Last Updated : 21 Sep, 2015 09:19 AM

 

Published : 21 Sep 2015 09:19 AM
Last Updated : 21 Sep 2015 09:19 AM

போஸ் மரணச் செய்தியை போஸும் கேட்டார்!- நேதாஜியின் மெய்க்காவலர் பேட்டி

உத்தரப் பிரதேசத்தின் ஆசம்கர் மாவட்டம், முபாரக்பூர் வட்டம், டக்கோவா கிராமம். இங்கேதான் இருக்கிறார் சைபுத்தீன் என்கிற நிஜாமுதீன். அவர் வைத்திருக்கும் பழைய பர்மா பாஸ்போர்ட்டின்படி இப்போது அவருக்கு வயது 115. சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கையோடு பயணித்தவர்களில் முக்கியமான நேரடி சாட்சியங்களில் ஒருவர். அவருடைய மெய்க்காவலர்களில் ஒருவர். போஸ் சம்பந்தமான ஆவணங்களை மம்தா பானர்ஜி அரசு வெளியிட்டது நாடெங்கும் பரபரப்பை உண்டாக்கியிருக்கும் சூழலில், நிஜாமுதீன் பகிர்ந்துகொள்ளும் செய்திகள் போஸ் தொடர்பான மர்ம முடிச்சுகளை மேலும் அவிழ்க்கின்றன.

* சுபாஷ் சந்திர போஸிடம் நீங்கள் பணியில் சேர்ந்தது எப்படி?

பிழைப்புக்காக தம் குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்றுவிட்ட எனது தந்தை அங்கு ஒரு உணவு விடுதி நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ஆண்ட பிரிட்டிஷ் அரசு என்னுடன் சேர்த்து பல இளைஞர்களை பலவந்தமாக தம் படையில் சேர்த்து கொண்டது. அந்தப் பணியின் போது 1943ஆம் ஆண்டு ஒரு ஆங்கிலேய மேஜர் ஜெனரல், ''படை வீரர்களில் எத்தனை பேர் இறந்தாலும் கவலை இல்லை. ஆனால், பொதி சுமக்கும் ஒரு கோவேறு கழுதை கூட பலியாகி விடக் கூடாது. ஏனெனில், நம் சுமைகளை தூக்கும் அவை இந்தியர்களைவிட முக்கியமானவை!'' என அறிவித்தது எங்கள் மனதை மிகவும் புண்படுத்தி விட்டது. இதற்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்த எங்கள் முகாமினர் சில ஆங்கிலேயர்களை சுட்டு வீழ்த்திவிட்டு படையை விட்டு வெளியேறி விட்டோம்.

அப்போது சிங்கப்பூரின் கேத்தோ எனும் அரங்கில் இந்திய தேசியப் படையின் தலைவராகப் பதவி ஏற்ற சுபாஷ் சந்திரபோஸ்ஜியிடம் சென்று இணைந்து விட்டோம். அங்குதான் இந்தியாவின் சுதந்திர கீதம் முதன் முறையாக இந்தியில் பாடப்பட்டது. இதில் அவர் எனது ஆஜானுபாகுவான உடல் அமைப்பை பார்த்து என்னை தமது மெய்க்காப்பாளர்களில் ஒருவராக வைத்துக் கொண்டார். ஆங்கிலேயரிடம் இருந்து தப்ப வேண்டி, சைபுத்தீன் எனும் எனது பெயரை நிசாமுத்தீன் என மாற்றிக் கொண்டேன். பிறகு தம் படைக்கு ஆதரவு கேட்க வேண்டி நீர்மூழ்கி கப்பலில் ஜெர்மன் சென்று ஹிட்லரை சந்தித்தோம். அடுத்து ஜப்பான் சென்று அதன் ஜெனரல் தோஜோவையும் சந்தித்தோம். சிங்கப்பூரின் அருகிலுள்ள ஒரு தீவின் ராஜாவான சுல்தான் என்பவரை நேதாஜியுடன் சந்திக்க சென்றபோது அவர் 12 சிலிண்டர் கொண்ட லேங்கிங் ஜாபர் எனும் காரை பரிசாக அளித்தார். கப்பலில் பர்மாவின் காட்டுக்குக் கொண்டு வரப்பட்ட இந்த காரை முதன் முதலில் ஓட்டத் தொடங்கிய நான் அவரது ஆஸ்தான ஓட்டுநராகவும் ஆகி விட்டேன்.

