Published : 27 Jun 2020 13:21 pm

Updated : 27 Jun 2020 13:21 pm

 

Published : 27 Jun 2020 01:21 PM
Last Updated : 27 Jun 2020 01:21 PM

கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதா?- பரபரப்பை பற்றவைத்த பாபா ராம்தேவின் பதஞ்சலி

baba-ramdev-s-patanjali-is-corona-discovered

“அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளாலும் ஏன், உலக சுகாதார நிறுவனத்தாலும்கூட சாதிக்க முடியாததை நாங்கள் சாதித்திருக்கிறோம். இதில் அனைவரும் பெருமிதம் அல்லவா அடைய வேண்டும்?” - கரோனா வைரஸ் பாதிப்புக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்ததைத் தொடர்ந்து எழுந்திருக்கும் சர்ச்சை குறித்து பாபா ராம்தேவ் சொல்லியிருக்கும் வார்த்தைகள் இவை.

உலக சுகாதார நிறுவனம் என்ன சொல்கிறது?
கரோனாவுக்குத் தடுப்பூசியும், மருந்தும் கண்டுபிடிப்பது தொடர்பாக உலகம் முழுவதும் ஆய்வுகள் நடந்துவருகின்றன. “சில மேற்கத்திய, பாரம்பரிய அல்லது வீட்டு சிகிச்சைகள் மிதமான ‘கோவிட்-19’ அறிகுறிகளைப் போக்கலாம். எனினும், இதுவரை எந்த ஒரு மருந்தும் இந்த நோயைத் தடுப்பதாகவோ குணப்படுத்துவதாகவோ அறியப்படவில்லை” என்று தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறது உலக சுகாதார நிறுவனம்.


அதேசமயம், “கோவிட்-19 நோய்க்கான தடுப்பூசிகள், மருந்துகளை உருவாக்கும் முயற்சிகளை ஒருங்கிணைத்து வருகிறோம். ஆய்வு முடிவுகள் வருவதைப் பொறுத்து, விரைவில் அவை தொடர்பான தகவல்களை அளிப்போம்” என்றும் உலக சுகாதார நிறுவனத்தின் இணையதளம் குறிப்பிடுகிறது.

‘ஒரே வாரத்தில் குணமாகிவிடும்’
இந்தச் சூழலில்தான், ‘கரோனா கிட்’ எனும் பெயரில் ‘கொரோனில்’ மற்றும் ‘சுவாசரி’ ஆகிய இரண்டு மருந்துகள், இன்னும் ஒரு மாதத்தில் ரூ.545 ரூபாய்க்கு விற்பனைக்கு வரும் என்று பதஞ்சலி நிறுவனத்தின் தலைவர் ஆச்சார்யா பாலகிருஷ்ணாவும், பாபா ராம்தேவும் கூட்டாக அறிவித்தார்கள்.

“3 நாட்களில், கரோனா ‘பாசிட்டிவ்’ என்று கண்டறியப்பட்ட 69 பேர் ‘நெகட்டிவ்’ எனும் நிலைக்கு வந்திருக்கிறார்கள். ஒரு வாரத்தில் 100 சதவீதம் பேருக்குத் தொற்று இல்லை என்று நிரூபணமாகிவிட்டது. அதுமட்டுமல்ல, இந்தப் பரிசோதனையை நேரடியாக நாங்கள் செய்யவில்லை. மூன்றாம் தரப்பு செய்த சோதனை இது” என்று சொல்கிறார் ராம்தேவ். அவர் குறிப்பிடும் மூன்றாம் தரப்பு ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள ‘நிம்ஸ்’ பல்கலைக்கழகம் (என்.ஐ.எம்.எஸ்- தேசிய மருத்துவ அறிவியல் மற்றும் ஆய்வு) ஆகும்.

அங்கு பதஞ்சலி ஆய்வு நிறுவனத்தின் குழுவும், நிம்ஸ் பல்கலைக்கழகத்தின் குழுவும் சேர்ந்து இந்த ஆய்வை நடத்தியதாகச் சொல்லப்படுகிறது. அங்கு 95 கரோனா நோயாளிகளுக்கு இந்தப் பரிசோதனை நடத்தப்பட்டிருக்கிறது. மேலும், டெல்லி, அகமதாபாத் உள்ளிட்ட நகரங்கள் என மொத்தம் 280 நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கப்பட்டதாகவும் அவர்களில் 100 சதவீதம் பேர் குணமாகிவிட்டனர் என்றும் ராம்தேவ் தரப்பு சொல்கிறது. ஆனால், சிகிச்சை, மருத்துவ ஆய்வு தொடர்பான முழுமையான விவரங்களை அவர்கள் அளிக்கவில்லை. இது மருத்துவ உலகில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

