Last Updated : 25 Jun, 2020 07:17 AM

 

Published : 25 Jun 2020 07:17 AM
Last Updated : 25 Jun 2020 07:17 AM

‘சமூகம்கிறது நாங்களும்தான்... எங்களையும் சேர்த்து அரசு யோசிக்கட்டும்!’- நாட்டுப்புறக் கலைஞர்களின் சோகக் கதை

மக்கள் அல்லது சமூகம் அல்லது நாடு என்கிற வார்த்தைகளை நாம் பயன்படுத்தும்போதெல்லாம் ஏதோ ஒரு மக்கள் திரளை, அதாவது மக்களில் ஒரு பகுதியினரை மனதில் நினைத்துக்கொள்கிறோம். ஆனால், அந்த மக்கள் திரளானது பெருமளவில் உயர் நடுத்தர வர்க்கத்தையோ, நடுத்தர வர்க்க வாழ்க்கையையோதான் அர்த்தப்படுத்துவதாக அமைகிறதே அன்றி, மக்களில் எல்லாப் பிரிவினரையும் உள்ளடக்குவது இல்லை. உண்மை என்னவென்றால், எல்லாப் பிரிவினரையும் உள்ளடக்குவதற்குப் பெயர்தான் மக்கள், சமூகம், நாடு. அதிலும் உள்ளதிலேயே யார் பலவீனமான சூழலில் இருக்கிறார்களோ அவர்களுடைய இடத்திலிருந்தும் யோசிப்பதுதான் நல்லாட்சிக் கொள்கைக்கான இலக்கணம். மூன்று மாத ஊரடங்குக் கட்டுப்பாடுகள் முற்றிலுமாக ஒடுக்கி நசுக்கியிருக்கும் சமூகப் பிரிவுகளில் நாட்டுப்புறக் கலைஞர்களும் அடக்கம். அவர்கள் குரலைக் கேட்போம்.

வேலவன்-சங்கீதா, வில்லிசைக் கலைஞர்கள், நெல்லை.

ஆறு மாத்தைக்கு திருநவேலி, நார்கோயில்ல நடக்குற கொடையாலதான் குடும்பங்கள் வாழும். சாமிக்கே கொடையில்லாதப்போ எங்க கதி என்னாகும்? எங்களை மாதிரி கொஞ்சம் வசதி படைச்சவங்ககூட ஏதோ சேத்துவச்ச நக நட்ட வித்து காலத்த தள்றோம். எங்களுக்கும் கீழ இருக்குற கலைஞர்கள் என்ன பண்ணுவாங்க? அவங்க பாடுதாம்லே பெரும் பாடு. கொல்லை வேலை, கொத்துவேலை, தீப்பெட்டி கம்பெனி, வேட்டு கம்பெனின்னு அவன் வாழ்நாள்லேயும் பார்க்காத வேலைக்கெல்லாம் போவ ஆரம்பிச்சிட்டாங்க. ராவுல முழிச்சிருந்துட்டுப் பகல்ல தூங்குற பழக்கம் உள்ளவன் எப்படிப் பகல் வேலையப் பார்க்க முடியும்? அரசாங்கம் எந்த முடிவை எடுக்கும்போதும் எங்களையெல்லாமும் சேர்த்து யோசிச்சு எடுக்கணும்!

எம்.வெங்கடேசன், தெருக்கூத்துக் கலைஞர், பர்கூர்.

தமிழ்நாட்லயே தெருக்கூத்துக் கலைஞர்கள் அதிகமா வசிக்கிறது கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்கள்லதான். தெருக்கூத்துங்கிறது மத்த கலைகள் மாதிரி ஒரே ராத்திரியில முடிஞ்சிடாது. கொறைஞ்சது பதினெட்டு நாள் நடக்கும். எல்லாமே தை தொடங்கி ஆடி வரைக்கும்தான். அதுக்கப்புறம் சாவு வீடுகள்ல ஒருநா கூத்து கிடைச்சாத்தான் உண்டு. என் குழுவுல பதினஞ்சு பேர் இருக்காங்க. நானே ஒண்ணுமில்லாம நிக்கறப்ப அவங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்றதுன்னு புரியாமக் கெடக்கேன். சேமிப்பும் முடிஞ்சுடுச்சு, தெரிஞ்ச எடத்துலயெல்லாம் கடனும் வாங்கியாச்சு, நல வாரியத்துல கொடுத்த பணமும் செலவாயிடுச்சு. இனிமே என்ன செய்யுறதுன்னு தெரியல. ஆறு ஊர்ல கூத்து நடத்துறதுக்குத் தாம்பூலம் வாங்கியிருந்தேன். எல்லாம் போச்சு.

தேன்மொழி ராஜேந்திரன், கரகாட்டக் கலைஞர், தஞ்சாவூர்.

