Last Updated : 25 Jun, 2020 07:19 AM

 

Published : 25 Jun 2020 07:19 AM
Last Updated : 25 Jun 2020 07:19 AM

சாமானியர்களிடமிருந்து பிரிக்கப்படும் ரயில்...

உலகின் பெரிய ரயில்வே வலைப்பின்னலைக் கொண்டதில் ஒன்றான இந்திய ரயில்வே நிறுவனத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக எளிய மக்களின் வாழ்க்கையிலிருந்து பிரித்துவிடும்போல இருக்கிறது பாஜக அரசு. ஒட்டுமொத்த இந்தியாவும் கொள்ளைநோயால் ஸ்தம்பித்திருக்கும் இந்த நாட்களிலும் அடுத்தடுத்து இந்திய ரயில்வே எடுத்திருக்கும் இரு முடிவுகள் மோசமானவை. முதலாவது, 200 கிமீ தொலைவுக்கும் கூடுதலாக இயங்கும் பயணிகள் ரயில்கள் அனைத்தும் விரைவு ரயில்களாக மாற்றப்பட வேண்டும் என்பதாகும். இரண்டாவது, வணிகரீதியாகப் பெரிய லாபம் தராத தடங்களில் இயக்கப்படும் ரயில்களை, அதாவது குறைவான பயணிகளுடன் இயங்கும் ரயில்களைப் படிப்படியாக நிறுத்திவிடுவது என்பதாகும். இந்த இரு முடிவுகளும் இந்திய ரயில்வேயின் புதிய பயணத் திசையை அப்பட்டமாகவே சொல்கின்றன: ரயில்வே ஒரு சேவை என்கிற நிலையிலிருந்து முழுக்க வியாபாரம் என்ற நிலை நோக்கிப் பயணப்படுகிறது.

ரயில்வேயின் எதிர்காலம்

இந்திய ரயில்வே என்பது வெறும் போக்கு வரத்துக் கட்டமைப்பு மட்டுமல்ல; உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்தைக் குறுக்கும் நெடுக்குமாக அனைத்து முனைகளுடனும் பிணைப்பது. உலகிலேயே அதிகத் தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்களில் இந்திய ரயில்வேயும் ஒன்று; 12.3 லட்சம் பேர் பணிபுரிகிறார்கள். ஒப்பந்தத் தொழிலாளர்களின் கணக்கு தனி. இவர்களையும் இவர்களின் குடும்பத்தினரையும் சேர்த்தால் ஏறத்தாழ 50 லட்சம் பேர் நேரடியாக இந்திய ரயில்வேயை நம்பியிருக்கிறார்கள். தினமும் காலையில் காய்கறி மூட்டைகளைத் தூக்கிக்கொண்டு ரயிலேறி, பக்கத்தில் உள்ள சிறுநகரத்துக்குச் சென்று விற்றுவிட்டு ஊர் திரும்புபவர்கள் ஏராளம். கிராமங்களிலிருந்து தினமும் ரயிலைப் பிடித்துப் பள்ளி, கல்லூரிகளுக்கு லட்சக் கணக்கான மாணவர்கள் செல்கிறார்கள்.

இப்படிப்பட்ட கட்டமைப்பைச் சமீப வருடங்களாக அரசு கையாண்டுவரும் விதம், ரயில்வே துறையின் எதிர்காலம் குறித்த அச்சத்தையே ஏற்படுத்துகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் ரயில்வே துறையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் முதலீடுகள் கணிசமாகக் குறைந்திருக்கின்றன. 2018-க்கான நிதி அறிக்கையில் ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை 2013-ம் ஆண்டோடு ஒப்பிடும்போது 50% குறைவு. 1952-ல் 89% சரக்குப் போக்குவரத்தைத் தன்வசம் வைத்திருந்த ரயில்வே, 2012-ல் 47% இழந்திருக்கிறது. அதாவது, பிற தனியார் தளவாடத் துறை அடைந்த வளர்ச்சிக்கு ஏற்ப ரயில்வே துறை வளர்த்தெடுக்கப்படவில்லை. புதிய ரயில் பாதைகள் அமைப்பதிலும் சீனாவுடன் ஒப்பிடும்போது இந்தியா பல மடங்கு பின்தங்கியிருக்கிறது. இந்திய ரயில்வே துறையில் போதிய சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது, முதலீடு செய்யாதது, புதிய மாற்றங்களுக்கு ஏற்ப தகவமைத்துக்கொள்ளாதது எனப் பல்வேறு நிர்வாகக் குறைபாடுகளால் இழந்தது ஏராளம்.

