Published : 01 Jul 2020 10:35 AM
Last Updated : 01 Jul 2020 10:35 AM

தேசிய மருத்துவர்கள் தினம்; கரோனா சிகிச்சை- மருத்துவனின் ஒரு நாள் பயணம்

காலை 6 மணி அலைபேசி அடிக்கிறது. உடனே விழித்து எழுந்து குளித்து முடித்து, சாப்பிட்டுக் கிளம்பி 7.50 மணிக்கு தமிழகத்தின் தனிப்பெரும் சிறப்பு வாய்ந்த அரசு மருத்துவமனையில் பணிபுரியும் எனக்கு மருத்துவமனை வளாகத்தைச் சேர்ந்தவுடன் ஒரு சிறிய பதற்றம் தானாகவே தொற்றிக்கொள்கிறது.

ஏனென்றால் " *தொட்டால் தொற்றிக்கொள்ளும் பக்கத்தில் சென்றால் பாதிக்கப்பட்டு விடுவோம்* " என்று தெரிந்தும் " *போர் என்றால் மரணம் எப்பொழுது எப்படி வரும் தெரியாது, அதுபோல தொற்று நம்மை எப்பொழுது வேண்டுமானாலும் ஆட்கொள்ளும்* " என்று தெரிந்தும் போருக்குச் செல்லும் போர் வீரனாய் தனக்கென ஒதுக்கப்பட்ட கரோனா சிறப்பு வார்டில் நோயாளிகளுக்கான பகுதியில் நுழைந்தவுடன் அங்கே ஒரு மயான அமைதி நிலவும். ஏனென்றால் எப்பொழுதும் சத்தம், கூட்டம், பணியாளர்களின் குரல், சக்கர நாற்காலிகளின் கீச் சத்தம் என எப்பொழுதும் ஒரு இரைச்சல் என மருத்துவமனைக்குள் வாழப் பழகிக் கொண்ட எனக்கு இப்பொழுது இந்த அமைதி ஒரு படபடப்பை ஏற்படுத்துகிறது.

அந்த படபடப்பையும் மீறி நான் உள்ளே நுழைந்து கரோனா தொற்று எதிர்ப்புப் போருக்குத் தேவையான கவசங்களை ஒவ்வொன்றாய் N95 முகக் கவசம், கண் கண்ணாடி, தலைக்கு தொப்பி , கால் உறை, அதற்குமேல் பிபிஇ கவசம் என அனைத்தையும் அணிந்துகொண்டு, மேலே முகத்தை முழுவதும் மறைக்க கண்ணாடி போல் இருக்கும் ஒரு முகக்கவசம் ஆகியவற்றை அணிந்தவுடன் உள்ளே வியர்த்து துணி முழுவதும் நனைந்துவிடும். நமது ஊரில் நல்ல நாளிலேயே வெப்பம் அதிகமாகவே இருக்கும். நாம் இந்த உடைகளை அணியும்போது உள்ளே வியர்த்து மேலும் பதற்றப்படும் வண்ணம் ஒரு இனம்புரியாத வலி ஏற்படும்.

அதனை எல்லாம் மறந்து நோயாளியின் நலன் மட்டுமே ஒற்றை குறிக்கோளாய் கொண்டு வார்டில் நுழைந்து ஒவ்வொரு நோயாளியாய் பரிசோதிக்க ஆரம்பிப்போம். அது ஒரு அதிகம் பாதிப்பு இல்லாத நோயாளிகளை உள்ளடக்கிய பகுதி. அதில் மூன்றில் ஒரு பகுதி நோயாளிகள் மூச்சுத்திணறலோடும் அதிகப்படியான ஆக்சிஜன் செலுத்தப்பட்டும் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், நான் அவர்களிடம் சென்று ஆக்சிஜன் அளவிடும் கருவியின் உதவியோடு நோயாளியின் உடல்நிலையைப் பரிசோதித்து ஒவ்வொருவருக்கும் ஆறுதல் கூறி அவர்களுக்குத் தேவையான பரிசோதனைகள், CT ஸ்கேன்கள், ரத்த மாதிரிகள், கரோனா பரிசோதனை ஆகியவற்றை மேற்கொள்ள ஆலோசனை வழங்க வேண்டும். மேலும் அவர்களுக்கு முந்தைய நாள் எடுத்த அனைத்துப் பரிசோதனைகளின் முடிவுகளையும் பெற்று அதற்கேற்றார்போல் அவர்களுக்கு மருந்துகளைத் தீர்மானித்துக் கொடுத்து எடுத்துக்கொள்ளச் சொல்ல வேண்டும்.