முதலாவதாக, முறைப்படியாக எந்த அனுமதியையும் பதஞ்சலி தரப்பு வாங்கவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிறுவனத்தின் மருந்து தயாரிப்புப் பிரிவான ‘திவ்யா பார்மஸி’, உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்வாரில் இருக்கிறது. இதன் சார்பில்தான் உத்தரகாண்ட் அரசின் உரிமம் வழங்கும் அமைப்பிடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அம்மாநிலத்தின் உரிமம் வழங்கும் அதிகாரி கூறும்போது, “ஜூன் 10-ல் சில மருந்துப் பொருட்கள் தொடர்பாக அனுமதி கோரி பதஞ்சலி தரப்பிடமிருந்து எங்களுக்கு விண்ணப்பம் வந்தது. அதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு, இருமல், சுவாசப் பிரச்சினை ஆகியவை தொடர்பாகத்தான் குறிப்பிடப்பட்டிருந்தது. கரோனா எனும் வார்த்தையே இல்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

“இறுதி அனுமதி கிடைப்பதற்கு முன்னர், பதஞ்சலி நிறுவனம் விளம்பரம் செய்திருக்கக்கூடாது. இது தொடர்பான ஆவணங்களை அவர்களிடமிருந்து கேட்டு வாங்கியிருக்கிறோம். விரைவில் இது தொடர்பாக முடிவெடுப்போம்” என்று ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபத் நாயக் கூறியிருக்கிறார். ‘நிம்ஸ்’ பல்கலைக்கழகத்தில் கரோனா நோயாளிகளுக்கு மருத்துவரீதியிலான சோதனை நடத்துவதற்கான முறையான அனுமதி பெறப்படவில்லை என்று கண்டனம் தெரிவித்திருக்கும் ராஜஸ்தான் அரசு, இது தொடர்பாக அப்பல்கலைக்கழகத்துக்கு நோட்டீஸும் அனுப்பியிருக்கிறது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (ஐசிஎம்ஆர்) ஒப்புதலைப் பெறாமல், கரோனாவுக்கு மருந்து எனும் பெயரில் மக்களைத் தவறாக வழிநடத்துவதாகப் பதஞ்சலி நிறுவனத்தின் மீது ராஜஸ்தான், ஹரியாணா போன்ற மாநிலங்களில் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இது புதிதல்ல!

இதற்கு முன்னர், புற்றுநோய், எய்ட்ஸ் போன்றவற்றுக்கும் தன்னிடம் மருந்து இருப்பதாகச் சொன்னவர்தான் ராம்தேவ். “திவ்யா பார்மஸி, பதஞ்சலி ஆயுர்வேதா நிறுவனங்களின் மருந்துகளுடன் யோகா பயிற்சியும் எடுத்துக்கொண்டால் புற்றுநோயை வென்றுவிடலாம்; எய்ட்ஸ் பாதிப்பிலிருந்தும் குணமடையலாம்” என்று 2006-ல் அவர் சொன்னது பரபரப்பான செய்தியானது. இது தொடர்பாக அவரது இணையதளத்திலும், அவரது அறக்கட்டளை சார்பில் வெளியாகும் ‘யோக் சந்தேஷ்’ எனும் இதழிலும் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்போது, தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு அந்த அறிவிப்பைக் கண்டித்தது. “இப்படியான அறிவிப்புகள் மூலம் புற்றுநோயாளிகளையும், எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானோரையும் பாபா ராம்தேவ் தவறாக வழிநடத்துகிறார்” என்று மருத்துவர்களும் விமர்சித்தனர்.

பின்னர், அப்படியெல்லாம் சொல்லவே இல்லை என்று மறுத்தார் ராம்தேவ். “யோகா மூலம் புற்றுநோயைக் குணப்படுத்த முடியும் என்றுதான் சொன்னேன். அத்துடன், எய்ட்ஸ் பாதிப்புள்ளவர்கள் யோகா மூலம் நல்ல பலன்களைப் பெற முடியும் என்று குறிப்பிட்டேன். என் வார்த்தைகளை ஊடகங்கள் தவறாகத் திரித்துவிட்டன” என்று விளக்கமளித்தார். ஆனால், அவர் பரிந்துரைந்த மருந்துகளாலும் யோகாவாலும் புற்றுநோயைக் குணப்படுத்துவதே முதலில் சாத்தியமில்லை; எய்ட்ஸ் இரண்டாம்பட்சம்தான் என்று விமர்சனங்கள் எழுந்தன. இதற்கிடையே, “எய்ட்ஸுக்கு பாபா ராம்தேவ் முன்வைத்த மருந்து மருத்துவ ரீதியாக நிரூபணம் செய்யப்பட்டால், அதைப் பயன்படுத்துவது குறித்துப் பரிசீலிக்கப்படும்” என்று ஆயுஷ் துறை அமைச்சர் ஸ்ரீபத் நாயக், 2015-ல் கூறியது தனிக்கதை!