இவை எல்லாவற்றையும்விட முக்கியமானது என்னவென்றால், உலகின் பல்வேறு நாடுகளிலும் ரயில்வே துறை நஷ்டத்தில்தான் இயங்குகிறது. மக்களின் அன்றாட வாழ்வில் மிக முக்கியமான அங்கமாகிவிட்ட ரயில்களை லாப நோக்கில் பார்க்க முடியாது என்பதுதான் அந்நாடுகளின் நிலைப்பாடு. இந்தியாவிலோ அதற்கு நேர்மாறாக நடந்துவருகிறது. லாபம் இல்லை என்ற காரணம் காட்டி ரயில்வேயையும் தனியார்மயமாக்கும் முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன.

பயணிகள் ரயில்களை விரைவு ரயில்களாக ஆக்கும் முயற்சியை அதன் ஒரு படியாகத்தான் பார்க்க முடியும். இதன்படி, விரைவு ரயில்களாக மாற்றப்பட்டிருக்கும் 502 பயணிகள் ரயில்களில் 24 ரயில்கள் தமிழ்நாட்டில் இயக்கப்படுபவை; இந்த ரயில்கள் இனி குறிப்பிட்ட சில நிலையங்களில் மட்டுமே நின்றுசெல்லும். மேலும், இவற்றின் கட்டணமும் உயரும். விழுப்புரத்திலிருந்து சுமார் 300 கிமீ தொலைவிலுள்ள மதுரைக்குப் பயணிகள் ரயிலில் இன்று ரூ.65-ல் சென்றுவிட முடியும். இனி, விரைவு ரயிலில் இது ரூ.250-க்கும் மேல் ஆகும்.

என்னென்ன பின்விளைவுகள்?

இந்தியச் சமூகத்துக்கு, குறிப்பாக அடித்தட்டு மக்களின் வாழ்க்கைக்கு ரயில்கள் ஆற்றிவரும் பங்களிப்பைப் புரிந்துணர்ந்த ஒருவர்தான் இந்திய ரயில்வேயின் முழுப் பரிமாணத்தையும் உணர முடியும். தென்னக ரயில்வே தொழிலாளர் சங்கத் தலைவர்களில் ஒருவரான ஆர்.இளங்கோவனிடம் ஒருமுறை பேசிக்கொண்டிருந்தேன். அவர் சொன்னார், “ஒவ்வொரு சிற்றூரிலும் ரயில் நிலையம் கொண்டுவரப்பட்டதன் பின்னணியில் எத்தனையோ போராட்டங்கள் இருக்கின்றன. கிராமப்புற மக்கள் தங்கள் உற்பத்திப் பொருட்களைப் பக்கத்தில் உள்ள நகரங்களுக்குக் கொண்டுசென்று விற்பார்கள். அவர்களுக்கு மார்க்கெட் சீசன் டிக்கெட்கூட உண்டு. கட்டணம் ரொம்பவும் குறைவு. பயணிகள் ரயிலில் 64% பேர் சீசன் டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள்தான். முக்கியமாக, மாணவிகள் என்றால் அவர்களுக்குப் பட்டப்படிப்பு வரை விலையில்லா சீசன் டிக்கெட். மாணவர்கள் என்றால் 12-ம் வகுப்பு வரை. அவர்களைக் கல்வியை நோக்கி உந்தித்தள்ள இது எவ்வளவு பெரிய உந்துசக்தி!”

சரி, இப்படியே போய் ரயில்கள் தனியார்மயமானால் என்னவாகும்? தாம்பரத்திலிருந்து எழும்பூருக்குச் செல்ல இன்று ரூ.10 கட்டணம் என்றால், தனியாரிடம் செல்லும்போது இது ரூ.70 ஆகும். ஏற்கெனவே மெட்ரோ ரயில்களின் கட்டணம் கிட்டத்தட்ட அப்படித்தானே இருக்கிறது! ஒருகட்டத்தில் இது என்னவாகும் என்றால், மக்களை ரயில்களிலிருந்து அகற்றும். பேருந்து, தனிநபர் போக்குவரத்து போன்றவற்றை மக்கள் நாடும்போது, விபத்துகள் அதிகரிப்பதுடன் சுற்றுச்சூழலுக்கும் கேடு ஏற்படும்.

முக்கியமான ஒரு கேள்வி

இதையெல்லாம் தாண்டி ஒரு கேள்வி இருக்கிறது. ரயில்களை வெறுமனே வியாபாரமாகப் பார்க்க முடியுமா? அப்படியென்றால், சீனா, பாகிஸ்தான் எல்லைகளில் ரயில் பாதைகளை அமைக்கிறோமே, அது எதற்காக? போக்குவரத்தின் வழியே நாட்டின் பாதுகாப்புக் கட்டமைப்பைப் பலப்படுத்துவதுதானே நோக்கம்? அப்படியென்றால், போக்குவரத்தின் வழியே நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பைப் பலப்படுத்துவதை மட்டும் எப்படி வெறும் வியாபாரமாகப் பார்க்க முடியும்?

- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@hindutamil.co.in.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x