அவர் வந்து எத்தனை நாள் ஆகிறது, எப்படி அவருக்கு மருந்துகள் உடல் நிலையைச் சீராக்க உதவுகிறது, வேறு ஏதேனும் மருந்துகள் அவருக்கு அளிக்கலாமா என்று பேராசிரியர் முதல் தொற்று நோய் நிபுணர்கள் வரை ஆராய்ந்து நமக்கு ஆலோசனை வழங்குவார்கள். அத்தனை ஆலோசனைகளையும் உள்வாங்கிக்கொண்டு ஒவ்வொரு நோயாளியையும் கண்ணும் கருத்துமாய் பார்த்துக்கொள்ள வேண்டும். நாம் கொஞ்சம் கவனம் சிதறினால் கூட பலபேர் மரணத்தின் வாயிலுக்குச் செல்லவேண்டிய சூழல் ஏற்படலாம். எனவே மிகுந்த கவனத்துடன் ஒவ்வொரு நோயாளியின் ஆக்சிஜன் அளவையும், மூச்சுவிடும் அளவையும் பரிசோதனை முடிவுகளையும் குறித்துக்கொண்டு அதற்கேற்றார்போல் தனிக் கவனம் செலுத்த வேண்டும்.

திடீரென்று, ''ஐயா என் கணவருக்கு மூச்சு வாங்குகிறது'' என்று ஒரு வயதான அம்மா ஓடி வருகிறார். அவரைப் போய் பார்க்கிறேன். அவர் மிகவும் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கிக் கொண்டிருக்கிறார். ''என்ன செய்தீர்கள்'' என்று விசாரிக் கிறேன். ''நான் சிறுநீர் கழிக்கச் சென்று வந்தேன். உடனே மூச்சு வாங்கி விட்டது'' என்று பதில் கூறுகிறார். ''ஐயா, உங்களுக்கு ஆக்சிஜன் அளவு மிகவும் குறைவாக உள்ளது. மேலும் உங்களது நுரையீரல் பாதிக்குமேல் பாதிக்கப்பட்டுள்ளது ஆகவே நீங்கள் நடக்க வேண்டாம். உங்களுக்கு சிறுநீர் வந்தால் நீங்கள் உங்கள் படுக்கைக்கு அருகிலேயே ஒரு பாத்திரத்தை வைத்துப் பிடித்துக் கொண்டு போய் ஊற்றி வரச் சொல்லுங்கள், இல்லையேல் உங்களுக்கு சிறுநீர் கழிக்க பை போட்டு விடுகிறேன். தயவுசெய்து நீங்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் நடக்க வேண்டாம். அது உங்கள் நுரையீரலை மேலும் பாதிக்கும்'' என்று அவருக்கு வழிமுறைகளைக் கூறிவிட்டு வருகிறேன்.

இன்னொரு குரல், ''ஐயா, என் கணவருக்கு மிகவும் வேர்த்துக் கொட்டுகிறது, மூச்சிரைப்பு அதிகமாகிறது என்னவென்று பாருங்கள்'' என்று... அவர் வயது 30. அவர் ஏழு நாட்களாக இங்கே தீவிரமாக சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். திடீரென்று அவருக்கு ஆக்சிஜன் அளவு 70, 60 என்று குறைந்துகொண்டே போகிறது. அவர், ''ஐயா, என்னைக் எப்படியாவது காப்பாற்றுங்கள். எனக்கு மிகவும் மூச்சு வாங்குகிறது உடம்பெல்லாம் வேர்க்கிறது'' என்று கதறுகிறார்.

அவரைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் உடனடியாகச் செயல்பட வேண்டும் என்ற நிலை மேலும் எனக்குப் படபடப்பை அதிகரிக்கிறது. ஆனாலும் அதனை வெளிக்காட்டாமல் நோயாளியின் மேல் கைவைத்து, ''ஐயா, பயப்படாதீர்கள். நீங்கள் மருத்துவமனையில் இருக்கிறீர்கள், மருத்துவர்கள் நாங்கள் உங்களுக்கு உதவ இருக்கிறோம் உடனடியாக உங்களை தீவிர சிகிச்சை வார்டுக்கு மாற்றுகிறோம் கவலைப்படாதீர்கள்'' என்று தேற்றுகிறேன். அவர், ''ஐயா நான் பிழைத்துவிடுவேனா'' என்று கேட்கிறார். ''ஐயா, நீங்கள் கவலைப்படாதீர்கள். உங்களுக்காக அரசும் ,அரசு மருத்துவமனையும், மருத்துவர்களும் பல்வேறு வசதிகளை பல்வேறு மருத்துவ முறைகளைத் தேடிப்பிடித்து கொடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆகவே நீங்கள் பயத்தை விட்டொழியுங்கள்’’ என்று அவருக்கு ஆறுதல் சொல்லுகிறேன். ஆசுவாசப்படு த்துகிறேன் .

ஆனால், என்னுள்ளே ஒரு பயம் தொற்றிக் கொள்கிறது. இவ்வளவு சிறுவயதில் ஏன் இவர் இந்த சித்ரவதைக்கு உள்ளாக வேண்டும் என்று. மேலும் உடனடியாக நான் என்னுடன் பணிபுரியும் மற்றொரு மருத்துவருக்குத் தொடர்புகொண்டு, ''இவரைத் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றவேண்டும். உடனடியாக ஒரு படுக்கையை தயார் செய்யுங்கள்'' என்று கேட்கிறேன். அவர், ''நான் உடனடியாக படுக்கையைத் தயார் செய்கிறேன். நீங்கள் அவரை அனுப்புங்கள்'' என்று கூறுகிறார்.

உடனடியாக நான் மருத்துவப் பணியாளரை அழைக்கிறேன். ''அம்மா, இவரை உடனடியாக கரோனா தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றுங்கள்'' என்கிறேன். அவர் உடனடியாக ஆக்சிஜன் சிலிண்டரை எடுத்து வந்து அவரை ஸ்ட்ரெச்சரில் தூக்கிக்கொண்டு தீவிர சிகிச்சைப் பிரிவை நோக்கி ஓடுகிறார். அங்கே அவரை அனுமதிக்கிறார்கள். அங்கே உள்ள மருத்துவரிடம் அவரின் நிலைமையை விசாரிக்கிறேன். அவர் அவருக்கு சுவாசக் கருவி பொருத்தி இருப்பதாகச் சொல்கிறார். இப்பொழுது அவருடைய ஆக்சிஜன் அளவு 90 முதல் 95 வரை இருக்கிறது என்று கூறுகிறார். எனக்கு அப்பொழுதுதான் சிறிது சுவாசமே வருகிறது.

அந்தத் தளத்தைப் பார்த்து விட்டு அடுத்த தளத்திற்கு நகர்கிறேன். அங்கேயிருந்த செவிலியர் எனக்கு ஏற்கனவே அறிமுகமானவர். அவரிடம், ''என்ன செவிலியரே! உங்களுக்கு ஏற்கெனவே சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு இருக்கிறதே நீங்கள் ஏன் பணி விலகல் கேட்கவில்லை'' என்று கேட்கிறேன். அதற்கு அவர், ''இப்பொழுது இங்கு இருக்கும் சூழ்நிலையில், நான் மட்டும் பணி விலகல் கேட்பது சரியாக இருக்காது ஆகையால் பணிக்கு வந்துவிட்டேன்'' என்றார். நான், ''உடல்நிலையைப் பார்த்துக்கொள்ளுங்கள். நீங்களும் எங்களுக்கு மிக மிக முக்கியம். நோயாளிகளுக்கு உங்களைப் போன்ற செவிலியர்கள் கிடைக்க மாட்டார்கள்'' என்று கூறிவிட்டு அந்தப் பகுதியின் மருத்துவ அலுவலரை அழைத்து நோயாளிகளின் நிலையைக் கேட்கிறேன். அவர், ''ஒரு நோயாளி வயிறு வலிக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்'' எனக் கூறுகிறார். அவரைப் பரிசோதித்துவிட்டு, அவருக்கு உடனடியாக ஒரு CT ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று கூறிவிட்டு மற்ற நோயாளிகளை பார்க்கிறேன் .அதில் ஆக்சிஜன் பொருத்தி இருக்கும் நோயாளிகளில் ஓரிருவர் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களைத் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்ற முடியுமா என்று கேட்டுப் பாருங்கள் என்று கூறிவிட்டு அடுத்த தளத்திற்குச் செல்கிறேன்.