* பர்மாவில் போஸ் தன் படை அமைத்த விதம் மீது உங்கள் நினைவில் உள்ளவற்றை கூறுங்களேன்?

பர்மாவில் முதல் வேலையாக பல சுரங்கப்பாதைகளை அமைத்தார் போஸ். பல்வேறு வழிகள் கொண்ட இவற்றில் நுழைந்து பர்மாவின் அடர்ந்த காடுகளில் தப்பி விடும்படியாக அவை அமைக்கப்பட்டன. இந்த சுரங்கங்கள் வழியாக இரவு நேரங்களில் கிளம்பி ஆங்கிலேயர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தி விட்டு அவர்கள் ஆயுதங்களைப் பறித்து வந்தோம். இவற்றில் எம்மை பொதுமக்கள் அடையாளம் கண்டால் ஆதரவு தர வேண்டி இந்திய தேசியப் படையின் சீருடைகளை அணிந்தோம். இதற்கு நாம் எதிர்பார்த்ததை விட அதிகமாக பொதுமக்கள் பெரும் ஆதரவு அளித்து பல்வேறு வகையான உதவிகள் செய்தனர். அடர்ந்த காடுகள் நிறைந்த நாட்டின் எல்லையாகவும், அருகில் சீனாவும் இருந்தமையால் போஸ், தாய்லாந்துக்கு அடுத்தபடியாக பர்மாவையும் தம் படையின் தலைமையிடமாக அமைத்தார்.

* நீங்கள் நேதாஜியிடம் கண்ட சிறப்பான குணநலன்கள் என்ன?

சாதி, மத பேதம் இன்றி நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வை முதலில் ஊட்டியவர் போஸ். இவர், தமக்கு எவ்வளவு பெரிய நஷ்டம் ஏற்பட்டாலும், கவலைப்படாமல் புன்முறுவலுடன் அமைதி காப்பார். அவர் கோபப்பட்டதை நான் ஒருமுறை கூடப் பார்த்ததில்லை. எங்கள் படையிலும் ஆங்கிலேயர்களுக்காக உளவு பார்த்த சிலர் இடம் பெற்றிருந்தனர். இதில் ஒருவர் எங்களுக்கு தேநீர் அளிக்க வந்துவிட்டு எங்கள் பேச்சை ஒட்டு கேட்டதை நான் பார்த்து விட்டேன். அவரை உடனடியாக எனது துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தி விட்டேன். இதைக் கண்டு போஸ் அமைதியாக, ''நீ அவசரப்பட்டு விட்டாய்! உளவு பார்த்தவனை உயிரோடு பிடித்து பேசியிருந்தால் அவன் மனம் திருந்தியிருக்க வாய்ப்பு கிடைத்திருக்கும். அவன் வீணாக தன் உயிரையும் இழந்திருக்க மாட்டான்.'' எனக் கூறினார். இந்த உளவாளி ஏற்கெனவே சில முறை நாம் தாக்குதல் நடத்து சென்றபோது 'விசில்' அடித்து ஆங்கிலேயருக்கு காட்டிக் கொடுத்தான். இதனால், அங்கு நாம் தாக்கப்பட்டு பின்வாங்கிய போதும் அந்த உளவாளி, எதேச்சையாக விசில் அடித்திருக்கலாம் எனக் கூறி எங்களை அமைதி காக்க வைத்தார்.

