நாம் ஏற்கிறோமோ? இல்லையோ? கரோனா வைரஸ் ஒரு சமூகப் பரவலாகியிருப்பது நிதர்சனம் –இந்திய மருத்துவ சங்கத்தின் தேசியத் தலைவர்  ராஜன் சர்மா  பேட்டி

நாம் ஏற்கிறோமோ? இல்லையோ? கரோனா வைரஸ் ஒரு சமூகப் பரவலாகியிருப்பது நிதர்சனம் –இந்திய மருத்துவ சங்கத்தின் தேசியத் தலைவர்  ராஜன் சர்மா  பேட்டி
Updated on
2 min read

கரோனாவை கட்டுப்படுத்த மருத்துவர்கள் ஆலோசனையை டெல்லி அரசு பெறுவதில்லை என இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் தேசியத் தலைவர் டாக்டர்.ராஜன் சர்மா புகார் கூறியுள்ளார். இது குறித்து அவர் ‘இந்து தமிழ் திசை’ இணையத்திற்கு அளித்த சிறப்பு பேட்டி பின்வருமாறு:

கேள்வி: டெல்லியில் திடீர் என கரோனா பரவல் அதிகரிக்கக் காரணம் என்ன?

பதில்: கரோனா பரவல் என்பது சர்வதேச அளவில் உள்ளது. இந்தியாவில் இது டெல்லி போன்ற பெருநகரங்களில் மக்கள் நெரிசலுடன் வாழும் பகுதிகளில் அதிரித்துள்ளது. இதுபோல், அடித்தட்டு மக்கள் அதிக நெரிசலுடன் வாழும் பகுதி டெல்லியில் அதிகம் இருப்பதால் இங்கு கரோனா அதிகரித்துள்ளது.

கேள்வி: இது கட்டுப்படுத்தப்படுமா? அல்லது மேலும் அதிகரிக்குமா?

பதில்: இது எதிர்பார்த்த ஒரு பிரச்சனை. இதற்கு ஆருடம் கூறுபவர் தான் பதிலளிக்க முடியும் என எண்ணுகிறேன்

கேள்வி: எந்த மாநிலத்திலும் இல்லாதவகையில் கரோனாவிற்கான மருத்துவப் பரிசோதனை டெல்லியில் அதிகமாக செய்யப்படுவதால் இந்த எண்ணிக்கை என்பது போல் ஒரு பேச்சு எழுந்துள்ளதே?

பதில்: இதில் குணமாகி வீடு திரும்புவர் எண்ணிக்கை அதிகமாக இருப்பது நல்ல விஷயம். உயிரிழப்பு எண்ணிக்கை தேசிய அளவில் மூன்று சதவிகிதமாக இருப்பது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய பிரச்சனை. ஏனெனில், நாம் ஏற்கிறோமோ? இல்லையோ? கரோனா வைரஸ் ஒரு சமூகப் பரவலாக உருவெடுத்திருப்பது நிதர்சனம். இதன் தொற்று எங்கிருந்து துவங்கியது என்பதை கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.

கேள்வி: சமூகப்பரவல் என்பதை டெல்லி அரசு ஏற்றாலும் அதை மத்திய அரசு ஏற்க மறுக்கிறதே?

பதில்: இதற்கு பல காரணங்கள் உள்ளன. உதாரணமாக, நாட்டின் முக்கிய 4 பெருநகரங்களான டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் சென்னையில் கரோனா பரவல் அதிகம். இதுவே அவை அமைந்த மாநிலங்களின் மற்ற மாவட்டங்களில் பரவல் குறைவு. எனவே, ’கோவிட் 19’ பரவலின் முடிவு என்பது மரணம் மட்டுமே அல்ல. அதுவும் மற்ற வைரஸ்களை போல் ஒன்று தான் எனக் கொண்டு எதிர்கொள்வது நல்லது.

நம் நாட்டின் கூடுதலான ஜனத்தொகையால் கரோனா ஒரு ’சைலண்ட் கேரியர்’ என்றாகவும் உள்ளது. இந்த தொற்று இருப்பதே பலருக்கும் தெரிவதில்லை. இதேபோல், துவக்கத்தில் அனைவரையும் அச்சுறுத்திய ’ஸ்வைன் ப்ளூ’ இப்போது வருடாந்திரம் வரும் வைரஸாகி விட்டது. முகக்கவசம் அணிதல், சமூக விலகல் உள்ளிட்ட முறையான தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் கடைப்பிடிப்பதன் மூலம் அதன் எண்ணிக்கை உயராமல் தடுக்க முடியுமே தவிர அரசுகளால் அதை செய்ய முடியாது. இதற்கு நம் நாட்டின் ஜனத்தொகை அதிகமாக இருப்பது காரணம்.