அந்தத் தளத்தில் செவிலியர் மிகவும் படபடப்புடன் காணப்படுகிறார். ''ஏன் மிகவும் படபடப்புடன் இருக்கிறீர்கள்'' என்று கேட்கிறேன். அவர், ''இப்பொழுதுதான் கரோனா தொற்று நோயிலிருந்து மீண்டு பணிக்கு வந்து இருக்கிறேன். ஆகையால் எனக்கு சிறிது படபடப்பாக, பயமாக உள்ளது'' என்று கூறுகிறார். நான், ''கவலைப்படாதீர்கள் செவிலியரே, நாம் பல நோயாளிகளுக்கு நல்லது செய்கிறோம். ஆகையால் நமக்கு கடவுள் துணை நிற்பான்'' என்று சொல்லிவிட்டு அங்கு உள்ள நோயாளிகளைப் பரிசோதிக்கச் செல்கிறேன்.

அங்கே ஒருவர் தன் மனைவிக்கு இன்று சிறுநீரகக் கோளாறு இருக்கும் நோயாளிகளுக்கு செய்யும் ரத்த சுத்திகரிப்பு செய்யவில்லை என்று மருத்துவ அலுவலரிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருக்கிறார். அதை அனைத்து நோயாளிகளும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். நான் அதற்கு, ''ஐயா, கவலை வேண்டாம். உங்களுக்குச் சேவை செய்யவே 24 மணி நேரமும் மருத்துவர்களும் செவிலியர்களும் மருத்துவமனையும் மருத்துவமனை நிர்வாகமும் இருக்கிறது. ஆகவே, எப்பொழுது உங்கள் மனைவிக்கு ரத்த சுத்திகரிப்பு செய்ய வேண்டுமோ அப்பொழுது நிச்சயமாக முதல் ஆளாக ரத்த சுத்திகரிப்பு செய்யப்படும், கோபப்பட வேண்டாம். உங்களைப் போல் இங்கு இருக்கும் அனைவரும் ஏதோ ஒரு நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் இப்பொழுது தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பது அவர்களுக்கு மேலும் மன அழுத்தத்தைக் கொடுக்கும். ஆகவே, நீங்கள் சத்தம் போட வேண்டாம். உங்கள் நோயாளியைக் காட்டுங்கள். நான் அவர்களிடம் எடுத்துக் கூறுகிறேன்'' என்று கூறி, அந்த நோயாளியிடம் சென்றேன். ''அம்மா கவலைப்படாதீர்கள், நான் உங்களுக்கு எவ்வளவு சீக்கிரம் ரத்த சுத்திகரிப்புக்கு ஏற்பாடு செய்ய முடியுமோ அவ்வளவு சீக்கிரம் செய்வதற்கு அந்த மருத்துவர்களிடம் பேசுகிறேன்'' என்று கூறி விடைபெற்றுக் கொண்டேன். மற்ற நோயாளிகளைக் கவனித்துக் கொண்டு வருகிறேன்.

அங்கே ஒரு பெண் நோயாளி யாரும் இல்லாத நிலையில் மூச்சிரைத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு 15 லிட்டர் ஆக்சிஜன் நிமிடத்திற்குச் செலுத்தப்படுகிறது அவருடைய ரத்தத்தின் ஆக்சிஜன் அளவு 85, 86 சதவீதம் என்று இருக்கிறது. எனவே அவரை உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்ற முடியுமா என்று யோசிக்கிறேன். அங்கிருக்கும் மருத்துவர்களிடம் பேசும்படி கேட்கிறேன். அவர் உடனடியாக செய்வதாகச் சொல்கிறார். அவர்களை ஆசுவாசப்படுத்திவிட்டு என்னையும் ஆசுவாசப்படுத்திக்கொண்டு அடுத்த தளத்திற்குச் செல்கிறேன் .