தொடரும் சர்ச்சைகள்
தன்பாலின உறவை (Homosexuality) யோகா மூலம் குணப்படுத்த முடியும்; யோகா மூலம் ஆண் குழந்தையைப் பெற்றெடுக்க முடியும் என்றெல்லாம் சொல்லி அவ்வப்போது பரபரப்பை உருவாக்கும் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

2016 டிசம்பரில், தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை வெளியிட்டதற்காக, பதஞ்சலி நிறுவனத்துக்கு ரூ.11 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அந்நிறுவனத் தயாரிப்புகளின் தரம் குறித்தும் பல்வேறு சர்ச்சைகள் உண்டு. 2017-ல், இந்தியப் பாதுகாப்புப் படை கேன்டீன் ஸ்டோர்ஸ் துறை, தனது விற்பனையகங்களில் ‘பதஞ்சலி’ நெல்லிக்காய்ச் சாறு பாக்கெட்டுகளை விற்கத் தடை விதித்தது. கொல்கத்தாவில் உள்ள மத்திய உணவுப் பரிசோதனை மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் அது தரமற்ற தயாரிப்பு என்று தெரியவந்தது.

அதுமட்டுமல்ல, ‘பதஞ்சலி நூடுல்ஸ்’, ‘பதஞ்சலி பாஸ்தா’ போன்றவை உரிய உரிமம் இன்றி விற்கப்பட்டதாகவும் சர்ச்சை எழுந்தது. அந்தப் பொருட்களுக்குத் தடையும் விதிக்கப்பட்டது. இப்படி பல்வேறு சர்ச்சைகளுக்குச் சொந்தக்காரரான பாபா ராம்தேவ், இன்றைக்குக் கரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்திருப்பதாகப் பெருமிதப்படுகிறார்.

அலோபதியா, ஆயுர்வேதமா?
கரோனாவுக்கான தனது மருந்து குறித்து, பதஞ்சலியின் அதிகாரபூர்வ யூடியூப் தளத்தில் இருக்கும் காணொலியில் ராம்தேவ் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார். அமிர்தவல்லி, துளசி, அஷ்வகந்தா ஆகியவற்றைக் கொண்டு இந்த மருந்து தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், குறிப்பாக, அமிர்தவல்லி எந்த வகையான வைரஸையும் கொல்லக்கூடியது என்றும் அவர் கூறியிருக்கிறார். மூச்சுப் பயிற்சி செய்வது கரோனா ஏற்படுத்தும் சுவாசக் கோளாறுகளைக் கட்டுப்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டுகிறார்.

இந்நிலையில், இது தொடர்பாக உருவாகியிருக்கும் விவாதம், அலோபதி மருத்துவத்துக்கும், பாரம்பரிய மருத்துவத்துக்கும் இடையிலான போட்டியாகவும் சித்தரிக்கப்படுகிறது. இது தொடர்பான தொலைக்காட்சி விவாதங்களாகட்டும், இதில் விதிமுறைகள் எதுவும் மீறப்படவில்லை என்று ‘நிம்ஸ்’ பல்கலைக்கழகத்தின் தலைவரும் வேந்தருமான டாக்டர் பி.எஸ்.தோமர் அளித்திருக்கும் விளக்கம் தொடர்பான காணொலியாகட்டும், அனைத்திலும் ‘அலோபதி Vs ஆயுர்வேதம்’ எனும் விவாதத்தை மையமாகக் கொண்ட பின்னூட்டங்களே அதிகம் காணப்படுகின்றன.

அதேசமயம், அமிர்தவல்லி நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதுதான் என்றாலும், அதை வைத்து 100 சதவீதம் மருந்து கண்டுபிடித்துவிட்டதாகச் சொல்வது அதீதம் என்று ஆயுர்வேத மருத்துவர்களே விமர்சிக்கிறார்கள். அதேபோல், “மூலிகை மருந்துகள், யோகா போன்றவை நோய் எதிர்ப்பு சக்தி வழங்குவதையோ, சுவாசப் பிரச்சினைகளை எதிர்கொள்ள உதவுவதையோ மறுக்கவில்லை. ஆனால், கரோனா போன்ற பல்வேறு சிக்கல்களைக் கொண்ட நோயை 100 சதவீதம் குணப்படுத்தும் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது” என்று அலோபதி மருத்துவ நிபுணர்கள் சாடுகிறார்கள்.

ஆனால், இவற்றைப் பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாத ராம்தேவ், “நாங்கள் செய்தது விளம்பரம் அல்ல. அறிவிப்புதான்” என்று அலட்சியமாகச் சொல்கிறார். மேலும், “நாங்கள் அறிவியல்பூர்வமாகத்தான் இதைச் செய்திருக்கிறோம். இது தொடர்பான எல்லா ஆவணங்களையும் அரசிடம் அளித்திருக்கிறோம். இனி எந்தச் சர்ச்சையும் எழாது” என்கிறார் உறுதியாக.

அந்த நம்பிக்கை எங்கிருந்து எழுகிறது என்பதுதான் முக்கியமான கேள்வி!

தவறவிடாதீர்!பாபா ராம்தேவ்CoronaBaba RamdevPatanjaliகரோனாமருந்துகண்டுபிடிப்புபதஞ்சலிகரோனா மருந்துகொரோனாSpecial articles

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x