நேதாஜி தினமும் மாலை 4.00 மணிக்கு தம் படை வீரர்கள் இடையே நிகழ்த்திய தேசபக்த உரை மிகவும் உணர்ச்சிகரமானது. நாங்கள் நடத்தும் தாக்குதலில் காயம்பட்ட அல்லது உயிரிழந்தவர்களை அக் களத்தில் இருந்து தூக்கிக் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்துவார். முழு இரவிற்கும் நேதாஜி ஒரே இடத்தில் உறங்க மாட்டார். பாதுகாப்பு கருதி, குறைந்த பட்சம் இரு இடங்களுக்கு மாறுவார். அவருடன் செல்லும் எங்களுக்கு உரிய நேரம் உறக்கம் கிடைக்கும்படி பார்த்துக் கொள்வார்.

* அவரிடம் பணி செய்த போது நீங்கள் இன்னும் மறக்காத நிகழ்ச்சி சிலவற்றை கூற முடியுமா?

நேதாஜியுடன் படைகளில் உதவி புரிய வந்த ஜப்பானியர்கள் முக்கியமானக் கட்டங்களில் முன்னே சென்று போரிடாமல் பின் வாங்கி கொண்டனர். அங்கு இந்தியர்களே முன் வரிசையில் போரிட வேண்டியதாயிற்று. நேதாஜி இறுதியாகப் போரிட்ட மணிப்பால் போர் மறக்க முடியாதது. இதில் நதியைக் கடக்கும் போது ஏற்பட்ட மழையின் காரணமாக நாம் அதிகம் பேர் பலியானோம். இத்துடன் எங்களுடன் போரிட்ட பெண் வீராங்கணைகளை காப்பதிலும் பாதிப்பு அதிகரித்தது. இவை அனைத்தையும் மீறி நாம் ஆங்கிலேயப் படையினரில் அதிகமானவர்களை வீழ்த்தி இருந்தோம்.

* போஸுடனான உங்கள் கடைசி சந்திப்பை நினைவு கூற முடியுமா?

பதில்: கடைசியாக நேதாஜியை நான் 1947 ஆம் ஆண்டு, (மாதம் நினைவில் இல்லை) பர்மாவின் சித்தான் நதியில் தயாராக இருந்த படகில் ஏற்றி அனுப்பி வைத்தோம். இந்த நதியின் இருகரைகளிலும் வளர்ந்திருந்த அடர்ந்தமரங்கள் அதில் பயணம் செய்பவர்களை மேலிருந்து யாரும் பார்த்திடா வண்ணம் மறைத்து விடும். இதற்காக லேங்கிங் ஜாபர் காரில் கொண்டு சென்றதுதான் நாங்கள் அவருடன் நடத்திய கடைசி சந்திப்பு ஆகும். மிகவும் குறுகலான நதியான அது இந்திய எல்லையில் உள்ள கடலில் போய் கலக்கிறது. அங்கு அவரை எங்கோ அழைத்துச் செல்ல ஒரு நீர்மூழ்கிக் கப்பல் தயாராக இருந்ததாகக் கூறப்பட்டது. சித்தான் நதிக்கரையில் நேதாஜியை நாம் விட்ட சில நிமிடங்களில் நின்றிருந்த கார் மீது மேலே பறந்து வந்த போர் ஜெட் விமானம் குண்டு வீசிவிட்டு பறந்து சென்றது. இதனால், அந்தக் கார் வீணானதுடன், அதில் இருந்து ஒருசிலரும் உயிர் இழந்தனர். நாங்கள் மட்டும் அதிர்ஷ்டவசமாக தப்பி விட்டோம்.

* அப்போது போஸுடன் படகில் சென்றவர்கள் யார் எனக் கூற முடியுமா?