அந்தத் தளத்தின் மருத்துவ அலுவலர் மிகவும் சுறுசுறுப்பாக அனைத்து நோயாளிகளையும் பார்த்துவிட்டு பரிசோதனை முடிவுகளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார். நான் அவரிடம், ''ஏதேனும் நோயாளிகள் மிகவும் சிரமத்தில் உள்ளார்களா?'' என்று கேட்கிறேன். அவர், ''இப்பொழுது வரை இல்லை. ஆனால் இங்கே ஆக்சிஜன் கிடைக்கும் படுக்கை எதுவுமே இல்லை. ஆகவே நோயாளிகளை இதற்கு மேல் இங்கு அனுமதிக்க வழியில்லை. அதனை நாம் புறநோயாளிகள் பிரிவிற்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டும்'' என்று சொல்லுகிறார். நான் உடனடியாக புறநோயாளிகள் பிரிவில் உள்ள மருத்துவருக்கு அழைக்கிறேன் . அவர் இங்கே ஐந்து நோயாளிகள் ஆக்சிஜன் படுக்கைக்குக் காத்திருக்கிறார்கள் என்று கூறுகிறார்.

எப்பொழுதும் பகிரி குழுவில் எங்கே படுக்கை இருக்கிறது என்று தெரியப்படுத்திக் கொண்டே இருப்போம். சில நேரங்களில் நமக்குச் சில நோயாளிகளுக்கு படுக்கை வசதி செய்து கொடுப்பதற்குள் மூச்சிரைப்பு வந்துவிடும் புறநோயாளிகள் பிரிவு மருத்துவருக்கு. அவர் உடனடியாக மற்ற மருத்துவர்களைத் தொடர்பு கொண்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார். அவை யாவும் பகிரிக்குழுவில் பதிவிடப்படுகிறது. அதனைப் பார்த்து மனம் நிம்மதி அடைகிறது. மேலும் இங்கு உள்ள நோயாளிகள் எப்பொழுது அவர்களுடைய மூச்சு விடும் தன்மை அதிகரிக்கும், குறையும் என்று நம்மால் சொல்ல முடியவில்லை. இப்பொழுது நமக்கு இருக்கும் அருமருந்து ஆக்சிஜன் சிகிச்சை என்றால் அது மிகையாகாது. அடுத்து டெக்சா எனும் ஸ்டீராய்டு மருந்து ஆகிய இரண்டும் மிகப்பெரும் நோய் குறைக்கும் தன்மையைச் செய்துகொண்டிருக்கிறது .

அனைத்து நோயாளிகளையும் பார்த்துவிட்டு வந்து அந்த முப்பது வயது நோயாளி எப்படி இருக்கிறார் என்று விசாரிக்கிறேன். ''அவருக்கு இப்பொழுது மூச்சுத்திணறல் பரவாயில்லை'' என்று மருத்துவர் கூறுகிறார். ''இன்னும் இரண்டு படுக்கைகள் தேவை'' என்று அவரிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். அவர் உடனடியாக, ''இங்கே 2 நோயாளிகள் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்கள். அந்தப் படுக்கைகள் இன்னும் சில நிமிடங்களில் தயாராகிவிடும். அதற்குப் பிறகு அந்த நோயாளிகளை இங்கே மாற்றலாம். அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கலாம்'' என்று நம்பிக்கை ஊட்டுகிறார். நானும் அந்த நம்பிக்கையோடு அங்கிருக்கும் அந்த நோயாளிகளிடம், ''உங்களுக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் படுக்கை தயாராகிக் கொண்டிருக்கிறது. உங்களை மாற்றி விடுவார்கள்'' என்று சொல்லிவிட்டு புலன குழுவில் உள்ள பேராசிரியரின் ஆலோசனைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்ற 5-வது தளத்தில் இருக்கும் மருத்துவர்களிடம் ஆலோசனை செய்கிறேன். அவர்களும் பணிகளைச் செய்து கொண்டிருப்பதாகக் கூறுகிறார்கள். இதற்கிடையே ஒரு மருத்துவர் தனக்குத் தெரிந்த ஒரு நோயாளியைப் பற்றி விசாரிக்கிறார் அந்த நோயாளியின் தன்மையையும் அவருடைய நோயின் தன்மையையும் அவர் இப்பொழுது உள்ள நிலைமையும் அவருக்கு விவரிக்கிறேன்.

