்டில், திட்டங்களை ஆங்கிலத்தில் அறிவிக்க வேண்டும். அதை மற்ற மொழிகளில் மொழியாக்கம் செய்து கொள்ளலாம். அனைவருக்கும், திட்டம் குறித்து புரிதல் ஏற்பட இது அவசியம். இறுதியாக, தொண்டு நிறுவனங்கள், இளைஞர் அமைப்புகள், ரசிகர் மன்றங்கள், கிராம அளவிலான அமைப்புகள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் தொழிலாளர் அமைப்புகள் / சங்கங்கள் அனைவரும், தங்கள் பகுதிகளில் / அமைப்புகளில் உள்ளத் தகுதி வாய்ந்த நபர்கள் இத்திட்டத்தில் இணைய உதவ வேண்டும். பொதுமக்களும் தங்கள் அருகாமையில் / அக்கம் பக்கத்தில் உள்ள குடும்பங்களில் இந்தத் திட்டங்களில் இணைந்துள்ளார்களா என்பதை உறுதிப்படுத்தினால் பேருதவியாக இருக்கும்.

“ஊர் கூடித் தேர் இழுக்கும்” இந்த முயற்சியில் அனைவரும் இணைந்து செயல்பட்டால் பல குடும்பங்களை இன்னல்களிலிருந்து பாதுகாக்க முடியும்.

முனைவர் ப. பாலமுருகன்
மனித உரிமைச் செயற்பாட்டாளர்
தொடர்புக்கு: balaviji2003@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x