அவரது மெய்க்காப்பாளராகவும், உதவியாளராகவும் பணியாற்றி வந்த சுவாமி என அழைக்கப்பட்ட ஒரு மதராஸி இருந்தார். சுமார் 10 ஜப்பானிய மற்றும் சில சீக்கிய வீரர்களும் அந்த படகில் போஸுடன் சென்றனர். நானும் அவருடன் வரும் விருப்பத்தை தெரிவித்தேன். இதற்கு மறுத்த போஸ், ‘நீ என்னுடன் வர வேண்டாம். நான் மீண்டும் உங்களை வந்து சந்திப்பேன். நீ இங்குள்ள நம் படை வீரர்கள் அனைவரையும் பாதுகாப்பாக இந்தியாவுக்கு அனுப்புவதில் மற்றவர்களுடன் சேர்ந்து உதவியாக இரு. நம் படை மற்றும் போர்களின் மீதான அனைத்து ஆதாரங்களையும் அழித்து அப்பாவி பொதுமக்கள் போல் நடந்து கொள்ளுங்கள். இல்லையேல், இந்தியாவில் நீங்கள் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் உங்கள் அனைவரையும் கைது செய்து கொன்று விடுவார்கள்’ என எச்சரித்து சென்றார்.

* போஸ் உங்களை விட்டுச் சென்ற பின் நடந்தது என்ன?

அவர் கூறியதை போலவே நாம் தலைமையிடத்தின் பெரும்பாலான தஸ்தாவேஜ்களை அழித்தோம். எங்களிடம் இருந்தவற்றையும் எரித்தோம். பிறகு பலரையும் கப்பலில் பாதுகாப்பாக இந்தியா அனுப்பி வைத்தோம். இதனால், நானும் எனது இந்திய தேசிய படையின் அடையாள அட்டை ஒன்றை தவிர அனைத்தையும் எரித்து விட்டேன். பிறகு, பர்மாவின் தலைநகரான ரங்கூனுக்கு வந்து அங்கிருந்த சீனா நாட்டு வங்கியில் ஓட்டுநர் பணியில் இணைந்து பணியாற்றி வந்தேன். பிறகு மணமுடித்து எனது குடும்பத்தாருடன் 1965-ல் நான் சொந்த கிராமமான இங்கு குடும்பத்துடன் வந்து தங்கி விட்டேன். ஆங்கிலேயருக்கு பயந்து நான் நேதாஜியின் படையில் செய்த பணி குறித்து முற்றிலும் மறைத்து விட்டேன். பிறகு கான்பூரில் வாழ்ந்து வந்த எங்கள் படையின் முன்னாள் பெண் கமாண்டர் லஷ்மி சேகாலை 2005 ஆம் ஆண்டு சந்திக்க சென்றபோது எனது விஷயம் முதன் முறையாக வெளியாகி விட்டது.

* சுதந்திரத்திற்கு பின் ஆங்கிலேயர்கள் உங்கள் படையினரை தேடும் முயற்சியில் ஈடுபட்டார்களா?

பெரும் முயற்சியில் ஈடுபட்டனர். நாள்தோறும் வீடு வீடாகச் சென்று ஒளிந்திருக்கும் எங்கள் படையினர் பிடிபட்டால் அவர்களைப் பிடித்து அடித்துக் கொன்று காட்டில் வீசினர். ஜப்பானியர்களை மட்டும் கொல்லாமல் சிறையில் அடைத்தும், துப்புறவுப் பணிகளிலும் ஈடுபடுத்தினர். பிறகு ஒரு கட்டத்தில் அனைவரையும் ஒரே சமயத்தில் விடுதலை செய்து ஜப்பானுக்கு அனுப்பி வைத்ததன் காரணம் இன்று வரை எனக்கு புரியாமல் உள்ளது. இதில், எனது சந்தேகம் என்னவெனில், நேதாஜிக்கு ஆதரவளித்து வந்த ஜப்பானின் பிரதமர் தோஜோவுடன் ஆங்கிலேயர்களுக்கு ஏதாவது ரகசிய உடன்படிக்கை ஏற்பட்டிருக்கலாம்.

* ஆகஸ்ட் 18, 1945-ல் போஸ் விமான விபத்தில் மறைந்ததாக வெளியான செய்தியைக் கேட்டு நீங்கள் எண்ணியது என்ன?