திடீரென்று இரண்டாம் தளத்தில் இருந்து ஒரு அழைப்பு வருகிறது. ''ஐயா இங்கு ஒரு நோயாளி மிகவும் சிரமப்பட்டுக் கொண்டு இருக்கிறார். அவருக்கு மிகவும் மூச்சிரைப்பு அதிகமாக இருக்கிறது'' என்றார் மருத்துவர். உடனடியாக 5 ஆம் தளத்தில் இருந்து வந்து அவரைப் பரிசோதித்துவிட்டு அவருக்கு மேலும் மாஸ்க் மூலமாக செல்லும் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கச் சொல்லிவிட்டு, நரம்பு வழியாக ஒரு ஊசியை செலுத்துகிறேன். அவர் கொஞ்சம் சிரமத்தில் இருந்து வெளியே வருகிறார்.

அவரைச் சரிப்படுத்திவிட்டு நிமிர்ந்து பார்க்கிறேன். மணி இரண்டைத் தொடுகிறது. அடுத்த பணி நேர மருத்துவர் அழைக்கிறார். ''நான் வந்துவிட்டேன் நீங்கள் கிளம்புங்கள்'' என்று கூறுகிறார். என்னுடைய படபடப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைகிறது. அடுத்த மருத்துவரிடம் அந்தப் படபடப்பை இறக்கி வைக்கிறேன். அவரிடம் அனைத்து நோயாளிகள் பற்றியும் விளக்கிக் கூறுகிறேன். ஒவ்வொரு தளத்திலும் உள்ள நோயாளிகளின் நிலையைக் குறித்து அறிக்கை கொடுக்கிறேன். அவரிடம் என்ன வேலைகள் செய்யவேண்டும் என்று சொல்லிவிட்டு வந்து எனது கவசங்களைக் களைகிறேன். அந்தந்தக் கவசங்களைப் போடவேண்டிய கூடைகளில் போட்டுவிட்டு அனைத்தையும் களைந்த பின்பு எனது *பச்சை நிற ஆபரேஷன் தியேட்டர் உடை முழுவதும் நனைந்து முழுவதும் ஈரமாகிகி இருக்கிறது*. அப்படியே எனது அறைக்கு ஓடுகிறேன். சென்று வாளியை எடுத்துக் கொண்டு சென்று அப்படியே உச்சி முதல் பாதம் வரை குளித்துவிட்டு அனைத்துத் துணிகளையும் துவைத்து எடுத்து வருகிறேன்.

எனக்காக வந்திருந்த உணவைச் சாப்பிட்டு அப்படியே படுக்கையில் சாய்கிறேன். படபடப்பு குறைந்து உறங்குகிறேன். இப்படித்தான் கரோனா வார்டில் எனது ஒருநாள் பணி முடிவடைகிறது. மீண்டும் தன்னைத் தயார்படுத்திக்கொண்டு போர்க்களத்திற்குத் திரும்புகிறேன். கடமையே கண்ணாய் என் நோயாளிகளைக் காப்பாற்றிவிட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு *குடும்பத்தைப் பிரிந்து, உறவுகளைப் பிரிந்து, தூக்கம் தொலைத்து, சுக துக்கம் மறந்து சமூகத்தின் மீது உள்ள பற்றால்* , *மக்களைத் தொற்றில் இருந்து காக்க வேண்டும் என்ற உந்துதலால் அனைத்தையும் மறந்து மக்களுக்கு பணி செய்து கிடப்பதே எனது பணி என்று இதோ புறப்பட்டு விட்டேன் தொற்று நோயைத் தோற்கடிக்க*.....

-தமிழ் மருத்துவன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x