கேள்வி: கரோனா வைரஸ் பாதித்தவர் எந்தவிதமான அச்சுறுத்தலுக்கும் ஆளாகத் தேவையில்லை என்றும் கூறப்படுவதன் பின்னணியில் உண்மை உள்ளதா?

பதில்: கரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெறுபவர்களின் உடல் பாதிப்புகள் தற்போது மருத்துவர்களுக்கு ஓரளவிற்கு புரிந்து விட்டது. இதற்கு ஏற்றபடி அவர்கள் அளிக்கும் சிகிச்சை முறையிலும் பல மாற்றங்கள் செய்து கண்டுவரும் வெற்றி அதிகரித்துள்ளது. இருப்பினும், கரோனா பாதித்தவர்கள் அச்சமில்லை எனக் கூறவேண்டும் என்பதை இவ்வளவு சீக்கிரம் எதிர்பார்க்க முடியாது. இதற்கு மேலும் சிறிது காலம் பிடிக்கலாம்.

கேள்வி: கரோனா சிகிச்சைக்காக டெல்லியில் தனியார் மருத்துவமனைகள் அதிகத் தொகை வசூலிப்பதாகப் புகார் உள்ளதே? இதில், இந்திய மருத்துவ சங்கத்தினர் எடுத்த நடவடிக்கை என்ன?

பதில்: தற்போதைய கரோனா பரவல் சூழலில் தனியார் மருத்துவமனைகளும் செயல்படக் காரணம் என்ன என்பதை முதலில் பார்க்க வேண்டும். கேரளா, தமிழகம் போன்ற மாநிலங்கள் அரசு சுகாதாரத்துறையில் பெருமளவில் முதலீடு செய்திருப்பதால் அங்கு நிலைமை டெல்லியை விட மோசமாக இல்லை. இதன் காரணமாக அதிகமான பொதுமக்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை கிடைத்து வருகிறது. இந்தநிலை டெல்லியில் இல்லை என்பதை உறுதிப்படுத்த, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் நிலையை ஆராய்ந்தால் தெரிந்துவிடும்.

வெண்டிலேட்டர் சிகிச்சையில் இருக்கும் கரோனா நோயாளி குணமடைதலை மருத்துவர்களால் துல்லியமாகக் கணிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் தான் தனியார் மருத்துவமனைகளின் கட்டணம் பல லட்சங்களை தொட்டு விடுகிறது. இதை அரசு கட்டணங்களுடன் ஒப்பிட்டால் லோக் நாயக் அரசு மருத்துவமனையின் கரோனாவிற்கான அவசர சிகிச்சைப் பிரிவின் ஒருநாள் கட்டணம் ரூ.65,000. தனியார் மீதானப் புகாருக்கு பின் சிகிச்சை விவரங்கள் அன்றாடம் வெளியிடப்பட்டு வருகிறது. இதில் தனியார் மருத்துவமனைகளின் கட்டணத்தை முறைப்படுத்தும் தன் கடமையை அரசு தற்போது தான் துவங்கி உள்ளது.

கேள்வி: கரோனா கட்டுப்படுத்துதலில் மத்திய, மாநில அரசுகள் டெல்லியில் எடுக்கும் நடவடிக்கைகள் பற்றி தங்கள் கருத்து?

பதில்: கரோனா கட்டுப்படுத்துதலில் முறையான ஆலோசனை இன்றி அவசரக் கோலத்தில் அன்றாடம் ஒரு உத்தரவுகளை டெல்லி அரசு பிறப்பிக்கின்றது. இதற்கான ஆலோசனையில் மூத்த மருத்துவர்கள் அழைக்கப்படுவதில்லை. ஆனால், மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் தான் கரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டிய அவசியம் வந்தது ஏன்? என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். தற்போது ஏற்பட்டிருப்பது தேசியபேரிடர் என்பது புரிந்துகொள்ளப்படாமல் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in