இந்த தகவல் இந்திய வானொலியில் ஒலிபரப்பான போது அதை போஸ்ஜியுடன் சேர்ந்து நாம் பலரும் பர்மாவின் காடுகளில் உள்ள முகாமில் கேட்டுக் கொண்டிருந்தோம். இதை கேட்ட போஸ்ஜி, ‘பாருங்கள் நான் விமான விபத்தில் இறக்கடிக்கப்பட்டு விட்டேன்.’ எனக் கூறி புன்முறுவல் பூத்தார். அதில் போஸுடன் இருந்ததாக ஹபீபுர் ரஹ்மான் என்பவர் பெயரும் வெளியானது. இவர், போஸுடன் இருந்த வரையில் ஆங்கிலேயர்களுக்கு உளவு பார்த்ததாக எங்களுக்கு சந்தேகம் இருந்து வந்தது. இந்தியரான அவர் இடையில் காணாமல் போனார். பிறகு ஆங்கிலேயரிடம் 'விலை' போனதால் அவரை சாட்சியாக வைத்து விமான விபத்து வெளியிடப்பட்டிருக்கலாம்.

* இதை கேள்விப்பட்ட போஸ், அந்த விபத்து பொய் என்றும் தாம் உயிருடன் இருப்பதாகவும் பொதுமக்களிடம் உண்மையைக் கூற முன்வராதது ஏன்?

இதன் தெளிவானக் காரணம் எனக்கு தெரியவில்லை. ஆனால், 1945-க்கு பின் உலகம் முழுவதும் காலனி ஆதிக்கம் முடிவிற்கு வரத் தொடங்கியது. இதனால், நம் நாட்டில் இருந்தும் ஆங்கிலேயர்கள் வெளியேறி விடுவார்கள் பிறகு நாம் இந்தியா திரும்பலாம் என போஸ் காத்துக் கொண்டிருந்தார். ஆனால், அவரை திரும்பினால் தாம் பதவியில் அமர முடியாது என சில காங்கிரஸார் திட்டமிட்டு சதி செய்யத் துவங்கினர். நேரு, காந்திஜி மற்றும் ஆங்கிலேயர்களுக்கு இடையே சுதந்திரம் அளிப்பதற்கான ஒப்பந்தத்தில் நாடு திரும்பும் ஆங்கிலேயரிடம் போஸ்ஜியை ஒப்படைக்க வேண்டும் என்றானதாகவும் அவருக்கு ஒரு தகவல் கிடைத்திருந்தது. இதனால், வேறு வழியின்றி போஸ், பர்மாவில் இருந்து வெளியேறி தப்பும் முயற்சியில் இறங்க வேண்டியதாயிற்று. ஏனெனில், அதற்கு சற்று முன்பாக நடந்த இம்பால் போரில் போஸுக்கு ஏற்பட்ட படுதோல்விக்கு பின் ஜப்பானியர்கள் ஆங்கிலேயர்களிடம் சரண் அடைந்து விட்டனர். இதனால், இந்திய தேசிய படை கிட்டத்தட்ட முடிந்து போனது. பிறகு போஸுடன் நாம் பர்மியக் காடுகளில் தலைமறைவாகத்தான் இருந்தோம் எனக் கூறலாம். எனவே, அவர் தலைமறைவு வாழ்க்கைக்கான முடிவு எடுத்திருக்கலாம்.

* இதன் பிறகு நீங்கள் உட்பட அவருக்கு நெருக்கமானவர்கள் போஸை தேடும் முயற்சியில் ஈடுபட்டீர்களா?

நான் எனது சொந்த முயற்சியில் 1955 ஆம் ஆண்டில் ஒருமுறை கல்கத்தா வந்து அவரை தேடிச் சென்றேன். யாரிடமும் போஸ் பற்றி விசாரிக்காமல் அவர் என் கண்களில் எங்காவது தென்படுகிறாரா எனத் துழாவிப் பார்த்தேன். அப்போது, அவரது குடும்பத்தாரின் வீட்டை சுற்றி இருந்த உளவு போலீஸாரிடம் சிக்கினேன். அவர்கள் விசாரணையில் நான் ஒரு பிச்சைக்கார நாடோடி என நாடகமாடி நம்ப வைத்து விட்டு தப்பி மீண்டும் பர்மாவிற்கு திரும்பி விட்டேன்.