ஒரு கலைஞனுக்குச் சொகம், அவனோட கலையை மத்தவங்க ரசிச்சுக் கைதட்டி மகிழ்ச்சியடையறதும், நிகழ்ச்சி முடிஞ்சு வேர்வைக் கசகசப்போடு சம்பளத்த வாங்கி கண்ணுல ஒத்திக்கிறதும்தான். இந்த ரெண்டும் இல்லன்னா அவன் வெறும் நடைப்பொணம்தான். நாட்டுப்புறக் கலைஞர்களைப் பொறுத்தமட்டுல இந்தக் கோடை காலகட்டம்தான் வருஷத்துல வருமானத்துக்குரியது. காவிரிப் படுகையைப் பொறுத்தமட்டுல தொடர்ந்து மூணாவது வருஷமா வாழ்வாதாரம் இழந்து வக்கத்துப்போய்க் கிடக்கிறோம். மொத வருஷம் கஜா புயலால மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால கூத்து, கச்சேரிகள் எதுவும் நடக்கலை. அடுத்த வருஷத்துல நாடாளுமன்றத் தேர்தல்னு சொல்லி ராத்திரி பத்து மணிக்கு மேல் நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிச்சிட்டாங்க. அப்பவும் வருமானம் போச்சு. இந்த வருஷமாவது விடியும்னு காத்துக்கெடந்தோம். சுத்தமா குழியில தள்ளி மூடிடுச்சு கரோனா. ரேஷன் அரிசியை வாங்கித் தின்னுட்டுதான் உசுரு வாழ்ந்துக்கிட்டிருக்கோம். அதுவுமில்லைன்னா கதை முடிஞ்சுது.

பி.மணிமேகலை, நாடகக் கலைஞர், திண்டுக்கல்.

எங்கம்மா நான் வயித்துக்குள்ள இருக்கறப்பவும் நாடகம் நடிச்சுட்டுத்தான் இருந்தாங்க. நாடகக் கொட்டாயில தொட்டி கட்டி வளர்ந்த நானு, நாலு வயசுல வேசம் கட்டிட்டேன். இப்ப 28 வயசு ஆவுது. கணவரைப் பிரிஞ்சு ஆறு வயசுப் புள்ளயோட இருக்கிற எனக்கு நாடகம்தான் உறுதுணையா இருந்துச்சு. இப்ப நாடகமும் இல்லன்னதும், ஏதோ அனாதையா ஆதரவில்லாம இருக்கிற மாதிரி இருக்கு. மாசத்துல பத்து நாளு வேலைக்குப் போனாலும்கூட, அதவெச்சு மீதி இருபது நாளை ஓட்டிடுவோம். ஆனா இப்படி மொத்தமா மூணு மாசம் வேலையில்லன்னா என்ன செய்றது? நகையை அடமானம் வெச்சு இப்ப ஓடிக்கிட்டிருக்கு. அதுவும் முடிஞ்சுருச்சுன்னா எப்படிச் சாப்பிடப்போறோம்னு தெரியலை. நாலு மாசமா டூவீலருக்குத் தவணை கட்டல. அவன் எப்ப வந்து வண்டியத் தூக்கிட்டுப் போப்போறானோ தெரியலை. சரி, வேற எதாவது வேலைக்குப் போலாம்னு பார்த்தா, ‘இருக்கிறவங்களுக்கே வேலை இல்லை; உனக்கு எங்க இருக்கு வேலை?’ன்னு துரத்துறாங்க. கிருமி பரவுறதுன்னா காய்கறிக் கடை வழியாக்கூடத்தான் பரவுது. அதுக்காக சாப்புடுறதையே விட்டுடுறோமா என்ன? வசதியுள்ளவங்க வீட்டுக்குள்ள உட்கார்ந்துக்கிட்டு ‘ஊரடங்கு நல்லது’ன்னு பேசலாம். இல்லாதபட்டவங்க என்ன செய்யிறது?

சி.பாண்டியன், நாட்டியக் கலைஞர், திருநாளூர்.

பொதுவா, ஆறு மாசத்துக்குச் சம்பாதிச்சு வெச்சுக்கிட்டு அடுத்த ஆறு மாசத்த ஓட்டறதுதான் எங்க வாழ்க்கை. சம்பாதிக்கிற ஆறு மாசத்துல இப்ப மண்ணு விழுந்துடுச்சு. அதனால, பின்னாடி வர்ற ஆறு மாசத்தை நெனைச்சாலே கதக்குன்னு இருக்கு. அரசாங்கம் கொடுத்த ரேஷன் சாமான், சங்கத்துலேர்ந்தும், பொதுநல அமைப்புகள்லேர்ந்தும் கொடுத்த உதவிகள்ல மொத மாசம் ஓடுனுச்சு. ஆனா, இப்ப ஒண்ணுத்துக்கும் வழி இல்லாமப் போயிட்டு. நல வாரியத்துலயும் பதிவு பண்ணியிருக்கேன். பதிவு பண்ணி ஆறு மாசம்தான் ஆவுது, அதனால இப்ப நிவாரண உதவி கெடைக்காதுன்னுட்டாங்க. ஊரடங்கு, கட்டுப்பாடுன்னு சொன்னா, ஜனங்களோட வருமான இழப்புக்கு அரசாங்கம் பொறுப்பு எடுத்துக்கணும், இல்லாட்டி ஜனங்கள அவங்க போக்குல விட்டுடணும். அவங்கவங்களுக்குத் தன் உயிர் மேல இல்லாத அக்கறையா அடுத்தவங்களுக்கு வரப்போகுது? எவ்வளவோ வியாதிங்க நடுவுலதானே வாழ்ந்துக்கிட்டிருக்கோம், அப்படி எச்சரிக்கையோட பழைய வாழ்க்கைமுறைக்குத் திரும்பணும்; இல்லாட்டினா வறுமையில சாவ வேண்டியதுதான்!

- கரு.முத்து, தொடர்புக்கு: muthu.k@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x