* உபியின் பைஸாபாத்தில் வாழ்ந்த கும்நாமி பாபா தான் நேதாஜி எனக் கூறப்படுவதை நம்புகிறீர்களா?

எனக்கு அவர் மீது நம்பிக்கை இல்லை. நிச்சயமாக போஸ் அயோத்தி வரை வந்து யாரையும் தொடர்பு கொள்ளாமல் இருந்திருக்க மாட்டார். அந்த பாபா இறந்த பின் இவர் தான் போஸா? என உறுதி செய்யும் பொருட்டு அவரது போட்டோக்கள் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதை பார்த்த போது, பாபாவின் முகம் முற்றிலும் வேறு மாதிரியாக இருந்தது எனக்கு தெரிய வந்தது. ஒருவேளை அந்த பாபா உயிருடன் இருக்கும் போது என்னை அழைத்து கேட்டிருந்தால் அவரது உடல் அங்கங்களைப் பார்த்தே அவர் நேதாஜியா? இல்லையா? என்பதை உறுதி செய்திருப்பேன்.

* இந்த கும்நாமி பாபா தான் நேதாஜி என உறுதி செய்யாமலேயே அவருக்கு நினைவுச்சின்னம் கட்டும் உபி அரசின் செயல் குறித்து தங்கள் கருத்து என்ன?

இதன் காரணம் எனக்குப் புரியவில்லை. இதை சமாஜ்வாதி அரசு செய்வது ஏன் என நானும் அறிய ஆவலாக இருக்கிறேன்.

* நேதாஜியின் மணவாழ்க்கை குறித்து கூற முடியுமா?

அவர் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக உலவும் செய்திகள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. காரணம், அவர் எங்களுடன் இருந்தவரை முற்றிலும் பிரம்மச்சாரியாகவே இருந்தார். சைவ உணவுகளை மட்டும் அருந்தினார். அவரை தனியாகத்தான் நாம் அனைவரும் பார்த்து வந்தோமே தவிர, ஒருமுறை கூட போஸுடன் அவரது குடும்பத்தாரைப் பார்த்ததில்லை. அவர்களைப் பற்றி போஸ் எங்களிடம் பேசியதும் கிடையாது. ஆனால், அவர் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்திருந்ததை அனைவரும் அறிந்திருந்தோம்.

* தற்போது போஸின் கொள்ளுப் பேத்தியான ராஜ்யஸ்ரீயுடன் உங்கள் போன்றவர்கள் இணைந்து அவரது தேடலுக்காக தொடங்கிய அமைப்பின் பலன் என்ன?

இன்னும் சொல்லும்படியான பலன் கிடைக்கவில்லை. ஆனால், அவரை பற்றிய மர்மங்களை விலக்கும் எங்கள் முயற்சியின் மீது நல்ல விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இதன்மூலம், நேதாஜி மீதான கோப்புகள் சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் இங்கிலாந்து மற்றும் ஜெர்மன் ஆகிய நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட கோப்புகளை வெளிப்படுத்தும் நிலை உருவாகி வருவது மகிழ்ச்சி. இத்துடன் தற்போது 118 வயதாகும் நேதாஜி என்னவானார் என்பதும் தெரிய வரும் என்பது எங்கள் நம்பிக்கை.

* சுதந்திரப் போராட்டத் தியாகிகள் பெறும் அரசு பலன் உங்கள் படையினருக்கு கிடைக்காமல் இருப்பது குறித்து தங்கள் கருத்து?

இது மிக, மிக வேதனையான ஒரு விஷயம். ஏனெனில், ஆங்கிலேயர்களிடம் இருந்து நம் நாட்டை விடுவிக்க வேண்டி அவர்களுடன் நேரிடையாகப் போரிட்டதும், உயிரிழந்ததும் நேதாஜியின் இந்திய தேசியப் படையினர் தான். ஆனால், நம் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பொதுமக்கள் அனைவரும் மகிழ்வுடன் இருக்க, எங்களுக்கு மட்டும் தலைமறைவு வாழ்க்கை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது. உண்மையிலேயே நாட்டின் சுதந்திரத்திற்காக போரிட்ட நேதாஜி இங்கு திரும்பி வரவும் முடியாமல் போனது. இதற்கு, காந்திஜி மற்றும் நேருஜியின் சேர்ந்து நடத்திய பதவி அரசியல் காரணமானது. நேதாஜி மட்டும் சுதந்திரத்துக்குப் பின் இங்கு வந்திருந்தால் இந்த நாட்டைப் பிரிக்க அனுமதித்திருக்க மாட்டார். இந்த பிரிவு இல்லாமல் நம்முடன் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் இணைந்திருந்தால் நாம் தான் உலகின் பலம் வாய்ந்த நாடாக இருந்திருப்போம். இதுவும் முகம்மது அலி ஜின்னாவின் பதவி அரசியலால் ஏற்பட்டது. இதற்காக எங்கள் படையினர் அவர்களை என்றைக்கும் மன்னிக்க மாட்டார்கள். நமக்கு கிடைத்த சுத்ந்திரம், அஹிம்சை மற்றும் தர்ணா போராட்டத்தில் அல்ல தவிர எங்கள் படையினர் நடத்திய போர் மற்றும் உயிரிழப்பு என்பது எங்கள் கருத்து.

நேதாஜியின் மீதான உண்மைகள் மறைக்கப்பட்டதன் பின்னணியில் சுதந்திரத்திற்கு பின் அடையும் பதவி அரசியல் மறைந்து இருந்ததை தற்போது பொதுமக்கள் மெல்ல, மெல்ல புரிந்துகொண்டு வருகிறார்கள். இதன் முழு உண்மை ஆதாரங்களுடன் விரைவில் வெளியாகும் நாளும் அதிக தூரம் இல்லை. அப்போதுதான் எங்களுக்கு தியாகிகளுக்கான அரசு சலுகை கிடைக்கும் எனில், இதை அனுபவிக்க நாம் உயிருடன் இருப்போமா எனத் தெரியவில்லை. ஆனால், மக்களவை தேர்தலில் போட்டியிட நரேந்திர மோடி முதன்முறையாக வாரணாசி வந்த போது என்னை மேடையில் அழைத்து பொதுமக்கள் முன் ஆசி பெற்றார். இதனால், அவர் எங்கள் படையினருக்கு கண்டிப்பாக ஏதாவது செய்வார் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம்.

* உங்கள் காலத்திற்கும், இப்போது உள்ள மக்களுக்கும் இடையே இருக்கும் தேசபக்தியில் நீங்கள் காணும் பெரிய வித்தியாசம் என்ன?

அன்றைய மக்கள் நம் நாடு ஆங்கிலேயரிடம் இருந்து விடுபட்ட பிறகு, நாம் அனைவரும் நமது சொந்த சட்ட, திட்டங்களை வகுத்து கொண்டு நிம்மதியாக இருப்போம் எனத் எண்ணியிருந்தோம். ஆனால், அந்த நிலை இன்னும் மாறவில்லை. நம் நாட்டில் இருந்து வெளியேறினாலும் தனது சட்டங்களை நம் நாட்டின் அரசுப் பதவிகளில் அமர்த்தி ஆங்கிலேயர்கள் சென்று விட்டனர். அவர்கள் இல்லை என்றாலும் அவர்களது ஆட்சி நம் இந்தியர்களால் தொடர்ந்து வருகிறது.

ஆர்.ஷபிமுன்னா - தொடர்புக்கு: shaffimunna.r@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x